''பக்கோடா பாண்டியை இப்படிதான் ஓ.கே செய்தார் ஆனந்தி!'' - ரகசியம் உடைக்கும் இயக்குநர் ஜெகன்!

என்  ஆளோட செருப்பைக் காணோம்' இப்படி ஒரு பெயரைத் தனது படத்துக்கு வைத்து, சென்சார் போர்டில் எந்த ஒரு கட், மியூட் இல்லாமல் 'யு' சான்றிதழ் வாங்கியிருக்கும் படத்தின் இயக்குநர் ஜெகனை, படத்தில் வேறு எதையெல்லாம் காணோம் என்பது பற்றி தெரிந்துகொள்ள தொடர்புகொண்டு பேசினோம்.

en aaloda serupai kaanoom

''என் ஆளோட செருப்பைக் காணோம் படத்தைப் பற்றி முன்பு அதிகம் சொல்லியிருக்கிறேன். அதனால், படத்தோட பாடல் பற்றி பேசுகிறேன்' என்று பேச ஆரம்பித்தார்  ஜெகன்நாத். நேற்றுதான் படத்தோட பாடல்கள் ரிலீஸ் ஆனது. சிலருக்கு என் படத்தின் பெயர் பிடிக்கவில்லை. அதைப் பற்றி நான் எதுவும் கவலைப்படவில்லை. ஏனென்றால் படத்தோட கதையே பெயரில்தான் இருக்கு. 

படத்தின் பெயரை மட்டுமே பார்த்துவிட்டு மக்கள் எதுவும் தப்பாக எண்ணி படம் பார்க்காமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, கெளதம் வாசுதேவ் மேனன் சாரின் 'ஒன்றாக’ ஆடியோ கம்பெனி மூலம் பாடல்களை வெளியிட முடிவுசெய்தேன். எப்போதும் கெளதம் வாசு தேவ் மேனன் சாரின் படங்களின் பாடல்கள் மட்டுமே ஒன்றாக ஆடியோவில் ரிலீஸாகும். மற்ற படங்களின் பாடல்கள் ரிலீஸாகாது. அதனால் பாடல்களின் வீடியோ வெர்ஷனை எடிட் செய்து அவருக்குக் காண்பித்தேன். லேப்பில் பார்த்துவிட்டு சூப்பராகயிருக்குனு சொன்னார். அப்போது உங்கள் ஆடியோ கம்பெனியின் பெயரில் ரிலீஸ் செய்துகொடுங்கள் என்று கேட்டேன். மற்ற ஆடியோ கம்பெனியிலிருந்து என் படத்தின் பாடல் உரிமையைக் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், எனக்கு கெளதம் சாரின் 'ஒன்றாக' ஆடியோ கம்பெனியின் பெயரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. 

அதே மாதிரி, இந்தப் படத்தின் செருப்பு பாடலை சிம்பு பாடினால் நன்றாகயிருக்கும்னு கெளதம் சார்தான் சொன்னார். உடனே, சிம்புக்கு ட்யூன் மற்றும் வரிகளை மெயிலில் அனுப்பினேன். அவர் கேட்டுவிட்டு நன்றாகயிருக்குன்னு சொன்னார். ஆனால், முதலில் அவர் இந்தப் பாடலைப் பாட மறுத்தார். 'நான் செருப்பு பாடல் பாடினால் நன்றாகயிருக்காது, எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க வேண்டாம்' என்றார். அவருகிட்டயும் பாட்டின் விஷூவலைக் காட்டினேன். உடனே சிம்பு, 'என்னங்க பாட்டு செருப்புனு இருக்கு, விஷூவல் ரொம்ப சென்டிமென்டாக இருக்குனு' சொன்னார். அதனால்தான் சார் உங்ககிட்ட கேட்குறேன்னு சொன்னேன். 'ஓகே நான் பாடுறேன்னு' சொல்லிட்டார். சிம்பு பாடின இந்தப் பாடலில் மட்டும் நான்கு நிமிடத்தில் செருப்பு என்கிற வார்த்தை மட்டும் மொத்தம் 90 முறை வரும். 

என் ஆளோட செருப்பைக் காணோம்

பொதுவாக ஒரு பாடலை 'ஸரிகமபதநி'னு ஏழு ஸ்வரத்தில்தான் பாட்டு வரும். ஆனால், இந்தப் பாடலில் மொத்தம் மூன்று ஸ்வரத்தில் மட்டுமே சிம்பு பாடியிருப்பார். செருப்புங்கிற ஒரு வார்த்தையைக் கேவலமா நினைக்குற ஒரு எண்ணம் மாறணும். அதைப் பாடலில் கேட்கும்போது ரொம்ப லவ்லியா இருக்கும். 

அதே மாதிரி அபிமன்யுனு ஒரு பாட்டு, அந்தப் பாடலை பெரிய பாடகர் ஒருத்தரை வைத்து ரெடி பண்ணிவிட்டோம். ஆனால், எனக்கு என்னமோ அந்தப் பாடலில் ஏதோ ஒரு ஜீவன் குறையுற மாதிரி இருந்தது. அதனால், சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்காவிடம் அபிமன்யு பாடலின் ட்யூன் போட்டு காட்டினேன். அவர் தனது செல்லில் பதிவு செய்துகொண்டார். இரவு முழுக்க அந்த ட்யூனை கேட்டுவிட்டு அடுத்த நாள், ஒரே மணி நேரத்தில் பாடினார். ஒரு சந்தோஷமான பாடலில் இருக்கும் தேடலை ரொம்ப அழகாகப் பாடினார்.

இன்னொரு பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார். எப்போதும் என்னுடைய படங்களில் பேர் சொல்லும்படி ஒரு மெலடி அமைந்துவிடும். அதே மாதிரி இந்தப் படத்தில் ஒரு பாடலை ஸ்ரேயா கோஷல் அமைத்துக்கொடுத்துவிட்டார். இந்தப் பாடலின் வரிகளில்,

'காதல் செய்தல் தப்பே என்றாலும்,

அந்த தப்பே செய்தாலும் தப்பே இல்லையே, 

அதில் தப்பித்தவர் யாரும் இல்லையே!'

என்று இந்தத் தப்பு என்ற வார்த்தையை வைத்து நன்றாக விளையாடியிருப்பார்.

இந்தப் படத்தின் கதை ஆனந்தியிடம் சொன்னவுடன் கண்டிப்பாக நான் பண்ணுறேன்னு சொன்னார். அதே மாதிரி இந்தப் படத்தின் கதையை கெளதம் கார்த்திகிடம் சொன்னேன். அவர் கதை கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தார். அப்பாடா, இவருக்குக் கதை பிடித்துவிட்டது. ஓகே சொல்லிவிடுவார் என்று நினைத்தேன். கெளதம் கார்த்திக்கும் நான் தயாரிப்பாளரைப் பார்க்க வேண்டும் என்றார். நானும் சரி சம்பளத்தைப் பற்றி பேசுவார்போல, ஓகேனு சொல்லி... ஒரு நாள் நான், தயாரிப்பாளார், கெளதம் கார்த்திக் மூன்று பேரும் ஒரு மீட்டிங் போட்டோம். கெளதம் தயாரிப்பாளர்கிட்ட 'சார் செம கதை, இந்தக் கதையை நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்’ என்றார். தயாரிப்பாளருக்கும் எனக்கும் ரொம்ப சந்தோஷம். அப்போது கெளதம், 'சார், பட் இந்தக் கதையை நான் பண்ண முடியாது. நான் ஆக்‌ஷன் ஹீரோவாக இப்போதுதான் களம் இறங்கியிருக்கேன். நீங்கள் இந்தக் கதையை சினிமாவில் இப்போது இருக்கும் எந்த ஹீரோவிடம் சொன்னாலும் செய்ய மாட்டாங்க. அதனால், புதுமுக ஹீரோ வைத்து பண்ணுங்கள்’ என்று சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தைப் பண்ண தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். 

அப்போது இந்தப் படத்தில் நடித்திருக்கும் பக்கோடா பாண்டியனை, பாண்டியராஜன் சார்தான் அறிமுகப்படுத்தினார். பசங்க படத்தில் பாண்டியன் நடித்திருப்பார். நல்லா பண்ணுவார்னு சொன்னார். அப்போது இவரைப் பார்த்தால் முகம் முழுக்க தாடியுடன் வந்தார். அவரை அப்படியே கெட்டஅப் மாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன். இந்தப் படத்தில் பக்கோடா பாண்டிதான் தனக்கு ஜோடி என்று தெரிந்தவுடன் ஆனந்தி நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அப்போது, பாண்டியை வைத்து எடுத்த சில வீடியோ கிளிப்ஸ் எல்லாம் ஆனந்திக்குப் போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு ஆனந்தி எழுந்து நின்று கை தட்டினார். 'சார், கண்டிப்பாக இந்தப் படத்தில் பக்கோடா பாண்டி நடிக்கணும்' என்றார். இப்படிதாங்க 'என் ஆளோட செருப்பைக் காணோம்' உருவானது என்று மூச்சுவிடமால் சொன்னார் இயக்குநர் ஜெகன்நாத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!