Published:Updated:

இன்னமும் நம்மை 'ஜோக்கர்' ஆகத்தானே வைத்திருக்கிறார்கள்?! #OneYearOfJoker

ர.ரகுபதி
இன்னமும் நம்மை  'ஜோக்கர்' ஆகத்தானே வைத்திருக்கிறார்கள்?!  #OneYearOfJoker
இன்னமும் நம்மை 'ஜோக்கர்' ஆகத்தானே வைத்திருக்கிறார்கள்?! #OneYearOfJoker

கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை ஓடும் ஊழலை தட்டிகேட்கும், ஒரு சாமானியனின் குரல் ஒரு போதும் ஒலித்ததில்லை. ஆனாலும் அப்படி ஒலிக்கின்ற குரல்கள் எப்போதும் ஓய்வதில்லை என்பதை உரக்கச் சொல்லிய படம் ஜோக்கர். கடந்த வருடம் இதே நாளில் வெளியான ஜோக்கர், மக்களிடம், சமூக ஊடகங்களிடம் பரவலாக விவாதப்பொருளாகி, மன்னர் மன்னன் ஜோக்கர் அல்ல மக்களில் ஒருவன் என்று உணரவைத்தது.
 
'குக்கூ'வில் மென்மையான காதலை சொன்ன ராஜூமுருகன், அடுத்து என்ன சொல்லப்போகிறார் ? என்று காத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. அவருடைய  'ஜோக்கர்’ படத்தில் தற்கால அரசியலை நையாண்டித்தனத்துடன் பேசியிருப்பதே அதற்கு காரணம்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் வாழும் மன்னர் மன்னன் எனும் சாமானியன், தன் காதலியின் விருப்பத்திற்காக கழிப்பறை கட்ட முயலுகிறான்.ஊழல் புரையோடிய இச்சமூக அமைப்பு மன்னர் மன்னனின் வாழ்க்கையை எவ்வாறு புரட்டிப்போடுகிறது என்பதே கதை.

மணிவண்ணனின் 'அமைதிப்படைக்கு' பிறகு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சாதிக் கட்சி, லெட்டர் பேடு கட்சி என அனைவரையும் பேதம் பார்க்காமல் சாடி இருந்தது இந்தப் படம்.  அதிகார வர்க்கத்துக்கு மட்டும் அல்லாமல் எதையும் கண்டும் காணாமல் செல்லும்   சமூகத்திற்கும் வசனங்களில்  சவுக்கடி கிடைத்தது. 

அப்பாவி இளைஞனாகவும்,ஜனாதிபதியாகவும் குரு சோம சுந்தரமும், ஏழை பெண்ணாக ரம்யாவும், குடியால் கணவனை இழந்த பெண்ணாக காயத்ரியும்,போராடி கொண்டிருக்கும் மு.ராமசாமியும்,முற்போக்கு கருத்துக்களை தன் அனுபவ அறிவினால் கூறும் பவா செல்லதுரையும் என ஒவ்வொருவரும் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்து இருக்கின்றனர்.

செழியனின் கேமரா தருமபுரியின் அழகியலையும்,அவலங்களையும் தெளிவாக படம்பிடித்திருந்தது.ஷான் ரோல்டனின் பின்னணி இசையும்,பாடல்களும் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றது.'என்னங்க சார் உங்க சட்டம்' பாடல் இளைஞர்களையும்,'செல்லம்மா' அனைவரையும் கவர்ந்திருந்தது.

இப்படத்தின் மிகப்பெரிய பலமே வசனங்கள் தான்.தற்கால ஊழல்வாதிகளையும்,அரசியல் பெருச்சாளிகளையும் இவ்வசனங்கள் அடையாளப்படுத்தியது.சில வசனங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. அவைகளில் சில.

“நாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை…”

“நமக்கு தேவையானதை கொடுக்கலேன்னா நாமளே எடுத்துக்கணும். அதுதான் பவரு…”

“அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தின்னுட்டு போடுற எச்சி சோத்த திங்கிறவங்கதான்டா நம்ம மக்கள்..”

“நாம ஓட்டு போட்டுதான் அவன் ஆட்சிக்கு வர்றான். அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு. அவன் அநியாயம் பண்ணினா, அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமையில்லையா..?

“நூடுல்ஸ தடை பண்ணா சைனாகாரனுக்கு புடிக்கல.

கூல்ட்ரிங்ஸை தடை பண்ணா அமெரிக்காகாரனுக்கு புடிக்கல.

ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடான்னா அமைச்சர்களுக்கு புடிக்கல.

அரை நாள்  உண்ணாவிரதத்துக்கு ஏர்கூலர் ஏன்னு கேட்டா எதிர்க்கட்சி தலைவருக்கு புடிக்கல.

கல்லூரி கட்ட தடை. கூட்டணி தாவலுக்கு தடை..

சாதி மாநாட்டுக்கு தடை. அதனாலதான் என்ன புடிக்கல…”

“சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை. சகாயம் மாதிரி பண்ணுங்கன்னுதான் சொல்றோம்..”

“நகைக்கடைக்காரனுங்க புரட்சி பண்ற இந்த நாட்ல ஒரு ஜனாதிபதி புரட்சி பண்ண கூடாதா…!”

“குண்டு வைக்கிறவனையெல்லாம் விட்ருங்க. உண்டகட்டி வாங்கி தின்னிட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க..”

“சாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு…”

“நாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்ட போறீங்க உங்க கருணைய.. ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல. உங்ககிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்..”

“பெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரில்ல ஓட்ட விக்கிறானுங்க…”

வசனங்களை மிக கூர்மையாக்கிய ராஜூமுருகனுக்கும்,சி.முருகேஷ் பாபுவுக்கும் பெரிய அப்லாஸ். ஒவ்வொரு டயலாக்குக்கும் இளைஞர்களின் கைதட்டல்களே இதற்கு சாட்சி.

பலவீனமான திரைக்கதை, மெதுவாக செல்லுதல், ஆவணப்படம் போல் உள்ளது என சில விமர்சகர்கள் விமர்சித்தாலும்,எவ்வித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தி இருக்கும் ராஜூமுருகனுக்கும்,மொத்த டீமுக்கும் பெரிய அப்லாஸ்.

2 தேசிய விருதுகள் (சிறந்த பிராந்திய மொழி படம், சிறந்த பாடகர்) பெற்றிருக்கும் 'ஜோக்கர்' இன்னும் பல விருதுகளை பெறுவதற்கு தகுதி ஆனவன்.

`கோபம் வந்துச்சு... பகத்சிங்கை அவுத்துவிட்ருவேன் பாத்துக்க‌!’ - நாம் அனைவரும் பகத்சிங்கை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது..!

ர.ரகுபதி