Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இவர்களின் வாழ்க்கையையும் சினிமாவாக எடுக்கலாமே! #BioPicFever

கற்பனையாக ஒரு கதையை உருவாக்கி, அதில் நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், பாடல் என யதார்த்தத்திலிருந்து விலகி, புனைவுத்தன்மையுடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களே எண்ணிக்கையில் அதிகம் வெளியாகின/வெளியாகின்றன. உண்மை மனிதர்கள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமா, சொற்பத்திலும் சொற்பமே. காலத்துக்கும் நம்மால் நினைவுகூரப்படவேண்டியவர்களைத் திரைப்படமாக எடுத்து, அதேசமயம் வெகுஜன மக்களிடம் போய்ச் சேரும் சுவாரஸ்யத்துடன் நிறையத் திரைப்படங்கள் வெளிவருமாயின் அவர்களின் வாழ்க்கையே ஒரு கலைப் பொக்கிஷமாக என்றென்றும் நம்மிடம் இருக்கும். இந்தித் திரைப்பட உலகில் அது அதிகம் நடைபெறுகிறது. `பாக் மில்கா பாக்', `டர்ட்டி பிக்சர்', `மேரிகோம்', என முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் அங்கே வெளியாகியிருக்கின்றன. ஆனால், தமிழில் யோசித்துப்பார்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சாதித்தவர்களின் வாழ்க்கையைத்தான், தமிழர்களை மட்டும்தான் படமெடுக்க வேண்டும் என்று நம் எல்லையை சுருக்கிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. இந்தி உலகில் அப்படி நினைத்திருந்தால், `டர்டி பிக்சர்', `மெட்ராஸ் கபே ' போன்ற படங்கள் எடுத்திருக்க மாட்டார்கள்.

யாருடைய வாழ்க்கையை சினிமாவாக எடுக்கலாம் என்பதற்கு உதாரணமாக மூன்று பிரபலங்களைக் குறிப்பிடுகிறேன்.

சந்திரபாபு:  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, சினிமா துறைக்கு வந்தவர். நடிப்பு, நடனம், தயாரிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் திரையுலகில் மின்னியவர். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகர்.

சந்திரபாபு

தன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, யாருக்கும் வளைந்துகொடுக்காமல் கம்பீரமாக வாழ்ந்தவர். தயாரித்த படம் பாதியில் நின்றுபோனது, திருமண வாழ்க்கையில் நிலையின்மை எனப் பின்னாளில் தனிமையில் துவண்டு, இறந்துபோனார். தமிழ் சினிமாவின் உச்சத்திலிருந்து வீழ்ந்து மடிந்த ஒரு கலைஞனான சந்திரபாபுவின் வாழ்க்கையைப் படமாக்கலாம். 

கேப்டன் லட்சுமி: சென்னையில் பிறந்த இவர், மருத்துவராக இருந்து பிறகு சிங்கப்பூருக்குச் சென்றார். பிரிட்டன் - ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவர், இந்திய சுதந்திரத்தில் ஈடுபாடுகொண்டு நேதாஜி சிங்கப்பூர் வந்திருந்த சமயத்தில் அவரிடம் `இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவில் பணியாற்ற விருப்பம்' எனத் தெரிவித்தார். அதன்படி இந்தப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். பிறகு, இந்தியா வந்தவர் பங்களாதேஷ் போர் நடைபெற்ற சமயத்தில் நம் நாட்டு வீரர்களுக்கு மருத்துவம் அளித்தவர். எதற்கும் அஞ்சாமல் வீர சாகசங்களும் பரபரப்பும் நிறைந்த லட்சுமி சேகலின் வாழ்க்கை, பலரும் அறியாதது.

கேப்டன் லட்சுமிவாழ்க்கையை சினிமாவாக

பெண்களை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்கள் தற்போது அதிகரித்துவருவதால், லட்சுமி சேகல் போன்றோரின் வாழ்க்கையின் ஒரு பகுதியை சினிமாவாக எடுக்கலாம்.

அருணா ஷன்பக்: இவர் தமிழர் அல்ல என்பதால், நம் ஊர் ஆள்கள் நிறையப் பேருக்கு இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இவர் செவிலியராக ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கு பணிபுரியும் வார்டு பாய் சீட்டு ஆடிக்கொண்டிருந்தார். அவனைக் கண்டிக்க, போதையில் இருந்தவன் இவரை வன்புணர்ச்சி செய்திருக்கிறான். இவர் கழுத்தில் சங்கிலியைக் கட்டி அவன் இறுக்கியதால், மூளைக்குச் செல்லவேண்டிய நரம்பு பாதிக்கப்பட்டு, 44 ஆண்டுகளாக கோமாவில் இருந்து காலமானார். குற்றம் செய்தவன், சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்து வாழ ஆரம்பித்துவிட்டான்.

அருணா ஷன்பக்

பக்திப் பாடல்கள் ஒலிக்க, ஒரே அறையில் வெறும் உயிரை மட்டுமே சுமந்துகொண்டு சதைப்பிண்டமாக ஒரு பெண் வாழும் துயரம் எத்தனை வலிமிகுந்தது என்பது நிறையப் பேருக்குப் போய்ச் சேர வேண்டும். வல்லுறவில் சிதைக்கப்படும் பெண்களை, ஒருநாள் செய்தியாக நாளேடுகளில் படித்துவிட்டுக் கடந்துவிடுகிறோம். சாதித்தவர்களைத்தான் சினிமாவாக எடுக்க வேண்டும் என்பதில்லை, ஓர் ஆணின் காம இச்சை எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதும் சினிமா வடிவில் விரிவாகப் பதிவுசெய்ய, அருணா ஷன்பக் போன்றோரின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement