Published:Updated:

'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17
'பூஜை’ கே.ஆர்.விஜயா, ‘தரிசனம்’ ஜெயலலிதா... எம்.ஜி.ஆரின் கடவுள் பக்தி..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-17

எம்.ஜி.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தபோது கழுத்தில் தாமரை மணி மாலை அணிந்து கதருடுத்தி கோயிலுக்குப்  போய்வந்தார். தன் இறை நம்பிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தார். ‘ஆண்டவன் வழிவிடுவான்’, ‘ஆண்டவனுக்குத் தெரியும்’ என்று எதற்கெடுத்தாலும் ஆண்டவன், ஆண்டவன் என்று இவர் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ‘ஆண்டவன்’ என்றே பட்டப்பெயர் வைத்துவிட்டனர். படப்பிடிப்புத்தளத்தில், ‘ஆண்டவன் எங்கேய்யா? ஆண்டவனுக்கு கார் போய்விட்டதா’ என்று எம்.ஜி.ஆரை ‘ஆண்டவன்’ என்ற பட்டப்பெயரால் குறிப்பிட்டு பேசினார். தன்னை ஆண்டவனே என்று அழைத்துப் பேசுவோரிடம் எம்.ஜி.ஆரும் பதிலுக்கு ‘ஆண்டவன்’ என்றே அவர்களை அழைத்துப் பேசினார். ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பின்பு ஆண்டவனே என்று அவர் மற்றவர்களை அழைத்துப் பேசுவதில்லை. மற்றவர்கள் பழைய பழக்கத்தின் காரணமாக எம்.ஜி.ஆரை ‘ஆண்டவனே’ என்று அழைப்பதை நிறுத்தவில்லை. ஆண்டவன் என்ற பெயரால் எம்.ஜி.ஆரை இவர்கள் தொடர்ந்து அழைத்து வந்தனர்.

திமுக-வில் எம்.ஜி.ஆர்

அண்ணாவினால் ஈர்க்கப்பட்டு எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்த பின்பு கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார். ஒருமுறை திருப்பதிக்குப் போய் கடவுளைப் பார்க்க முடியாத காரணத்தால் இனி கோயிலுக்குப் போவதில்லை என்று முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார். இதனால் இவர் தெய்வமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக திமுகவினர் அகமகிழ்ந்தனர். அதே வேளையில் திமுகவில் அப்போது இருந்துவந்த சிவாஜிகணேசன் தன் குடும்பத்தாருடன் திருப்பதிக்குப் போய் வந்ததால் திமுகவினர் அவரை கொள்கை விரோதியாகப் பார்த்தனர். ‘திருப்பதி கணேசா, திரும்பிப் போ’ எனச் சொல்லி திமுகவிலிருந்து அனுப்பிவிட்டனர். ஆக இப்போது திமுக உறுப்பினரான எம்.ஜி.ஆர் கோயில் போகும் பழக்கம் இல்லாதவர். திரைப்படங்களிலும் சாமி படங்களைக் கூட வணங்காதவர் என்ற எண்ணம் அவரது கட்சியினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஜெயலலிதாவின் ஆளுமை

பத்மினி, சரோஜாதேவி உடன் ஜோடியாக நடிக்கும்போது எம்.ஜி.ஆர் கோயிலுக்குப் போனதாகவோ வீட்டில் தெய்வ வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவோ (1953இல் ‘ஜெனோவா’ படத்தில் அவர் பைபிள் வாசிக்கும் காட்சி இருந்தது.) காட்சிகள் வைக்கப்படவில்லை. நான் ஏன் பிறந்தேன் படத்தில் கே.ஆர்.விஜயா சுமங்கலி பூஜை செய்து அழும்போது பூஜை முடியும் தருணத்தில் எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிடுவார். விஜயா தன் கையில் எடுத்திருந்த மலர்களை எம்.ஜி.ஆரின் கால்களில் போட்டு வணங்குவார்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் முருகன் கோயிலில் நின்று இருவரும் சாமி கும்பிடுவதாகக் காட்சிகள் இடம்பெற்றன. ‘உங்களுக்கு தெய்வ நம்பிக்கை இருக்கும்போது அதை வெளிக்காட்ட தயங்குவது ஏன்? என்ற வினாவே எம்.ஜி.ஆரை கோயில் காட்சிகளில் நடிக்க வைத்தது என்று துணிந்து கூறலாம். அதுவரைஅவர் மருதமலைக்குப் போனது, நம்பியாருக்கு சபரிமலையாத்திரையின் போது முதல் மாலை அனுப்பியது என ஆன்மிக ஆர்வம் இருந்தாலும் அவர் அதைத் தன் படங்களில் வெளிப்படுத்தவில்லை.

காஞ்சித்தலைவன் படத்தில் எம்.ஜி.ஆர் போருக்குப் புறப்படும் முன்பு கொற்றவையை வழிபடுவதை நேரடியாகக் காட்டாமல் கோயில் வாயிலிலிருந்து அவர் தேரில் கிளம்பிச் செல்வதாகக் காட்டுவார்கள். அதைப் போல மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் அவர் கோயில் திருப்பணிகளுக்குப் பணம் வழங்கியதை கோபுரங்களின் மீது தங்கக் காசுகள் கொட்டுவதாக ‘டபுள் எக்ஸ்போஷர்’ முறையில் காட்டியிருப்பார்கள். ஆனால், ஜெயலலிதாவுடன் நடிக்கும் படங்களில் மட்டுமே இருவரும் ஜோடியாகக் கோயிலில் இருப்பார்கள்.

என் அண்ணன் படத்தில்…

குதிரை வண்டிக்காரனான எம்.ஜி.ஆரும் புல்லுக்கட்டுக்காரியான ஜெயலலிதாவும் முருகன் கோயிலில் நின்று கைகூப்பி கண்மூடி சாமி கும்பிடுவார்கள். பின்பு கண்ணைத் திறந்து பார்த்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் நீ என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டதற்கு ஜெயலலிதா நமக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகக் கூறுவார். ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் இதே கேள்வியைக் கேட்டதற்கு எம்.ஜி.ஆர், தன் தங்கைக்குச் சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று சாமியிடம் வேண்டியதாகக் கூறுவார். இறைவனிடம் பக்தியோடு வேண்டிக்கொண்டால் அந்தக் காரியம் நடக்கும் என்ற நம்பிக்கையை இந்தப் படக்காட்சியில் எம்.ஜி.ஆர் பகிரங்கமாக தெரிவித்திருப்பார்.

நம்நாடு படத்தில்

எம்.ஜி.ஆர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று ஜெயலலிதா முருகன் கோயிலில் போய் வேண்டிக்கொள்வார். பின்பு எம்.ஜி.ஆரை வில்லன்கள் அடித்துப் போட்டதும் அதே கோயிலில் இருவரும் தஞ்சம் புகுந்த போது பூசாரி அவர்களை வெளியேறும்படி சொல்லிவிடுவார். அப்போது எம்.ஜி.ஆர் ஆண்டவன் இப்போது கோயிலை விட்டு வெளியேறி விட்டான் என்று விரக்தியுடன் ஒரு வசனம் பேசுவார்.

தனிப்பிறவி படத்தில் ‘முருகனாக’

முருகனின் தீவிர பக்தரான தேவர், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த படம் தனிப்பிறவி. இருவரும் இவர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு கஷ்டப்பட்ட காலங்களில் எம்.ஜி.ஆர் ஆண்டவனே என்று எதற்கெடுத்தாலும் சொல்வதைப் போல தேவர் முருகா என்று சொல்வார். மற்றவர்களைக் கூட முருகா என்றுதான் அழைப்பார். கோபம் வந்தால் என்ன முருகா இப்படிச் செய்கிறாய் என்று கேவலமாக வசை மொழிகளைப் பயன்படுத்தித் திட்டுவார். இவரது தனிப்பிறவிப் படத்தில் ஒரு பாடல்காட்சியில் எம்.ஜி.ஆர் முருகன் வேடமிட்டார். ஜெயலலிதா வள்ளி, தெய்வானை என்ற இருவராகவும் வந்தார். அவர் ஏகாதிபத்திய உணர்வு கொண்டவர் அல்லவா? எனவே வள்ளி, தெய்வானை என இரண்டு வேடங்களையும் அவரே ஏற்று நடித்தார்.

சிவபெருமானாக எம்.ஜி.ஆர்

அதிமுக தொடங்கிய பின்பும் எம்.ஜி.ஆர் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ளவராகவே இருந்தார். உழைக்கும் கரங்கள் படத்தில் போலிச்சாமியார் ஒருவர் இளம்பெண்களை மதுகலந்த தண்ணீரை தீர்த்தம் எனக் கொடுத்து மயங்க வைத்து கெடுப்பதை நேரடியாகக் காட்டி, அந்தச் சாமியாரை காலால் எட்டி உதைத்து ‘துவம்சம்’ செய்திருப்பார்.

இப்படத்தில் சிவபெருமான வேடத்தில் ‘ருத்ரதாண்டவமும்’ ஆடியிருப்பார். சிவபெருமானே நேரில் வந்து வில்லன்களை உதைத்து அடிப்பதாக அக்காட்சி அமைந்திருக்கும். மதுரைவீரனுக்கு பூஜை போடும் பாடல்காட்சியும் இப்படத்தில் இடம்பெறும்.

ஸ்ரீமுருகன் (1946) படத்தில் மாலதி பார்வதியாகவும் நடித்தார். அவர்கள் ஆடிய சிவதாண்டவக் காட்சி அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டது. அந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பார்க்க மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அந்த பிலிம் சேதம் அடைந்ததால் அவருக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.

எம்.ஜி.ஆரின் மூகாம்பிகை வழிபாடு

1995ல் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையும் வரை அவர் கோயிலுக்குச் சென்றதாகவோ பூஜை, யாகங்கள் நடத்தியதாகவோ பெரியளவில் தகவல்கள் இல்லை. தோல்விக்குப் பின்பு அவர் பெயரில் பிரத்யிங்கரா தேவி கோயிலிலும் மற்றும் சத்ரு சங்கார பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன. இதன் விளைவாகவோ என்னவோ அவருக்கு அடுத்த தேர்தலில் வெற்றியும் கிடைத்தது. ஆனால் எம்.ஜி.ஆர் பதவியில் இருக்கும்போதே தன் அண்ணனின் சம்பந்தியும் இயக்குநருமான சங்கருடன் சேர்ந்து தன் தாய் சொல்லிச் சென்றிருந்த கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வழிபாடு செய்தார். தனக்கு நாடோடி மன்னன் படவெற்றிவிழாவில் மதுரையில் வைத்து மதுரை முத்துவால் வழங்கப்பட்ட நூறு பவுன் தங்கவாளையும் மூகாம்பிகைக்குக் காணிக்கையாக வழங்கினார். அந்த வாளை இப்போது மூலஸ்தான விக்ரகத்தின் அருகில் காணலாம். அந்தக் கோயிலில் அவர் ஆதி சங்கரரின் தியான அறைக்குள் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய்வந்ததை அறிந்த அதிமுகவினர் அந்தக் கோயிலுக்குப் போய்வரத் தொடங்கினர். தமிழில் மூகாம்பிகை பற்றிய திரைப்படங்கள் வரத் தொடங்கின. அடிமட்டத் தொண்டர்களும் மாதந்தோறும் பணம் செலுத்தி மைசூர் சாமுண்டீஸ்வரி, கொல்லூர் மூகாம்பிகை என ‘டூர்’ போய்வரத் தொடங்கினர். ஆன்மிக சிந்தனையும் ஸ்தல யாத்திரைகளும் தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் புத்துயிர் பெற்றன. கோவிலுக்குப் போவது முட்டாள்தனம் என்ற எண்ணம் பரவியிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் மூகாம்பிகை பக்தி தெய்வநம்பிக்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

எம்.ஜி.ஆரின் உடல்நலம் தேற பிரார்த்தனை

1952ல் திமுக பெற்ற முதல் வெற்றி முதல் 1972ல் அதிமுக பெற்ற வெற்றி வரை தமிழகத்தில் இந்துக்களின் தெய்வ நம்பிக்கை ஓர் இருண்ட காலத்தில்தான் இருந்துவந்தது. நாத்திகர் வெற்றி பெற்றால் ஆத்திகர் தோல்வி அடைவது சகஜம் தானே. திமுகவினர் உச்சித் திலகத்தை ரத்தம் என்று கேலி செய்வர். திருமண் இட்டால் நூற்றிப்பதினொன்று என்று நையாண்டி செய்வர். விபூதி பூசினால் பட்டை என்றும் சாம்பல் என்றும் ஏளனம் செய்வர்.

கலைஞர் கருணாநிதியே நேரடியாக இந்தக் கேலியில் இறங்கியதால் இந்துமத அடையாளங்கள் பெரிதும் விமர்சனத்துக்குள்ளாயின. இந்த நிலை எம்.ஜி.ஆர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றதும் மாறியது. மேலும் எம்.ஜி.ஆர் உடல்நலமின்றி அமெரிக்காவில் இருந்த போது அவரது ரசிகர்கள் நடத்திய வழிபாடுகள் தமிழகத்தில் மாபெரும் ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்தின.

ஆன்மிகப் புரட்சி

எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார். அவரது பிணத்தை வைத்து ஓட்டுக் கேட்கிறார்கள் என்று 1984ல் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். மக்கள் இரண்டுமுறை எமன் கையில் இருந்து பிழைத்த எம்.ஜி.ஆர் இந்த முறையும் பிழைத்து விடவேண்டும் என்று மனமுருக வேண்டினர். பால்குடம் எடுத்தனர். காவடி எடுத்தனர். பல கிலோமீட்டர் தொலைவுக்கு அங்கப்பிரதட்சணம் செய்தபடி கோவில்களுக்குப் போய் சாமி கும்பிட்டனர்.

எம்.ஜி.ஆர்தான் ‘வாத்தியார்’ ஆச்சே, அவர் தான் சாகப்பிழைக்கக் கிடந்தால் அனைத்துத் தரப்பினரும் அவரவர் முறைப்படி கடவுளை வணங்கி பிரார்த்திக்க வேண்டும் என்று ‘ஒளிவிளக்கு’ படத்தில் எடுத்துக்காட்டியிருந்தார் அல்லவா! அவர் காட்டிய வழியில் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் முழு நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினர். முதலில் இந்துமதத்தின் அடித்தட்டு மக்கள் ஆரம்பித்து வைத்த நாட்டுப்புறத் தெய்வவழிபாடு மெள்ள மெள்ள பெருங்கோவில்களில் பூஜைகளாக பரிணமித்தன.

கோயில்களில் நடந்த தெய்வ வழிபாடுகள் தேவாலயம், மசூதி என விரிவு பெறத் தொடங்கின. தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும் அவர்களுக்கு ஏற்ற முறையில் முழு விசுவாசத்துடன் கடவுளை வணங்கினர். இவர்களின் விசுவாசம் இவர்களைக் காத்தது. எம்.ஜி.ஆர் உயிரோடு திரும்பினார். பேச்சில் ஏற்பட்ட குறையை மக்கள் பொருட்படுத்தவில்லை. பிழைத்து வந்ததே போதும் என்று மனமகிழ்ந்தனர்.

அப்போது பல இடங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. ஒரு கோயிலில் பார்த்து மற்றொரு கோயில் ஒரு தேவாலயத்தைப் பார்த்து மற்றொரு தேவாலயம் என மக்கள் கூடி வழிபாடு செய்தனர். மக்களிடம் பெரிய அளவில் தெய்வ நம்பிக்கை ஏற்பட்டிருப்பதைப் பார்த்து கலைஞர் கருணாநிதியும் ஆத்திகவாதியாகி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் ‘பிரார்த்தனையால் எம்.ஜி.ஆர் பிழைத்துவிடுவார் என்றால் நானும் பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது இந்துமக்களின் ஓட்டுக்காக நடத்திய சாகசச் செயல் என்றாலும் அப்போது ஏற்பட்ட ஆன்மிகப் புரட்சியில் கலைஞரும் பங்கேற்றார் என்பதை மறுக்க இயலாது.