``கமல் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்பேன்!'' - பளீர் பார்த்திபன் | Director Parthiepan speaks about kamal

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (07/08/2017)

கடைசி தொடர்பு:18:11 (07/08/2017)

``கமல் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்பேன்!'' - பளீர் பார்த்திபன்

பொதுவாக எம்மனசு தங்கம் புரமோஷனில் தான் பேசிய பேச்சு, சற்றே திரிக்கப்பட்டு பரவிக்கொண்டிப்பது குறித்து பார்த்திபன் நம்மிடம் விளக்கினார்.

பார்த்திபன்

``ஒரு மாசத்துக்கு முன்னாடி மதுரைக்குப்  பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும்போது ஏதோ ஒரு சேனலிலிருந்து என்னைப் பேட்டி எடுத்தனர். அப்போது `ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார்?' என்ற கேள்வியைக் கேட்டனர். நான் `ரஜினி சார் அரசியலுக்கு வருவதைப் பற்றி  ஆண்டவனிடம்தான் கேட்கணும். `ஆண்டவன் சொல்வார்' என்று அவரே சொல்கிறார்.  ரஜினி சாரிடம் நேரிடையாகக் கேட்க முடியாது. `ஆண்டவன் என்றைக்குச் சொல்றாரோ, அன்றைக்குத்தான்  நான் அரசியலுக்கு வருவேன்' என்றுதான் சொல்வார்.  அதனால் ஆண்டவனிடம் போய் நேரிடையாகக் கேட்கவேண்டியிருக்கிறது' என்று நான் வணங்கிவந்த கோயிலைக் காட்டி  சர்வசாதாரணமாக எனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொன்னேன்.

அப்போது  ஒரு பிரச்னையும் ஏற்படவில்லை. நான் சொன்னதை யாருமே பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. `பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் புரமோஷனில் இந்தப் பக்கம் உதயநிதி ஸ்டாலின், அந்தப் பக்கம் சூரி உட்கார்ந்து இருந்தனர். எப்போதுமே பேசிய பேச்சிலிருந்து ஒரு க்ளிப்பிங் எடுக்கும்போது நடுவிலிருந்துதான் எடுத்துப் போடுவார்கள். நான் முன்னே, பின்னே பேசிய வார்த்தைகளை ஒளிபரப்பாமல் குறிப்பிட்ட டயலாக்கை மட்டும் க்ளிப்பிங்கில் காட்டுவார்கள்.                        

உண்மையிலே அதுக்கு முன்னாடி `கமல் - ரஜினி அரசியலுக்கு வந்தால், நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா?' என்று கேட்டனர். அப்போது `கமல் சார் - ரஜினி சார் அரசியலுக்கு வருவதைப் பற்றி யூகமாகவோ, ஜோதிடமாகவோ சொல்லிவிட முடியாது. `கமல் சார் அரசியலுக்கு வர்றீங்களா?' என்றால் அவரிடமே `பிக் பாஸ்' மாதிரி `என்ன பாஸ் அரசியலுக்கு வர்றீங்களா?' என்று கேட்டுவிடலாம். ரஜினி சார் அரசியலுக்கு வருவாரான்னு அவரிடம் கேட்க முடியாது. கடவுளிடம்தான் கேட்கணும். கடவுளிடம் பேசும் பாஷை எனக்குத் தெரியாது' என்று நான் பதில் சொல்லும்போது எனக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலினும் சூரியும் சிரித்துக்கொண்டிருந்தது எனக்குத் தெரியாது. என்னோட இந்தப் பேச்சை வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் சிலர் நாகரிகமாக இன்னும் சிலர் அநாகரிகமாவும் விமர்சித்துவருகிறார்கள்.

முதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.  ரஜினி சாரை எதிர்த்து விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. `ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரிடமும் நான் கேள்வி கேட்பேன்' என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். கமல் சார் அரசியலுக்கு வந்தால், அவரிடம் நான் கேள்வி கேட்பேன். அதுதான் உண்மை. எல்லோரும் நான் ஏதோ கமல் சாரை சப்போர்ட் செய்வதாக நினைக்கிறார்கள். சாதாரண ஒரு குடிமகனாக நம் நாட்டில் நடக்கும் குற்றங்களை, ஊழல்களை, கமல் சார் சுட்டிக்காட்டுகிறார். நானும் சாதாரணப் பிரஜையாக இருப்பதால் அதை மதிக்கிறேன். அரசாங்கத்தை மாற்றுவதல்ல என் குறிக்கோள். அரசாங்கத்தில் நடந்துகொண்டிருக்கும் குழப்பங்கள் குளறுபடிகள் மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். 

பார்த்திபன்

`தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க, லஞ்சம் கேட்கிறார்கள்' என்ற உண்மையை, முதன்முதலாக நான்தான் பகிரங்கமாகவும் தைரியமாகவும் சொன்னேன். நான் என் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்காகப் பணம் கொடுத்ததே இல்லை. அரசாங்கத்தின் மூலம் வரிவிலக்கு அளிப்பவர்கள், விஜய் படத்துக்கு இவ்வளவு... அஜித் படத்துக்கு எவ்வளவு... எனத் தனித்தனியாகப் பட்டியலே தயாரித்து வைத்திருக்கிறார்கள். `ஏன் இப்படி?' எனக் கேள்வி கேட்டால், `விஜய், அஜித் படத்தைத் தயாரித்து வெளியிடுவதால் பெருத்த லாபம் சம்பாதிக்கும் பணத்தில், எங்களுக்கு ஒரு பங்கு தந்தால் என்ன... குறைந்தாபோய்விடுவீர்கள்?' என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.  

பாலம் கட்டுவதாக இருந்தாலும் சரி, பால் விநியோகம் செய்வதாக இருந்தாலும் சரி, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நடக்கும் ஊழல்தான் அதற்கான காரணம்.  திரைப்படத்துக்கு வரிவிலக்குத் தருவதற்கு காலம்காலமாக லஞ்சம் பெற்றுவருகிறார்கள். வரிவிலக்கில் லஞ்சம் பெறும் விவகாரத்தை இப்போதுதான் நேரடியாக எதிர்கொள்கிறோம். ரஜினி சார் எனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பது, எனக்கு நன்றாகவே தெரியும். நான் வேறு  நடிகர் நடித்த ஒரு திரைப்பட விழாவில் ரஜினி சார் குறித்துப் பேசியிருந்தால், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்காது. உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படத்தின் மேடையில் பேசியதுதான் என்மேல் வேறு நிறத்தைப் பூசிவிட்டது. வழக்கம்போல் நகைச்சுவை உணர்வோடு ரஜினி சார் பற்றி நான் பேசிய வார்த்தைகள் மென்மையானவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்