Published:Updated:

'வில்லன்' காப்பியே 'தூம்-3’... அஜித்துக்கு டெடிகேட்டான பாடல்! - வில்லன் பட சுவாரஸ்யங்கள் #15YearsOfVillain

உ. சுதர்சன் காந்தி.
'வில்லன்' காப்பியே 'தூம்-3’... அஜித்துக்கு டெடிகேட்டான பாடல்! - வில்லன் பட சுவாரஸ்யங்கள் #15YearsOfVillain
'வில்லன்' காப்பியே 'தூம்-3’... அஜித்துக்கு டெடிகேட்டான பாடல்! - வில்லன் பட சுவாரஸ்யங்கள் #15YearsOfVillain

'எனக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை... மன்னிப்பு' என பன்ச் பேசி, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கடத்தி பாரபட்சம் பாராமல் தண்டனை கொடுக்கும் ஒரு குழுவின் (Anti Corruption Force) தலைவராக விஜயகாந்த் மெர்சல் காட்டிய படம் 'ரமணா'. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'தல' அஜித் பஸ் கண்டக்டராகவும், மாற்றுத்திறனாளியாகவும் டூயல் ரோலில் அசத்தி நல்ல கதையம்சத்தோடு நகர்ந்து கமர்ஷியல் ஹிட் அடித்த படம் 'வில்லன்'. படம் வெளியாகி பல வருடங்கள் கழித்தும் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சின் வெப்பம் ஆறாமல் இருப்பதுதான் ஒரு படத்தின் முழுமையான வெற்றி. அந்த வெற்றியைப் பெற்ற இந்த இரு படங்களும் வெளிவந்து இன்றுடன் 15 வருடம் நிறைவடைகிறன என்பதுதான் கொண்டாட வேண்டிய ஒன்று. இந்த இரு படங்களுக்கும் தொடர்புடைய ஒருவரைச் சந்தித்து அதில் பயணித்த அனுபவத்தைப் பற்றி கேட்டோம். அந்த ஒருவர்,  'ரமணா' படத்தின் இரண்டாம் ஹீரோ என்று சொல்லும் அளவிற்குத் தன்னுடைய கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக நடித்த நடிகரும், 'வில்லன்' படத்தின் கதை ஆசிரியருமான யூகி சேது. 

முதலில் அவரைத் தொடர்புகொண்ட போது, போனை எடுக்காதவர், எஸ்.எம்.எஸ் அனுப்பி தெளிவுபடுத்திய பிறகு லைனுக்கு வந்தார். 'தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தாலே அந்த எண்ணை இதோட சேருங்க, இந்த எண்ணை அதோட சேருங்கனு தொல்லை பண்றாங்க. அதான் யாருன்னு தெரிஞ்சுக்க எஸ்.எம்.எஸ் பண்ணேன்' என்று சிரித்தபடியே வரவேற்றவர், லைட்ஸ் எல்லாம் ஓகேவா, ஃப்ரேம் கரெக்ட்டா இருக்கானு மிகுந்த ஆர்வத்துடன் பேட்டிக்கு அமர்ந்தார். 'நீங்க கேள்வியே கேட்காதீங்க. நானே எல்லாமே சொல்லிடுறேன்'னு சொல்லி அரம்பித்தவர், "என்னைக்கோ வர்ற குறிஞ்சி மலர்கூட தெளிவா இருக்கும். ஆனா, நான் ரெண்டு வருஷம் ஃபீல்டுல இருப்பேன். அப்புறம் அஞ்சு வருஷம் காணாமல் போயிடுவேன். இப்படி திட்டுத்திட்டா இருக்கக்கூடிய என் வாழ்க்கையில சில தீர்க்கமான நாள்கள் உண்டு. அதுல ஒண்ணுதான், நவம்பர் 4, 2002. 'ரமணா' படத்துல செகண்ட் ஹீரோவாகவும், இதுக்கு முன்னாடி கதை எழுதியிருந்தாலும் என் பெயர் டைட்டில் கார்டுல வந்ததில்லை. ஆனா, 'வில்லன்' படத்துல வந்துச்சு. தமிழ் சினிமாவுல என்னோட ரோல் ஹீரோ, வில்லன், காமெடியன் இந்த மூணும் இருக்கக் கூடாது. நாலாவது கேட்டகரி 'தி அதர் மேன்'னா இருக்கணும். ஜோக்கர் கார்டு மாதிரி எல்லாத்துலேயும் செட் ஆகணும். முத்துராமன் சாரும் நாகேஷ் சாரும் அப்போ பண்ணிருப்பாங்க. இப்போ அதை விஜய் சேதுபதி பண்ணிக்கிட்டு இருக்கார். அவர் ஹீரோவாகியும், இப்போ அதர் ரோல் பண்றார். அவங்களுக்குப் புதுப்புது சப்ஜெக்ட்டுகள் வர்ற வாய்ப்பிருக்கு. எனக்கு அப்படி 'தி அதர் மேன்' ரோல் கிடைச்சது 'ரமணா'படத்துலதான். அதுக்கு முருகதாஸுக்கு நன்றி கடன் பட்டிருக்கேன்" 

ரமணா :

"எனக்கு எப்போதாவது சிறந்த நடிகர் விருது கிடைச்சா அதை முதல்ல முருகதாஸுக்கும் ரெண்டாவதா கமல் சாருக்கும்தான் டெடிகேட் பண்ணுவேன். ஏன்னா, முதல்ல அந்த ரோல் மாதவன் பண்ணவேண்டியதா இருந்துச்சு. அப்போ நான் டி.வியில பிஸியா இருந்தேன். என்னை யோசிச்சு கதை எழுதுனதுக்காகத்தான் மேலே சொன்ன 'டெடிகேட்'. தவிர, அந்த நேரத்துல எனக்குக் கிடைச்ச 12 வாய்ப்புகளை நான் தவிர்த்துட்டேன். காரணம், நான் நினைக்கிற 'தி அதர் மேன்' கேரக்டர் எதுலேயும் இல்லை. அதேமாதிரிதான் 'ரமணா'வையும் தவிர்க்கிறதா இருந்தேன். முருகதாஸ் என்கிட்ட கதை கேளுங்கனு சொன்ன பிறகு, ஒரு கதாசிரியரோட கதையை ஒரு நடிகனா சரியில்லைனு சொல்ல எனக்குக் கூச்சமா இருக்குன்னு சொன்னேன். அதுக்கு அவர், 'நீங்க எனக்கு சீனியர். நீங்க சொன்னா நான் ஏத்துக்குறேன்'னு சொன்ன விதம் பிடிச்சது. வீட்டுக்கு அவர் ஸ்கிரிப்டைக் கையில எடுத்துட்டு வந்ததைப் பார்த்தவுடனேயே, எனக்கு அவர் மேல மரியாதை அதிகமாகிடுச்சு. 'கதை அருமையா இருக்கு. பெரிய படம். நீங்க பெரிய ஹீரோவைத்தானே என் கேரக்டருக்கு டிக் பண்ணியிருக்கணும், நான் ஏன்?'னு கேட்டேன். அதுக்கு, 'மாதவன் நடிச்சா முடிவு என்னவாகும்னு தெரிஞ்சுடும். நீங்க பண்ணா சஸ்பென்ஸ் இருக்கும். சீனியர் அதிகாரிகளால அடக்கப்படுற நீங்க ஜெயிக்கணும், விஜயகாந்தும் தோத்துடக் கூடாதுங்கிற டென்ஷன் ஆடியன்ஸுக்கு இருந்துக்கிட்டே இருக்கணும், அதுக்கு நீங்கதான் செட் ஆவிங்க'னு சொன்னார். அதாவது, 'தி அதர் மேன்'னு சொல்லாம சொன்னார். 'ஐயோ, இதுக்குத்தாங்க காத்துக்கிட்டு இருந்தேன்'னு உடனே ஓகே சொல்லிட்டேன். என் வாழ்க்கையில கேட்டவுடனேயே ஓகே சொன்ன படம் இதுதான். படத்துல முதல் 15 நாள் என்னை வெச்சுதான் ஷூட்டிங் நடந்தது. உடனே விஜய்காந்த் போன்ல 'படத்துல நான் இருக்கேனா, இல்லையா'ன்னே கேட்டுட்டார். அந்தளவுக்கு தீவிரமா முதல் ஷெட்யூல் இருந்தது. படத்துல முதல் ஷாட் நான் சலூன் கடையில ஷேவிங் பண்ண உட்கார்ந்து இருக்கிற சீன்தான். அன்னைக்குதான் என் வாழ்க்கையிலே முதல்முறையா ஷேவ் பண்ணேன்.

முருகதாஸ் எப்பவுமே ஆள்காட்டி விரலை நீட்டிட்டுதான் சீன் சொல்லித் தருவார். எனக்குப் பேசும்போது எங்கேயாவது ஹியூமர் வந்திடும். உடனே அவர், 'இது வேணாம் சார். சிரிச்சிடுவாங்க'னு சொல்லிக்கிட்டே இருப்பார். எனக்காக ஒரு டேக், அவருக்காக ஒரு டேக்னு எல்லாம் ஷூட் போகும். சில நேரம் நான் ஸ்கிரிப்ட்ல இல்லாத டயலாக்கைப் பேசிடுவேன். அதுக்கு நல்ல ஸ்பேஸ் கொடுப்பார். நடிகர்களைக் கம்ஃபோர்ட் ஜோன்ல வெச்சு நிறைய விட்டுத்தருவார். முருகதாஸ் எந்த இடத்துல எந்த மாதிரியான டயலாக் வெச்சா கைத்தட்டல் வரும்னு ரொம்ப அழகா கணிக்கிறதுல கெட்டிக்காரர். அதேபோல, விஜயகாந்த் ரயில்வே ஸ்டேஷன்ல சரண்டர் ஆகுற சீன் பத்தி ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணும்போது, நான் சொன்னேன், 'ரமணாங்கிற ஒரு அமானுஷ்ய என்ட்ரிக்கு முன்னாடி ஒரு நாய் உடம்பை சிலுப்பிட்டு வரும். அந்த இடமே அமைதியா இருக்கணும். அந்த அமைதியை உடைக்குற மாதிரி ஒரு கொசு சத்தத்தை வெச்சுக்கலாம்'னு சொன்னேன். அதேபோல, 'உங்க கேரக்டரை எப்படி முடிக்கலாம்'னு என்கிட்ட கேட்டார். அதுக்கு நான், 'என்ன புரமோஷன் கிடைச்சுதா'ன்னு கேட்கட்டும், 'இல்லை சார். நான் ரிசைன் பண்ணிட்டேன். உங்களைப் பத்தி முன்னாடியே தெரிஞ்சுருந்தா, உங்க ஏ.சி.ஃப்ல நானும் இருந்திருப்பேன்னு சொல்றேன்'னு சொன்ன ஐடியாவையும் அப்படியே படத்துல வெச்சு நான் கேட்ட ஸ்பேஸைவிட அதிகமாகவே கொடுத்தார். அதுக்குத்தான் நான் விருதை அவருக்கு டெடிகேட் பண்ணுவேன்னு சொன்னேன். விஜயகாந்த் சாருக்கும் எனக்கும் சேர்ந்து வர்ற மாதிரி ரெண்டு நாள்தான் ஷூட்டிங் இருந்துச்சு. அப்போ அவர்கிட்ட, 'சார் என் நண்பர் சிவக்குமார்னு ஒரு ஜோசியர் இருக்கார். அவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார், விஜயகாந்த்தான் அரசியலுக்கு வருவார்'னு சொல்றார் சார்'னு சொன்னேன். அப்போ அவர் அரசியலுக்கு வருவாரானு அவருக்கே தெரியாது. அப்புறம், படம் ரிலீஸ் ஆகி ரொம்ப நாள் கழிச்சு அவர் அரசியலுக்கு வர்ற ப்ளான்ல இருந்தப்போ, என்கிட்ட அந்த ஜோசியர் நம்பரை வாங்கினார்" என்றவர் 'வில்லன்'பற்றி பேச ஆரம்பித்தார் அதே சுறுசுறுப்புடன்.

வில்லன் :

'வில்லன்' படத்தோட வேர் 'பஞ்சதந்திரம்'தான். கிரேஸி மோகன் படத்துக்கு டயலாக் எழுதிட்டு அமெரிக்கா போயிட்டார்.  இதை ஒரு குழுவா உட்கார்ந்து பேசி நடிச்சோம். இந்தக் கூட்டத்துல கமல் நிறைய ஸ்பேஸ் கொடுப்பார். அதைப் பயன்படுத்தி நான் நிறைய ஸ்பாட் டயலாக்குகள் பேசியிருப்பேன். இதைப் பார்த்துட்டு, 'சின்னச் சின்னதா பண்றதுக்கு ஒரு முழு படமாவே எழுதிக் கொடுங்க, அஜித்தை வெச்சுப் படம் பண்ணப்போறேன்'னு சொன்னார்ர் ரவிக்குமார் . ரவிக்குமார், பாரதிராஜா, மகேந்திரன் இவங்கெல்லாம் கதாசிரியருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. இந்தப் படத்துக்கு முன்னாடி வந்த சில படங்கள் அஜித்துக்கு வெற்றிப்படமா அமையலை. அதனால இந்தப் படத்தை ஹிட் படமா கொடுக்கிற கட்டாயம் இருந்தது. கதைக்கு பெர்ஃபார்மென்ஸ், ஆக்‌ஷன்னு ரெண்டுவிதமா நடிக்கணும். அதுக்காகத்தான் ரெண்டு அஜித். வழக்கமா டூயல் ரோல்ல ஒருத்தன் ஸ்ட்ராங், ஒருத்தன் வீக்குனுதான் தமிழ்ப் படங்கள்ல காட்டுவாங்க. இதுல என்ன வித்தியாசம் பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான், எனக்கு ஒரு சின்ன ஸ்பார்க் 'ரெயின்மேன்' மூலமா கிடைச்சது. அதுல இருந்து நான் கற்பனை செஞ்சு, ரெண்டு பேர்ல ஒருத்தன் மனநலம் பாதிக்கப்பட்டவன், ஒருத்தன் நல்லா இருக்க ஹீரோ, தன்னுடைய தம்பிக்காக மட்டும் பண்ணாம, அதுமாதிரி இருக்கிற நிறைய பேருக்காக அவன் கொள்ளை அடிச்சு உதவி பண்றான், இவனுக்கு ஒரு பிரச்னைன்னா, மனநலம் பாதிக்கப்பட்டவனும் வந்து இவனுக்கு உதவுறான்னு பல விஷயங்களைச் சேர்த்து 'வில்லன்' படத்தை உருவாக்கினோம். இதுதான் 'தூம்-3' படத்தோட மையமும். ஆனா, ஏன் தயாரிப்பாளார் சண்டை போடலைனு தெரிலை. 

முதல்முறையா 200 கோடி வசூல் தாண்டிய படம் 'தூம்-3'. அது 'காபி கேட் ஆஃப் வில்லன்' எனப் பல வெப்சைட்ல இருக்கு. மக்களுக்காக கருணாஸ் கேரக்டரைச் சேர்த்தேன். கருணாஸை பாலாவுக்கு அறிமுகப்படுத்தியது நான்தான். ஒரு ஷோவுக்காக கருணாஸை மிமிக்ரி பண்ணச்சொன்னேன். அதைப் பார்த்துட்டுதான் பாலா கேட்டார். நான் எழுதி, ஹீரோவா நடிக்க ப்ளான் பண்ணி வெச்சு, டிராப் ஆன படத்துக்கு வித்யாசாகர் மியூசிக் பண்ணியிருந்தார். அதுல இருந்த 'அடிச்சா நெத்தியடியால் அடிப்பேன்...' பாட்டை இந்தப் படத்துக்குப் பயன்படுத்தினோம். படம் வெளியாகி நல்ல ஹிட். சிறந்த கதைக்கான விருதும் வாங்குனேன். என்னோட ரெண்டு முக்கியமான படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகி வெற்றி அடைஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. எனக்கு வாழ்க்கையில மறக்கமுடியாத முக்கியமான நாள் இது" என்று பூரித்தபடி பேசினார். 

தொடர்ந்து படங்களுக்குக் கதை எழுதாதற்கு காரணம் :

"இதுக்கு நிறைய படங்கள் கதை எழுத வாய்ப்பு வந்துச்சு. ஆனா, மத்த மொழிகள்ல கதையாசிரியருக்குக் கொடுக்குற முக்கியத்துவம், மரியாதை, சம்பளம் எதுவும் தமிழ் சினிமாவுல இல்லை. போன் பண்ணி 'யூகி, ஒரு கதை டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். ஃப்ரீயா இருந்தா வாங்களேன்'னு கூப்பிடுறாங்க. 'இதுவே, படத்துக்கு ரஹ்மானை புக் பண்ணிட்டு இளையராஜாவுக்குப் போன் பண்ணி ஃப்ரீயா இருந்தா வாங்களேன்னு சொல்லுவீங்களா?'னு கேட்பேன். ஒரு கதையை ரசிச்சு எழுதுறவன் ஒருத்தனா இருக்கணும். திரைக்கதையை உங்க விருப்பத்துக்குத் தகுந்தமாதிரி ஆல்டர் பண்ணிக்கலாம். சத்ததுக்குத்தான் இப்போ மரியாதை அதிகமா இருக்கு. முன்னாடியெல்லாம் எடிட்டிங்ல பாத்துக்கலாம், ரீ-ரெக்கார்டிங்ல பாத்துக்கலாம்னு சொல்வாங்க. இப்போ பப்ளிசிட்டி, ப்ரோமோஷன்ல பாத்துக்கலாம்னு சொல்றாங்க. சத்தம் போட்டு மக்களை முதல் மூணு நாள் உட்கார வெச்சுட்டாப் போதும்டானு நினைக்குறாங்க. இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை"

'சூது கவ்வும்' நான் பண்ணவேண்டியதுதான்! 

'நலன் குமரசாமி 'சூது கவ்வும்' படத்தை உங்களுக்காகத்தான் எழுதினார் சார். நான் பண்றேன்னு நான்தான் வாங்கிக்கிட்டேன் சார்'னு விஜய் சேதுபதி சொன்னார். அந்த மாதிரியான படங்களுக்காகத்தான் நான் காத்துட்டு இருக்கேன். 'அடுத்த முறையாவது கதையை முதல்ல என்கிட்ட சொல்லுங்க'னு நலன் குமரசாமிகிட்ட சொன்னேன். எப்படியோ, எதோ ஒரு 'சேது' படத்துல நடிச்சா சூப்பர்னு சொல்லிட்டேன். 'ரமணா' வந்த நேரத்துல விஜய் சேதுபதி இருந்திருந்தா, 'கண்டிப்பா நான் பண்றேன்'னு அவர்தான் நடிச்சிருப்பார்.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் ரீ என்ட்ரி :

"நான் பண்ண ஆராய்ச்சியே, ஒரு படத்தை எடுக்குறதுக்கு முன்னாடியே அந்தப் படம் ஓடுமா, ஓடாதானு கணிக்கிறதுக்குத்தான். அதை வெச்சுதான் நான் நடிக்க கதைகளைத் தேர்ந்தெடுக்குறேன். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைப் பொறுத்தவரை நான் நடிச்சதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு, இந்த டைரக்டர் என்ன வேணாலும் பண்ணி படத்தை ஓடவெச்சிடுவார்னு தோணுச்சு. அப்புறம், சிம்ரன்கூட நடிக்கிற மாதிரி இருந்தனால ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, எனக்கு சிம்ரனை ரொம்பப் பிடிக்கும்" என்று ஜாலி கேலியாகப் பேசியவர் 'சீக்கிரம் வர்றேன்' எனச் சியர்ஸ் காட்டுகிறார்.