''ஆக்‌ஷன் ஹீரோ... போலீஸ்... இன்டலிஜென்ட்..!'' - நடிகர் சந்தீப் கிஷன் ஆன் ஃபையர்

'மாநகரம்' படத்துக்குப் பிறகு, நடிகர் சந்தீப் கிஷன் பலருக்கும் அறிந்த ஒரு நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக 'மாயவன்', 'நெஞ்சில் துணிவிருந்தால்' படங்கள் ரிலீஸூக்காகக் காத்திருக்கிறது. இதுதவிர கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நரகாசூரன்' படத்துக்கும் ரெடியாகிக்கொண்டிருக்கிறார். பரபரப்பான படப்பிடிப்பிற்கிடையே சந்தீப்பிடம் பேசினோம்.

சந்தீப் கிஷன்

''ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நல்ல படங்களில் நடித்து வருகிறேன். எல்லாமே எதார்த்தமாக அமைந்ததுதான். சுசீந்திரன் சாரை ரொம்பப் பிடிக்கும். அவரை ஒரு மனிதராக ரொம்ப மதிப்பேன். அவரது படமான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் குமார் கேரக்டர் உங்கள் பக்கத்து வீட்டு பையனின் கதாபாத்திரத்தைப் போல் இருக்கும். அவனுக்கு வரும் திடீர் பிரச்னையை குமார் எப்படி ஹேண்டில் பண்ணிக்கிறான் என்பதுதான் கதை'' என்றவரிடம் 'அறம் செய்து பழகு' என்ற டைட்டில் தீடீரென்று மாறியது என்னக் காரணம் என்று கேட்டோம்.

’’ஒரு தனியார் மருத்துவமனை இந்தப் பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதனால்தான் பெயரை 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று மாற்றினோம். இந்தப் பெயரும் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகியிருக்கு. இது ஒரு ஆக்‌ஷன் மூவி. அதனால் இந்த டைட்டில் கரெக்டா இருக்கும். 'மாயவன்' படத்திலும் என் கேரக்டர் பெயர் குமரன். ரொம்ப எதார்த்தமான இன்ஸ்பெக்டர் கேரக்டர். இந்த கேரக்டரில் இருந்த நேர்மை எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் நடித்தேன். இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே சென்னையில் உள்ள ஒரு போலீஸ் ஆபிஸில் இரண்டு நாள் முழுக்க போய் உட்கார்ந்து அவர்கள் செய்வது எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தேன். அவர்கள் உட்காரும் ஸ்டைலே வித்தியாசமாகயிருக்கும். அதையெல்லாம் கவனித்தேன். 'மாயவன்' படத்தில் நடித்திருக்கும் குமரனுக்குக் கோபம் அதிகம் வரும். அதையெல்லாம் உண்மையான போலீஸ் ஆபீஸரிடமிருந்துதான் ஃபாலோ பண்ணினேன்’’.  

கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' படத்தைப் பற்றி கேட்டால், ’’நரகாசூரன்' படத்தில் என்னை இதுவரை பார்க்காத ஒரு கேரக்டரில் பார்ப்பீர்கள். ரொம்ப இன்டலிஜென்டான, பணக்கார வீட்டுப் பையனாக நடித்திருக்கிறேன். ரொம்ப ஸ்டைலா, நிறைய இங்கிலீஷ் வார்த்தைகள் பேசுவேன். இப்போது இந்தப் படத்துக்காக நான் ரெடியாகிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இந்த ஒரு மாதம் முழுக்க 'நரகாசூரன்' படத்தில் நடிப்பதற்கான ப்ராக்டிக்ஸில் கலந்துக்கொள்ள போகிறேன். இந்தப் படத்தின் கதைக்களம் முற்றிலும் புதிதாக இருக்கும். எப்படி 23 வயது கார்த்திக் நரேனால் இப்படி ஒரு ஸ்க்ரிப்ட் யோசிக்க முடிகிறது என்றுதான் தெரியவில்லை'' என்று சொல்லி, ஜூட் விட்டார் நடிகர் சந்தீப் கிஷன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!