Published:Updated:

சஸ்பென்ஸ் படங்களின் கிங், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஆஸ்கர் மேடையில் பேசிய அந்த ஐந்து வார்த்தைகள்! #AlfredHitchcockBirthday

மூ.இ.சியாம் சுந்தர்வேல்
சஸ்பென்ஸ் படங்களின் கிங், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஆஸ்கர் மேடையில் பேசிய அந்த ஐந்து வார்த்தைகள்! #AlfredHitchcockBirthday
சஸ்பென்ஸ் படங்களின் கிங், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஆஸ்கர் மேடையில் பேசிய அந்த ஐந்து வார்த்தைகள்! #AlfredHitchcockBirthday

குறும்பு செய்ததற்கு தண்டனையாக 5 நிமிடங்களேனும் சிறையில் அடைத்து வைக்கும் படி தந்தையிடமிருந்து ஒரு சிறுகுறிப்புடன் உள்ளூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறான் ஐந்து வயது சிறுவன். அந்நாளில் அச்சிறுவன் நடத்தப்பட்ட விதமும் சந்தித்த சூழ்நிலையும் அவன் வாழ்க்கையின் மறக்கமுடியா வடுவாகிப்போனது. அன்று பயத்தில் படபடத்துப் போனவன், பின்னாட்களில் திரைப்படங்கள் வாயிலாக நம்மையும் அதேப் பதற்றத்தை உணரச்செய்வான் என்றும் 'Master of Suspence' என பெயரளிக்கப் பெறுவான் என்றும் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று அவருக்கு 118வது பிறந்தநாள். And the Name Is.. Alfred Hitchcock! ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்பது வெறும் பெயரல்ல.. பல்லாண்டுகளாக சினிமா ரசிகர்களின் ஆதர்சம்!

ஆகஸ்ட் 13, 1899 அன்று லண்டனின் கிழக்கு நகரான லேடோன்ஸ்டோனில் பிறந்த ஆல்ஃப்ரெட் ஜோசெப் ஹிட்ச்காக் ஒரு ஆங்கில-ஐரிஷ் குடும்பத்தை சேர்ந்தவர்.

உடல் பருமனும் தனிமையும் பலத்தைப் பங்குப் போட்டுவிட, தந்தையின் கட்டுப்பாடு வேறு. ஒரு வழியாகப் படிப்பை முடித்த ஹிட்ச்காக், எதிர்ப்பார்த்திருந்த ராணுவ வேலையும் கிடைக்காமல், விளம்பர வடிவமைப்பாளராக வாழ்க்கையை தொடர்ந்தவர், பின்பு திரைப்படங்களில் தலைப்பு வடிவமைப்பாளராக (Title Designer) பரமௌண்ட் நிறுவனத்தில் பணிப்புரிந்தார். 

கலை இயக்குநர், திரைக்கதையாளர், துணை இயக்குநர் என திரைத்துறையில் பல்வேறு அனுபவங்கள் பெற்றிருந்த ஹிட்ச்காக், ஆரம்பக்கட்டத்தில் சிறுகதைகள் எழுத்திக்கொண்டிருந்தார்.

1926ல் வெளிவந்த தி பிளசுர் கார்டன் (The Pleasure Garden) என்ற மௌனப் படம், ஹிட்ச்காக் இயக்கிய முதல் திரைப்படம்.  உலகெங்கிலும் ஐரோப்பியர்கள் திரைத்துறையை கலை வெளியாக நிறுவதொடங்கியிருந்த காலம். இன்னொருப் புறம், சாப்ளினும் பஸ்டர் கீட்டனும் மௌனமொழியில் திரையுலகை ஆட்சி செய்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், அமெரிகர்களிடம் மௌனப் படங்களைத் தாண்டிய வேட்கைத் தகித்திருந்தது. ஹிட்ச்காக் இயக்கிய முதல் அமெரிக்கப் படமான 1940ல் வெளிவந்த ரெபேக்கா(Rebecca) அவர்களின் வேட்கையைத் தணியச்செய்தது.

49 படங்களுக்கு மேல் இயக்கிய ஹிட்ச்காக், தன் திரைப்படங்களின் பொருள் வடிவமாக வைத்திருந்தது மரணம், அதிகார நெருக்கடி, பாலியல் சிக்கல்கள், குடும்ப உறவுநிலை சிக்கல்கள் போன்றவற்றைத்தான்.  மேற்கின் அப்போதைய பெரும் பகுதிகளிலிருந்த தாக்கவியலான வாயூரிசம் (Voyeurism) என்கின்ற பாலியல் மனவுந்துதலின் அடிநாதம் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களில் பொதிந்திருக்கும்.

கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களைப் புறவெளியில் காட்டி, பார்வையாளர்களிடம் கதையின் மையத்தை 'சஸ்பென்ஸ்' வைத்து திறந்துக் காண்பிப்பதே ஹிட்ச்காக்கின் சினிமா.

ஹிட்ச்காக் வைக்கும் ஒவ்வொரு ஷாட்டிலும் (shot) பதற்றம், பயம், சந்தேகம் போன்ற மூன்றும் நிரந்தரம். அம்மூன்றையும் கதையின் தேவைக்கு ஏற்பக் கதாபாத்திரங்கள் மூலம் திரைவடிவமாக படத்தொகுப்பின் வழி பார்வையாளரிடம் கொண்டுசேர்ப்பதில் தான் ஹிட்ச்காக் வாகை சூட்டிக்கொண்டார்.

வெர்டிகோ(Vertigo) திரைப்படத்தில் திருப்பம்தரும் 'தற்கொலை' காட்சி வரிசை, தி மேன் ஹு நியூ டூ மச்(The man who knew too much)யில் வரும் 'ஆல்பர்ட் ஹால்' காட்சி, தி பேட்ஸ்(The Birds)யில் பதரடிக்கும் 'மெலனியை பறவைகள் தாக்கும்' காட்சிப் போன்றவை அவர் சூடிய வாகைகளுக்கு சான்றாகிறது. பரிசோதனை முயற்சிகளில் ஹிட்ச்காக் எப்போதும் தனக்கேயான நிரந்தரப் பட்டியல் ஒன்றைவைத்திருந்தவர்.

சைக்கோ(Psycho) படத்தில் வரும் குளியலறைக் காட்சி வரிசையில் படத்தொகுப்பு உச்சத்திலிருக்கும். அத்தருணம் தரும் பீதியைப் பார்வையாளரிடம் உணரச்செய்வதிலே படத்தொகுப்பில் கவனம் செலுத்தியிருப்பார்.

ரியர் விண்டோ (Rear Window) திரைப்படத்தில் ஒளிப்பதிவின் வரையறைகளை விரியச்செய்தார். அப்படத்தில் வரும் 'கேமரா கோணங்கள்' மாற்றுமுறையில் முயற்சித்தினர்.

காட்சிப்படுத்தும் விதத்திலும் ஹிட்ச்காக்கை பின்பற்றுவோர் பலர். காட்சியை நிலைப்படுத்துதல் (Staging) என்னும் கலையில் அவருக்கு இணை அவரே. காட்சியை வடிவமைப்பதில் அழகியலும் கதைக்களமும் பொருந்திடவிருப்பது ஹிட்ச்காக்கின் வினை.

அவரின் படத்தில் வரும் பின்னணி இசையும் ஒரு கதாபாத்திரம்போல, படத்தினூடே பயணிக்கும்.   

சைக்கோ மற்றும் ரியர் விண்டோ திரைப்படங்கள், படத்தொகுப்பு மற்றும் திரைக்கதை சார்ந்த திரைத்துறை பாடமாகவுள்ளது. அவர் உருவாக்கிய சஸ்பென்ஸ் வகையராவோ, உலகளவில் இன்றும் பலரின் திரைத்தடம்.

பிரெஞ்ச் இயக்குநர் த்ருஃபாவ்வுடனான கலந்துரையாடலில் ஹிட்ச்காக்கிடம் அவரது சினிமா குறித்துக் கேட்டபோது அவர் இவ்வாறு சொல்கிறார், "பெரும்பான்மை படங்கள் வாழ்க்கையை பற்றி இருக்கிறது. என்னுடையதோ கேக்'கின் ஒரு துண்டுப் போல."

சமரசம் என்பதே இந்தக் கலைஞனிடம் இல்லை. எந்தக் கதையைப் படமாக்கலாம் என்ற தேடலில் இருந்தபோது அவரது உதவியாளர் Peggy Robertsonதான், ‘Psycho’ நாவலைப் பரிந்துரைக்கிறார். அதற்கும் காரணம் உண்டு, Robert Bloch எழுதிய அந்த நாவலைப் படித்த ஒரு விமரிசகர் ‘இதெல்லாம் படமாகவே பண்ண முடியாது.’ என்று குறிப்பிடுகிறார். ‘யாருகிட்ட?’ என்று நினைத்தாரோ என்னமோ Peggy Robertson, அதை பாஸிடம் கொடுக்கிறார். படித்துப் பார்த்து அசந்த ஹிட்ச்காக், படமாக்கும் முன் செய்தது என்ன தெரியுமா?

அந்த நாவலின் அத்தனை பிரதிகளையும் வாங்கிவிடச் சொல்லி  Peggy Robertson-இடம் கட்டளையிடுகிறார். ‘நான் அந்த நாவலின் க்ளைமாக்ஸைப் படிக்கும்போது இருந்த திரில் என் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்’ என்று நினைத்ததே அதற்குக் காரணம்!

North by Northwest என்றொரு படம். நியூயார்க்கில் உள்ள United Nations கட்டிடத்தைப் படமாக்கவேண்டும். வேறொரு படத்தில் காட்டப்பட்ட ஒரு காட்சியின்மூலம், அந்தக் கட்டிடத்தைப் பற்றிய தவறான பிம்பம் ஏற்படவே, ஏகப்பட்ட கெடுபிடிகள். ஸ்டுடியோவில் இண்டீரியர் செட் போட்டு எல்லாம் எடுத்தாலும், விடவில்லை ஹிட்ச்காக்.  ஒரு டூரிஸ்ட் போல அந்த இடத்தில் கேமராமேனுடன் அலைந்து அதன் முகப்பை பலவாறு ஷூட் செய்துகொண்டு, United Nations பில்டிங்கின் வெளிப்புறமெல்லாம் உண்மையாகவே ஷூட் செய்து படத்தில் இணைத்துக் கொண்டார். அந்த அளவுக்கு சமரசமற்று இருந்தார்.

ஐந்து முறை, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ஒருமுறை கூட விருது பெறவில்லை. அதற்குப் பிராயச்சித்தமாக அவருக்கு Irving G. Thalberg Memorial Award ஆஸ்கர் கமிட்டியால் கொடுக்கப்பட்டது.

விருதைப் பெற்றுக் கொள்ள அவர் வருவதை மேலுள்ள காணொளியில் பாருங்கள். அதிலேயே ஒரு கம்பீரம் இருக்கும். 20 வருடங்களாக, ஹிட்ச்காக்குக்கு ஆஸ்கர் விருது கொடுக்காததால் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஒருவித கோப மனோபாவம் இருந்தது. எதாவது பேசுவார் என்று திரையுலகே எதிர்பார்த்திருக்க, அவர் படங்களின் காட்சிபோலவே ஒருவித சஸ்பென்ஸான உடைமொழியுடனே நடந்து வந்து விருதைப் பெற்றுக் கொள்கிறார். மைக் அருகே வந்தவர் ஐந்தே ஐந்து வார்த்தைகள்தான் பேசினார்.

“Thank you…very much indeed.”

நன்றி ஹிட்ச்காக்... எங்களுக்கு பல அரிய படைப்புகளைத் தந்ததற்கு!

மூ.இ.சியாம் சுந்தர்வேல்