Published:Updated:

"அப்போ 'டார்கெட்' எம்.ஜி.ஆர், இப்போ 'டார்கெட்' கருணாநிதி!" - ரஜினியின் அரசியல் மூவ்

எம்.குணா

எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் எம்.ஜி.ஆருக்கும் தனக்குமான நட்பைப் பற்றி சொன்னவர், `காலா' இசை வெளியீட்டு விழாவில் கருணாநிதி குறித்துப் பேசி, தொண்டர்களைத் தன் பக்கம் இழுக்கிறார், ரஜினி.

"அப்போ 'டார்கெட்' எம்.ஜி.ஆர், இப்போ  'டார்கெட்' கருணாநிதி!" - ரஜினியின் அரசியல் மூவ்
"அப்போ 'டார்கெட்' எம்.ஜி.ஆர், இப்போ 'டார்கெட்' கருணாநிதி!" - ரஜினியின் அரசியல் மூவ்

இதுவரை இரண்டு மேடைகளில் மட்டுமே அரசியல் பேசியிருக்கிறார், ரஜினிகாந்த். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் மேடைகளிலும் அவரைப் பற்றியே வெவ்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சமீபத்தில் சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்துப் பேசினார், ரஜினி. `எனக்கும், லதாவுக்கும் கல்யாணம் செய்து வைத்ததே எம்.ஜி.ஆர்தான். சந்தேகமாக இருந்தால், திருமதி பார்த்தசாரதி உயிரோடுதான் இருக்கிறார் விசாரித்துக் கொள்ளுங்கள். ஶ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டப இடத்தில் பிரச்னை ஏற்பட்டபோது, எம்.ஜி.ஆர்தான் அப்போது அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு வாயிலாகப் பிரச்னையைத்  தீர்த்துவைத்தார். இப்போது காங்கிரஸில் இருக்கும் திருநாவுக்கரசரைச் சந்தித்து உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்று அந்த நிகழ்வில் ரஜினிகாந்த் பேசப் பேச அவரது ரசிகர்களைவிட, எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆனந்த அதிர்ச்சி. அ.தி.மு.க மேலிடத்துக்கோ அடிவயிற்றில் ஃபயர் பரவுகிற மாதிரி பகீர் அதிர்ச்சி.

அ.தி.மு.க அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் தங்கள் கைவசம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் அடிமட்டத் தொண்டர்களை அப்படியே இவர் லவட்டிக்கொண்டு போய்விடுவாரோ, அ.தி.மு.க வாக்கு வங்கியை அபேஸ் செய்துவிடுவாரோ... என்ற அச்சத்தில் ஈ.பி.எஸ்ஸுக்கும், ஓ.பி.எஸ்ஸுக்கும் தாறுமாறாக பிபி எகிறிப்போனது. நேற்றுவரை ரஜினியின் ரசிகர்களை வேறுகோணத்தில் பார்த்துவந்த எம்.ஜி.ஆர் பக்தர்கள், எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் அவர் பேசிய பேச்சுக்குப் பிறகு பாசப் பார்வையை வீசிவருகிறார்கள். கருணாநிதிக்கும், ரஜினிக்குமான நட்பு, அன்பு அனைத்தையும் அறிந்த தி.மு.க மேலிடத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ரஜினியின் `எம்.ஜி.ஆர் பேச்சு' புரியாத புதிராக இருந்தது.

தி.மு.க அடிமட்டத் தொண்டர்கள் பலபேர் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக, மு.க.ஸ்டாலினின் வலதுகரமாகச் செயல்பட்டுவரும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரஜினியின் ரசிகர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் `2.0' படத்தின் இந்தி புரமோஷன் மும்பையில் நடந்தது. அதற்காக நட்சத்திர ஹோட்டலில் முக்கியமான புள்ளிகளுக்கு விருந்து தரப்பட்டது. அன்று நடந்த நிகழ்ச்சியில் மகேஷ் பொய்யாமொழியும் கலந்துகொண்டு ரஜினியோடு போட்டோ எடுத்துக்கொண்டார் அந்தளவுக்கு ரஜினிமேல் அன்பு கொண்டவர்.

தி.மு.க முப்பெரும் விழாக்கள் அறிவாலயத்தில் நடக்கும்போதெல்லாம் கட்சிக்கு அப்பாற்பட்டு நண்பராக ரஜினியை கருணாநிதி அழைத்ததும், ரஜினி கலந்துகொண்டதும் கடந்தகால வரலாறு. தி.மு.க தொண்டர்களின் மனநிலையை நன்கு தெரிந்துகொண்டதால்தான், `கருணாநிதி' மந்திரத்தைக் 'காலா' இசை வெளியீட்டு விழாவில் உச்சரித்தார், ரஜினி. தொடர்பில்லாமல் கருணாநிதி பெயரைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்காது என்பதைக் கூர்ந்து தெரிந்து தெளிந்து வைத்திருந்தவர், `சிவாஜி' பட வெற்றிவிழாவில் கருணாநிதி பேசியதை நினைவுபடுத்தி `தமிழ்நாட்டுல மூலை முடுக்குல, பட்டி தொட்டியில இருக்கிறவங்க எல்லோரும் கலைஞர் சார் குரலைக் கேட்க விரும்புறாங்க, அவங்களைபோல நானும் அவரோட குரலைக் கேட்கிறதுக்கு ஆசையா காத்துக்கிட்டு இருக்கேன்' என்று பேசியதை டிவி சேனல்களில் பார்த்த தி.மு.க தொண்டர்களின் கண்கள் கலங்கியது, இதயம் விம்மியது.

எம்.ஜி.ஆர் குறித்த உரையால் அ.தி.மு.க தொண்டர்களிடமும் அந்தக் கட்சியிலிருந்துவரும் தனது ரசிகர்களின் இதயத்தையும் தொட்டுவிட்டார், ரஜினி. கருணாநிதி குறித்த பேச்சால் தி.மு.க தொண்டர்களிடமும், அங்குள்ள தனது ரசிகர்கள் நெஞ்சத்திலும் இடம்பிடித்துக் கவர்ந்துவிட்ட ரஜினியின் திறமை குறித்து, பழம்தின்று கொட்டை போட்ட அரசியல் கட்சிகளே ஆச்சர்யமாகப் பார்த்துவருகின்றன.