Published:Updated:

‛மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவின் 15 ஹிட்ஹாட் தருணங்கள்!

நா.சிபிச்சக்கரவர்த்திமா.பாண்டியராஜன்
‛மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவின்  15 ஹிட்ஹாட்  தருணங்கள்!
‛மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவின் 15 ஹிட்ஹாட் தருணங்கள்!

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100-வது படமான `மெர்சல்' இசை வெளியீட்டு விழாவை, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது படக்குழு. இதில், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், சமந்தா, காஜல் அகர்வால், அட்லி என, படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தனுஷ், சுந்தர்.சி, பார்த்திபன் போன்ற பல பிரபலங்களும் விழாவை அலங்கரித்தனர். இந்த விழாவின் சிறந்த 15 தருணங்கள் இதோ...

* நேரு அரங்கமே அதிரும்வகையில் விஜய் ரசிகர்கள் திரண்டார்கள். விழாவுக்கு, அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சென்னை மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். வழிநெடுகிலும் விஜய்யை வாழ்த்தி, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள். 

* நடிகர் பார்த்திபன் முதலில் மைக் பிடித்தார். `இளைய தளபதி' என மூன்று முறை பேசத் தொடங்கியும் ரசிகர்கள் ஆராவாரம் செய்து அவரைப் பேசவிடவில்லை. `தளபதி' என்றதும்தான் அவரைப் பேசவேவிட்டார்கள்.  ரசிகர்கள் தொடர்ந்து ஆராவாரம் செய்யும்போது விஜய் வெட்கப்பட்டு நெகிழ்ந்தார். ``விஜய்யும் அவர் ரசிகர்களும் சேர்ந்தாலே அந்தப் படம் அட்லீஸ்ட் 100 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும். விஜய்யும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்தால் அந்தப் படம் அட்லீஸ்ட் 200 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும். அதுவே விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸும் சேர்ந்தால் அந்தப் படம் அட்லீஸ்ட் 300 கோடி  ரூபாய் கலெக்ட் பண்ணும். நான் ஏன் `அட்லீஸ்ட்’ `அட்லீஸ்ட்'னு சொல்றேன்னா, அந்தப் படத்தை அட்லி டைரக்ட் பண்ணா, அட்லீஸ்ட் அந்தப் படம் மிடில் ஈஸ்ட்லகூட 50 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும்'' என்றார். 

* ஏ.ஆர்.ரஹ்மான்  முன்பு, அவர் இசையமைத்த சில பாடல்களைப் பாடி அசத்தினார் மாஸ்டர் வைஷ்ணவ் கிரீஷ். 

* விஜய்-யின் 25 வருடத் திரைப் பயணத்தில் எந்தெந்த வருடம் என்னென்ன படங்கள் வந்தது, அந்தப் படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன என அனைத்து தகவல்களையும் கூறி அசத்தினார் விஜய் ரசிகர் டாங்கில்.

* பாடலாசிரியர் விவேக், `மெரினா'வில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது, அரங்கத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் அவர்களது மொபைலிலிருந்த டார்ச் லைட் அடிக்க, நேரு ஸ்டேடியம்  அரங்கமே மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டக்களமாகக் காட்சியளித்தது.

* ``விஜய், தோள்மேல கை போட்டும் பேசுவார்; தோளில் கை போட்டு பேசவும்விடுவார்'' என்று தனுஷ் சொல்லும்போது அரங்கமே அதிர்ந்தது. 

* இயக்குநர் சுந்தர்.சி, ``இங்கே எத்தனை வருங்கால எம்.எல்.ஏ-க்கள், எத்தனை வருங்கால எம்.பி-க்கள் வந்திருக்கீங்கனு தெரியலை'' என்றபோது விசில் சத்தம் அதிரவைத்தது. ``எனக்கு 22 வருடங்களுக்குப் பிறகுதான் ஏ.ஆர்.ரஹ்மானோடு வேலைசெய்ற வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஆனா, அட்லிக்கு அது மூணாவது படத்திலேயே கிடைச்சிருச்சு. அந்த விஷயத்துல எனக்கு அட்லி மேல பொறாமைதான்'' என்று வாழ்த்தினார் சுந்தர்.சி. 

* தயாரிப்பாளர் என்.ராமசாமி ``எங்களோட இந்த 100-வது படம் விஜய்கூட பண்ணணும்னு எந்த ப்ளானும் நாங்க பண்ணலை. ஆனா, அது எங்க அப்பாவோட ஆசீர்வாதத்துல நடந்திருச்சு'' என்றார்.

* எஸ்.ஜே.சூர்யா, ``அட்லி, இந்தப் படத்தோட கதையை மூணு மணி நேரம் என்கிட்ட சொன்னார். பின்னிட்டார் மனுஷன். உங்களுக்கு எல்லாம் இந்தப் படத்துல ஃபுல் மீல்ஸ் இருக்கு. இங்கே இருக்கிற இவ்வளவு எனர்ஜியும் வேற மாதிரி  மாறணும்'' என்றார்.

* `ஆளப்போறான் தமிழன்' உள்ளிட்ட நான்கு பாடல்களும் ஏ.ஆர் மேடையிலே வாசிக்க அவரது டீம் அவற்றைப் பாடி லைக்ஸ் வாங்கினார்கள். ``ஆளப்போறான் தமிழன்னு நாங்க சொல்றோம். அதை ரசிகர்கள்தான் நிஜமாக்க வேண்டும்'' என்று பன்ச் வைத்தவர்... ``பெண்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்'' என்றார்.

* `கத்தி', `தெறி' படங்களைத் தொடர்ந்து சமந்தாவுக்கும், `துப்பாக்கி',`ஜில்லா' படங்களைத் தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கும் இது விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படம். ``இந்தப் படத்தில் பல்லாவரம் சம்ந்தாவைப் பார்க்கலாம்'' என்றார் சமந்தா.

* தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், `` `மெர்சல்' திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கும்'' எனக் கூறியபோது, விஜய்யின் ரசிகர்கள் கரகோஷமிட்டார்கள். 

*  இயக்குநர் அட்லி, `` `மெர்சல்' படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணணும்னு நினைச்சு வொர்க் பண்ணிட்டிருக்கேன். படத்தோட டீஸர் இன்னும் ரெண்டு வாரங்கள்ல ரிலீஸ் ஆகிடும்'' என்றார். ரசிகர்கள், அட்லி பேசும்போது ``டீஸர்... டீஸர்'' எனக் கத்திக்கொண்டே இருந்தார்கள். 

* விஜய், மேடைக்கு வந்ததும்... தொகுப்பாளர் சஞ்சய், தொகுப்பாளினி ரம்யா, நடிகர் சாந்தனு போன்றோர் வரவேற்றார்கள். 

* விஜய் பேசும்போது, ``நான் வெளியூர் போகும்போது  நிறைய நண்பர்களுடன் பேசுவேன். அவங்க என்கிட்ட அதிகம் கேட்பது `உங்களைச் சுற்றி இருக்கும் நெகட்டிவிட்டிஸை எப்படி ஹேண்டில் பண்றீங்க?' என்பதுதான். அது ரொம்ப சிம்பிள்... நான் இக்னோர் பண்ணிடுவேன். கண்டுக்கவே மாட்டேன். அவங்களும் கத்தி... கத்திப் பார்த்துட்டு, டயர்டு ஆகிடுவாங்க. அழகும் ஆடம்பரமும் இருந்தா ஆயிரம் பேர் பழகுவாங்க. ஆனா, அன்பா இருந்துபாருங்க 10 பேர் பழகினாலும், உண்மையா பழகுவாங்க. நான் அன்பா இருக்கேன்னு நினைக்கிறேன். அதுனாலதான் எனக்கு இவ்வளவு நண்பர்கள் கிடைச்சிருக்கீங்க'' என்றார். 

 அவர் சொன்ன குட்டி கதை இதுதான். ``ஒரு பெரிய ஹார்ட் சர்ஜன் காரை சர்வீஸ் பண்றதுக்காக மெக்கானிக் ஷெட்டுக்குப் போயிருக்கார். அப்ப அந்த மெக்கானிக் வேலை செஞ்சுட்டே அந்த டாக்டர்கிட்ட, `கிட்டத்தட்ட நீங்க செய்ற அதே வேலையைத்தான் நானும் செய்றேன். இந்த வால்வுகளை எல்லாம் பிரிக்கிறேன். இந்தப் பாகங்களை எல்லாம் வெட்டுறேன். அடைப்புகளை எல்லாம் சரிசெய்றேன். ஆனா, உங்களுக்கு மட்டும் ஏன் அளவுக்கு அதிகமான புகழ்... அளவுக்கு அதிகமான பணம்?'னு கேட்டார். உடனே அந்த டாக்டர் கொஞ்சம் யோசிச்சுட்டு, `தம்பி, நீ பண்ற எல்லா வேலைகளையும் வண்டி ஓடிட்டு இருக்கும்போது செஞ்சுபாரு. உனக்குப் புரியும்'னு சொன்னார். அவர் மெக்கானிக்குப் பதில் சொல்ற முறைதான் முக்கியம்'' என  ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணினார்.  `மெர்சல்' பாடல் வெளியீட்டு விழா, உண்மையாகவே மெர்சலாகத்தான் இருந்தது.

நா.சிபிச்சக்கரவர்த்தி

மா.பாண்டியராஜன்

Journalist