‘காலா’ முதல் ‘மெர்சல்’ வரை, படப்பிடிப்பில் தீராத சிக்கல்... தயாரிப்பாளர் Vs ஃபெப்சி!

தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஃபெப்சி சம்மேளனத்துக்கும் இடையேயான சம்பளப் பிரச்னை காரணமாக வெடித்தது மோதல். ‘தொழிலாளர்கள் சம்மேளனத்தின் துணை இல்லாமல் படப்பிடிப்பை நடத்த தயார்' எனத் தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்க, ஃபெப்சி சம்மேளனம் மூன்று நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, வாபஸ் வாங்கிவிட்டது. 

ஃபெப்சி , தயாரிப்பாளர் சங்கம்

இந்தப் பிரச்னையால் தயாரிப்பாளர்களுக்கும் ஃபெப்சி சம்மேளனத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியின் `காலா’, விஜய் நடிக்கும் `மெர்சல்’ உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் தடைபட்டன. தொழிலாளர்களுக்கு, வருமானம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிவிட்டனர். 

இன்றைய படப்பிடிப்பில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஃபெப்சி உறுப்பினர்கள் அல்லாத தொழிலாளர்கள் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சில படப்பிடிப்புகள் பழைய சம்பளத்துக்கே ஃபெப்சி தொழிலாளர்கள் கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல். போராட்டம் வாபஸ் பெற்ற பிறகு, இடையூறு இன்றி படப்பிடிப்புகள் நடக்கின்றனவா? ஃபெப்சி தொழிலாளர்கள் கலந்துகொண்டார்களா?  எதன் அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஃபெப்சி சம்மேளனம் என மூன்றிலும் விசாரித்தோம். 

விக்ரமன் - இயக்குநர் சங்கத் தலைவர்: 

“படப்பிடிப்புப் பற்றி எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது. இதுகுறித்து ஃபெப்சியில்தான் கேட்கணும். `போராட்டம் வாபஸ்... படப்பிடிப்பு நடைபெறும்' என ஃபெப்சி சொல்லியிருப்பது, நல்ல முடிவுதான். தயாரிப்பாளர் சங்கத்தோடு நிதானமாகப் பேசி நல்ல முடிவெடுக்கவேண்டும் என்பதுதான்  எங்கள் விருப்பம். இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார் இயக்குநர் விக்ரமன்

அங்கமுத்து சண்முகம் - ஃபெப்சி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்: 

“தமிழகம் முழுவதும் இன்று நடக்கும் படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் பத்தாயிரம் பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். ரஜினியின் `காலா’ மட்டுமல்லாமல், அனைத்து படங்களிலும்  வழக்கம்போல் எங்களது பழைய சம்பளத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் குறிப்பிடும் புதிய சம்பளத்துக்கு வேலைபார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினால், ஃபெப்சி தொழிலாளர்கள் வேலைபார்க்க மாட்டார்கள். ஃபெப்சி என்றாலே, ரெளடியிசம், கட்டப்பஞ்சாயத்து என்றே பிம்பமாகிறது. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகவே மூன்று நாள்கள் போராட்டம் நடத்தினோம்.  தயாரிப்பாளர் சங்கத்துடன் இன்று  பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இன்று மாலை முடிவு எட்டிவிடும் என நம்புகிறோம்”  என்றார் அங்கமுத்து. 

எஸ்.ஆர்.பிரபு - தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர்: 

ஃபெப்சி மற்றும் ஃபெப்சி அல்லாத தொழிலாளர்கள் என இரண்டு தரப்பினரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. தயாரிப்பாளர்களைப் பொறுத்து சம்பளமும் முடிவுசெய்யப்படுகிறது. படப்பிடிப்பை நடத்தியாகவேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருந்தால், அதற்கு ஏற்ப சம்பளம் வழங்குவார்கள். நாங்கள் போராட்டம் என்ற விஷயத்துக்குள் போகவில்லை. எங்கள் நிபந்தனைக்கு உட்பட்டு தொழில் பண்ண வேண்டும் என நினைக்கிறோம். ஃபெப்சி ஆள்களைத் தவிர வேறு யாரும் படப்பிடிப்பில் வேலைசெய்தால், படப்பிடிப்புத் தளத்துக்கே வந்து ஃபெப்சி ஆள்கள் அராஜகம் செய்துகொண்டிருந்தார்கள். இனி அந்த மாதிரி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு விருப்பப்பட்ட  ஆள்களை வைத்து படப்பிடிப்பை நடத்துவோம்.

யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவேண்டும் என்பது எங்கள்  எண்ணம் அல்ல.  இன்று நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். இந்த முடிவு நிச்சயம் சினிமா தொழிலுக்குச் சாதகமாக இருக்கும்” என்றார் எஸ்.ஆர்.பிரபு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!