Published:Updated:

தவறு செய்துவிட்டாய் தேவசேனா... இவ்வளவு அழகும் திறமையும் ஆகுமா?! #HBDAnushkaShetty

கார்க்கிபவா
தவறு செய்துவிட்டாய் தேவசேனா... இவ்வளவு அழகும் திறமையும் ஆகுமா?! #HBDAnushkaShetty
தவறு செய்துவிட்டாய் தேவசேனா... இவ்வளவு அழகும் திறமையும் ஆகுமா?! #HBDAnushkaShetty

எனக்கு தெலுங்கு படங்கள் பார்க்கும் பழக்கம் அப்போது இல்லை. அருந்ததி படம் தமிழில் டப் ஆகி வெளியாக, ஏதோ ஓர் ஆர்வத்தில் தியேட்டருக்குள் நுழைந்துவிட்டேன். அந்த நாளை மறக்க முடியாது. அதற்கு அடுத்த ஒரு மாதம் யூடியூபே கதி. அனுஷ்கா நடித்தப் படங்களின் காட்சிகளைத் தேடித்தேடி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அனுஷ்கா நடித்துகொண்டிருந்தவை பெரும்பாலும் கிளாமர் ரோல்களே. ஆனால், அதையெல்லாம் தாண்டி அனுஷ்காவிடம் ரசிக்க ஏதோ இருந்தது. அவரது வீடியோக்களை விட்டுவிட்டு அவரைப் பற்றி தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அனுஷ்காவின் பூர்வீகம் கர்நாடகம். ஐஷ்வர்யா ராயைத் தந்த அதே மங்களூர் நகரம்தான் அனுஷ்காவையும் தந்திருக்கிறது. யோகா டீச்சரான அனுஷ்காவுக்கு சினிமா மீதெல்லாம் ஆர்வமில்லை. எல்லோருக்கும் தெரிந்தது போல, யோகாதான் அவருக்கு எல்லாமே. வீட்டில் பிரஷர். அதனால், சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின்... தொட்டதெல்லாம் ஹிட் தான்.

அனுஷ்காவின் வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரைப் பற்றிய எல்லாச் செய்திகளிலும் காணப்படும் பொதுவான விஷயம் அதுதான். எந்த வேலை செய்தாலும் அல்லது எந்த வேலை கொடுக்கப்பட்டாலும் அதை முழு ஈடுபாட்டோடு செய்வார். அது நடனமோ, யோகாவோ, நடிப்போ, பேட்டியோ. எதையுமே “ஜஸ்க் லைக் தட்” டீல் செய்வது ஸ்வீட்டிக்குப் பிடிக்காத விஷயம்; அல்லது தெரியாத விஷயம்.

ஆந்திர இண்டஸ்ட்ரியே இவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட்ட சமயம். எந்தப் பெரிய ஹீரோ படமும் கைவசமில்லை. அனுஷ்கா கவலைப்படவில்லை. ”வந்தா நடிப்பேன்... இல்லைன்னா ஒதுங்குவேன்” என்றார் தில்லாக. தேவதைகள் கஷ்டப்பட்டால் பூமி தாங்குமா? அப்போது வந்த வாய்ப்புதான் அருந்ததி. அதன்பின், அனுஷ்காவை எதிர்ப்பது புத்திசாலித்தனமல்ல; அரவணைப்பதே சிறந்தது என இறங்கி வந்தது டோலிவுட்.

இளமையான நடிகையாக இருந்தபோது அவரைத் தேடி நல்ல ரோல்கள் அதிகம் வரவில்லை. ஆனால், கடைசி 5 ஆண்டாக ஸ்வீட்டியின் ரோல்களில் அவ்வளவு வெரைட்டி. இஞ்சி இடுப்பழகிக்காக 17 கிலோ ஏற்றினார். 99% இந்திய நடிகர்களே அதையெல்லாம் செய்ய மாட்டார்கள். அடுத்த சில மாதங்களில் பாகுபலி ஷூட்டிங். மீண்டும் எடை குறைக்க வேண்டும். அதையும் செய்தார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவைப் பார்க்க முடியாமல் அவரது ரசிகர்கள் பொங்க, அடுத்த பாகத்தில் கிடைத்தது போனஸ். குதிரையில் ஏறி வாள் சுற்றும் அனுஷ்காவின் நேர்த்தியை இன்னொரு நடிகரிடம் கூட பார்க்க முடியாது.

இதுதான் அனுஷ்கா என அவரை வரையறைக்கவே முடியாது. வானம் படத்தில் பாலியில் தொழிலாளி வேடம். அந்தப் படத்தின் ஒரே ஒரு போஸ்டர் போதும். அவரது கதாபாத்திரம் என்னவென புரிந்துகொள்ள முடியும். திறமையும், குழந்தைத்தனம் கொண்ட அந்த அழகும், மற்றவர்களிடம் அவர் காட்டும் அன்பும்தான் அனுஷ்கா. ஒரு ஹீரோவை அண்ணனாகப் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. ஆனால், ஒரு நடிகையை அவளது அழகைத் தாண்டி Admire செய்யும், inspire ஆகும் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். அனுஷ்காவுக்கு மட்டுமே வாய்த்த வரம் அது. அதற்கு 100% தகுதியானவர் ஸ்வீட்டி.

இதோ இன்று அவரது பிறந்த நாள். வழக்கமாக, பிறந்த நாளன்று நடிகைகள் வெளியிடும் படங்கள் எப்படியிருக்கும்? ஆனால், அனுஷ்கா நடிக்கும் பாகமதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாருங்கள். அதுதான் அனுஷ்கா. அதுதான் ஸ்வீட்டி.

ஒன்று மட்டும் நிச்சயம். அனுஷ்காவுக்கு வயதாகலாம். ஆனால், அவர் அழகு மட்டும் குறையவே குறையாது. அனுஷ்காவின் அழகு என்பது கண்களிலும் மூக்கிலும் இருப்பதல்ல; இதயத்தில் இருப்பது. அவரது எண்ணங்களில் இருப்பது. வேலையில் அவர் காட்டும் அர்ப்பணிப்பில் இருப்பது.

லவ் யூ ஸ்வீட்டி.