வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (17/08/2017)

கடைசி தொடர்பு:11:05 (17/08/2017)

ஷங்கர்... பிரமாண்டங்களின் காதலன்... எளிமையான நண்பன்... பாக்ஸ் ஆஃபீஸின் முதல்வன்! #HBDShankar 

ஷங்கர்

“ஜென்டில்மேன் படம். ஹிட். டைரக்டரைப் பேட்டி எடுக்கலாம்னு தேடிப்போனோம். தி.நகர் பக்கத்துல ஒரு சின்ன ரூம். மாடில இருக்கார்னாங்க. நாங்க மேல போறப்ப ஒல்லியா ஒரு ஆளு, கைல ரெண்டு குடத்தோட அவசர அவசரமா எங்களைத் தள்ளிட்டு இறங்கிப்போனார். அப்பறமா மேல அந்த ரூமுக்கு முன்னால நாங்க வெய்ட் பண்ணிட்டிருந்தோம். தண்ணிக்குடத்தோட மேல வந்த அவர்தான் ஷங்கர். பேட்டின்னதும், இருங்க டிரெஸ் மாத்திட்டு வரேன்னு மாத்திட்டு வந்து உட்கார்ந்தார். அதுக்கப்பறம் பலமுறை அவரை போட்டோ எடுத்ததுண்டு. அந்த தண்ணிக்குடம் தூக்கிட்டு வந்த ஷங்கர்கிட்ட என்ன எளிமை இருந்ததோ, அதே எளிமையும், புன்னகையும் இப்ப  இவ்ளோ பெரிய இடத்துக்கு அவர் வந்த பிறகும் இருக்கு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பா நான் பார்க்கறேன்” 

மேலே இருக்கிற புகைப்படத்தை எடுத்த விகடனின் முதன்மை புகைப்படக்கலைஞர் ராஜசேகரன் இந்தப் புகைப்படம் எடுத்த நாளை நினைவு கூர்ந்து என்னிடம் சொன்னது இது.
 
பள்ளிநாள்கள். பலர் குடியிருக்கும், ஒட்டுக்குடித்தன சூழலில் வசித்த ஷங்கர்தான், அந்த இடத்தின் ஜாலி நண்பன். எல்லாரையும் கலகலப்பாக வைத்துக்கொள்வது இவர்தான். அதன்பின் பாலிடெக்னிக் படிக்கும்போது பஸ்ஸில் வெகு ஜாலியாக, கலாட்டா மன்னனாக இருந்திருக்கிறார். ‘அதெல்லாம்தான் சிக்கு புக்கு ரயிலே, ஊர்வசி பாட்டெல்லாம் அந்தப் பாதிப்புல எடுத்ததுதான்’ என்பார் ஷங்கர். அதனாலேயே பெரிய நண்பர் வட்டாரம். பாட்டு, மிமிக்ரி என்று வெகு ஜாலியாக இருந்தவரின் பெயரை விழா ஒன்றில் போட்டியாளராகப் பதிவு செய்கிறார்கள் நண்பர்கள். கவர்னர் முன்னிலையில் போட்டி. 5000 மாணவர்கள் முன்பு தயங்கியபடியே ஒரு பெர்ஃபார்ம் செய்கிறார். பெரிய வரவேற்பு. கவர்னர் கையால் முதல்பரிசு. 

ஷங்கர்

படிப்பு முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் குவாலிட்டி கன்ட்ரோல் சூபர்வைசர் பணி. அந்த ஃபேக்டரியில் ஸ்டிரைக் நடக்க, அப்போது நண்பர்களுடன், தில்லை ராஜன் குழுவினர் நடத்திய கிரேஸி மோகன் எழுதிய நாடகம் ஒன்றைப் பார்க்கிறார். அதில் வரும் சின்ன காமெடி வேடம் ஒன்றிற்கு பெரிய வரவேற்பும் கைதட்டலும் கிடைக்க, இவருக்கும் நடிக்க ஆசை. கேட்கிறார். அவர்களும் ஒப்புக்கொள்ள, இங்கே ஸ்டிரைக் தொடர.. நடிப்பில் ஆர்வம். காமெடி, கேரக்டர் ரோல் என்று செய்து கொண்டிருக்கிறார். அதன்பின் நடிக்கும் ஆர்வத்தில்தான் உதவி இயக்குநராக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சேர்கிறார். சேரும்போது நடிக்க வேண்டும், முடிந்தால் ஒரே ஒரு படம் இயக்கினால்கூட போதும் என்பதுதான் ஷங்கர் மனதில் இருந்தது. ஆனால், திரையுலகம் இந்த ஜென்டில்மேனை சினிமா இயக்குநராக அங்கீகரித்து தூக்கித் தோளில் வைத்துக் கொண்டது!

ஜென்டில்மேன் அப்போது அடித்த அடி, அதிரடி! ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளியாகி மெகாஹிட். அதிலும்  ‘சிக்குபுக்கு ரயிலே’ மரணமாஸ் ஹிட். அந்தப் பாடலுக்காகவே தியேட்டரில் மக்கள் குவிந்தார்கள். பாடலோடு படமும் மக்களை ஈர்த்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரவென்ற திரைக்கதை. தேவையான இடங்களில் காமெடி, பாடல்கள் என்று ‘யார்றா இது’ என்று யோசிக்க வைத்தார். அதன்பின் காதலன். 3வது படமே கமலுடன் இந்தியன்.

இவர் படங்களில் ஒரு வரிசை இருப்பதை உணரலாம். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ். முதல்வன். பாய்ஸ். அந்நியன். சிவாஜி. எந்திரன். நண்பன். ஐ..   ஒரு படம் சமூக விஷயத்தைப் பேசும். அடுத்தபடம் பெர்சனல் விஷயத்தை அலசும். ‘அப்படித் திட்டமிடவெல்லாம் இல்லை. ஒன்று சூப்பர் ஹீரோயிசக் கதையாக இருக்கும். இன்னொன்று சாதாரணமாக இருக்கும்’ என்கிறார் ஷங்கர். அதை உடைக்க ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் முயன்றார். அந்நியனுக்கு அடுத்து வந்த சிவாஜியும் சமூகபிரச்னையை பேசியதால், அது உடைந்தது எனலாம். 

சிந்திக்கும்போதே பிரமாண்டம்தான். இது முடியுமா முடியாதா என்றெல்லாம் யோசித்ததில்லை. அதனால்தான் ஆம்ஸ்டர்டாம், சைனா என்று பிடிக்க முடியாத லொகேஷன்களிலெல்லாம் பாடலெடுக்கிறார். உலக அதிசயங்களை ஒரே பாடலில் காட்டுகிறார். 

ஷங்கர் ரஜினி

எனக்கு ஷங்கரிடம் பிடித்த இன்னொரு விஷயம், ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை வித்தியாசமாக வைப்பார்.

ஜென்டில்மேன் - சரண்ராஜ் - அழகர்நம்பி
காதலன் - கிரிஷ் - காகர்லா 
இந்தியன் - சுகன்யா - அமிர்தவள்ளி
ஜீன்ஸ் - நாசர் - பேச்சியப்பன் ராஜாமணி (படத்தில் பிரசாந்த் இருவரின் பெயர், விஸ்வநாதன் - ராமமூர்த்தி!)
முதல்வன் - மணிவண்ணன் - மாயக்கிருஷ்ணன்
பாய்ஸ் - விவேக் - மங்களம்
அந்நியன் - விவேக் - ச்சாரி
சிவாஜி - சுமன் - ஆதிசேஷன்
எந்திரன் - ரஜினி - வசீகரன் 
நண்பன் - விஜய் - பஞ்சவன் பாரிவேந்தன், கொஸாக்ஸி பசப்புகழ், சேவற்கொடி செந்தில் (ஜீவா) 
ஐ - ஓஜாஸ்- ஓஸ்மா ஜாஸ்மின்

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரது முத்திரை இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தன் படம் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும், அதைப் பற்றி அலசி ஆராய்வது ஷங்கருக்குப் பிடித்த ஒன்று. தேவைப்பட்டால், அந்த விஷயம் குறித்து கற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டார். அப்படித்தான் அந்நியன் பட சமயத்தில் ஒரு ஆசை துளிர்விட, ஒன்றரை வருடம் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்று கொண்டார் ஷங்கர்!

இவரின் பெயர்க்காரணம் மிக சுவாரஸ்யம். இவர் வயிற்றில் இருக்கும்போது, அம்மா ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டொரு நாளில் டெலிவரி டேட். படத்தில் சிவாஜியின் பெயர் ஷங்கர். ‘பையன் பொறந்தா இந்தப் பேர் வைக்கணும்’ என்று மனதில் நினைத்திருக்கிறார் இவர் அம்மா. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரசவ வலி வந்திருக்கிறது. அப்படித்தான் இவருக்கு ஷங்கர் என்ற பெயரை செலக்ட் செய்தார்களாம். யார் படத்தைப் பார்க்கும்போது பிறந்தாரோ, அதே நடிகரின் பெயரில் ஏ.வி.எம் பேனரில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் என்று த பெஸ்ட் கூட்டணியுடன் திரைப்படம் இயக்கினார் என்பது... எஸ்... வரலாறு!   

ஷங்கரிடம் ஒரே ஒரு கேள்விதான்: உங்களின் முதல் ஸ்கிரிப்ட்  ‘அழகிய குயிலே’ எப்ப வரும் சார்?

Happy Birthday Shankar!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்