Published:Updated:

''யாரும் நினைக்காததை அஜித் நினைச்சார்; படம் ஹிட்!" 'என்னை அறிந்தால்' அருண் விஜய் #3YearsOfYennaiArindhaal

உ. சுதர்சன் காந்தி.
சனா
''யாரும் நினைக்காததை அஜித் நினைச்சார்; படம் ஹிட்!" 'என்னை அறிந்தால்' அருண் விஜய்  #3YearsOfYennaiArindhaal
''யாரும் நினைக்காததை அஜித் நினைச்சார்; படம் ஹிட்!" 'என்னை அறிந்தால்' அருண் விஜய் #3YearsOfYennaiArindhaal

அஜித் என்ற ஒரு பெயரைச் சொன்னாலே  'அமர்க்களம்', 'அட்டகாசம்', 'ஆரம்பம்'தான். வழக்கமான முறையில் இல்லாமல் பலவிதமான கெட்டப்களிலும் எமோஷன்களிலும் இவரை அறியவைத்தது 'என்னை அறிந்தால்' திரைப்படம். அஜித் - அனுஷ்கா என்ற புது காம்போ, கெளதம்மேனன் - ஹாரிஸ் ஜெயராஜின் ரீ-யூனியன், மாஸ் வில்லன் விக்டர், சத்யதேவ் - ஹேமானிகாவின் அழகிய காதல் என கலர்ஃபுல் காம்போ பேக்காக கடந்த 2015- ம் ஆண்டு பிப்ரவரி 5 அன்று வெளியானது 'என்னை அறிந்தால்'. படத்தில் அஜித்தை அருண் விஜய் மாஃபியா தலைவன் மேத்யூஸிடம் அறிமுகப்படுத்தும்போது, 'கார் ஓட்டுறதுல சத்யா ஜித்து' என்று ரியல் அஜித்தைப் குறிப்பிட்டுச் சொல்லிருப்பார். தாடியுடன் அழுக்குச் சட்டை அணிந்தபடி, தாடியுடன் போலீஸ் உடையில், பெரிய மீசை க்ளீன் ஷேவ் கெட்அப்பில் காக்கி சட்டையில் வந்தது, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வொயிட் சர்ட்... என அஜித்தைப் பல லுக்கில் மிக அழகாகக் காட்டியிருப்பார்கள். இப்படி அஜித் என்ற நட்சத்திரத்தின் வெவ்வேறு துருவங்களைக் காட்டிய ஒரு திரைப்படம், 'என்னை அறிந்தால்'. 

லோக்கல் அஜித் : 

 அஜித் பல படங்களில் குத்துப் பாட்டுக்கு நடனம் ஆடியிருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு டெனிம் சட்டை அணிந்து , நிறைய தாடி என வேற லுக்கில் 'அதாரு அதாரு' பாடலுக்குக் குத்தாட்டம் போட்டதில் அரங்கமே அதிர்ந்தது. குற்றிவாளிகளைப் பிடிக்க தானும் ஒரு குற்றவாளியாக வேலூர் ஜெயிலுக்குப் போய் அவர்களுடன் பழகி அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும்போது, உண்மையில் 'தல' நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி படம் பார்ப்பவர்களின் மனதில் இருந்தது. திடீரென, இரண்டு கையில் இரண்டு துப்பாக்கியுடன் ஹாரிஸின் பின்னணி இசைக்கு அஜித் நடந்து வரும்போது ஆர்ப்பரித்தனர், அஜித் ரசிகர்கள்.  

ஜென்டில்மேன் சத்யதேவ் : 

விக்டரைப் பிடித்தவுடன், 'ஒரு மெல்லிய கோடு...' என்ற டயலாக்கைப் பேசும்போதும், ஹேமானிகாவுடன் 'மழை வரப்போகுதே' பாடலின்போது அஜித் முகத்தில் இருக்கும் ரொமான்டிக் லுக், ஈஷாவின் மேல் உள்ள பாசம், ஹேமானிகாவின் மீதுள்ள  மெச்சூர்டு காதல் என அனைத்தும் காக்கிச் சட்டை அணிந்த சத்யதேவ் ஐ.பி.எஸ்ஸை மீண்டும் காதல் மன்னனாக மாற்றிக் காண்பித்திருக்கிறது. அஜித் - த்ரிஷா ஜோடியை இதற்கு முன் சில படங்களில் பார்த்திருந்தாலும், சத்யதேவ் - ஹேமானிகா ஜோடி நன்றாக ஸ்கோர் செய்தது. 

அப்பா சத்யா :  

திருமணத்திற்கு முதல் நாள் த்ரிஷா கொலை செய்யப்பட்டதும், ஈஷாவிற்குத் தானே தந்தையாகவும் தாயாகவும் மாறி அவளை சந்தோசப்படுத்தும் அப்பா அஜித், உண்மையில் அப்ளாஸ் அள்ளினார். 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்று தன் மகளின் சந்தோசத்திற்காக தன் வேலையையும் கோபத்தையும் விட்டுவிட்டுப் பாசப்பிணைப்பில் உருகிய அஜித், ஒரு  தந்தையின் பொறுப்பையும் வலிகளையும் முகபாவனைகளில் நமக்கு வழங்கினார். தன் மகள் காணாமல்போன செய்தியை அஜித்திடம் அவர் நண்பர் சொல்ல, ஈஷா அஜித்தின் போலீஸ் ஷூவை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கும் காட்சியும் பின்னணி இசையும் சத்யதேவின் ரீ-என்ட்ரியை மாஸ் அண்ட் கிளாஸாகக் காட்டியது. ஃபேமிலி ஆடியன்ஸிடம் அஜித்தை ஒரு லெவல் எக்ஸ்ட்ரா எடுத்துச்சென்றது இந்தப் படம்தான்.   

சத்யதேவ் Vs விக்டர் :  

தன் நண்பரின் குழந்தையைக் கண்டுபிடிக்க தன் போலீஸ் மூளையைப் பயன்படுத்தி அலைந்து திரிந்து அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கும்போது, உடலுறுப்பு மாற்றம் சட்டவிரோதமாக நடப்பதும், அதன் பின் விக்டர் இருப்பதும் தெரியவருகிறது. அடுத்ததாக, தேன்மொழியைக் (அனுஷ்கா) கடத்தி உடலுறுப்புகளைத் திருட திட்டம் இருக்கிறது. இது அஜித்திற்குத் தெரிந்ததையடுத்து, ரிவெஞ்ச் எடுக்க அருண் விஜய் ஈஷாவைக் கடத்தும் காட்சியிலும், அஜித்துடன் போனில் பேசும் காட்சியிலும் பக்கா மாஸ் வில்லனாக விக்டர் ஜொலித்தார். அஜித் படங்களில் அஜித்தை வில்லன் அடிக்கும்போதோ, திட்டும்போதோ தியேட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள், இந்தப் படத்தில் அஜித்தை எதிர்த்த அருண் விஜயின் நடிப்பை ரசித்துக் கொண்டாடினர். ஒரு மெல்லிய கோட்டிற்கிடையில் நடக்கும் யுத்தமாக சத்யதேவ் - விக்டருக்கு நிகழும் சண்டைக் காட்சிகள் யதார்த்தமாக, பலம் வாய்ந்த இரு போர் வீரர்கள்  சண்டைபோடும் விதத்திலும் இருக்கும். 

இன்ட்ரஸ்டிங் கார்னர் : 

டான்ஸராக த்ரிஷா, பாட்டுப் பாடுவதில் ஆர்வமுடையவராக அனுஷ்கா. அது மட்டுமல்லாது, த்ரிஷாவுடன் நடனமாடும் பெண்ணாக 'அருவி' நாயகி அதிதி பாலன் நடித்திருந்தார். அஜித் நண்பராக வந்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பின் 'லென்ஸ்' என்ற படத்தை இயக்கினார். ஹாரீஸ் ஜெயராஜிற்கு நல்ல கம்பேக் படம் எனப் பல இன்ட்ரஸ்டிங் விஷயங்களைக் கொண்டு வெளியான 'என்னை அறிந்தால்' போலீஸ் கதையில் சற்று மாறுபட்டதாகவும், அருண் விஜய்க்கு மறக்க முடியாத படமாக இருந்திருந்தது. 'மின்னலே' படத்தில் நடித்த விவேக் 13 வருடங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார்.

நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த 'என்னை அறிந்தால்' மொத்தத்தில் 'தல' அஜித் என்ற உச்சநட்சத்திரத்தை வேறு பரிணாமத்தில் காட்டிய படம். ஒரு க்ரைம் த்ரில்லர் என்றில்லாமல், கௌதம் மேனனுக்கே உரிய அந்த இசை ரசனையால், இப்படம் ஒரு மியூசிக்கலாகவே அமைந்திருந்தது. இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு என்றில்லாமல், அனைவருக்கும் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு.     

இந்தப் படத்தின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்ற நடிகர் அருண் விஜயிடம், ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசினோம்.

’'மக்களிடம் என்னை முழுமையாகச் சேர்த்த படம், 'என்னை அறிந்தால்'. என் நடிப்பில் பார்க்காத வில்லத்தனத்தை இந்தப் படத்தின் மூலமா ரசிகர்கள் பார்த்தார்கள். விக்டர் கேரக்டர் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருந்துச்சு. இந்தப் படத்துக்கு அப்புறம் கூடுதலான பொறுப்புகள் வந்துருக்கு. நல்ல கேரக்டர் கொண்ட படங்களை நானும் செலக்ட் செஞ்சு நடித்தேன். எனக்குள்ளே,  நிறைய விஷயங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய படமும் இதுதான். நான் முதல் முதலா வில்லனா நடித்த படம் இது. இந்தப் படத்தில் நடிக்கிற வரைக்கும் வில்லான நடிக்கிற ஐடியாவே எனக்கு வந்ததில்லை. 

'மலை மலை' படமெல்லாம் பண்ணுறத்துக்கு முன்னாடி அஜித் சார் என்னை மீட் பண்ணிப் பேசினார். அப்போ அவர், '' 'வாலி' படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் ரோல் பண்னேன். அந்தப் படம் என்னை மக்களிடம் போய்ச் சேர்த்துச்சு. நீங்களும் இப்படியொரு நெகட்டிவ் ரோல் பண்ணுங்க. அது கண்டிப்பா உங்க வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும்''னு சொன்னார். அஜித் சார் இதை என்னிடம் சொன்னபோது நான் பெருசா எடுத்துக்கலை. அப்புறம் 'என்னை அறிந்தால்' படத்தின் வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்தில் அஜித் சார் சொன்ன விஷயம், அஜித் சாருடனேயே நடக்கும்னு நான் எதிர்ப்பாக்கலை. ஆச்சர்யமான, அதேசமயம் சந்தோஷமான விஷயம். 

எந்தவொரு தருணத்திலும் அவர் என்னை சின்ன ஆர்ட்டிஸ்ட்னு ஃபீல் பண்ண வைக்கலை. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்குச் சமமா பிரதர் மாதிரிதான் என்னிடம் நடந்துக்கிட்டார். அவரை மாதிரி என்கரேஜ் பண்ற நடிகரையும் நான் பார்த்ததில்லை. சின்னதா ஒரு ரியாக்‌ஷன் இருந்தாலும் அதை நோட் பண்ணி சொல்வார். அவருடைய வார்த்தைகள் இன்னும் நாம பெட்டரா பண்ணனும்னு உத்வேகத்தை எனக்குக் கொடுத்துச்சு. படத்தில நாங்க ரெண்டுபேரும் வில்லனா இருந்தாலும், நிஜத்தில் எனக்கு சகோதராய் இருந்து ரசிச்சார். 'அருண், இந்தப் படத்துக்கு நீ சிக்ஸ்பேக் வெச்சா நல்லாயிருக்கும்'னு சொன்னதே அஜித் சார்தான். நம்மளைவிட, வில்லன் ஃபிட்னஸ் விஷயத்தில் தெளிவா இருக்கணும்னு எந்த ஹீரோவும் நினைக்கமாட்டாங்க, அஜித் நினைச்சார். 

'அதாரு அதாரு' பாட்டு  இந்தப் படத்தில வந்தப்போ அஜித் சார் என்கிட்ட சொன்ன விஷயம், 'அருண், இது உன் பாட்டு'. அவருடைய படத்தில எனக்குனு ஒரு பாட்டு இருக்குறதையே பெரிய விஷயமாத்தான் நான் பார்த்தேன். ரொம்ப என்ஜாய் பண்ணிப் பண்ண பாட்டு அது. என் சினிமா கேரியரில் 'தில்ரூபா' பாட்டுக்கு அப்புறம் எனக்குப் பெரிய ஹிட் கொடுத்தது, இந்தப் பாட்டுதான். ஃபைட் சீன்ஸும் அப்படித்தான். சண்டைக் காட்சிகள் என்னோட ப்ளஸ் பாயின்ட். அதை முழுசா காட்டக்கூடிய ஸ்கோப் எனக்குப் படத்தில இருந்துச்சு. 

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நைட், பகல்னு தொடர்ந்து எடுத்தோம். அஜித் சார் கொஞ்சம்கூட பிரேக் எடுக்காமல் நடிச்சது ஆச்சர்யமா இருந்துச்சு. க்ளைமாக்ஸ் ஃபைட் மட்டும் காலையில ஆரம்பிச்சு, அடுத்தநாள் காலையில வரைக்கும் ஷூட் போச்சு. கேரவனுக்குள்ளே போய் ஐந்து நிமிடம்கூட அவர் ரெஸ்ட் எடுக்கலை. நிறைய விஷயங்களை,  'என்னை அறிந்தால்' மற்றும் அஜித் சார் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்''னு சொல்லிச் சந்தோஷமா முடிக்கிறார் அருண்விஜய்.