Published:Updated:

இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு வருவாரா எஸ்.பி.பி..?

எம்.குணா
இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு வருவாரா எஸ்.பி.பி..?
இளையராஜா இசைநிகழ்ச்சிக்கு வருவாரா எஸ்.பி.பி..?

‘பல நூறு கி.மீட்டர் பயணம்? மனச்சோர்வு?... என்ன செய்வீர்கள் என்று சாமான்யர்கள், விஐபி-கள் யாரிடம் கேட்டாலும் பெரும்பாலானவர்களின் பதில் ‘இளையராஜாவின் இசை கேட்போம்’ என்பதாகத்தான் இருக்கும். அப்படி இசையாகவே வாழ்ந்துகொண்டு இருக்கும் ‘இசைஞானி’ இளையராஜாவின் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் சமீப நாள்களாக வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் பலரின் முகங்கள் தென்படுகின்றன. ஏன் இந்த வெளிநாட்டு கலைஞர்களின் வருகை என்று விசாரித்தோம்...

இளையராஜா வரும் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் பிரமாண்டமான இசைக்கச்சேரி ஒன்றை நடத்துகிறார். தெலுங்கு திரையுலகமே திரண்டுவந்து கலந்துகொள்ள உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்கமுழுக்க தெலுங்குப் பாடல்கள் மட்டுமே பாடப்படுகின்றன. இளையராஜாவின் இசையில் தெலுங்கு மொழியில் வந்து பிரபலமான பாடல்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தெலுங்கு சினிமாவின் முக்கியப் பிரபலங்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்களின் தேர்வுக்கு இளையராஜா விருப்பம் தெரிவித்தபின் அந்தப் பாடல்களுக்கான ரிகர்சல் கடந்த சில நாள்களாக சென்னையில் நடந்து வருகிறது. 

லைவ் ஆர்க்கெஸ்ட்ராவுடன் நடைபெறும் இந்த இசை விழாவில் இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களைத் தனக்குப் பிடித்த ஹங்கேரி நாட்டிலிருந்து வரவழைத்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி இசைக்கு இந்த ஹங்கேரி இசைக்கலைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ராதான் உறுதுணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த ஹங்கேரி கலைஞர்கள்மீது இளையராஜாவுக்கு அலாதியான ப்ரியம் உண்டு. ஆண்கள், பெண்கள் என்று ஹங்கேரியிலிருந்து 27 இசைக்கலைஞர்கள் கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள், தங்குவதற்கும் சென்னையைச் சுற்றிப்பார்க்க விரும்பினால் அதற்கான வாகன ஏற்பாடுகள், விருப்பமான உணவு வகைகள் சாப்பிட... என்று அந்தக் குழுவுக்கான உதவியாளர்களை நியமித்துள்ளனர். 

பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இருவருமே தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இளையராஜாவின் பிரசித்தி பெற்ற பாடல்கள் பலவற்றை இந்த இருவரும்தான் அதிகமாகப் பாடியிருக்கிறார்கள். கடந்தகாலத்தில் அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசைக்கச்சேரி நடத்தியபோது 'ஆர்க்கெஸ்ட்ராவில் என் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது' என்று பாலசுப்ரமணியத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. 'வாடா... போடா...' என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு உரிமைகொண்டிருந்த இவர்கள் அந்த அமெரிக்க நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் பேசிக்கொண்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இந்தநிலையில் காலத்தால் அழியாத தெலுங்குப் பாடல்கள் பாடப்பட உள்ள இந்த ஹைதராபாத் இசை நிகழ்ச்சிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் வருவாரா மாட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக இளையராஜா தரப்பில் விசாரித்தோம். ''ஹைதராபாத்தில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கலந்து கொள்ளவில்லை. தெலுங்கில் அவர் பாடிய அனைத்துப் பாடல்களையும் மேடையில் சீனியர் பாடகர் மனோ பாடப் போகிறார். எஸ்.பி.பி-யை போலவே அவரது தங்கை எஸ்.பி.சைலஜாவும் கலந்து கொள்ளவில்லை'' என்றனர். 1952-ல் தமிழ் சினிமாவில் பாடத்தொடங்கிய எஸ். ஜானகிக்குத் தற்போது 80 வயதுக்கும் மேல் ஆகிறது. தற்போது ஜானகி, சினிமா மற்றும் கச்சேரியில் பாடுவதை நிறுத்திக்கொண்ட நிலையில், திரையுலக நண்பர்கள் சிலரின் வற்புறுத்தலால் ஓரிரு படங்களில் மட்டும் பாடினார். 

எஸ். ஜானகியின் தீவிர ரசிகர் மனுமேனன் என்பவர் மைசூரில் பெரிய தொழிலதிபர். இவர் கடந்த 28-ம் தேதி மைசூரில் உள்ள கங்கோத்ரி திறந்தவெளியில் எஸ்.ஜானகியின் இசைக்கச்சேரியை நடத்தினார். அப்போது தொடர்ந்து நான்கு மணிநேரம் பாடல்களைப் பாடிய ஜானகி, ஒருசில பாடல்களைப் பாடும்போது பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து மேடையிலேயே உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் சிந்தினார். மைசூர் மஹாராஜா மற்றும் கன்னட நட்சத்திரங்கள் கலந்துகொண்ட அந்த மேடையில் பேசிய ஜானகி, “இதுதான் என் கடைசிக் கச்சேரி. இனிமேல் சினிமாவிலும் சரி, இசைக்கச்சேரியிலும் பாடமாட்டேன்'' என்று பகிரங்மாக அறிவித்தார். அதைக்கேட்டு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இந்தச் சூழ்நிலையில் ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் எஸ்.ஜானகி கலந்து கொள்வாரா? என்கிற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. அதையும் இளையராஜா தரப்பிடம் கேட்டோம். ''மைசூர் நிகழ்ச்சி குறித்து நாங்களும் கேள்விப்பட்டோம். ஹைதராபாத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெலுங்குப் பாடல்கள் பாடுவதற்கு ஜானகி அம்மாவை ராஜாசார் அழைத்தார். நிச்சயம் பாட வருவதாக ஜானகியம்மா ஒப்புக்கொண்டார்” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். ராஜாவின் அன்புக்காகத் தனது உறுதியை விட்டுக்கொடுத்துள்ளார் ஜானகி என்றுதான் சொல்லவேண்டும். 

ஆனாலும், கடைசிநிமிடம் மாற்றங்கள் ஏற்பட்டு எஸ்.பி.பி மேடையில் தோன்றி சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று இசை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.