Published:Updated:

"கேட்டுப் பெறாம, சுதந்திரத்தை எடுத்துக்குற ஜீவன், கறுப்பி!’’ - 'அடி கறுப்பி' சுவாரஸ்யம் சொல்லும் மாரி செல்வராஜ்

சனா
"கேட்டுப் பெறாம, சுதந்திரத்தை எடுத்துக்குற ஜீவன், கறுப்பி!’’ -  'அடி கறுப்பி' சுவாரஸ்யம் சொல்லும் மாரி செல்வராஜ்
"கேட்டுப் பெறாம, சுதந்திரத்தை எடுத்துக்குற ஜீவன், கறுப்பி!’’ - 'அடி கறுப்பி' சுவாரஸ்யம் சொல்லும் மாரி செல்வராஜ்

"அடி கறுப்பி என் கறுப்பி
நகத்தடமே என் பாதை...
நீ இல்லாத காட்டில்
நான் எப்படித்தான் திரிவேனோ..." 

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் 'பரியேறும் பெருமாள்' படத்துக்காக சந்தோஷ் நாராயணன் இசையில் வந்திருக்கும் பாடல், 'அடி கறுப்பி'. சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் இந்த ராப் பாடலைக் கேட்கும்போது, ஏதொரு உணர்வு ஆழ்மனதில் பரவுதை உணரமுடியும். நாய் இறந்துக்காக மட்டுமே எடுக்கப்பட்ட பாடலாக இல்லாமல், பிரிவின் வலியை உணரக்கூடிய பாடலாக இருக்கிறது, இந்தக் கறுப்பி. பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் மாரிசெல்வராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை. 

"என் படத்தில் கறுப்பி ஒரு கதாப்பாத்திரமே தவிர, அவள் ஒரு நாய் இல்லை..." என்று பேச ஆரம்பிக்கிறார், பாடலாசிரியர் விவேக்குடன் சேர்ந்து இந்தப் பாடலை எழுதியிருக்கும் மாரி செல்வராஜ். 

'' நாயோடு சேர்ந்ததுதான் என் வாழ்க்கை. வீட்டில் இருக்குறவங்ககூட நான் சண்டை போட்டுட்டு வெளியே வந்துட்டா, நாயும் என்கூடவே சேர்ந்து வெளியே வந்துரும். சென்னைக்கு நான் வர்றவரைக்கும் நாயோடு சேர்ந்த ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்தேன். இந்தப் படத்துலகூட 'கறுப்பி' ஒரு கதாபாத்திரம்தான். அதை சுத்திதான் கதை நடக்கும். 

ஒருத்தன் பொண்ணை எப்படிக் கண்மூடித்தனமா நேசிக்கிறனோ, அப்படிதான் நாயையும் நேசிப்பான். பெண்ணோட பிரிவை எப்படி உணர்வானோ, அப்படிதான் நாயோட பிரிவையும் உணர்வான். ஏன்னா, நாய் எல்லோருக்கும் செல்லம். நாம சோகமாயிருக்கும்போது, நம்மளைக் கேட்காமலேயே முத்தம் கொடுக்கிறது, கொஞ்சுறதுனு எல்லாம் பண்ணும். இந்த உரிமையை ஒரு பெண், தான் விரும்புற பையனிடம் எடுத்துகுக்கிறதைவிட நாய் ஈஸியா எடுத்துக்கும். ''நான் உன் பக்கத்துல உட்காரட்டுமா.. முத்தம் கொடுக்கட்டுமா'னு எதையும் நாய் கேட்காது. முழு சுதந்திரத்தையும் அதுவே எடுத்துக்கும். நாயோட பிரிவு, நம்மை விட்டுப் பிரியிற அம்மா, அப்பா, காதலி தரும் துயரத்துக்குச் சமமானது. 

இந்தப் பாட்டுக்கான வரிகளை நானும் விவேக்கும் சேர்ந்து எழுதினோம். ஏன்னா, என் ஐடியா மட்டுமே பாட்டில் இருக்ககூடாதுனுதான். புதுமையோடு, அரசியலும் சேர்ந்து இந்தப் பாடல் இருக்கணும்னு நினைச்சேன். முக்கியமா, நவீன அரசியல்குள்ளே பாட்டைக் கொண்டு போகணும்னு நான், விவேக், சந்தோஷ் நாராயணன் மூணுபேரும் சேர்ந்தே உருவாக்குனோம். கதை தெரிஞ்ச ஆள் நான், மியூசிக் தெரிஞ்ச ஆள் சந்தோஷ், மெட்டுக்குப் பாடல் வரிகள் எழுதுற விவேக்... மூணு பேரோட கூட்டு முயற்சியாலதான், இந்தப் பாட்டு நல்லா வந்திருக்கு.  

பாட்டு ரெடியானவுடனே ரஞ்சித் சாரிடம் காட்டினேன். அவர் இந்தப் பாட்டை பார்த்துட்டு டீஸரை முதலில் ரிலீஸ் பண்ண வேணாம். இந்தப் பாட்டை உடனே பண்ணுங்னு சொன்னார். 

என் பாட்டை இயக்குநர் ராமிடமும் காட்டினேன். கேட்டவுடனே  ரொம்ப எனர்ஜியா ரியாக்ட் பண்னார். அவருடைய முதல் படத்தோட பேர் 'கற்றது தமிழ் M.A' . என் முதல் படத்தோட பேர், 'பரியேறும் பெருமாள் BA.BL'. அவருடைய படத்தில் ஒரு வசனம் பேசுவார், 'செல்ல நாய் ஒண்ணு நீங்க வளர்த்திருந்தா, அதோட துயரம் உங்களுக்குத் தெரியும் சார்'னு. 'கற்றது தமிழ்' படத்துக்கும் இதுக்கும் சில விஷயங்கள் ஒத்து போகும். இந்தப் பாட்டைக் கேட்டதும், ரொம்ப எமோஷனல் ஆயிட்டார், ராம்.

'தும்பி'னு இலக்கிய இதழ் புத்தகத்தை ஒரு நாள் பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒரு பக்கத்தில் சின்னப் பையன் ஒருத்தன் வெட்டப்பட்ட ஆட்டோட தலையை வெச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தான். அந்தப் படம் என்னை ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தது. அதையே ஒரு படமா எடுக்கலாம்னு தோணுச்சு. அப்போதான், இந்தப் பாட்டை கேட்கிறவங்க எல்லோரும் 'கறுப்பி'யையும் உணரணும்னு நாய் தலையை மட்டும் வெச்சேன். என் எண்ணத்தை 'காலா' படத்தோட ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார்கிட்ட சொன்னேன். அவர்தான் வீடியோவுல இருந்த நாய் தலையை செஞ்சு கொடுத்தார். அது, ஒரு துயரத்தின் குறியீடு. 

என் வாழ்க்கையில் நிஜ 'கறுப்பி' இருக்கிறாள். அதை என் அண்ணன்தான் ஊரில் வளர்த்து வருகிறார். படத்துலேயும் இந்தக் கறுப்பிதான் நடிச்சியிருக்கா. அதனால அவகிட்ட வேலை வாங்கிறது எனக்கு ஈஸியா இருந்தது. படத்துல இன்னும் அபர்ணா, மஞ்சுனு நிறைய நாய்கள் இருக்காங்க. மூணுமே பெண் நாய்கள்தான். ஏன்னா, ஊர்ப்பக்கம் வேட்டைக்கு எப்போவும் பெண் நாய்களைத்தான் பயன்படுத்துவோம். ஏன்னா, அதுங்கதான் எங்கே திரிஞ்சாலும் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துரும். அதுமட்டுமில்லாம, ஆண் நாய் வளர்த்தால் அது என்னைக்காவது நம்மை விட்டுப் பிரிஞ்சு, துயரத்தைக் கொடுக்கும். பெண் நாய் எப்போதும் நமக்காக ஒரு நாயை விட்டுட்டுப் போகும்" என்ற மாரிசெல்வராஜைத் தொடர்ந்து, பாடலாசிரியர் விவேக் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார். 

"இந்தப் பாட்டில் இயக்குநருடைய வாழ்க்கை, வலி நிறைய இருந்துச்சு. அதனாலேயே பாட்டில் அவருடைய இன்புட்ஸ் தேவைப்பட்டது. ஒரு நாய் இறந்ததுக்கான பாட்டாக இதைச் சுருக்கிட முடியாது. அது மிகப்பெரிய வலி, சோகம். இந்த விஷயத்தை வாழ்க்கையில் எந்த விஷயத்தோடும் கனெக்ட் பண்ணிக்கமுடியும். 'எந்திரி கறுப்பி' என்பதே இந்தச் சமுதாயத்தில் நமக்கு இருக்கும் கோபங்கள்... அதுக்கு எதிரா நம்மளோட போர் பெருசா இருக்கணும்ங்கிறதுக்காக வெச்ச வரிகள். கறுப்பியை நம்ம உரிமைனுகூட வெச்சுக்கலாம். பறிக்க்கப்படும் நமது உரிமைகளுக்கு எதிரான ஒரு குரல்தான், இந்தக் கறுப்பி. 

சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் பாட்டுக்கு ஒரு பேஸிக் அமைப்பைக் கொடுத்திருந்தார். அதுக்குமேலே ராப் பண்ற மாதிரி வரிகள் நானும், மாரி செல்வராஜூம் எழுதுனோம். இந்தப்பாட்டு எப்படி வரும்னு முதலில் ஒரு ட்ராக் பண்ணோம். அதுக்கு சந்தோஷ் சார் பாடியிருந்தார். கேட்டவுடனே, அது எங்களுக்குப் பிடிச்சியிருந்துச்சு. அதனால, சந்தோஷ் சாரே பாடுனா நல்லா இருக்கும்னு நினைச்சோம். முதலில் வேண்டாம்னு சொன்னவர், எல்லோரும் சொல்ல சரினு ஏத்துக்கிடார். 'கறுப்பி'க்கு உயிர் கொடுத்தது சந்தோஷ் சார்தான். என் வாழ்க்கையிலும் நிறைய நாய்களை வளர்த்திருக்கிறேன். ஆனா, இந்தப் பாட்டை நாயை நினைத்து எழுதவில்லை'' என்றார்.