Published:Updated:

‘இந்தியன்-2’வின் தயாரிப்பாளர் மாறினார்... புதிய தயாரிப்பாளர் யார்? #VikatanExclusive

எம்.குணா
‘இந்தியன்-2’வின் தயாரிப்பாளர் மாறினார்... புதிய தயாரிப்பாளர் யார்? #VikatanExclusive
‘இந்தியன்-2’வின் தயாரிப்பாளர் மாறினார்... புதிய தயாரிப்பாளர் யார்? #VikatanExclusive

இந்திய சினிமா வரலாற்றில் ‘இந்தியன்’ ஒரு முக்கியமான திரைப்படம். லஞ்சம், ஊழலுக்கு எதிராக ஒரு முதியவர் ‘உயிர்’களை எடுப்பதுதான் படத்தின் கதை. அந்தக் கதாபாத்திரத்தை கமல் கையாண்ட விதம், ஷங்கரின் திரைக்கதை, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் பிரமாண்டம் என்று 20 ஆண்டுகள் கடந்தும் ‘இந்தியன்’ நம் இதயங்களில் இருக்கிறான். 

இந்தச் சூழலில் ஷங்கர், ரஜினியுடன் ‘சிவாஜி’ முடித்து, ‘எந்திரன்’ செய்து தற்போது அதன் அடுத்த வெர்ஷனான ‘2.0’ முடித்து துபாயில் ஆடியோ வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசனோ களம், தளம் கடந்து அரசியலில் தினம்தினம் அனல் கிளப்பிக்கொண்டிருக்கிறார். ஆட்சி, காட்சி இரண்டிலும் ‘விஸ்வரூப’மாக எழுந்து நிற்பவர், ‘பிக் பாஸ்’ மூலம் மக்கள்தான் பாஸ் என்கிறார். அதே பிக் பாஸில், கமல்-ஷங்கர்-தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு கூட்டணியில் உருவாகும்’ என்று ‘இந்தியன்-2’ படமும் அறிவிக்கப்பட்டது. மூவரும் இணைந்து காட்சியளித்தனர். 

இன்றைய அரசியல் சூழலில் ‘இந்தியன்-2’ நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில், ‘கமல் விலகிட்டார். அவருக்கு பதில் சூர்யா நடிக்கிறார்’ என்று வழக்கம்போல் வரும் வாட்ஸ்அப் தகவல் ஒன்று வைரல் ஆனது. விசாரித்தால், ‘அது வழக்கம்போல் வரும் வதந்தி’ என்று தெரியவந்தது. அந்த வதந்தி வந்துபோனநிலையில், ‘இந்தியன்-2 படத் தயாரிப்பிலிருந்து தில்ராஜு விலகிவிட்டார். ‘இந்தியன்’ படப்பெயர் ரைட்ஸ் வைத்துள்ள ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறார்’ என்று இன்னொரு தகவல். ஏற்கெனவே வந்த வாட்ஸ்அப் வதந்திபோலத்தான் இதுவும் இருக்கும் என்று விசாரித்தால், ‘இது வதந்தி அல்ல. உண்மை’ என்று தெரியவந்தது. 

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகளும் தயாரிப்பாளரும் பாடகியுமான ஐஸ்வர்யா கிருஷ்ணாவிடம் இந்தத் தகவலைச் சொன்னோம். ''நீங்கள் சொல்லும் 'இந்தியன்-2' படத்தை நாங்களும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இப்போதுகூட என் மாமா '2.0' பட ஆடியோ விழாவில் கலந்துகொள்ள துபாய் சென்றிருக்கிறார்'' என்று சுருக்கமாக அதேசமயம் தெளிவாகப் பதில் சொன்னார். 

தமிழில் ஷங்கர் இயக்கிய 'இந்தியன்', 'பாய்ஸ்' படங்களையும், இந்தியில் 'நாயக்' படத்தையும் ஏ.எம்.ரத்னம் தயாரித்தார். 'இந்தியன்' பெரும்வெற்றி பெற்றது, ஆனால் 'பாய்ஸ்', 'நாயக்' ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. பிறகு ஷங்கர் வெவ்வேறு படங்களில் பயணம் செய்தாலும் தயாரிப்பாளர் ரத்னத்துக்கு ஒரு படத்தை இயக்கித்தரவேண்டும் என விரும்பினார். அவரின் விருப்பம் இப்போது ‘இந்தியன்-2’ மூலம் நிறைவேறப்போகிறது. 

தற்போது ஷங்கர், ‘2.0’வை வரும் ஜனவரி 25ம் தேதி அன்று வெளியிடும் திட்டத்துடன் வேலைசெய்துகொண்டிருக்கிறார். கமல், ‘விஸ்வரூபம்-2’, ‘சபாஷ்நாயுடு’ படங்களை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும். இந்த இரண்டு படங்களுக்கான மீதி படப்பிடிப்புக்களை இந்த ஆண்டுக்குள் முடித்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. அதன்பிறகு அடுத்த ஆண்டுதான் ‘இந்தியன்-2’வுக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. ஆனால், இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட், ஷூட்டிங் போகும் அளவுக்கு ரெடியாகயிருக்கிறது என்றும் டைரக்ஷன் டீமில் சொல்கிறார்கள். ஹீரோயின், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இன்றைய அரசியல் சூழல், கமலை மையம்கொண்டுள்ள அரசியல், ஷங்கரின் தொழில்நுட்பம், தயாரிப்பாளர் ரத்னத்தின் பிரமாண்டம்... இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கையில் ‘இந்தியன்-2’ நிச்சயம் வேறு லெவலில் இருக்கும் என்று நம்பலாம்.