Published:Updated:

“ஸாரி சொல்லிட்டுதான் அறைவேன்!” ‘பிரியமானவள்’ சிவரஞ்சனி

கு.ஆனந்தராஜ்
“ஸாரி சொல்லிட்டுதான் அறைவேன்!” ‘பிரியமானவள்’ சிவரஞ்சனி
“ஸாரி சொல்லிட்டுதான் அறைவேன்!” ‘பிரியமானவள்’ சிவரஞ்சனி

“சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து தினமும் திட்டு அர்ச்சனைகள், நெகிழ்ச்சியான பாராட்டுகள்னு ரெண்டுமே வாங்கிட்டு இருக்கேன்!" - அதிரச் சிரிக்கிறார் நடிகை சிவரஞ்சனி. சன் டிவி 'பிரியமானவள்' சீரியலில் 'அவந்திகா'வாகக் கலக்குபவர்! 

"மீடியா பயணம் எப்போது தொடங்கியது?"

"சினிமாவுல நடிக்கப்போனா ஐஸ்கிரீம், சாக்லேட்டெல்லாம் கிடைக்கும், ஸ்கூலுக்கு லீவ் போட்டுடலாம்னு ஆசைப்பட்டு, 'நான் நடிக்கப் போறேன்'னு சின்ன வயசுல வீட்டுல சொல்லிட்டே இருப்பேன். சில சைல்டு ஆர்டிஸ்ட் வாய்ப்புகளும் வந்தது. 'படிப்பு பாதிக்கப்படும், வேண்டாம்'னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க பெற்றோர். ப்ளஸ் டூ முடிச்சப்போ தமிழன் டிவியில நியூஸ் ரீடராக வாய்ப்புக் கிடைக்க, 'ஆல் தி பெஸ்ட்' சொன்னாங்க வீட்டில். பி.காம் படிச்சுட்டே அடுத்தடுத்து சில சேனல்களிலும் நியூஸ் ரீடரா வேலைபார்த்தேன். அடுத்த வாய்ப்பு, ஜெயா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்!"

"ஆங்கர், நடிகை ஆனது எப்போது?" 

"கல்லூரிப் படிப்பு முடிஞ்ச சமயம், சன் டிவி 'தேன்நிலவு' சீரியல் ஆடிஷன்ல செலக்ட் ஆனேன். ஆரம்ப நாட்களில் ஷூட்டிங்ல சரியா நடிக்க வராம திட்டு வாங்கி ஸ்பாட்லயே அழுதிருக்கேன். 'நமக்கு நடிப்பு வராது... வேண்டாம்'னு எல்லாம் முடிவெடுத்துட்டேன். ஆனா, என் கோ-ஆர்டிஸ்ட்கள் எல்லோரும்தான் எனக்கு ஆறுதல் சொல்லி உத்வேகம் கொடுத்தாங்க. வீட்டுல கண்ணாடி முன்னாடி நடிச்சுப் பார்ப்பேன். அடுத்து சன் டிவி 'பாசமலர்' சீரியல்ல நெகட்டிவ் ரோல். புதுமையான அனுபவமா இருந்தாலும் இந்த முறை கூலா நடிக்க ஆரம்பிச்சுட்டேன். 'அரங்கேற்றம்' உள்பட சில சீரியல்கள்ல ஹீரோயினாவும், நெகட்டிவ் லீடாவும் நடிச்சேன்."

“ ‘பிரியமானவள்' சீரியல் ‘அவந்திகா’ ரொம்ப பிரபலம் ஆகிட்டாங்களே..?”

“இத்தனை சீரியல்கள்ல நடிச்சிருந்தாலும், அவந்திகா கேரக்டர் மூலமா எனக்குக் கிடைச்சதுதான் பெரிய ரீச். யாருக்குமே அடங்காத, தன் இஷ்டத்துக்கு நடந்துக்கிற நெகட்டிவ் ரோல் அது. அதனால, வெளிய எங்கயாச்சும் போனா பார்க்கிறவங்க எல்லோரும் ஏதோ அங்காளி பங்காளி சண்டை மாதிரி என்னைத் திட்டுவாங்க. யூடியூப் கமென்ட்ஸ்லேயும் வந்து திட்டித் தீர்ப்பாங்க அன்பு ரசிகர்கள். 'கொஞ்சம் என் கேரக்டரை பாசிட்டிவா மாத்துங்க சார்'னு டைரக்டர்கிட்ட கேட்டுட்டே இருப்பேன். 'உனக்குக் கிடைக்கிற திட்டு எல்லாமே பாராட்டுதான்'னு சொல்லி அவர் ஊக்கப்படுத்துவார். தொடர்ந்து, அந்தக் கேரக்டரை இன்னும் பவர்ஃபுல்லா மாத்தி, கொஞ்சம் பாசிட்டிவ் போர்ஷனையும் சேர்த்தார். அதுக்குப் பிறகு திட்டு அர்ச்சனையைவிட, பாராட்டும் பாசமும் அதிகமாகக் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு!"

"உங்க கேரக்டர் பெயரை தன் குழந்தைக்கு வெச்சாராமே ரசிகர் ஒருத்தர்..?" 

“அந்த நெகிழ்ச்சியை எப்படிச் சொல்வேன்?! ஒரு நிகழ்ச்சிக்குப் போனப்போ, 'நாங்க உங்களோட ரசிகர்கள்'னு சொன்ன ஒரு தம்பதி, ‘அவந்திகா' கேரக்டர் செம போல்டு. எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதனால எங்க பொண்ணுக்கு அந்தப் பெயரைதான் வெச்சிருக்கோம்'னு சொன்னப்போ, கொஞ்சம் ஃப்ரீஸ் ஆயிட்டேன்னுதான் சொல்லணும்!" 

" 'பிரியமானவள்' சீரியல்ல ஆக்‌ஷன் காட்சிகள் நிறைய இருக்குபோல..?!"

'ஹாஹாஹா... எல்லாரையும் எதிர்த்துப் பேசுறது, திட்டுறது, அடிக்கிறது மாதிரியான காட்சிகளைத்தானே சொல்றீங்க..?! சீரியல்ல நான் மத்தவங்களை அறையுற மாதிரி நடிக்கும்போது ரொம்ப சிரமப்படுவேன். அதாவது, அடிக்கிற மாதிரி நடிக்காம நிஜமாவே அடிச்சிடுவேன்! அப்புறம் அவங்ககிட்ட ஸாரி கேட்பேன். கதைப்படி என் மாமனார் மற்றும் அவர் ஃப்ரெண்ட் அய்யாவு அங்கிள் ரெண்டு பேர்கூடவும் சண்டை போடுற சீன் ஒண்ணு. ஒரு கட்டத்துல அய்யாவு அங்கிளை அடிக்கிற சீன்ல, 'பளார்'னு விட்டதில் எனக்கே கை வலிச்சிடுச்சு. அப்புறம் அவர்கிட்ட நிறைய டைம் ஸாரி சொன்னேன். நானும் எவ்வளவோ முயற்சி செய்றேன்... அடிக்கிற மாதிரி நடிக்கிறது மட்டும் எனக்கு வரவே மாட்டேங்குது!" 

“ 'அவந்திகா' கோபக்காரி. சிவரஞ்சனி எப்படி?”

"சிவரஞ்சனி ரொம்ப அமைதியான, அன்பான பொண்ணு. ஆனா, பாருங்க... எல்லோரும் 'அவந்திகா'வைதான் என் நிஜக் கேரக்டரா நம்புறாங்க. அதனாலதான் 'பிரியமானவள்' சீரியலைத் தொடர்ந்து ஜி தமிழ்ல 'அழகிய தமிழ்மகள்' சீரியல்லயும், 'வில்லி ரோலுக்கு சிவரஞ்சனி டபுள் ஓகே'னு டிக் பண்ண, அதிலும் இப்போ கண்ணை உருட்டிட்டு இருக்கேன்!"