சீறிய செல்வமணி... கஸ்தூரிராஜா கடுப்பு... தயாரிப்பாளர் சங்க கலாட்டா!

கடந்த 18-ம் தேதி ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில், அதிரடி அறிவிப்போடு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. சங்கத்தின் தற்போதைய  நிர்வாகிகள் யாரும் மேடையில் அமராமல், ஏற்கெனவே பதவிவகித்த முன்னாள் மூத்த நிர்வாகிகளை நாற்காலியில் அமரவைத்து, விஷால் அணி  நின்றுகொண்டே இருந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட முக்கிய நிகழ்வுகள் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ப்ரவீன்காந்திடம் கேட்டோம்.

புரொடியூசர் கவுன்சில்

“முதலில், தயாரிப்பாளர் அனைவருக்கும் ஒரு புத்தகம் கொடுத்தோம். தயாரிப்பாளர்கள் ஆலோசனையின் மூலம் கடந்த மூன்று மாதங்களாக உருவாக்கப்பட்ட புத்தகம் அது. அதில் எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருவது என்பது குறித்த பட்டியல் இடம்பெற்றுள்ளது. ஷூட்டிங்கில் வேலை செய்பவர்கள் அதிகமாக சம்பளம் கேட்டால், உடனே அந்தப் புத்தகத்தில் எவ்வளவு தொகை எழுதப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் கொடுத்தால் போதும் என்பதைச் சொல்லும் புத்தகம் அது.

கடந்த 2008-ம் ஆண்டு தயாரிப்பாளர் ஜானி தயாரித்த ஒரு திரைப்படத்தை, அவரது அனுமதி இல்லாமலேயே ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிவிட்டது. அதை எதிர்த்து கவுன்சிலில் புகார் கொடுத்தார் ஜானி. சினிமாவை, பணத்தை இழந்துவிட்டதால், ஜானியின் குடும்பமே அவரை கைகழுவிவிட்டது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு, அவருக்கு மாரடைப்பு வந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜானியின் தயாரிப்பாளர் சங்கம்உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரம் அப்போலோவில் இருந்துவிட்டு, அவரைப் பற்றி கவலைப்படாமல் குடும்பத்தார் சென்றுவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் அந்த டிவி நிறுவனத்திடம்  போராடி ஜானிக்கு  நஷ்டஈடாக 65 லட்சம் ரூபாய்  பெற்றுக் கொடுத்தார் விஷால். ஜானிக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. அவரைவிட்டு ஓடிப்போன குடும்பத்தாரை  65 லட்சம் ரூபாய் மீண்டும் ஒன்றுசேர்த்திருக்கிறது. இப்போதும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் ஜானி.

ஃபெப்சி அமைப்பின் தலைவரான செல்வமணி, ‘தயாரிப்பாளர்களும் தவறு செய்திருக்கிறார்கள்' என்று மேடையில் கோபமாகப் பேச, ‘தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு தயாரிப்பாளரையே ஃபெப்சி அமைப்பின் தலைவர் குறை சொல்வதா?’ என்று செல்வமணிக்கு எதிராகக் கோபத்தின் உச்சிக்கே சென்றார் கஸ்தூரிராஜா. ‘நான் ஃபெப்சியின் தலைவராகப் பேசவில்லை. நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் பேசினேன்’ என்று பின்வாங்கினார் செல்வமணி. இறுதியாக, செல்வமணி எதிரிலேயே ‘இனிமேல் நாங்கள் ஃபெப்சியோடு வேலைசெய்ய மாட்டோம்’ என்று பகிரங்கமாக அறிவித்தது விஷால் அணி.

“கவுன்சிலில் இருக்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், சிறு முதலீட்டில் படத்தை எடுப்பவர்கள். அவர்களை படப்பிடிப்பில் ஃபெப்சியில் இருப்பவர்கள் கேவலமாகப் பேசி தயாரிப்பாளர்களின் தன்மானத்தைக் கேவலப்படுத்துகின்றனர். ஃபெப்சி கேட்கும் பணத்தை சம்பளமாகக் கொடுத்து பெரும் பட்ஜெட்டில் படத்தைத் தயாரிப்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று கூறினார்கள்” என, தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றிக் கூறினரரியக்குநர் ப்ரவின்காந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!