Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.ஆர்.ரஹ்மான்... ஷ்ரேயா கோஷல் - எப்போதும் ஏமாற்றாத குரல்கள்! #Mersal #Neethane

நீதானே மெர்சல்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படத்தின் ‘சின்னச் சின்ன ஆசை’ பாடலின் Final Versionஐ ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த சமயம், மணிரத்னமும் ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தார். பாடலைக் கேட்டு முடிக்கும்போது, இரண்டாம் இடையிசையில் வந்த ‘ஏலேலோ.. எலே ஏலேலோ’வைக் குறிப்பிட்டு ‘அது யார் குரல்?’ என்று கேட்கிறார். ‘அது என் குரல்தான்’ என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது எதுவும் ரியாக்ட் செய்யவில்லை மணிரத்னம்.

அதன்பிறகு,  பம்பாய் படத்தின் பாடல்கள் பற்றிப் பேசும்போதே ‘நீங்க ஒரு பாட்டு படத்துல பாடறீங்க’ என்று மணிரத்னம் சொன்னாராம். ஷங்கரும் தனது இரண்டாவது படமான காதலன் படத்திற்காக அதே அன்புக்கட்டளையை இட்டார். அந்தப் படத்தின் ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’தான் ரஹ்மானின் குரலில் வந்த முதல் பாடல். ’இல்லை.. பம்பாய் படத்தின் ‘ஹம்மா ஹம்மா’தான் அவர் பாடிய முதல் பாடல். வெளிவந்தது என்னமோ ஊர்வசி ஊர்வசிதான்’ என்றும் சொல்பவர்கள் உண்டு.  

‘ஊர்வசி ஊர்வசி’யும், ‘ஹம்மா ஹம்மா’வும் கன்னாபின்னா ஹிட், இரண்டும் ஒன்றுக்கொன்று சளைக்காத ஹிட். ‘மருஹபா.. மருஹபா.. என்று ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஆரம்பிக்க ரசிகர்கள் கொண்டாடினர். போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கண்ணாடி பஸ், பிரபுதேவா எனும் நடன ராட்சஷனின் டான்ஸ் என்று விஷூவல்ஸும் கைகொடுத்தது. ‘ஹம்மா ஹம்மா’ முழுக்க முழுக்க பாட்டுக்காக பிடிக்க வைத்தது. முன்னதில் ஆடியவரின் தம்பி, நாகேந்திர பிரசாத், சோனாலி பிந்த்ரே ஆட்டம்.   இரண்டிலும் சுரேஷ் பீட்டர்ஸும் உடன் பாடியிருப்பார்.  சொல்லப்போனால் ஹம்மாவில் எது ஏ.ஆர்.ஆர், எது சுரேஷ் பீட்டர்ஸ் என்று குழம்ப வைக்கும்.

அதன்பிறகு அப்பாச்சி இந்தியனுடன் ஏ.ஆர். இணைந்து பாடிய லவ் பேர்ட்ஸ் படத்தின் ‘நோ ப்ராப்ளம்’ பாடலுக்குப் பிறகு ஒரு பாடல் வந்து எல்லாரையும் கட்டிப்போட்டது. காதல் தேசம் படத்தின் முஸ்தபா முஸ்தபா பாடல்தான். 

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே...

கொஞ்சம் ஃபாஸ்ட் பீட் பாடல்களை இவர் குரலில் கேட்டுக்கொண்டிருந்து, இந்த மெலடியைக் கேட்க அத்தனை பிடித்திருந்து. ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் பாடல் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அதன்பிறகு ’கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு, ‘கண்ணீரே கண்ணீரே’, என்று கவர்ந்து கொண்டிருந்தவர் ‘வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’வில் ஒட்டுமொத்தமாக கட்டிப்போட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் மெலடி என்றால் சிக்ஸர்தான் என்று மீண்டும் நிரூபித்த பாடல் அது.  பல பாடல்கள் அவர் குரலில் வந்திருந்தாலும், இன்றுவரை ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் என் ஃபேவரைட் இரண்டு பாடல்கள்: 1. வெள்ளைப் பூக்கள் 2. நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்ரேயா கோஷல் 

ஸ்ரேயா கோஷல். பாடிய பாடல்கள் எதிலும் ஒருகுறையில்லை என்று சொல்ல வைக்கும் இன்னொரு குரலுக்குச் சொந்தக்காரர். ஏற்கெனவே விண்ணைத் தாண்டி வருவாயா-வில் ‘ஒருநாள் சிரித்தேன்.. மறுநாள் வெறுத்தேன்’ என்று ஸ்ரேயா உருக, 

கண்ணே தடுமாறி நடந்தேன்.. 
நூலில் ஆடும் மழையாகிப் போனேன் 
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே ...  

என்று ஹைபிட்ச்சில் உருகியவர் ஏ.ஆர். ரஹ்மான். இதில் இந்த இணைக்குரல்கள் என்ன மாயம் செய்திருக்கின்றன? 

ஏமாற்றவேயில்லை. மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் டான்ஸுக்காக கொஞ்சம் அதிரடி அடி என்றால், ‘நீதானே.. நீதானே’ மயிலிறகு. ஸ்ரேயாவின் தேன்குரலில்தான் பாடல் தொடங்குகிறது. ’என் மாலைவானம் மொத்தம்’ என்று ரஹ்மானின் டிபிகல் ஹைபிட்ச், இரண்டாவது வரியிலேயே வர.. பாடல் கவர ஆரம்பிக்கிறது. அங்கிருந்து முடியும் வரை ஒவ்வொரு ட்ரீட் வைக்கிறார் ரஹ்மான்.

பல்லவி முடிந்ததும் முதல் இடையிசையில் வீணை. வீணை ஆரம்பித்த 15வது நொடியில் நறுமுகையே பாடலுக்குக் கொஞ்சம் அழைத்துச் சென்று விடுகிறது. ஸ்ரேயாவின் ஆலாப்பைத் தொடர்ந்து சரணம். 

மெட்டுக்களின் வரிகளுக்கு பதிலாக யாச்சே யாச்சே என்று ஒரு புதிய பாணியில் இருக்கிறது. இரண்டாம் இடையிசை.. ரஹ்மானிசம்! கொஞ்சம் டெம்போ கூட்டி,  இந்துஸ்தானி கலந்த ஃப்யூஷன் இசையோடு, அவர் குரலில் கேட்கும் ராக ஆலாப் இந்தப் பாடலின் ஸ்பெஷல் செக்மெண்ட்!  

வழக்கமாய் பல்லவியின் வரிகள் குறைவாகவும், சரணங்களின் வரிகள் அதிகமாகவும் இருக்கும். இதில் இரண்டு சரணங்களும் சேர்த்து 

துளி மையல் உண்டாச்சே / அவள் மையல் கொண்டாச்சே
உன் ஆசைச் சொல்லாலே / அழகேறிச் செல்வாளே

- என்று நான்கே வரிகள்தான்! பாக்கி மெட்டுக்களையெல்லாம் யாச்சே, யாலே நிரப்பிக் கொள்கிறது. மொத்தப் பாடல் வரிகளும் தன் முத்திரையை பாடலாசிரியர் விவேக் பதித்திருந்தாலும் ‘என்மாலைவானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம்’ வரிகள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.  மொத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இசை ரசிகர்களை இழுத்துக் கொள்ளப்போகிறது இந்த ‘நீதானே’!

ஆளப்போறான் தமிழன் அடிதடிப் புயல் என்றால், இது ஒரு நதிப்பயணம் போல இருக்கிறது. அதுவும் சலசலக்கும் பேக் வாட்டர் பயணம்! நன்றி ஏ.ஆர்.ரஹ்மான்!

பாடல் வரிகள்:

பெண்: நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

ஆண்: என்மாலைவானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்...  இது கவிதையோ..  
பெண்: நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம் 
உயிரின் திரையில்  உன் பாட்டின்பம்
ஆண்: நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும் 

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே  யாச்சே யாச்சே யாச்சே யாச்சே 
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே 
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே அவள் மையம் கொண்டாச்சே

(நீதானே)

யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே உன் ஆசைச் சொல்லாலே
யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலெ
யாலே யாலே யாலே யாலெ அழகேறிச் செல்வாளே
(நீதானே)

**

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்