Published:Updated:

``மும்தாஜ் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் வீட்ல கொடுக்க கிஃப்ட் வாங்கிட்டோம்!’’ - மும்தாஜ் சகோதரர் அஹமத் #BiggBossTamil2

வே.கிருஷ்ணவேணி
``மும்தாஜ் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் வீட்ல கொடுக்க கிஃப்ட் வாங்கிட்டோம்!’’ - மும்தாஜ் சகோதரர் அஹமத் #BiggBossTamil2
``மும்தாஜ் பிறந்தநாளுக்கு பிக்பாஸ் வீட்ல கொடுக்க கிஃப்ட் வாங்கிட்டோம்!’’ - மும்தாஜ் சகோதரர் அஹமத் #BiggBossTamil2

'எங்க வீட்டுக்குப் பேட்டி எடுக்க வந்திருக்கீங்க. ஆனா, வீட்டுச் சுவர்கள்ல அவங்களோட எந்தப் போட்டோவையும் பார்த்திருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு அவங்க தன்னை எப்பவும் எளிமையா வெச்சுப்பாங்க. அதே நேரம் தனக்குத் தோணும் நல்ல விஷயங்களை மும்தாஜ் செய்யத் தவறினதே இல்லை. இன்றைக்கு அவங்களுக்குப் பிறந்தநாள். ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறேன். அது என்னனா..!' மும்தாஜின் சகோதரர் அஹமத் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம். 1998-ல் டி.ராஜேந்தரின் ‘மோனிஷா என் மோனலிசா’ படம் மூலம் அறிமுகமான மும்தாஜுக்கு சினிமாவில் இது 20-ம் ஆண்டு. இப்போது அவர் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர். இன்று (5.7.2018) மும்தாஜுக்குப் பிறந்தநாள். பிக் பாஸ் வீட்டில் மும்தாஜின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து அவரின் சகோதரர் அஹமத்திடம் பேசினேன். 

`` ‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கிறதா வேணாமானு எங்களுக்குள்ள பெரிய டிஸ்கஷன் போச்சு. அவங்க உடல் நலன் கருதி, ‘இந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம்’னு சொன்னேன். அவங்களோ, 'நான் போயே தீருவேன்'னு பிடிவாதமா இருந்தாங்க. அது கடைசியில் எங்களுக்குள் பெரிய வாக்குவாதமா மாறிடுச்சு. ஆனா அவங்க, ‘ரெகுலர் லைஃப்ல இருந்து எனக்கு பிரேக் கிடைக்கும். நானும் புத்துணர்ச்சியா உணர்வேன். இதுல கலந்துக்க எனக்கு அனுமதி கொடுங்க’ன்னாங்க. அவங்க இடத்துலயிருந்து யோசிச்சுப் பார்க்கும்போது அவங்க சொன்ன காரணம் சரினு தோணுச்சு. பிறகு ஓ.கே சொன்னேன். ‘அவங்க சில மாத்திரைகள் எடுத்துக்கிறாங்க. அதுக்கு அனுமதிச்சீங்கன்னா நிகழ்ச்சிக்கு அனுப்புறேன்’னு சேனல்ல சொன்னேன். அதுக்கு அவங்க ஒப்புக்கிட்டாங்க. அதனால சந்தோஷமா அவங்களை அனுப்பிவச்சேன்.”

“பிக் பாஸ் வீட்ல மும்தாஜ் செயல்பாடுகள் எப்படி இருக்குனு நினைக்கிறீங்க?”

“பார்வையாளர்கள் எல்லாரையும் நம்மால் திருப்திப்படுத்த முடியாது. எவ்வளவு நல்லவங்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு தரப்புக்கு நம்மைப் பிடிக்காமப் போகலாம். அது இயற்கை. அப்படி மும்தாஜையும் சிலருக்கு பிடிக்காம இருக்கலாம். ஆனா, மும்தாஜ் வீட்ல எப்படி இருப்பாங்களோ அதே இயல்போடத்தான் பிக் பாஸ் வீட்லயும் இருக்காங்க. அவங்க நடிச்சுத்தான் தன்னை நல்லவங்கனு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.”

“'மும்தாஜ் பற்றி வரும் நெகட்டிவ் கமென்ட்ஸ் உங்களைப் பாதிக்குதா?”

''கண்டிப்பா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. அவங்களைப்பற்றி வரக்கூடிய வீடியோ மீம்ஸ், அதுக்குக்கீழ இருக்கும் கமென்ட்ஸை படிச்சிட்டுத்தான் இருக்கேன். அந்தவகையில் 90 சதவிகித ரசிகர்கள் அவங்க இயல்பா இருக்காங்கனு எழுதுறாங்க. பத்து சதவிகிதம் பேர், ‘பணம், புகழுக்காக பிக் பாஸ் வீட்லயும் நடிக்கிறாங்க’னு எழுதுறாங்க. மும்தாஜை நல்லா தெரிஞ்சவனா சொல்றேன், அதுல உண்மை இல்ல. அவங்க வெற்றி, தோல்வி, புகழ்னு அனைத்தையும் கடந்து வந்தவங்க.”

“அவங்களை மிஸ் பண்றீங்களா?”

“நிச்சயமா. டாக்டர் ஊசிப் போடுற நேரத்துல பெரும்பாலும் என் கையை இறுக்கமாப் பிடிச்சுக்குவாங்க. அவங்களுக்கு ஏற்படுற வலியை என்னால ஒவ்வொரு தடவையும் புரிஞ்சுக்க முடியும். அந்தளவுக்கு அழுத்தம் இருக்கும். ‘அந்த நேரத்திலாவது நான் அவங்கக்கூட இருக்கேன். எதுவும் பேச மாட்டேன். ஊசிபோட்டு முடிஞ்சதும் திரும்பிடுறேன்’னு எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஆனால், சேனல் தரப்புல, ‘இது மத்தப் போட்டியாளர்களுக்குத் தவறான வழிகாட்டலா இருக்கும்’னு சொல்லி மறுத்துட்டாங்க. ஆனால், ‘எப்படி இருக்காங்க’னு தினமும் சேனலுக்குப் போன் பண்ணி விசாரிச்சுட்டுதான் இருக்கேன்.”

“'மும்தாஜ் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்னு இருக்கீங்க?”

''மும்தாஜ் இந்தப் பிறந்தநாளை பிக் பாஸ் ஃபேமிலிகூட கொண்டாடப்போறாங்க. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் குடும்பத்தோடு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு வருவோம். பிறகு ஷாப்பிங் போவோம். மற்றபடி அவங்க எப்பவும் தன் பிறந்தநாளை கிராண்டா கொண்டாடினது கிடையாது. இந்தமுறை குடும்பத்தைவிட்டு தள்ளியிருக்காங்க. அவங்களுக்கு மீனம்பாக்கத்தில் இருக்கும் 'கபாப் பேக்டரி' ஹோட்டல்ல 'கலோட்டி கபாப்' (galouti kebab) என்ற டிஷ் ரொம்பப் பிடிக்கும். அந்த டிஷ்ஷை அவங்களுக்கு கொடுத்தனுப்பலாம்னு இருக்கோம்.  நாங்க அனுப்புவதை உள்ளே கொண்டுபோய் அவங்ககிட்ட சேர்ப்பாங்களானு எனக்குத் தெரியல. அப்படி கொடுத்தால் மும்தாஜுக்கு பெரிய சர்ப்ரைஸா இருக்கும்” என்றார்.