தயாரிப்பாளர் சங்கம் vs ஃபெப்சி..! - ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் நடந்தது என்ன?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் ஃபெப்சி  சம்மேளனத்துக்குமிடையேயான தொழிலாளர் பிரச்னை காரணமாக, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற `காலா' படம் உள்பட, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மெர்சல்', விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் `தானா சேர்ந்த கூட்டம்', பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படம், சசிகுமார் நடிக்கும் `கொடிவீரன்', பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் பெயர் வைக்காத படம் எனப் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு, வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் மீண்டும் ஆரம்பித்தது.  

இந்நிலையில், இன்னும் முழுமையாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. நேற்று தொழிலாளர்கள் நலத்துறை அலுவலகத்தில் வைத்து தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து இன்று, (05.08.2017) சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில்  அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சாமிநாதன், இணைச் செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளனர்.

மதுரையில் நடந்த `பில்லா பாண்டி' படப்பிடிப்பில்தான் தயாரிப்பாளர் தரப்புக்கும் ஃபெப்சி சம்மேளனத்தைச்  சேர்ந்தவர்களுக்கும் முதன்முதலாகச் சண்டை மூண்டது. மதுரை ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னதான் நடந்தது என்பதுகுறித்து `பில்லா பாண்டி' படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான ஆர்.கே.சுரேஷிடம் பேசினோம்... 

பில்லா பாண்டி

``என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த `தர்மதுரை' படத்துக்கான படப்பிடிப்பை, ஒரே ஷெட்யூலில் வெற்றிகரமாக நடத்தி முடித்தேன்.  அந்தப் படத்தில் வேலை பார்த்த  ஃபெப்சி தொழிலாளர்களை எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டேன் என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். `தர்மதுரை' வெற்றிப்படமாக இருப்பினும், இன்னும் மூன்று ஏரியாக்களிலிருந்து எனக்குப் பணமே வரவில்லை என்பது தனிக்கதை.

நானும் கே.ஆர்.பிரபாவும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `பில்லா பாண்டி'. இந்தப் படத்தில் நானே ஹீரோவாக நடிக்கிறேன். ஏற்கெனவே தயாரித்த `தர்மதுரை' போலவே `பில்லா பாண்டி' படத்தின் படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டேன். மதுரையில் 48 நாள்கள் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டோம். அதற்காக, சென்னையிலிருந்து ஃபெப்சி தொழிலாளர்கள் 150 பேரை அழைத்துக்கொண்டு கடந்த ஜூலையில் மதுரைக்குச் சென்றேன். முதலில் நான்கு நாள்கள் ஷூட்டிங் நடந்தது. அந்த வாரம் வந்த ஞாயிற்றுக்கிழமைக்கு டபுள் பேட்டா கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது டெக்னீஷியன் சங்கத்தைச் சேர்ந்த இருவர் பயணத்துக்கான பேட்டாவில் 30 கி.மீட்டருக்கும் டபுள் பேட்டா கேட்டனர்.  நான் `முடியாது' என மறுத்துவிட்டேன். அவர்களில் ஒருவர் ஃபெப்சி சம்மேளனத்தின் செயலாளர் தனபாலுக்கு போன் செய்து என்னிடத்தில் கொடுத்தார். `முதலில் தினசரி பேட்டாவை வாங்கிக்கொள்ள சொல்லுங்கள். பயண பேட்டா குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று அவரிடம் சொன்னேன். `முதல்ல பயண பேட்டாவைக் கொடுங்கள்' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். 

பில்லா பாண்டி - ஃபெப்சி

அன்று நடந்த படப்பிடிப்புக்கான பேட்டாவைக் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, மீண்டும் அந்த இருவரும் `நீங்கள் இப்போதே பயணத்துக்கான டபுள் பேட்டாவைத் தாருங்கள். அதை செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் தனபால் அனுப்பச் சொன்னார்' என்று என்னிடம் சொல்லச் சொல்ல, எனக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. உடனே மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தேன். தலைவர் விஷாலுக்கு போன் செய்து சந்தித்தேன். அவரும் உடனே ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேச, `சிங்கிள் பேட்டா கொடுத்தால் போதும்' எனச் சொல்ல, அதை டெக்னீஷியன் சங்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பிறகு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. `ஃபெப்சியுடன்  இருந்துவரும் ஒப்பந்தம் ரத்து' எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்தார். `தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று மறு அறிவிப்பு வெளியிட்டார் செல்வமணி.  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கவே, கடந்த 1-ம் தேதி வேலைநிறுத்தத்தை அறிவித்தது ஃபெப்சி சம்மேளனம். நான் மதுரையில் நடத்திய `பில்லா பாண்டி' படப்பிடிப்பை மூன்று நாள்கள் நிறுத்திவைத்தனர். அப்போதுகூட நம்மை நம்பி வந்த ஃபெப்சி தொழிலாளர்கள் பட்டினி கிடக்கக் கூடாது என்கிற மனிதாபிமானத்தோடு அந்த மூன்று நாள்களுக்கான உணவை ஏற்பாடு செய்துவிட்டுத்தான் சென்னைக்கு வந்தேன்.

ஒரு வருடத்தில் சுமார் 200 படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதில், 30 படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. மீதமுள்ள 170 படங்கள் தோல்வியைத்தான் தழுவுகின்றன. அந்தப் படங்களைத் தயாரித்தவர்கள், நடுரோட்டில் நிற்கிறார்கள். இதுதான் தமிழ் சினிமாவின் பரிதாபகரமான உண்மை. இதுவரை 11 படங்கள் தயாரித்திருக்கிறேன். இப்போது  `பில்லா பாண்டி' படத்தில் நடித்துவரும் முக்கியமான நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டுகளை மொத்தமாக 48 நாள்களுக்கு வாங்கி வைத்திருந்தது எல்லாம் போய்விட்டன. இதனால் எனக்கும் என் படக்குழுவினருக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அத்துடன், திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு யார் பதில் சொல்வார்கள்?'' என வருத்தப்பட்டார், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ்.

தற்போது ஃபெப்சி   சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடைபெறும் அவசர ஆலோசனையில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!