Published:Updated:

கிடார் கலைஞன் டு காமெடி நடிகர்... ‘அல்வா’ வாசுவின் மறுபக்கம்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
கிடார் கலைஞன் டு காமெடி நடிகர்... ‘அல்வா’ வாசுவின் மறுபக்கம்!
கிடார் கலைஞன் டு காமெடி நடிகர்... ‘அல்வா’ வாசுவின் மறுபக்கம்!

‘எப்போதும் வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் காமெடியனுக்குப் பின்னால் சோகம் ஒளிந்திருக்கும்’ என்பார்கள். காமெடி நடிகர் ‘அல்வா’ வாசுவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சோகம் அப்பிக் கிடக்கிறது.

இவரின் சொந்த ஊர் மதுரை. ஏழ்மையான குடும்பம். உணவுக்கே திண்டாட்டமான நிலைமைதான். இருப்பினும், இந்த அன்றாட சோக மேகங்கள் வாசுவின் இளமைக்காலத்தைப் பாதிக்கவில்லை. வாசு தன் நண்பர்களுடன் சுற்றித் திரிந்தாலும் படிப்பில் கெட்டி. இசை ஆர்வமும் மிக அதிகம். கிடார் மீது ஆசைகொண்டு கிடார் வாசிக்கப் பயின்றார். ஒருகட்டத்தில் கிடார் அவரின் விரல்கள் விளையாடின. கைகளால் பெஞ்சில் தாளம்போட்டால், நண்பர்களின் கால்கள் ஆட்டம்போடும் அளவுக்கு இசையைக் காதலித்தார். அதனாலேயே மதுரை அமெரிக்கன் கல்லூரில் எம்.காம் படிக்கும்போது `மியூசிக்' என்றால் வாசுதான் என, கல்லூரியே கோரஸ் பாடும். 

“உனக்கு மியூஸிக் நல்லா வருது... சென்னைக்குப் போனா பெரிய இசையமைப்பாளர் ஆகிடலாம். அதுக்கு ட்ரை பண்ணு” என நண்பர்கள் உசுப்பேற்றி விட்டார்கள். வாசுவின் மனதிலும் அதே எண்ணம்தான். கல்லூரியில் எம்.காம் படிப்பை முறையாகப் படித்து முடித்து பட்டம் பெற்றார். இசையமைப்பாளர் கனவுகளைச் சுமந்தபடி சென்னைக்கு பஸ் ஏறினார். 

சினிமா கனவுகளுடன் வருபவர்களை... கோடம்பாக்கம் எப்படிச் சுழற்றிச் சுழற்றி அடிக்குமோ, அப்படித்தான் வாசுவையும் சுழற்றி அடித்தது. எதற்கும் அசரவில்லை வாசு. கையில் கிடாருடன் ஏறாத சினிமா அலுவலகம் இல்லை. சிலர், எடுத்த எடுப்பிலேயே ‘வாய்ப்பு இல்லை’ என மறுத்து வெளியே தள்ளினார்கள். பலர் ‘உன்னைப் பார்த்தா மியூசிக் பண்ற மாதிரியே தெரியலையே’ என ஏளனம் செய்தார்கள். சிலர் மட்டும் வாசுவின் ட்யூன்களைக் கேட்டும், பெஞ்சில் தாளம் போடவைத்தும் ரசித்தார்கள். ஆனால், அவர்களும் வாய்ப்பு தரவில்லை. ‘நீ எம்.காம் வரைக்கும் படிச்சிருக்க. எதுக்கு இந்த சினிமா ஆசை? ஊரு பக்கம் போய் சேரு’ எனப் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

‘நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த சினிமாவில்தான் இருப்பேன்’ என்பதில் உறுதியாக நின்றார் வாசு. அந்த உறுதிதான் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகச் சேர்த்திருக்கிறது. இசையமைக்க வேண்டும் என்ற கனவு, படிப்படியாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவையும் சேர்த்து விதைத்தது. சென்னை வீதிகளில் உலாவி, பல ஒன்லைன்களை எழுதினார்; பல சீன்களைப் பிடித்தார். அன்று இருந்த பல ஆயிரம் உதவி இயக்குநர்கள் பட்டியலில் கவனிக்கப்படும் மனிதராக வலம்வந்தார் வாசு. 

‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் ஒரு சீன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்க, முதல்முறையாக வெள்ளித்திரையில் தலையைக் காட்டினார் வாசு. அடுத்து ‘அமைதிப்படை’ படத்தில் உதவி இயக்குநராக இருந்து அதில் நடிக்கவும் செய்தார். அதில் ஹீரோ சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியால் ‘வாசு’ என்ற தன் பெயருக்கு முன்னால் ‘அல்வா’ வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது முதல் சினிமா துறையில் ‘அல்வா’ வாசு என்றே இவர் அழைக்கப்பட்டார். 

அதன் பிறகு மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குநராக வேலைசெய்தார். சில படங்களுக்குத் தனியே காமெடி ஸ்க்ரிப்ட் எழுதினார். கையில் பல கதைகளை வைத்துக்கொண்டு ஏறாத தயாரிப்பாளர்கள் அலுவலகம் இல்லை. ‘ஒன்லைன் நல்லாயிருக்கு. ஆனா, இப்ப இந்தப் படம் எடுக்க விரும்பலை’ என பதில் வரவே, அவருக்கான இரண்டாவது இன்னிங்ஸும் தோல்வியில் முடிந்தது. 

இலக்கை நோக்கி மனம் பயணம் செய்தாலும், சாப்பாட்டுக்குக் கொஞ்சமாவது பொருளாதாரம் தேவைப்படும்தானே? ஆதலால், காமெடியனாக, துணை நடிகனாகத் தனது திரைப் பயணத்தைத் தொடர்ந்தார். அப்படித்தான் நடிகர் வடிவேலுவின் நட்பு கிடைத்தது. பல படங்களிலும் அவரின் கூட்டாளிகளில் ஒருவராக நடித்தார். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘தாஸ்’ போன்ற பல படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து பட்டையைக் கிளப்பினார். ‘விசாரணை’ படத்தில் ஆந்திராவில் மளிகைக்கடை நடத்தும் நபராக நடித்தார். இப்படி 900 படங்களுக்குமேல் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். உடல்மொழியிலோ, பேச்சிலோ கொஞ்சம்கூட செயற்கைத்தனம் இல்லாமல் நடிப்பதுதான் ‘அல்வா’ வாசுவின் மிகப்பெரிய ப்ளஸ்.

இசையமைப்பாளர் கனவுடன் மதுரையிலிருந்து சென்னை வந்தவரை, 36 வருடங்கள் சுழற்றிச் சுழற்றி அடித்த தமிழ் சினிமா, பொருளாதார நெருக்கடியாலும் உடல்நிலை காரணத்தாலும் மீண்டும் மதுரைக்கே திருப்பி அனுப்பிவிட்டது. 

வாசுவுக்கு, கடந்த ஒரு வருடமாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்தார். தற்போது கல்லீரல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. கால்கள் மற்றும் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் கைவிரிக்க, தற்போது வீட்டில் படுத்தபடுக்கையாக இருக்கிறார். 57 வயதாகும் ‘அல்வா’ வாசுவுக்கு, அமுதா என்கிற மனைவியும், ஏழாவது படிக்கும் கிருஷ்ண ஜெயந்திகா என்கிற மகளும் இருக்கிறார்கள். 

அமுதாவின் தம்பி பாலசுந்தர் நம்மிடம், “எப்படியாவது அவரைக் காப்பாதிடணும்னுதான் இன்னமும் போராடிட்டு இருக்கோம். இவர் இவ்வளவு கஷ்டப்படுகிறது யாருக்கும் தெரியாது. நேற்றுதான் சிலரிடம் சொல்லியிருக்கிறோம். உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுளையும் அவரை நேசித்த மக்களையும்தான் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் பொருளாதார உதவி கிடைத்தால், எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். வாசுவுக்கு இன்னமும் தான் படம் இயக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. மரணப்படுக்கையில் கிடக்கிறார். காலம்தான் அவர் வாழ்ந்த வாழ்வைச் சொல்லும்'' என்றார் இறுக்கமான மனதுடன். 

‘அல்வா’ வாசுவின் மனதில், இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்குமோ..!

நா.சிபிச்சக்கரவர்த்தி