Published:Updated:

‘லோக்கல் கேபிளில் சினிமா ஒளிபரப்பினால் லைசன்ஸ் ரத்து, கைது!’ - விஷால் அதிரடி

எம்.குணா
ம.கா.செந்தில்குமார்
‘லோக்கல் கேபிளில் சினிமா ஒளிபரப்பினால் லைசன்ஸ் ரத்து, கைது!’ - விஷால் அதிரடி
‘லோக்கல் கேபிளில் சினிமா ஒளிபரப்பினால் லைசன்ஸ் ரத்து, கைது!’ - விஷால் அதிரடி

நடிகர் விஷால் தலைமையிலான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முதல்கட்டமாக ‘திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான ஃபெப்சியுடன் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாங்கள் விரும்பும் யாருடனும் வேலை செய்வோம்’ என்று அறிவித்தது. அதை எதிர்த்து ஃபெப்சி வேலை நிறுத்தத்தில் இறங்கியது. ஆனால், டான்சர்ஸ் யூனியன் உள்பட சில சங்கங்களைச் சேர்ந்த முக்கியமான உறுப்பினர்கள், வேலை நிறுத்தத்தைப் புறக்கணிக்க முடிவுசெய்தனர். அதனால் சில படங்களின் படப்பிடிப்பைத் தவிர மற்ற படங்களின் ஷூட்டிங்குகள் வழக்கம்போல் நடந்தன. 

இதையடுத்து தன் நிலையிலிருந்து இறங்கி வந்த ஃபெப்சி, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றது. இந்தச் சூழலில் `பில்லா பாண்டி’ என்ற படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக டெக்னீஷியன் சங்கத்தை, கூட்டமைப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது ஃபெப்சி. “இது, தயாரிப்பாளர் சங்கம் எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளுக்கான முதல் வெற்றி” என்கிறார்கள் சில சங்க நிர்வாகிகள். ஆனால், “இது ஃபெப்சியின் ஒருவித கண்துடைப்பு நாடகம்'’ என்கிறார்கள் கே.ராஜன் போன்ற சில தயாரிப்பாளர்கள். அதே சமயம் சஸ்பெண்டைக் கண்டித்து டெக்னீஷியன் சங்கம் ஆகஸ்ட் 20-ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது வேறுவிஷயம். 

இதற்கிடையில் புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்காக கேமரா தொழில்நுட்பம் படித்தவர்களுக்காக புதிய விண்ணப்பத்தைத் தயாரித்து விநியோகித்துவருகிறது. “இதற்கு விண்ணப்பித்த டெக்னீஷியன்களோடும் ஷூட்டிங் நடத்துவோம்” என்று தயாரிப்பாளர் சங்கம் கூறிவருகிறது.

இந்தச் சூழலில்தான் தயாரிப்பாளர் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழை வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள். மே தின விழாவுக்கு, ‘உலக தொழிலாளர்களே... ஒன்றுபட்டு வாருங்கள்’ என்று தொழிலாளர்களை அழைப்பதுபோல, ‘சினிமா முதலாளிகளே... ஒன்றுபட்டு வாருங்கள்’ என்ற வாசகங்களுடன் தயாரிப்பாளர்களை அழைத்துள்ளார்கள். மேலும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

காலை 11 மணியிலிருந்து மதியம் வரையிலும், பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கி இரவு வரையிலும் என இந்தக் கூட்டம் இரண்டு செஷன்களாக நடத்தப்படுகிறது. முதல் செஷனில் லோக்கல் கேபிள் சேனல்களில் திரைப்படங்கள், சினிமா பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்புவது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வரை வரவழைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு முக்கியக் காரணம், புதுப் படங்களை ஒளிபரப்பிய கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார்கள் தரப்பட்டன. ஆனால், புகார்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் தாமதப்படுத்தியுள்ளனர். அதற்குக் காரணம் என்ன என விசாரித்தபோது, ‘லோக்கல் கேபிள் சேனல் நடத்தும் அனைவரும் ஆளும் கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் பினாமிகள், உறவினர்கள் என்பது தெரியவந்தது. ‘புகாரை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றும் காவல் துறையிலிருந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு அழுத்தம் தரப்பட்டதாம். 

இதனால் கோபமடைந்த விஷால், ‘வழக்கு பதிவுசெய்ய போலீஸ் தயங்குவதை, பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து அறிவிப்பேன்’ என்று சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறார். இதையடுத்து கண்துடைப்புக்காக சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்துதான் இன்றைய கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

இப்படி முறையான உரிமம் இன்றி லோக்கல் கேபிள் டிவி, பேருந்துகள், வேறு மாநில சேனல்களில் தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பப்படுவதைக் கண்காணிக்க, விஷால் ஒரு குழு அமைத்துள்ளார். அந்தக் குழு சமீபத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரு தனியார் தெலுங்கு சேனல், தன் யூடியூபில் விஷால் நடித்த ‘பூஜை’ படத்தை உரிமம் இன்றி ஒளிபரப்பியுள்ளது. அது பைரஸிக்கு எதிராக விஷால் அமைத்த குழுவுக்குத் தெரியவந்தது. உடனடியாக அந்த ஒளிபரப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பிறகு, சேனல் நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து விசாரித்து, ‘ஒருமுறை ஒளிபரப்பு’க்கான தொகையை அபராதமாக விதித்துள்ளனர். அந்த அபராதத்தை சேனல் தரப்பும் உடனடியாக செலுத்தியுள்ளது. இந்தத் தகவலை விஷால் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் தெரிவிப்பார் எனத் தெரிகிறது. 

“உரிமம் இன்றி தமிழ்ப் படங்களை ஒளிபரப்பக் கூடாது. வேண்டுமானால், யாரிடம் உரிமம் இருக்கிறதோ அவர்களிடம் அனுமதி பெற்று படங்களை உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும். இல்லையென்றால், சங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று விஷால் அறிவிப்பார்” என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள். 

லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், ஃபெப்சி... என அதிரடி காட்டும் விஷாலின் இந்த நடவடிக்கைகளுக்கு அவரின் எதிர் முகாமைச் சேர்ந்த தயாரிப்பாளர்களே ஆதரவு தெரிவித்துள்ளனர். “இதுபோன்ற சூழல்கள் முன்பு ஏற்பட்டபோது முந்தைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அதிரடி காட்டாமல் அமைதி காத்ததால்தான் தயாரிப்பாளர்களின் உரிமைகளும் உடைமைகளும் பறிபோகக் காரணம்” என்கிறார்கள் விவரம் அறிந்த நிர்வாகிகள். 

அதற்கு அவர்கள் சில காரணங்களையும் உதாரணங்களாகச் சொல்கிறார்கள். ‘லோக்கல் கேபிள் டிவி-யில் புதுப்படங்களை ஒளிபரப்புவதால் அந்தப் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வாங்க பெரிய சேனல்கள் யோசிக்கின்றன. குறிப்பாக, சின்ன பட்ஜெட் படங்களை அவர்கள் வாங்குவதே இல்லை. அதற்கு இந்த லோக்கல் கேபிள் சேனல்கள்தான் முக்கியமான காரணம்.

அடுத்து தியேட்டரிக்கல் ரைட்ஸ் தாண்டி சேட்டிலைட், வெளிநாட்டுக்கு விற்கும் எஃப்.எம்.எஸ் ரைட்ஸ், ஆன்லைன் ரைட்ஸ்... என வியாபாரம் பெருகியுள்ள இன்றைய சூழலிலும் பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, எஃப்.எம்.எஸ் ரைட்ஸ் என்பது நம்மைப் பொறுத்தவரை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளுக்கு விற்பது மட்டுமே. ஆனால், இப்படி ரைட்ஸ் வாங்குபவர்கள் அதைப் பிரித்து, அமெரிக்காவிலேயே பல்வேறு மாகாணங்களுக்கும் பல நாடுகளுக்கும் விற்கிறார்கள். அவ்வளவு ஏன், விமானத்துக்குள் படம் பார்ப்பதற்கு அவர்கள் தனியாக விற்று லாபம் பார்ப்பதும் இங்குள்ள பல தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலேயே இருந்திருக்கிறது. தெரிந்த ஓரிரு தயாரிப்பாளர்களும் அதை வெளியே சொல்லாமல் கமுக்குகமாக அடைகாத்து வந்திருக்கிறார்கள்.

இதை முதலில் பிரேக் செய்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவர்தான் தன் ‘அந்நியன்’ படத்துக்கு எஃப்.எம்.எஸ் ரைட்ஸையே தனித்தனியாகப் பிரித்து விற்று பெரிய லாபம் பார்த்தார். அவரைத் தொடர்ந்து பல தயாரிப்பாளர்கள் விழிப்புஉணர்வு பெற்றுள்ளனர். அதற்கு விஷாலின் அதிரடி நடவடிக்கைகள் முக்கியக் காரணம் என்கிறார்கள். 

எது எப்படியோ, நல்ல சினிமா தொடர்ந்து வரவும் நல்ல சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் வழி செய்வது, சினிமா சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் கடமை. அதை நோக்கிய நடவடிக்கைகளுக்கு முடுக்கிவிடும் விஷாலை ஆதரிப்பதும் நம் கடமையே!

எம்.குணா

ம.கா.செந்தில்குமார்

உலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்!