’’என் படத்தில் விஜய் சேதுபதி இருக்கார்’’ - 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து | 'Vijay sethupathi plays guest role in my movie', says director Ajay Gnanamuthu

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (22/08/2017)

கடைசி தொடர்பு:15:40 (22/08/2017)

’’என் படத்தில் விஜய் சேதுபதி இருக்கார்’’ - 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து

'டிமான்ட்டி காலனி'க்குப் பிறகு, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம், 'இமைக்கா நொடிகள்'. அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதி எனத் தேர்ந்த நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர், படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளது. 'இமைக்கா நொடிகள்' எப்படி உருவானது என்பது பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் அஜய் ஞானமுத்துவை தொடர்புகொண்டோம்.

இமைக்கா நொடிகள்

''கொஞ்சம் பிஸி, படத்தின் எடிட்டிங்கில் இருக்கிறேன்’’ என்று சொல்லி பேச ஆரம்பித்தவர், “என்னுடைய முதல் படமாக 'இமைக்கா நொடிகள்' வந்திருக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானது. எனக்கு அந்த நேரத்தில் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அதனால்தான், குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று 'டிமான்ட்டி காலனி' படத்தின் கதையை ரெடி பண்ணினேன். 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் எனக்கு நானே வைத்துகொண்ட ஒரு டாஸ்க். ஏனென்றால், ஒரு அறையில் வைத்து படமெடுப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, 'இமைக்கா நொடிகள்' பண்ணுவது எனக்கு சுலபமாக  இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநராக இருந்த எனக்கு, 'இமைக்கா நொடிகள்' படம் எடுப்பது கொஞ்சம் சுலபமாகயிருந்தது. ஏனென்றால், நான் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து இந்தப் படம் பண்ணியிருக்கேன். 

Ajay Gnanamuthu'இமைக்கா நொடிகள்' படம் ஒரு எமோஷனல் த்ரில்லர். ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதை. இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் கேரக்டருக்கு கெளதம் மேனன் சாரைத்தான் முதலில் நடிக்கவைக்க முடிவு பண்ணினேன். அவருக்கும் ஸ்க்ரிப்ட் பிடித்திருந்தது. ஆனால், அவரின் கம்மிட்மென்ட்ஸ் காரணமாக அவரால் கால்ஷீட் ஒதுக்கி, நடிக்க முடியவில்லை. அதனால்தான், இந்த ஸ்க்ரிப்ட் அனுராக் காஷ்யப்பிடம் போனது. அவரது படங்கள் எனக்குப் பிடிக்கும். அனுராக் பேட்டிகள் எல்லாம் பார்ப்பேன்.  இந்தப் படத்தில் இவருடைய கேரக்டர் இதுதான் என யாராலும் தீர்மானிக்க முடியாது. ரொம்ப கன்னிங்கான கேரக்டர். கொஞ்சம் புத்திசாலித்தனமான கேரக்டரும்கூட. 

நயன்தாராவை தமிழில் இதுவரை பார்க்காத கேரக்டரில்தான் பார்ப்பீங்க. தமிழைவிட மற்ற மொழிகளில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருங்காங்க. சி.பி.ஐ அதிகாரியாக நடித்திருக்கிறார்'' என்றவரிடம், படத்துக்கு ஏன் 'இமைக்கா நொடிகள்' என்று பெயர் வைத்தீர்கள் என்று கேட்டோம்.

''அதைப் பற்றி மட்டும் சொல்ல முடியாது. அது ரொம்ப சஸ்பென்ஸ். இந்தப் படத்தின் ஆரம்ப பாயின்ட்டுக்கு கனெக்டான ஒரு டைட்டில்தான் இது. அதை படம் பார்க்கும்போது புரிந்துகொள்வார்கள். படத்துக்கு மிகப் பெரிய ஸ்கோராக ஹிப் பாப் தமிழா ஆதியின் இசையும் இருக்கும்’’ என்றவரிடம், ’விஜய்சேதுபதி படத்தில் இருக்காரா இல்லையா?’ என்றால், ''கண்டிப்பாக விஜய்சேதுபதி இருக்கார். அவருக்கான படப்பிடிப்பு இனிதான் தொடங்கும்'' என்று கூறினார்  இயக்குநர் அஜய் ஞானமுத்து.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்