Published:Updated:

‘தளபதி’க்கும் ‘மாரி 2’-வுக்கும் ஒற்றுமை சொல்கிறார் கிருஷ்ணா!

சனா
‘தளபதி’க்கும் ‘மாரி 2’-வுக்கும் ஒற்றுமை சொல்கிறார் கிருஷ்ணா!
‘தளபதி’க்கும் ‘மாரி 2’-வுக்கும் ஒற்றுமை சொல்கிறார் கிருஷ்ணா!

“சினிமாவில் நான் நடிக்கிறதை என்னாலேயே நம்ப முடியவில்லை. சின்ன வயதில் மணிரத்னம் சார் படத்தில் நான் நடித்ததும், எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம்தான். இப்போது சினிமாவில் எனக்கான ஒரு முத்திரையை பதிக்க ஓடி கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக சினிமா வரலாற்றில் என் பெயர் வரும்’’ என்று நம்பிக்கையுடன் பேச ஆரம்பிக்கிறார். 

'கழுகு', 'யாமிருக்க பயமே', 'பண்டிகை' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் கிருஷ்ணா. 'மாரி 2' படத்தில் தனுஷூடன் நடிக்கிறார் என்ற தகவல் வரவே கிருஷ்ணாவிடம் பேசினோம்.

“சினிமாவில் நடிக்கும் எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு முறையாவது மணிரத்னம் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையிருக்கும். எனக்கு சின்ன வயதிலியே அந்த வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. நான் ஸ்கூல் படித்து கொண்டிருந்த நேரத்தில் மணிரத்னம் சாரின் 'அஞ்சலி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குட்டி பசங்க பேக் கிரவுண்டில் டான்ஸ் ஆட தேவைப்பட்டார்கள். அந்த நேரத்தில் நான் படிக்குற ஸ்கூலுக்கு மணிரத்னம் சாரின் உதவி இயக்குநர்கள் டான்ஸ் ஆடுவதற்கு பசங்க தேவைப்படுறாங்கனு வந்து நின்றார்கள். இந்தி கிளாஸ் எடுக்கும் டீச்சர் எங்க கிளாஸிலிருந்து ஒரு ஐந்து பசங்களை அனுப்பி வைத்தார்கள். அதில் நானும் ஒரு பையன். எனக்கு அப்போ ஒரே ஹாப்பி. அய்யா, நம்ம சினிமாவில் வரபோறோம்னு.

ஜாலியா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டேன். அப்போ எனக்கு வயசு பத்துதான். 'அஞ்சலி' தான் என் முதல் படம். அடுத்தாக மணிரத்னம் சாரின் 'இருவர்' படத்திலும் நடித்தேன். மணிரத்னம் சாரின் படங்களில் குட்டியாக எதாவது கேரக்டர் இருந்தாலும் என்னை நடிக்க கூப்பிட்டு விடுவார். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திலும் என்னை நடிக்க கூப்பிட்டார். பட், அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. 

என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு போட்டோ ஷூட் நடந்ததும் மணிரத்னம் சாரின் 'தளபதி' படத்துக்காகதான். அந்தப் படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிப்பதற்காக என்னை வைத்து போட்டோ எடுத்தார்கள். மணி சாருடன் காலேஜ் முடிக்குற வரைக்கும் கான்டெக்ட் இருந்தது. சில படங்கள் பண்ணினேன். சில படங்கள் பண்ணமுடியவில்லை. அந்த நேரத்தில் சென்னையில் பி.காம் முடித்தவுடன், எம்.பி.ஏ படிப்பதற்காக யு.எஸ் போய்விட்டேன். அதற்கு பிறகு சில வருடங்கள் யு.எஸ்.யில்தான் இருந்தேன். பிஸினஸ் பண்ணினேன். பட், எதுவும் எனக்கு மனநிம்மதியை கொடுக்கவில்லை. பணம் இருந்தது. ஆனால் சந்தோஷமில்லை. சரி இதுக்கு அப்புறம் இங்கேயிருந்தா நல்லாயிருக்காதுனு நம்ம ஊர் சென்னைக்கு போகலானு கிளம்பி வந்துட்டேன். இங்கே வந்தவுடன் நமக்கு என்டர்டெயின்மெண்ட்தான் கரெக்ட்னு தோன்றியது. சினிமாவில் இனி ஃபுல் டைம்மாக நடிக்கலாம் என்று கோடம்பாக்கம் வந்துவிட்டேன். இதுதான் என்னுடைய சுருக்கமான ப்ளாஷ்பேக்’’ என்றுச் சிரிக்கிறார் கிருஷ்ணா. 

“எனக்கு இப்போது  ஹீரோவான பிறகும்கூட மணிரத்னம் சார் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையிருக்கு. அதனாலேயே மணி சார் எதாவது புது ப்ராஜக்ட் பற்றிச் சொன்னாலே, அவருக்கு முன்னாடி போய் ஆஜராயிருவேன். 'சார் நானும் இருக்கேன்' அப்படிங்குற மாதிரி. அவருடைய கடைசி இரண்டு படங்களுக்கு மட்டும் என்னால் அவரைச் சென்று பார்க்கமுடியவில்லை. 
இந்த வருடம் எனக்கு ரொம்ப திருப்தியான வருடமாக இருக்கிறது. என்னுடைய முந்தையப் படம் 'பண்டிகை', எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. 'கழுகு' படத்துக்கு பிறகு நான் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய படங்களின் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன். 

அந்த வகையில் தற்போது 'கிரகணம்', 'களரி', 'வீரா' 'விழித்திரு' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றேன். இதில் 'கிரகணம்' படம் ஒரு ஹாலிவுட் படம் மாதிரியிருக்கும். த்ரில்லர் மூவியான இந்தப் படத்தில் ஐந்தாவது ரீலில்தான் நானே வருவேன். இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து கதைகள் இருக்கும். இந்தப் படத்தில் நானும், ஹீரோயினும் வரக்கூடிய போஷன் முக்கியத்துவம் வாய்ந்தாகயிருக்கும். படத்தில் இரண்டு நிமிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகணம் வந்துவிட்டு போகும் அந்த இரண்டு நிமிடத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. அதனால்தான் படத்துக்கு 'கிரகணம்'னு பேர் வைத்திருக்கிறார் இயக்குநர். 

கிரகணம் வரும்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வெளியே போககூடாதுனு சொல்லுவாங்க. அப்படி கிரகணம் வரும்போது ஒருவரின் வக்கிர புத்தியால் என்ன நடக்கிறது என்பதுதான் ஸ்டோரி. அதே போல் 'வீரா' திரைப்படமும் ஒரு வித்தியாசமான கதை களமாகயிருக்கும். நார்த் மெட்ராஸில் இருக்கும் ஒருவன் ரெளடி ஆக வேண்டும் என்று  நினைக்குற கதை. ரெளடியாக நிறைய முயற்சிகளை அவன் செய்வான். பட், அதெல்லாம் ஒர்க்அவுட் ஆகாது.  'களரி' படம் கேரளாவில் சின்ன தமிழ்நாட்டில்தான் ஷூட் பண்ணினோம். அங்கேயிருக்கும் மக்கள் எல்லோரும் தமிழ் பேசுபவர்கள்தான். சின்ன தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் குடும்பம் பற்றிய கதைதான் இந்தப் படம். ஒரு சூப்பரான பேமிலி சப்ஜெக்ட். அண்ணன், தங்கச்சி பாசம் இந்தப் படத்தில் அழகாக காட்டியிருக்கோம். தங்கச்சி கேரக்டரில் மலையாள நடிகை ஒருவர் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் எனக்கு தங்கச்சியாக நடிக்க நிறைய நடிகைகளிடம் கேட்டோம். ஆனால், நிறையப் பேர் பண்ண மாட்டேனு சொல்லிட்டாங்க. ஜோடியாக வேண்டுமானால் நடிக்கலாம். தங்கச்சி கேரக்டர் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் புதுமுகத்தை கொண்டு வந்தோம்’’ என்றவர் 'விழித்திரு' படத்தைப் பற்றியும் சொன்னார். 

“ 'விழித்திரு', ஒரு இரவில் நடக்கும் கதை. மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து, காலை ஆறு மணிக்கு படம் முடிந்துவிடும். மாலை ஆறு மணிக்கு சென்னை நமக்கு செட்டாகாது, சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று முடிவு எடுக்கும்போது, சின்ன வேலை ஒன்று அவனைத் தேடி வரும். அதனால், அவனுடைய  வாழ்க்கையில் வரும் பிரச்னைகள்தான் கதை. செம த்ரில்லர் இந்தப் படம். நான்கு பேரின் வாழ்க்கை இந்தப் படத்தில் வரும். சம்பந்தமே இல்லாத நான்கு பேர் பற்றியது. 

என்னடா 'மாநகரம் ' படத்தின் ஸ்க்ரிப்ட் மாதிரியிருக்குனு நினைக்காதீங்க. இது வித்தியாசமான ஸ்க்ரிப்ட். 'மாநகரம்' படம் வருவதற்கு முன்பாகவே வந்த ஸ்க்ரிப்ட் இது. என்னுடைய போஷன் சிங்கிள் கதையாக வரும். வெங்கட்பிரபு எமோஷனல் ட்ராமா, விதார்த், தன்ஷிகா, தம்பி ராமையா காமெடி கலந்த கதை. படத்தில் நிறைய ஸ்பெஷல்ஸ் இருக்கும். இயக்குநரையும், திரைக்கதையும் நான் ரொம்ப நம்புவேன். ஒரு படத்தின் வெற்றி  இயக்குநர் கையில்தான் இருக்கு. எனக்கு வர கதைகளில் இப்போது ரொம்ப செலக்ட் பண்ணிதான் படங்கள் செய்கின்றேன்’’ என்றவரிடம் 'மாரி 2' படம் பற்றி கேட்டோம்.

''மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி என்னிடம் வந்து ஃபுல் ஸ்டோரி சொன்னார். இந்த கேரக்டர் நீங்கள் பண்ணினால்தான் நன்றாகயிருக்கும் என்று நானும், தனுஷூம் ஃபீல் பண்ணினோம் என்றார். எனக்குள்ளே ஒரு டவுட் இருந்தது. 'தனுஷ் நடிக்கிற படத்தில் நானும் சேர்ந்து நடித்தால் நம்மளை கம்மியா காட்டிருவாங்களோ' என்று தோன்றியது. பாலாஜிக்கிட்ட என் பயத்தை சொன்னேன். அவர் ஸ்க்ரிப்ட் படிங்கனு சொன்னார். 

நான்தான் இந்த கேரக்டர் பண்ண வேண்டும் என்பதில் தனுஷ், பாலாஜி மோகன் இருவரும் ரொம்ப உறுதியாக இருந்தார்கள். அதனால் நானும் ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்துக்காக நான் ஹீரோவாக நடிக்குற படத்தோட ஷூட்டிங்கை ஜனவரிக்கு தள்ளி வைத்துவிட்டேன்’’ என்றவரிடம் 'மாரி 2' படத்தில் எந்த மாதிரியான கேரக்டர் என்றால், ''சொன்னால் என்னை அடிப்பார்கள்'' என்று சிரிக்கிறார். ’’பட், இந்தப் படத்தில் வேற மாதிரியான கிருஷ்ணாவை பார்க்கலாம்’’ என்றார்.

அன்றைக்கு ஆடிஷனுக்குப்போன ‘தளபதி’க்கும் இன்று அவரின் மாப்பிள்ளையுடன் 'மாரி 2-'வில் நடிக்கப்போவதற்கும் உள்ள ஒற்றுமை என்ன?’ என்று கேட்டோம், “இதுலாம் ஒற்றுமையானு அடிக்க வருவீங்க... ஆனா, அதான் ஒற்றுமை...ரெண்டுலயும் நான் நடிச்சிருக்கேன்.” என்றார்.