வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (11/08/2017)

கடைசி தொடர்பு:14:45 (11/08/2017)

‘அது நடிகர் விஜய்க்கு தெரியாத ரகசியம்!’ - ‘ஆளப்போறான் தமிழன்’ பின்னணி

விஜய், அட்லி கூட்டணியில் இரண்டவதாக உருவாகும் திரைப்படம் 'மெர்சல்'. இவர்கள் கூட்டணியில் உருவான 'தெறி' ஹிட் அடித்ததால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் படத்தைத் திரையில் காண ஆவலாக உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நேரத்தில், சமூக வலைதளங்கள் முழுவதும் ‘ஆளப்போறான் தமிழன்' ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

கவிஞர் விவேக்

தமிழர்களின் பெருமை சொல்லும் பாடலாக ஆளவந்தான் தமிழா பாடல் இருந்தாலும், இந்தப் பாடல் விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒரு குறியீடாக உள்ளதாக சிலர் கருதுகிறார்கள். இதுபற்றி பாடலை எழுதிய கவிஞர் விவேக்கிடம் பேசினோம்.

“மெர்சல் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருக்கு. அந்த ஐந்து பாடல்களையும் நான்தான் எழுதினேன். ‘ஆளப்போறான் தமிழன்' பாடல் ஐந்து மாதங்களுக்கு முன்பு எழுதிய பாடல். மெர்சல் படத்துக்காக எழுதிய முதல்பாடலும் இதுதான். 

தமிழ் பற்றிய ஒரு பாட்டு இருக்கலாம் என்று சொன்னவுடன், அட்லியும் ரஹ்மான் சாரும் உடனே ஓகே சொன்னாங்க. படத்தில் அதற்கான சூழ்நிலையும் இருந்தது. இந்தப் பாட்டு எழுதும்போது தோன்றிய முதல் விஷயம், பாடல் கேட்கும்போதே தமிழ் உணர்வு நம் மனசுக்குள் ஒட்டிக்கொள்ள வேண்டும். அதுதான் முழுக்க முழுக்க இருந்தது. 

இந்தப் பாடலுக்கான வரிகளை ரஹ்மான் சார் ஸ்டூடியோவில் எழுதியதுதான். ஆளப்போறான் தமிழன் டியூன் ரஹ்மான் சார் கொடுத்தார். குறிப்பாக ஆளப்போறான் தமிழன் வரிகள் நான் என் பாடலின் மூலம் சொல்லணும்னு ஆசைப்பட்டேன். ஏனென்றால், தமிழர்கள் உலகம் முழுக்க இனி ஆளப்போறாங்க. எந்தத் துறையாக இருந்தாலும் தமிழர்கள் அதில் இருக்காங்க. ஆட்சி செய்துகொண்டுதான் இருக்காங்க. தமிழர்களின் பெருமையைச் சொல்லணும்னு நினைத்தேன். தமிழர்களுக்குப் பொறுமை அதிகம். உழைப்பு அதைவிட அதிகம். அதையெல்லாம் பாடலில் சொல்லியிருக்கிறேன்.

mersal

இந்தப் பாடல் முழுவதுமாக ரெடி ஆகும் வரை, இப்படி ஒரு பாடல் படத்தில் இருக்கும்னு விஜய் சாருக்கு சுத்தமாகத் தெரியாது.  ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடக்கும்போது ஒரு வீடியோ போட்டு விஜய் வாய்ஸ் கொடுத்திருப்பார். அதையெல்லாம் மனதில் வைத்துதான் பாடல் வரிகள் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் எழுதும்போது, யாருடைய தலையீடும் இல்லை. முழுசுதந்திரத்துடன் எழுதிய பாடல் இது.

‘வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே’ இந்த இடத்தில் தமிழர்களைத்தான் சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இளைஞர்கள் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். வரலாற்றில் இதற்குமுன்பே மாட்டுக்கு நீதி வாங்கிக் கொடுத்திருப்பார் மனுநீதி சோழன். இப்போது தமிழர்களும் செய்தார்கள். அதை அங்கீகரித்த விஜய் சாருக்கு இந்தப் பாடல் நன்றாகயிருக்கும்னு நினைத்தேன். விஜய் சாரும் ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் பண்ணினார்.  

இந்தப் பாடல் வரிகளை கேட்டுவிட்டு விஜய் சார் ரொம்ப சந்தோஷப்பட்டார். 'நல்லாயிருக்கு. அப்படியே தமிழ் உணர்வை இந்தப் பாடல் உடம்பில் ஊட்டுகிறது' என்றார்.  இந்தப் படத்தில்தான் விஜய் சாருக்கு பாடல் எழுதுகிறேன். இதற்கு முன்னாடி 'பைரவா' படத்தில் ஒரு பாடல் எழுதினேன். அந்தப் பாடல் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தைத் திரையில் காட்டும்போது பின்னணியில் கேட்கும். 

இந்தப் படத்தின் ஆல்பம் எல்லோருக்குமான ஒரு ஆல்பமாகயிருக்கும். கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும்’’ என்று முடித்தார் பாடலாசிரியர் விவேக்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க