Published:Updated:

⁠⁠⁠⁠⁠மணிரத்னத்தின் மேஜிக் இயக்கம்... ஏ.ஆர்.ரஹ்மானின் மார்வலஸ் இசை... ரசிகர்களை உருகவைத்த 'உயிரே' #19YearsOfUyire

அ.அ.சூர்ய பாரதி
⁠⁠⁠⁠⁠மணிரத்னத்தின் மேஜிக் இயக்கம்... ஏ.ஆர்.ரஹ்மானின் மார்வலஸ் இசை... ரசிகர்களை உருகவைத்த 'உயிரே' #19YearsOfUyire
⁠⁠⁠⁠⁠மணிரத்னத்தின் மேஜிக் இயக்கம்... ஏ.ஆர்.ரஹ்மானின் மார்வலஸ் இசை... ரசிகர்களை உருகவைத்த 'உயிரே' #19YearsOfUyire

`உயிரே' என்றாலும் `தில் சே' என்றாலும் பொருள் ஒன்றே. மணிரத்னம் இன்று வரை தன் மாஸ்டர் பீஸாகக் கருதும் `இருவர்' படம், ரசிகர்கள் மத்தியில் சரியாக வரவேற்கப்படவில்லை. `இங்குதான் படத்தில் தவறு நிகழ்ந்திருக்கிறது' என அவர் கண்டறியும் முன், படத்தின் போஸ்டர்களுக்கு மேல் வேறு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன. அதற்குப் பிறகு `அலைபாயுதே' ஸ்க்ரிப்ட்டுக்கு ஷாரூக் ஓகே சொல்ல, `மஸ்த்' என்ற பெயரில் ஷாரூக் - கஜோல் ஜோடி மும்பையின் புறநகர் ரயில்நிலையத்தில் கொட்டும் மழைக்காலத்தில் இந்தி பேச தயாராகி இருந்தனர்.

மணிரத்னம், `இருவர்’ படத்தில் செய்த தவற்றை மீண்டும் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், படத்தில் ஏதோ குறை இருக்கிறது. அந்தக் குறை என்னவென்று புரியவில்லை. குழப்பத்தில் இருந்தார். இதற்கு முன்பு எடுத்த `ரோஜா' , `பம்பாய்' போன்ற படங்கள், தமிழ் பேசும் இந்தியாவைவிட, இந்தி பேசும் இந்தியாவில் பெரும் ஹிட். அப்போது, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடிய தருணம். நம் நாட்டின் அருமை பெருமைகளையும் தாண்டி சில விஷயங்களை மக்கள் பார்வைக்குக் காட்ட நினைத்த மணிரத்னம், `உயிரே'வை மற்றுமொரு மாஸ்டர் பீஸாக வார்த்தெடுத்தார்.

Politics Paralleling People (அரசியல் காரணங்களால் கதாபாத்திரங்கள் பிரிவது) ட்ரையாலஜியின் மூன்றாவது மற்றும் இறுதிப்படம் `உயிரே'.

மணிரத்னத்திடம் பலர் வைக்கும் குற்றச்சாட்டு இது. “விளம்பரத்துக்காகத்தான் `அரசியல் பேசும் படம்'னு சொல்லிக்கிறாங்க. ஆனா, நாட்டுல தீவிரவாதிகளோட கொள்கைகளையும் பிரச்னைகளையும் மட்டும் காட்டிட்டு விட்டுடறார். ஒரு தீர்வோ நியாயமோ சொல்லவேணாமா?!”

“நியாயமோ, தீர்வோ சொல்றதுக்கு நான் யாரு? என்னோட வேலை இப்படி இருக்கு, அப்டி இருக்குனு மக்களுக்கு காட்டுறது மட்டும்தான். ஐ எம் நாட் எ ஜட்ஜ்!” என்பதே மணிரத்னம் பதில்.

`உயிரே' ஒரு முக்கோணக் காதல் கதை மட்டுமல்ல, இந்தியாவை முக்கோண அமைப்பில் இணைக்கக்கூடிய அரசியல் கதையும்கூட. காரணம், அமர், டெல்லி பையன். மேக்னா, வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவள். ப்ரீத்தி, தென் இந்தியாவிலிருந்து வருபவள். இது ஒரு முக்கோண புவியியல் அமைப்பை நம் மனதில் பூடகமாக உருவாக்குகிறது.

` `உயிரே' ஒரு மாஸ்டர் பீஸ்' எனச் சொல்லுவதற்குக் காரணம் இருக்கிறது. படத்தில் ஆரம்பக் காட்சியை அமர் தன் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இப்படி விளக்குவான்: ``ராத்திரி நேரம். ஹாஃப்லாங் ஸ்டேஷன். அவன் தனியா காத்திருந்தான். அங்க வரவேண்டியதோ ஒரு ட்ரெயின். ஆனா, வந்ததோ கடும் புயல். டப.... டப... டப..  டப.... டப... டப... விளையாட்டுப் பையன்போல மின்னல் குறுக்கே ஓட, ஆகாயம் நடுங்கி கிடுகிடுத்தது. கிடு கிடு கிடு… கிடு கிடு கிடு…. மூங்கிலும், வயல்வெளியும், தென்னமரமும், சாமியும் ஆட... ஊஊஊ…   ஊஊஊ.. ஜோவென கொட்டியது மழை ட்ட்டும்... இந்தப் புயலுக்கு நடுவுல, பிளாட்பாரத்துக்கு அந்தப் பக்கத்துல பச்சையா ரெட்ல ஒரு ஆளோட உருவத்தைப் பார்த்தான்.

``அண்ணே, தீப்பெட்டி இருக்கா தீப்பெட்டி?”

``ஊஊஊ...'' - அப்ப அடிச்ச காத்துல அவ போத்தியிருந்த கறுப்பு நிறப் போர்வை பறந்துபோச்சு. அப்பதான் தெரிஞ்சுது, அது ஒரு பொண்ணு!

*பூங்காற்றிலே உன் சுவாசத்தை...*

கருவிழி, பாத்துகிட்டே இருக்கலாம். உதட்டோரத்துல புன்னகை. சின்னதா மூக்கு அவசரத்துல பொருத்திவெச்ச மாதிரியே. ஆனா

அழகி!

உஷ்….ஷ்

பார்த்தவுடனே அவளை வில்லன்கிட்ட இருந்து காப்பாத்தி, குதிரை மேல ஏத்தி எங்கேயாவது கூட்டிட்டு போகணும்னு  நினைச்சான். தவிச்சான்.

துடு... துடு.. துடு…  துடு... துடு.. துடு…

பாவம் அங்கே வில்லனும் இல்லை குதிரையும் இல்லை.

``மன்னிச்சுக்கங்க. ஆம்பளனு நினைச்சு உங்ககிட்ட தீப்பெட்டி கேட்டுட்டேன்.”

அந்தப் பக்கம் பதில் இல்லை. ஒரு பார்வை...

``அஹ்ஹா, உம்முனு இருக்கிங்களே... சிரிக்க மாட்டிங்களா? ஏதாவது கேக்க மாட்டிங்களா? சிகரெட்? சாரி..”

திடீர்ன்னு முத்து உதிர்ந்த மாதிரி அவ என்கிட்ட ஒன்னு கேட்டா

“ச்சாய்”

ரெண்டு க்ளாஸ்ல சூடா டீ எடுத்துட்டு, ஐயோ சிந்திடக்கூடாதேனு ப்ளாட்ஃபார்ம நோக்கி வேகமா மூச்சுவாங்க ஓடினா.

க்லிங்...க்ளாங்..க்லிங்...க்லிங்…க்ளாங்...

ட்ரெயின் இந்த குட்டி ஸ்டேஷன்ல நிக்குறது கவுரவ கொறச்சல்னு நெனச்சு, கோச்சிட்டு கெளம்பிடுச்சு.

க்கூ...க்கூ… க்‌ஷ்ஜ்க் க்‌ஷ்ஜ்க் க்‌ஷ்ஜ்க்…

உஷ்….கார்ட் வேற அவசரபட்டு பச்ச கொடி காட்டிட்டாரு. ட்ரெயின் கெளம்பிடுச்சு, அவளும் போய்ட்டா..

”ஓ......ய்”

இந்த உலகத்துலயே ரொம்ப சுருக்கமான காதல் கதை இதுதான்”

இது அமர் ரேடியோல சொல்ற வசனங்கள். இந்த காட்சியின் அசல் அரங்கேற்றத்தைக்காண இந்த சுட்டியை க்ளிக்குங்கள்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்டது ஊட்டியில். ஆனால், ஆஸாமில் இருக்கும் ஹாப்லாங் ஸ்டேஷன் என்று நம்ப வைத்து, ஒரு தீவிரவாத அமைப்பின் கேம்ப் எப்படி இருக்கும்? ஆல் இண்டியா ரேடியோ ஆஃபிஸ் எப்படி இருக்கும்? நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் டெல்லி பையன் வீடு முதற்கொண்டு இந்தியாவுக்குக் காட்டிய சிறந்த கலை இயக்குநர் “சமீர் சந்தா”.

இந்தக் காட்சி படப்பிடிப்பு நடந்த சமயம் ஒரு சொட்டு மழைகூட இருக்கவில்லை. ஆனால் கடும் குளிர். மிகுந்த காற்று, மழை எப்போது வேண்டுமானாலும் கொட்டிவிடும் என்கிற வானம். பிறகு ’ஜோ’வென்று கொட்டுகிற மழை. டீ க்ளாஸில் சொட்டும் மழை நீர் என்று ஒலியால் கதை சொல்லி தேசிய விருதை வென்ற சிறந்த ஆடியோகிராஃபர் “எச்.ஸ்ரீதர்”.

இக்காட்சியில், ஒரு பக்கம் கூல் லைட். மறு பக்கம் ஹார்ஷ் மஞ்சள் லைட். மேக்னா இவ்வளவுதான் ஸப்மிசிவாக தெரியவேண்டும். அமர் திரை முழுவது டாமினேட் செய்ய வேண்டும். மழை வருவதை ஒரு க்ளோசப் கூட காட்டாமல் நமக்கும் மழை சாரல் அடித்து குளிரும் படி ஷாட்களை செதுக்கி, ஒரு பெரும் போர் நடக்கிறது அதற்கு இடையே நடக்கும் காதல் என்பதை ‛சந்தோஷ கண்ணீரே’ பாடலில் காட்டிய சிறந்த ஒளிப்பதிவாளர் “சந்தோஷ் சிவன்”க்கு தேசிய விருது கிடைத்தது.

படத்தில் பிற்பகுதி முழுவதும் தன் வசம் இருக்க போவதை அறிந்து, ஆடியன்ஸை டீஸ் செய்வது போல ஒரே ஒரு ட்ரேக் அதுவும் ஒரு ஃபோர்காஸ்டின்ங் ட்ரேக்கை உதிர்த்து, அமர் தீம், மேக்னா தீம், அமர் மேக்னாவைச் சதிக்கும் போது ஒரு தீம், மேக்னா மீண்டும் அமரை சந்திக்கும் போது ஒரு தீம், அமரின் காதல் முறிவுக்கு ஒரு தீம், மேக்னாவின் கொள்கைக்கு ஒரு தீம், தீவிரவாதிகள் வரும்போது ஒரு தீம், அமரின் குறும்புதனத்திற்கு ஒரு தீம், ப்ரீத்திக்கு ஒரு தீம், ப்ரீத்தியின் கல்யாணத்துக்கு ஒரு தீம் என்று வெச்சு செஞ்சுருக்கார் மனிதன். புயல் தன் உச்சத்தில் இருக்கும்போது மழையாய் கொட்டிய இசை தான் இவை. சிறந்த இசையை தந்தார் இசைப்புயல் “ஏ.ஆர்.ரஹ்மான்”.

இக்காட்சியில், மேக்னாவின் க்ளோசப் எப்பொழுது வரும் என்று காத்திருக்க வைத்து, விருந்து போல அவள் சொல்லும் ஒரே வசனத்திற்கு சரியாக 3 நொடிகள் முன்பிருந்தே காட்டியது, பாடல்கள் பேக் டு பேக் வந்தாலும் போர் அடிக்காமல், 162 நிமிடங்களையும் எண்ணி வைத்த சிறந்த எடிட்டர் “சுரேஷ் அர்ஸ்”.

அமர் - இப்படித்தான் சிரிப்பான். பிறரிடம் இப்படித்தான் வெகுளியாக பழகுவான். ஒரு பொண்ணுக்காக எதுவேண்டுமானாலும் செய்பவனாக இருப்பவன் பிறகு தன் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மன நிலைக்கு வருவது, குரங்கு வேலைகள் செய்வது, ஹீரோவாயினும் பிறரை அடிக்கத் தெரியாதது என்று ஷாருக் தன் தலைமுடியை சிழுப்பியதற்கு இந்தியாவே அவர் வசமானது.

மேக்னா - இப்படித்தான் அழுவாள். ”ஜா லாக்” ஆவது ஏன். அப்படி ஆகும்போது என்ன செய்வாள்? எப்பொழுதாவது சிரிப்பது, அமரை கண்டும் காணாமல் இருப்பது. “நெஞ்சினிலே” பாடலில் காட்டும் பரிதவிப்பு. காதலனுக்கு கல்யாணம் என்கிற நிலையை எதிர்கொள்வது என்று சிறப்பாக நடித்திருந்த மனிஷா மிகையில்லா நடிப்புக்கு சிறந்த சான்று.

தீவிரவாதிகள் பேசும் வசனங்களில் சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் ஆப்புதான். “நாங்க டெரரிஸ்ட் இல்ல ரெவன்யூஷனிஸ்ட்” என்று மெச்சூர்டாகவும் குறும்பும் கருத்துமாக வசனம் எழுதிய வசனகர்த்தா “சுஜாதா”.

மணிரத்னத்துக்கு அப்பொழுது இந்தி தெரியாத காரணத்தால், சுஜாதா தமிழில் வசனம் எழுத அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின் இந்திக்கு மாற்றினர்.

குல்சார், வைரமுத்து இருவருக்கும் மிகவும் பிடித்த ஆல்பம். காதலின் ஏழு நிலை, கல்யாணப்பெண்ணின் உற்சாகம், மென் சோக காதல் கதையின் பூங்கற்று மற்றும் சந்தோஷ கண்ணீரே என பாடல் வரிகள் ஒவ்வொறு பல்லவியும் அனுபல்லவியும் முத்துக்கள்.

ஓடும் மலை ரயில் மேல் இதுவரை இந்தியா கண்டிராத ஸ்டைலான நடன அசைவுகளை தந்த நடன இயக்குநர் “ஃபாரா கான்”.

”இன்சைட் மேன்” என்கிற ஆங்கிலப் படத்தில் இந்த பாடலைப் பயன்படுத்த, முதன் முதலில் ஹாலிவுட் இந்தியாவுக்கு பெரும் தொகை ஒன்றை கொடுத்து வாங்கப்பட்ட முதல் பாடல் இது, “தையா தையா”.

தமிழில் டப்பிங்க் பேசியவர்களை மறந்துவிடக்கூடாது.

ஷாருக் அமராக மட்டும் தான் நடித்திருந்தார். ஆனால் அமராகவும், ஷாருக்காகவும் வாழவே செய்திருந்தார் அரவிந்த் சாமி.

மனிஷாவுக்கு குரல் கொடுத்தவர் பெயரை படிக்கும் போது நீங்கள் ஆச்சர்யப்படலாம், ஆனால் ”டப்பிங் பேசினது நான் தான்னு கண்டுபிடிக்க முடியாம போறதுதான் என்னோட வெற்றி”என்று சொன்ன நடிகை ரோஹினி.

ப்ரீத்தியின் சிரிப்பு ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கும், அது எங்கும் சின்க் பிசகாமல் டப் செய்த அனு ஹாசன். தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, விவேக், கிட்டி, என்று ஒவ்வொருவரும் தன் வேலையை விரும்பி ரசித்து மெனக்கெட்டு செய்திருக்கின்றனர்,

இவர்கள் அனைவரையும் இணைத்து, இறுக்கிப்பிடித்து, கப்பலை எங்கும் மோதாமல், சேதாரமின்றி, சரியாக வழிகாட்டி சாதாரண பயணத்தை ஒரு க்ராண்ட் ஜர்னியாக மாற்றிய மணிரத்னத்துக்கு சல்யூட்!

பிறந்தநாள் வாழ்த்துகள் “உயிரே”!

அ.அ.சூர்ய பாரதி