'தரமணி'யில் உங்களுக்குப் புரிந்தது முழங்காலா... மொட்டைத்தலையா? #VikatanExclusive

தரமணி

”என் கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நம்முடைய காலத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் எந்தத் தவறும் இல்லை. என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச் சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும், இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சிசெய்யுங்கள். அதுதான் சிறந்த வழி.” 

இவ்வாறு தன் படைப்புமீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கிறார், எழுத்தாளர் சதத் ஹாசன் மாண்டோ. கிட்டத்தட்ட இதுதான் இன்றைக்கு இயக்குநர் ராமுக்கும் நடந்திருக்கிறது. 'தரமணி' திரைப்படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அதன்மீதான விமர்சனங்கள் வேறு விதமான வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருக்கின்றன. 

அப்படி விமர்சிப்பவர்கள், படத்தை ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்றே பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. உலகமயமாக்கலைப் பற்றி படம் பேசுகிறது. வயலும் வயக்காடுமாக இருந்த பகுதி, கட்டடக் காடாக மாறிய பிறகு, அங்கே வேலைபார்க்க வரும் ஆல்தியா முதல் அந்தக் கட்டடங்களைக் கட்டும் பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வரை மொத்தமாக அதன் கோரத்தைப் போகிறபோக்கில் பகிர்கிறது. இதில் வரும் வான்வழிக் காட்சிகள் (ஏரியல் காட்சிகள்), நம்மை படம் முழுக்க கடத்திக்கொண்டே போகின்றன. தரமணி, கட்டடங்களால் நிரம்பிப்போன பகுதி. நடுவில், ஆங்காங்கே பாவம்பார்த்து விடப்பட்டிருக்கும் சதுப்பு நிலம். ஆண்ட்ரியா வீடு இருக்கும் இடம், முழுவதும் கட்டடங்களால் நிரப்பப்படாதது. வெட்டப்படாத சில மரங்கள், புல்வெளி, சின்னச்சின்ன குளங்களாகச் சுருங்கிய ஏரிகள். தரமணியில் இருந்த வயல்வெளிகளும் சதுப்பு நிலமும் அகற்றப்பட்டு, விவசாயிகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் 90-ம் ஆண்டுகளுக்குப் பிறகு பிடுங்கப்பட்ட இடம். 

இதற்கு நடுவே, தரமணி மட்டுமல்லாது இன்னும் பல நிலங்களை விழுங்கிய ’புதிய சென்னையில்’ ஐ.டி-யில் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஆல்தியா, அதே ஐ.டி-யில் குறைவான சம்பளத்தில் வேலைபார்க்கும் அபூர்வ சௌமியா, கால்சென்டரில் 12,000 ரூபாய்க்கு வேலைபார்க்கும் பிரபு... இந்தக் கதாபாத்திரங்களுடன், பெருங்குடி ஹவுசிங் போர்டில் வசிக்கும் தரமணியின் ஸ்டேஷன் மாஸ்டர், போலீஸ்காரர், சொந்த ஊரைவிட்டு வந்து ஏதோ ஒரு தொழில்செய்து குடும்பத்துடன் வாழும் ரஹீம் பாய். இவர்கள்தான் இந்தக் கதையின் முக்கிய நபர்கள். தவிர, ஷேர் ஆட்டோவும் டீ கடைகளும் என்று பல வர்க்கங்கள் ஒன்றாக ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்களுக்கிடையே நடக்கும் உறவுச் சிக்கல்கள்தான் படம். 

தரமணி

படத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக இருப்பது, அபூர்வ சௌமியாவின் அந்தச் சிறிய பகுதிதான். ஆனால், 'அபூர்வ சௌமியாவை இப்படிக் காட்டலாமா? ராம் வலிந்து திணித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வேறு வழியில்லாமல், நியாயப்படுத்துகிறார்' என்று கூறினால், நீங்கள் உங்கள் மேட்டுக்குடி மனநிலையிலிருந்து இன்னும் கீழே வர வேண்டும். உங்களைப் பொறுத்தவரை ஐ.டி என்றால், பல ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஜாலியாக ஊரைச் சுற்றுபவர்களாக இருக்கலாம். ஆனால், ஊரிலிருந்து வேலைக்காகச் சென்னை நோக்கி வரும் கடனாளி அப்பாவின் பெண்தான் செளமியா. கல்விக் கடனால் தத்தளிக்கும் மாணவர்களின் ஒரு பிரதிநிதி. அவள் தன்னுடைய காதலனின் துணையோடு ஆன்சைட் செல்கிறாள். அங்கு அவளுடைய வாழ்க்கை முறை வேறுபடுகிறது. 

வெளிநாட்டில் வேறு வேலைபார்க்கலாம் என்று நினைத்தவளுக்கு, வேலை கிடைக்கவில்லை. குடும்பச் சூழ்நிலையினால், ஒருவரை திருமணம்செய்து, அங்கேயே இருப்பதன்மூலம், குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று நினைக்கிறாள். மீண்டும் குடும்பத்தின் சிக்கல் காரணமாக, இங்கு அடமானம் வைக்கப்படும் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே சௌமியா மாறுகிறாள். மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய உலகமயமாக்கல், நிறைய தனித்து வாழும் பெண்களை உருவாக்கியுள்ளது. ஒரு பெண் தனித்து இருக்கிறாள் என்பதை அறியும் ஆண், அவனது பாலியல் ஆதிக்கத்தைக் காட்டும் ஒரு கடவுச்சீட்டாக நினைக்கிறான். ஆல்தியாவின் பாஸ், அவளிடம் தவறாக நடந்துகொள்வதற்குக் காரணமாக சொல்பவற்றில், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவள் தனித்து இருக்கிறாள் என்பதுதான் முதன்மையானது. ஏதோ ஓர் ஊர்க்காரப் பெண் அந்த இடத்தில் இருந்தாலும், அந்த பாஸ் அப்படித்தான் நடந்துகொண்டிருப்பான். இதைவிட மோசமாகவே நடந்திருப்பான். எனவே, ஆல்தியாவும் இங்கே ஒரு பிரதிநிதியாகவே நிற்கிறாள். 

ஐ.டி, கார்ப்பரேட் என்றதும், ஒரே ஒரு பகுதியை மட்டும் காட்டாமல், 'தரமணி' உண்மையிலேயே நம் கண்முன்னே நாம் வாழ்ந்துவரும் சமகால சென்னையை விரிக்கிறது. நகரமயமாதலோடு சேர்ந்து நகரும் புறாவின் கதை, அது சாகும்போது நம்மை அறியாமலேயே ஒரு குற்ற உணர்ச்சிக்குள் கொண்டுசேர்க்கிறது. ஓர் உயர் வர்க்க பெண்ணும் நடுத்தர வர்க்க ஆணும் இணைவது என்பது எத்தகைய சிக்கலாக இருக்கும் என்று ராம் பேசுவது, இருவரும் இணையவேகூடாது என்பதாகத்தான் இருக்கிறது என்கின்றனர் சிலர். 

தரமணி

இது எவ்வளவு பெரிய அபத்தம்! படம் பல்வேறு உறவுச் சிக்கலைப் பற்றிப் பேசுகிறது. வீட்டில் பார்த்துச் செய்த ஆல்தியாவின் திருமணம், தோல்வியில் முடிகிறது. போலீஸும் அவரின் மனைவியை மோசமாக நடத்துகிறார். இதில் வரும் காதலும் பல சிக்கல்களைச் சந்திக்கிறது. வர்க்கப் பாரபட்சம் இல்லாமல், ஆண்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் இயக்குநர் ராம். கடைசியில், ’நீங்க போன் பண்ணதும் நான் வேற மாறி நினச்சேன்’ என்று பிரபு கூறும்போது, ‘ஆம்பளைங்களுக்கு வேற என்ன யோசிக்கத் தெரியும்?’ என்ற ஒற்றை வசனம், பெண்களின் மனதில் இருக்கும் கோபத்தை பட்டாசாகத் தெறிக்கிறது. நடுவில், தன் முன்னாள் காதலிகளின் எண்களைப் பகிரும் காட்சி, ஆண்களிடம் இருக்கும் வக்கிரத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. உடைமை மனப்பான்மைகொண்ட ஒரு நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியாக பிரபு நிற்கிறார். 

இந்தப் படத்தை விமர்சிப்பவர்கள் பலரும் கூறும் மற்றொரு விஷயம், எல்லோரையும் ஒரு பாலியல் வறட்சிகொண்டவர்களாகச் சித்திரித்திருக்கிறார் என்பதே. உண்மையில், இங்கு நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாலியல் வறட்சிகொண்டவர்களாகவே இருக்கிறோம். அதன் அளவு வேண்டுமானால் மாறலாம். இந்த வறட்சி, பல நேரங்களில் பாலியல் வக்கிரமாக, வன்மமாக மாறுவதும் உண்டு. நெடுங்காலமாக காமம் என்கிற உணர்வை அடக்கிவைக்க மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், பாலியல்ரீதியிலான வறட்சியில் இருப்பது ஆச்சர்யப்படும் விஷயமில்லை. இந்தச் சமூகமே பாலியல் வறட்சிகொண்ட சமூகமாக இருக்கும்போது, சமூகத்தின் ஒரு விளைபொருள் எப்படி மாறுபட்டு இருக்க முடியும்? 

மேலும், தொலைபேசியில் பேசும் பெண்களில் இருவர், கதாநாயகனைத் திட்டும் காட்சிகளும் அந்தப் படத்தில் இடம்பெறும். கடைசியில் வரும் போலீஸின் மனைவியும் பிரபுவைப் பாலியல்ரீதியாக அணுகி இருக்க மாட்டார். பிரபுவோடு போனில் பேசும் பெண்கள், பெரும்பாலும் அவர்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள துணை இல்லாதவர்களாகவே காட்டப்பட்டிருப்பார்கள். எனவே, அந்த இடத்தில் ராம் அதற்கான நியாயத்தைக் காட்டாமல் நகரவில்லை. இத்தனை நாள் ‘கள்ளக் காதல்’ என்கிற வார்த்தையை நாம் கடந்தவிதத்திலும் இனி கடக்கும்விதத்திலும் ஒரு சிறிய அளவிலாவது மாற்றம் இருக்கும். 

அதுமட்டுமன்றி, ஆண்ட்ரியாவிடம் அவருடைய பாஸோ, மற்றவர்களோ கேட்டதுபோல Sleep with me என்று பிரபு அந்தப் பெண்களிடம் நேரடியாகக் கேட்கவில்லை. அப்படிக் கேட்டால், அது இருவரும் ஏற்றுக்கொண்ட, மகிழ்கிற ஒரு களவியாக இருக்க முடியாது. அதற்கு மாறாக, முதலில் அவர்களிடம் பேசத் தொடங்கும் பிரபு, அவர்களுடன் ஊர் சுற்றுவார். அதுதான் காமத்தின் முதல் அடி. அந்த போஸீஸ் வெளியே அழைக்கும்போது, அவருடன் போகாத குப்தாவின் மனைவி, பிரபுவிடம் பேசுவார். Let’s have sex -க்கும் Sleep with me-க்கும் இருக்கும் வேறுபாடுதான் அது. படத்தில் வரும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரம், ஆல்தியாவுடன் வேலைபார்க்கும் பெண். பிரபு கோபமாக போன் செய்வது தெரிந்து, அந்த கேபினில் இருக்கும் மற்றொருவருடன் காபி சாப்பிட கிளம்புகிறார். ஆனால், அந்தப் பெண் வேறொரு ஆணுடன் சால்சா ஆடுவதை அவரின் கணவர் பார்ப்பதைக்கூட பாலியல் இச்சையாகப் பேசுகிறார்கள். இதுவும் சமூகத்தில் நடத்தைமீது நமக்கு இருக்கும் பார்வைதான். 

படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் புனிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் ஏன் வேறு உறவுக்குச் செல்லாமல் மீண்டும் அந்த ஆணிடமே சரணடைகிறார் என்று கேட்கிறார்கள். மனித உறவு என்பது இவர்கள் பேசுவதுபோல அத்தனை எளிமையானது அல்ல. ஓர் உறவிலிருந்து பிரிந்து, அந்தப் பிரிவை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு நகர்வதற்கு ஒவ்வொருவருக்கும் எடுக்கும் காலம் மாறுபடும். ஸ்டேஷன் மாஸ்டர் மனைவி பிரச்னை, அதன்பின் அவருடனான சந்திப்பு, நாகூர் இவை எல்லாம் பிரபுவை வேறொன்றாக மாற்றிவிடுகிறது. அதன்பின்பு போலீஸ் மனைவிக்கும் போலீஸ்காரருக்கும் நடக்கும் சண்டை மற்றும் போலீஸ் மனைவியின் மரணம் அவனை மொத்தமாகப் புரட்டிப்போடுகிறது. துப்பாக்கி வெடித்த அடுத்த நொடி, அவன் அந்த இடத்தில் ஆல்தியா இருப்பதாக உணர்கிறான். அவன் கையில் துப்பாக்கி இருந்தால், அவனும் ஆல்தியாவைக் கொன்றிருப்பான் என்று நம்புகிறான். கடைசியில், பிரபுதான் தன்னை முழுவதுமாக மாற்றிச் சரணடைகிறானே ஒழிய, அந்தப் பெண் சரணடையவில்லை. மேலும், பிரபு பெண்களிடம் போனில் பேசியது எதுவும் ஆல்தியாவுக்குத் தெரியாது என்பதால், அதை மன்னித்து ஏற்றுக்கொள்ளவில்லை. ஆல்தியாவுக்கும் பிரபுவுக்கும் நடந்த சண்டைகளையே மன்னிக்கிறாள். 

இங்கு விமர்சிப்பவர்கள் எல்லாம், அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்களே தவிர, ஆல்தியாவாக யோசிக்கவில்லை. மிகவும் மோசமான முந்தைய உறவிலிருந்து வெளியே வந்த ஆல்தியாவுக்கு, ஏழு வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் ஓர் உறவு, எல்லாமுமாக மாறுகிறது. ஒவ்வொருவரையும் புரிந்து, அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண் ஆல்தியா என்பதால், கடைசிக் காட்சி அபத்தமாகத் தெரியவில்லை. 

ராம் அவரைப்போலவே வெட்டியாக, அழுக்காக இருக்கும் ஆண்களையே அவர் படத்தின் கதாநாயகராக ஆக்குகிறார் என்பதெல்லாம், அவரின் மீதான தனிப்பட்ட தாக்குதல். அழகியல்குறித்து அவர்களுடைய பார்வையின் குறைபாடே ஒழிய வேறொன்றுமில்லை. 'தரமணி'யை மொட்டைத்தலையாகப் புரிந்துகொண்டால், மொட்டைத்தலை. முழங்காலாகப் புரிந்துகொண்டால், முழங்கால். படம் பார்த்த பல ஆண்களிடமும் ஏதோ ஒரு விதத்தில் குற்ற உணர்வை ராம் ஏற்படுத்தியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!