வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (08/08/2017)

கடைசி தொடர்பு:09:41 (08/08/2017)

''சில கொலைகளும், நலன் குமாரசுவாமியின் திரைக்கதையும்..!'' - 'மாயவன்' இயக்குநர் சி.வி.குமார்!

திரைப்படங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த சி.வி.குமார் தற்போது தனது கவனத்தை படங்கள் இயக்குவதில் காட்டி வருகிறார். இவரது இயக்கத்தில் முதல் முறையாக 'மாயவன்' திரைப்படம் ரிலீஸாகயிருக்கிறது. சந்தீப் கிஷன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் சி.வி.குமாரைத் தொடர்புகொண்டோம்.

maayavan

''இது ஒரு புதிரான படம். படம் முழுக்க விறுவிறுப்பாகயிருக்கும். தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதைக் கண்டுபிடிக்கும் போலீஸ். இவர்தான் கொலையாளி என ஒருவரை நெருங்கும்போது, அவர் அந்தக் கொலையைச் செய்திருக்க மாட்டார். கடைசியில் கொலையாளியைக் கண்டிபிடித்தவுடன் அவர் ஏன் இந்தக் கொலையைச் செய்தார், எப்படி செய்தார் என்று சொல்வது மிகவும் சுவாரஸ்யமாக அதே நேரத்தில் விறுவிறுப்பாகயிருக்கும்'' என்று படக்காட்சியைக் கண்முன்னே நிறுத்தியவரிடம், படத்துக்கான இந்தக் கதையை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று கேட்டோம்.

இரண்டு வருடத்துக்கு முன்னாடி சில கட்டுரைகளைப் படித்தேன். அதிலிருந்துதான் எடுத்தேன். சில உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தக் கதையை ரெடி பண்ணினேன். படத்துக்கான ஸ்க்ரிப்ட் எழுதி முடித்தவுடன் படத்தின் நாயகனாக சந்தீப் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று எண்ணினேன். சந்தீப்பை ரொம்ப நாளாகவே எனக்கு தெரியும். 

படத்துக்கான திரைக்கதை, வசனத்தை நலன் குமாரசாமி எழுதியுள்ளார். இந்தக்  கதையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு ஸ்டேஜில் இதை பண்ணவேண்டாம் என்று நினைத்தேன். ஸ்க்ரிப்ட் ரொம்ப காம்பிளிகேட்டாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது நலன், நான் திரைக்கதை எழுதுறேனு சொல்லி ஸ்க்ரிப்ட்குள் வந்தார். நலன் ஸ்க்ரிப்ட் படத்துக்கு எப்படி ஒரு பலமோ அதே மாதிரி ஜிப்ரான் இசையும் படத்துக்குப் பெரிய பலமாகயிருக்கும். இந்தப் படத்தில் இசையும் ஒரு ஸ்க்ரிப்ட்டாகவே ரெடியாகியிருக்கு. 

படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள் இருக்காங்க. இந்தப் படத்தின் கதையை முதலில் 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிகுமாரிடம் சொன்னேன். அப்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ரெடி செய்யும் வின்சென்ட் கூட இருந்தார். இந்தக் கதையைக் கேட்ட ரவி, ’கதை நல்லாயிருக்கு, நீங்கள் நல்லா கதை எழுதுறீங்க. நீங்க கதை எழுதி எங்களை மாதிரி டைரக்ட் பண்ணுற ஆளுங்ககிட்ட கொடுத்திருங்க. நான் இந்தக் கதையை டைரக்ட் பண்ணுறேன்’னு சொன்னார். உடனே வின்சென்ட், 'அது எப்படி, ப்ரோ அவர்தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும். அவரும் இயக்குநராகணும்’னு சொன்னார். இப்படிதான் நான் இந்தப் படத்துக்கு டைரக்டர் ஆனேன்'' என்றார் சி.வி.குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்