Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘கெட்ட சினிமா சார் அது...!’ - தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் `முள்ளும் மலரும்' #39YearsOfMullumMalarum

நாவலிலிருந்து உருவான  சினிமா அது. ரீ-ரிக்கார்டிங் செய்வதற்கு முன்பு, மிகுந்த ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தார் தயாரிப்பாளர். அதிர்ந்தபோன அவர் இயக்குநரிடம் சென்று, ``அடப்பாவி! படத்துல அங்கே ஒரு வசனம், இங்கே ஒரு வசனம்னு வருது. படமா எடுத்திருக்கே... என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே!"  என ஆவேசமாகத் திட்டித் தீர்த்துவிட்டுப் போகிறார். இயக்குநர் சிறிதும் கோபப்படவில்லை.

படம் வெளிவந்தது. முதல் மூன்று வாரங்கள் படம் பார்த்தவர்கள், மெளனமாகவே கலைந்து சென்றனர். தயாரிப்பாளரோ ``படம் அவ்வளவுதான். நம்ப கதை முடிஞ்சுபோச்சு!" என்றார்.

படத்தின் நாயகனும் இயக்குநரும் பதைபதைக்கிறார்கள். தயாரிப்பாளரிடம் சென்று, ``படத்துக்கு இன்னும் நன்றாக பப்ளிசிட்டி செய்யுங்கள்'' என்கிறார்கள்.

தயாரிப்பாளரோ, ``ஓடாத படத்துக்கு பப்ளிசிட்டி தேவையில்லை" என நழுவிவிடுகிறார். அதன் பிறகு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நான்காவது வாரத்திலிருந்து திரண்டது திரையரங்குகளில் கூட்டம். ஆரவாரம், கைத்தட்டல், பிளாக்கில் டிக்கெட், பாராட்டு மழை, நூறாவது நாள் வரை ஓயவில்லை. படத்தின் வெற்றியைக் கண்ட தயாரிப்பாளர், இயக்குநரிடம் சென்று பிளாங்க்  செக்கை நீட்டி, ``எவ்வளவு வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்'' என்கிறார். இயக்குநர் அன்போடும் நன்றியோடும் மறுத்து, ``இப்படி வித்தியாசமான ஒரு படம் இயக்கும் வாய்ப்பைத் தந்ததே பல்லாயிரம் கோடிகளுக்குச் சமம். இந்த செக்கை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்'' என்கிறார்.

அப்படி சொன்ன இயக்குநர் வேறு யாருமல்ல, தலைமுறையைக் கடந்தும் கொண்டாடப்படும் `முள்ளும் மலரும்' படத்தை இயக்கியவரும், இன்றைய `தெறி' வில்லனுமான மகேந்திரன். அந்தத் தயாரிப்பாளரின் பெயர் வேணு செட்டியார். இந்தப் படம் வெளிவந்து 39 வருடங்களைக் கடந்து, இன்றும் பேசுபொருளாக இருப்பதற்குக் காரணம், அதில் நடித்த கதாபாத்திரங்களும் இயக்குநரின் நேர்த்தியும்தான்.

முள்ளும் மலரும்

தமிழ்ப் படங்களில் மிகுதியான பாடல்களும் பக்கம் பக்கமான வசனங்களும் ஆதிக்கம் செலுத்திவருவதைக் கண்டு வெறுத்துப்போன மகேந்திரன், குறைவான  வசனங்கள், காட்சிப் படைப்பின் மூலம் பின்னணி இசை சேர்த்து, படத்தை மாபெரும் புரட்சிக்கு வித்திட்டார். இந்தப் படம் தேசிய விருதுக்கு அனுப்பப்படாவிட்டாலும், இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டு பெரும் பெயரைப் பெற்றது.

எளிய கதை. மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள்தான். ரஜினி, ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி ஆகிய நால்வரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். அனைவரையும்விட ரஜினி ஒருபடி மேலேதான். அதுவரை, நடிப்புக்குப் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார் ரஜினி. அவரது ஒட்டுமொத்த நடிப்புக்கும்  தீனிபோட்டது இந்தப் படம். கோபம், இயலாமை, வெறுப்பு, பாசம் என யதார்த்தமான நடிப்பில் சிகரத்தைத் தொட்டார் ரஜினி.

படத்தின் கதாநாயகி ஷோபா. முகபாவங்கள், உடல்மொழிகள் கொண்டே காட்சியின் முழு உணர்ச்சியையும் பார்வையாளனுக்குக் கடத்தியிருப்பார் ஷோபா. குறிப்பாக,  க்ளோசப் காட்சிகளில் தனது கண்களால் மட்டுமே சோகத்தைக் காட்டும் அசாதாரணமான  நடிகை.

ரஜினி

சரத்பாபு, தன் அமைதியான நடிப்பால் நம் மனதைக் கவர்கிறார். படாபட் ஜெயலட்சுமி `மங்கா' பாத்திரத்தை யதார்த்தத்துடன்கூடிய அழகுணர்ச்சியோடு பூர்த்திசெய்துள்ளார். மென்மையான பின்னணி இசையின் மூலம் இளையராஜாவும், அழகுணர்ச்சி மிகுந்த காட்சியமைப்புகள் மூலம் பாலுமகேந்திராவும் படத்துக்கு வலு சேர்க்கிறார்கள்.

சிறந்த காட்சிகள்:

``என்ன பயபுள்ளைங்களா?" என ரஜினி அடிக்கடி கேட்கும் இடங்களாகட்டும், சரத்பாபுவுடன் சண்டைபோடும் காட்சிகளாகட்டும், ``வாசிங்க சார்... வாசிங்கடா டேய்!" என, கச்சேரிக்காரர்களை மிரட்டும் இடங்களாகட்டும், ரஜினி தனியே  மிளிர்கிறார்.

`பாசமலரு'க்கு அடுத்து பார்வையாளர்களின் கண்ணீரை அதிகம் குடித்த திரைப்படம் `முள்ளும் மலரும்'. இந்தத் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் மனிதம் வழிய வழிய செதுக்கியிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.

ஒன்று, கையை இழந்த காளியைக் (ரஜினி)  காண, அந்த மலைமுகட்டிலிருந்து வள்ளி (ஷோபா)  ஓடிவரும் காட்சி. பின்னணி இசையில் பெரும் மாயாஜாலமே செய்திருப்பார் இளையராஜா. காட்சியின் இறுதியில் ரஜினி, ஷோபாவிடம் ``என்னடா ஆச்சு? ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லடா ஒண்ணுமில்ல” என்று சொல்லும்போது அங்கே யாரும் சிறிதளவுகூட ரஜினியைப் பார்க்கவில்லை; காளியைத்தான் பார்த்தார்கள்.

மற்றொன்று, படத்தின் உச்சகட்ட காட்சி. ரஜினியின் எதிர்ப்பையும் மீறி சரத்பாபுவைத் திருமணம் செய்துகொள்ள சென்றுகொண்டிருப்பார் ஷோபா. சிறிது தூரம் சென்ற பிறகு, கண்ணீரோடு மீண்டும் ரஜினியை நோக்கி ஓடிவருவார். ரஜினியைக் கட்டிப்பிடித்து அழுவார். தன் தங்கை தன்னிடமே வந்து சேர்ந்ததை எண்ணி காளியாகிய  ரஜினிக்குப் பெருமை பிடிபடாது. ஷோபாவை அழைத்துக்கொண்டு  சரத்பாபுவிடம் வருவார். ``ஆனா இப்பவும் உங்களை எனக்குப் பிடிக்கலை சார்…’' எனச் சொல்லி இருவரையும் சேர்த்துவைப்பார். இருவரது ஜோடி பொருத்தத்தையும் கண்டு மெய்சிலிர்ப்பார். இறுதியாக, ஷோபாவின் சிரிப்போடு படம் நிறைவுபெறும். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் நம் கண்களின் நீர் வழிந்திருக்கும். அதற்கு ராஜாவும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

ரஜினி

ரஜினியின் நடிப்பை ரசித்துப் பார்க்க, `காளி' கதாபாத்திரம் ஒன்றே போதும். இந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர், ``உன்னை அறிமுகப்படுத்தியதற்காக மிகவும் பெருமிதம்கொள்கிறேன்"  என ரஜினிக்குக் கடிதம் எழுதினார். இதன் பிறகு மகேந்திரனோடு இரண்டு படங்கள் பணியாற்றினார் ரஜினி. பல்வேறு இயக்குநர்களோடு ரஜினி நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்றிருந்தாலும், அவருக்கு அன்றும் இன்றும் பிடித்த திரைப்படம் `முள்ளும் மலரும்'; பிடித்த இயக்குநர் மகேந்திரன்தான்.

இத்தனைக்கும் மகேந்திரன், சினிமாவுக்கு விரும்பி வந்தவர் அல்ல. ஆனால், செய்த வேலையை விருப்பத்துடன் செய்தார். விகடனின் விமர்சனத்தில் 60-க்கு மேல் மதிப்பெண் பெற்ற திரைப்படங்கள் ஒருசிலவே. அதில், `முள்ளும் மலரும்' ஒன்று. மொத்தம் 61 மதிப்பெண் பெற்றுள்ளது. ரஜினி இனி ஆயிரம் `கபாலி'யாக நடிக்கலாம். ஆனால், ஒரு `முள்ளும் மலரும்' காளியாக நடிப்பது இயலாத ஒன்றே. ஏனென்றால், ஒரு சூரியன், ஒரு நிலவுபோல ஒரு `முள்ளும் மலரும்', ஒரு `காளி'.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்