Published:Updated:

'சரவணன் மீனாட்சி' பற்றிய ரகசியம் சொல்கிறார் செந்தில்குமாரி!

வெ.வித்யா காயத்ரி
'சரவணன் மீனாட்சி' பற்றிய ரகசியம் சொல்கிறார் செந்தில்குமாரி!
'சரவணன் மீனாட்சி' பற்றிய ரகசியம் சொல்கிறார் செந்தில்குமாரி!

சரவணன் மீனாட்சி சீரியலில் செல்லமான அம்மாவாகவும், அவ்வப்போது கோபமான மாமியாராகவும் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரின் மனத்திலும் இடம்பிடித்தவர் செந்தில்குமாரி. இவர் நமக்கு வெள்ளித்திரையில் பரீட்சயமான முகம் என்றாலும் சின்னத்திரைக்குப் புது வரவு. தன்னுடைய முதல் சீரியலிலேயே தனக்கென ஒரு முத்திரையைப் பிடித்துள்ளார். நடிகை மீனாளின் அக்கா.

''உங்களைப் பற்றி..?''

 ''என்னுடைய சொந்த ஊர் மதுரை. கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட  கணவரோட வேலைக்காக சென்னையில செட்டில் ஆகிட்டோம். எனக்கு ரெண்டு பசங்க. பொண்ணு ஆறாவது படிக்கிறா. பையன் மூணாவது படிக்கிறான். என்னோட தங்கச்சி தான் நடிகை மீனாள். அவ மூலமாதான் எனக்கு மீடியா பத்தி தெரிஞ்சது. இப்ப எல்லாருக்கும் தெரிஞ்ச நடிகை ஆகிட்டேன்.''

 '' 'கற்றது தமிழ்' பட வாய்ப்பு எப்படி கிடைச்சது..?''

''என்னோட கணவரின் நண்பர்தான் இயக்குநர் ராம். அவர் என்னைப் பார்த்துட்டு என் கணவர் கிட்ட , 'என்னோட படத்துல ஒரு சின்ன ரோல் உங்க மனைவியைப் பண்ண சொல்லுங்களே'னு கேட்டுருக்கார். எனக்கு சின்ன வயசுலேருந்தே சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. என் கணவர் கேட்டதும் உடனே 'ஓகே' சொல்லிட்டேன். இப்படிதான் என்னோட வெள்ளித்திரை என்ட்ரி அமைஞ்சது. அதுக்கப்புறம் என் தங்கச்சி மூலமாவும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைச்சது.''

''வெள்ளித்திரை டு சின்னத்திரை எப்படி..?''

''எனக்கு சரவணன் மீனாட்சி சீரியல் ரொம்பப் பிடிக்கும். தொடர்ந்து பார்ப்பேன். அதன் டைரக்டர் என்னை நடிக்கச் சொல்லி கேட்டார். முதல்ல வேணாம்னு மறுத்துட்டேன். தொடர்ந்து கேட்டுட்டே இருந்தாங்க. அதுனால ஓகே சொல்லிட்டேன்.''

'' 'சரவணன் மீனாட்சி' சீரியல் அனுபவம்..?''

''சரவணன் மீனாட்சி மூலமா எனக்கு ஒரு பெரிய குடும்பம் கிடைச்சிருக்கு. எல்லாருமே ஜாலியா பழகுவாங்க. எங்களுக்குள்ள எந்த வித போட்டியோ, பொறாமையோ கிடையாது. ஏதாவது ஒரு சீன் நல்லா பண்ணா, உடனே எல்லாரும் பாராட்டுவாங்க. இங்க சின்ன ஆர்ட்டிஸ்ட், பெரிய ஆர்ட்டிஸ்ட்ங்குற பாகுபாடுலாம் கிடையாது. அதுனாலவே இதுல ஒர்க் பண்றது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.''

''மறக்கமுடியாத பாராட்டு..?''

''ஞானக் கிறுக்கன், குறுநில மன்னன்னு ரெண்டு படம் பண்ணி இருந்தேன். அந்த படங்களைப் பார்த்துட்டு பாரதிராஜா சார், 'நீ முதல்லயே என் கண்ணுலப் படலை.. பட்டிருந்தா உன்னை இன்னொரு ராதிகாவா ஆக்கிருப்பேன்னு' சொன்னாரு. அவர் என்னை கூப்டு பாராட்டுவாருனு நான் நினைச்சுக்கூட பார்த்தது இல்ல. அதுதான் என்னோட வாழ்க்கையில இப்பவும், எப்பவும் மறக்கமுடியாத பாராட்டு''.

''சரவணன் மீனாட்சி' பத்தி ஒரு ரகசியம்...

''மீனாட்சி மேல பழி போடுறதுக்காக முத்தழகு என் மேல தீ வைக்கணும். அப்படி ஒரு சீன். அந்த சீன்ல நடிக்கிறப்ப என் சேலை மேல நிஜமாவே தீ பட்டு, என் கையெல்லாம் பொத்து போச்சு. அலறிட்டேன். இப்பதான் காயம் ஆறிட்டு வருது. மக்கள் அந்த சீனை டிவியில் பார்க்கும் போது, ’இந்தப் பொண்ணு எவ்ளோ அற்புதமா நடிச்சிருக்கா, பாரு’னு சொல்லியிருப்பாங்கள்ல.'' (சிரிக்கிறார்)

''தொடர்ந்து சீரியல்ல நடிப்பீங்களா..?''

''எனக்கு சரவணன் மீனாட்சி சீரியல் பெர்சனலா பிடிச்சதுனாலதான் அதுல நடிக்கவே ஒத்துக்கிட்டேன். அந்த சீரியலைப் பார்த்துட்டு இப்போ நிறைய சீரியல் ஆஃபர் வருது. ஆனா, எனக்கு வெள்ளித்திரையில நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. சின்னத்திரையில தொடர்ந்து சூட்டிங் பண்றதால, என்னால வெள்ளித்திரையில கான்சன்ட்ரேட் பண்ண முடியல. இப்போதைக்கு அடுத்து சீரியல் பண்ற ஐடியா இல்ல.''

''வெள்ளித்திரையில் நடிக்கிறீங்களா..?''

''ஆமா. இப்போ விஜய் சார் கூட 'மெர்சல்' படத்தில் நடிச்சிட்டு இருக்கேன். அதுக்கப்புறம் ’மதுர வீரன்’, ’சர்வம் சுந்தரம்’னு சில படங்கள்ல நடிச்சிருக்கேன். அதுபோக நிறையப் படங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது. ஆனா சீரியல் பண்றதால என்னால அந்த படங்கள்ல நடிக்க முடியல.''

'கோலி சோடா'க்கு அப்புறம் உங்க தங்கச்சி கூட சேர்ந்து படம் பண்ணலையே..?

''எனக்கு என் தங்கச்சிக்கூட சேர்ந்து ஒரு படமாவது நடிக்கணும்னு ரொம்ப ஆசை. என்னோட ஆசை 'கோலி சோடா' படத்துலதான் நிறைவேறுச்சு. எனக்குத் தொடர்ந்து அவ கூட சேர்ந்து நடிக்க விருப்பம்தான். ஆனா, இப்போ அவளுக்கு திருமணம் ஆகிட்டதால கொஞ்ச நாள் நடிப்புக்கு பிரேக் விட்டுருக்கா. திரும்பி வந்ததும் வாய்ப்பு கிடைச்சா அடி தூள் பண்ணிடுறோம்.''

வெ.வித்யா காயத்ரி

எளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்! 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.