’மெர்சல்’ விழாவில் மெர்சல் காட்டிய அந்த விஜய் ரசிகர் யார் தெரியுமா..?

அட்லீ - விஜய் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவரயிருக்கும் 'மெர்சல்' படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்துக்கான எதிர்பார்ப்பு இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான நாள்களிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. 'மெர்சல்' படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் பிற பாடல்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமாண்ட ஆடியோ லான்ச்சில் வெளியிடப்பட்டது. 

david

இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்கள் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை நேரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விஜய் இதுவரை நடித்த படங்கள் வெளியான நாள், அதில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் என விஜய் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் சொல்லி ரசிகர்களின் அப்ளாஸை வாங்கியவர், கோவை ரேடியோ சிட்டி 91.1 எப்.எம்-யின் மாலை நேரத்து ஆர்.ஜே.டோங்க்ரி டேவிட்.

''சிறு வயதிலிருந்தே எனக்கு விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். விஜய் மற்றும் கமலின் தீவிர ரசிகன் நான். விஜய்யின் ரசிகர்கள் எல்லோரும் விஜய்க்கு கட்-அவுட் வைப்பது, போஸ்டர் ஒட்டுவது என்று செய்வார்கள். நம்ம என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்போதுதான் விஜய்யின் படங்களின் பெயர், வெளியான ஆண்டு, கதாபாத்திரத்தின் பெயர் இதையெல்லாம் மனப்பாடம் செய்வோம் என்று தோன்றியது. அதையெல்லாம் தேடி மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். அதை என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டேன். 

அதைப் பார்த்துவிட்டு தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து போன் வந்தது. அவர்கள்தான் 'மெர்சல்' ஆடியோ லான்ச் மேடையில் என்னை ஏற்றினார்கள். அப்போது விஜய் நடித்த படங்கள் பற்றி விஜய் முன்பு சொன்னது மிகவும் சந்தோஷம். அதைவிட அவர் என்னிடம் கைக்குலுக்கி, கட்டி அணைத்தது மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. இதைப்போல் மற்ற ஹீரோக்களின் படங்களின் பெயர் மற்றும் விவரங்களையும் சேகரித்து மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறேன். விரைவில் அதையும் என் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன்’’ என்று உற்சாகமாகக் கூறினார் டோங்க்ரி டேவிட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!