Published:Updated:

என்.எஸ்.கே முதல் சோ வரை... எம்.ஜி.ஆர் கடந்துவந்த காமெடியன்ஸ்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-20

முனைவர் இராஜேஸ்வரி செல்லையா
என்.எஸ்.கே முதல் சோ வரை... எம்.ஜி.ஆர் கடந்துவந்த காமெடியன்ஸ்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-20
என்.எஸ்.கே முதல் சோ வரை... எம்.ஜி.ஆர் கடந்துவந்த காமெடியன்ஸ்..! - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-20

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று அறிவுரை கூறிய எம் ஜி ஆர் தன் படங்களில் சிரிப்பை ஒரு குறிக்கோளோடு பயன்படுத்தினார். தன் இமேஜை உயர்த்தவும் தக்க வைக்கவும் ஏற்றபடி நகைச்சுவைக் காட்சிகளையும் நகைச்சுவை நடிகர்களையும் எம்.ஜி.ஆர் தேர்வுசெய்தார். மெயின் கதையோடு சேர்த்து ஒரு துணைக்கதையாகவே நகைச்சுவை நடிகர்களின் காதலும் தொழிலும் இதர செயல்முறைகளும் அமைந்திருக்கும். ஆனால், அவை லட்சிய வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்காது. கேலிக்கூத்தாக இருக்கும் அல்லது சாமான்ய மனிதர்களின் இயலாமையை காட்டுவதாக இருக்கும். சில படங்களில் எம் ஜி ஆர் வரும் காட்சிகளில் அவர் கூடவே இந்த நகைச்சுவை நடிகர்களும்  இடம் பெறுவார்கள். அப்போது எம் ஜி ஆரின் செயல் வேகத்தை உயர்த்திக் காட்டும் விளம்பரதாரர்களாக செயல்படுவார்கள். எம் ஜி ஆர் வெற்றி ஃபார்முலாவில் நகைச்சுவையின் அவசியம் என்ன,  அவர் தன் படங்களில் தானே நகைச்சுவையாக நடித்தது, மற்ற நடிகர்கள் நகைச்சுவைக்காக நடித்தது, நகைச்சுவை நடிகர்களுடன் அவருக்கு இருந்த தொடர்பு  ஆகிய நான்கு விஷயங்களை இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

காமெடியனின் அவசியம் 

எம்.ஜி.ஆரை ஹீரோவாக ஹைலைட் செய்யும் இருவரில் காமெடியன்களின் பங்கு முக்கியமானது. ஒரு ஹீரோ (எம் ஜி ஆர்) தன்னை நல்லவன் என்றும் வல்லவன் என்றும் இரண்டு விஷயங்களைக் காட்ட நினைக்கிறார். இதற்கு எதிர்மறையாக கெட்டவன் என்பவனை காட்ட வில்லனும் வலிமையற்றவன் என்பதைக்  காட்ட காமெடியனும் தேவைப்படுகிறார்கள். ஹீரோ நல்லவன்; வில்லன் கெட்டவன். இங்கு நன்மை தீமை என்பது ஒரு முரண்பட்ட அமைப்பு. கதாநாயகன் உடல் வலிமையும் அறிவுதிட்பமும் உடையவன். காமெடியன் மெலிந்த உடலும் விவரம் தெரியாமலும் இருப்பவன். இது மற்றொரு முரண் அமைப்பாகும். இவற்றை ஆராய்ச்சியாளர்கள் இருமை எதிர்வுகள் binary oppositions  என்பர். ஆக கதாநாயகனின் உடல் வலிமையையும் அறிவு திட்பத்தையும் உயர்த்திக் காட்ட காமெடியன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது.

எம்.ஜி.ஆரும் ஜானகியும் இணைந்து நடித்த மருத நாட்டு இளவரசியில் எம்.ஜி.ஆர் ஓர் ஏழை கிராமத்தான். அவருக்கு பணக்கார்களே பிடிக்காது.  அவரை வீரனாக்க அவருக்கு ஜானகி வாள் சண்டை கற்றுக்கொடுப்பார். அடிமைப்பெண் படத்திலும் வேங்கையனுக்கு சண்டைப் பயிற்சி அளித்து ஜெயலலிதா வீரனாக்குவார். உழைக்கும் கரங்கள் படத்தில் வரும் தேவதாசி குலத்தைச் சேர்ந்த பவானி எம்.ஜி.ஆரை பார்த்து ‘’ரங்கா நீ நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி அவருக்கு உடல்வலிமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவார். வீரம் என்பது உடல்வலிமையுடன் தொடர்புடையதாகவே எம்.ஜி.ஆர் படங்களில் (பல்லாண்டு வாழ்க தவிர) காட்டப்பட்டுள்ளது.

பலமற்ற காமெடியன்

எம்.ஜி.ஆர் படத்தில் நாகேஷ், தேங்காய் சீனிவாசன் போன்ற காமெடி நடிகர்கள் வலிமையற்றவராகவே சித்திரிக்கப்பட்டனர். பரிசு படத்தில் நாகேஷ் எம்.ஜி.ஆரின் கை “ஆம்சை’’ அமுக்கி பார்ப்பார். “எனக்கும் உப்புமா’’ என்று தன் ஒல்லி கையை காட்டுவார். அதற்கு எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே “ஆமாம் கிண்டினால் ஒனக்கு உப்புமா’’ என்று சாப்பிடும் உணவை கூறி கேலி செய்வார். மேலும், பல படங்களில் நாகேஷை தூக்கி பொத்தென்று தரையில் போடுவார். தேங்காய் சீனிவாசன் நவரத்தினம் படத்தில் ஏதாவது தள்ளுங்க என்று எம் ஜி ஆரிடம் டிப்ஸ் கேட்பார். எம் ஜி ஆர் “நான் தள்ளினால் தாங்கமாட்ட’’ என்று பதில் கூறுவார். சும்மா தள்ளுங்க என்று தேங்காய் கூறியதும் எம்.ஜி.ஆர் தள்ளுவார் தேங்காய் பொத்தென்று தரையில் விழுவார். இவ்வாறு காமெடியன்கள் உடல்வலிமையற்றவர்களாகவே சித்திரிக்கப்படுவர்.

காமெடியனும் வில்லனும்

ஒரு முறை எம்.ஆர். ராதாவிடம் அவரை புக் பண்ணும்போது ஏன் கதாபாத்திரத்தைக் கேட்காமல் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர், “என்ன கொடுக்கப் போகிறார்கள் ஒன்று வில்லன் அல்லது காமெடியன்’’ என்றாராம். எம்.ஜி.ஆர் படங்களில் அவர் இந்த ரோல்களில் நிறைய நடித்திருக்கிறார். வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் இவரை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்குவார் 

ஒரு பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் காதருகில் வந்து ஒரு பாட்டி ‘இந்த நம்பியார் பயகிட்ட ஜாக்கிரதையா இருப்பா’ என்று எச்சரித்தார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆருடன் வில்லத்தனமாக மோதி நடித்த நம்பியார், ஆரம்பத்தில் அவர் படங்களில் காமெடியனாகவே நடித்தார். மந்திரிகுமாரியில் அவர் ராஜகுருவாக மொட்டையடித்து வளைந்த அடர்த்தியான புருவத்துடன் வந்து பயமுறுத்திய பிறகு அவர் முழு நேர வில்லனாகிவிட்டார். 

வில்லத்தனமான காமெடியன்

நம்பியாரைப் போல இல்லாமல் எம்.ஆர்.ராதா காமெடி செய்துகொண்டே வில்லனாக நடிப்பார். ஆங்கிலச் சொற்களை அதிகம் பயன்படுத்துவார். பகுத்தறிவையும் ஆங்கில பழக்க வழக்கங்களையும் உயர்த்தும் வகையில் இங்குள்ள சில மூட நம்பிக்கைகளை நையாண்டி செய்வார். இவருடைய வில்லத்தனமான காமெடியை மக்கள் வெகுவாக ரசித்தனர். எம்.ஆர். ராதா பெரியாரின் தொண்டர் என்பதால் அவர் நாடகங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் பல வகையிலும் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர் அஞ்சாமல் தன் பகுத்தறிவு பிரசார நாடகங்களை வெற்றிகரமாக நடத்திவிடுவார். எம்.ஆர். ராதாவின் துணிச்சலைக் கண்டு எம்.ஜி.ஆர் அவரை மிகவும் மதித்தார். அவர் முன்னால் உட்காரக்கூட மாட்டார். அண்ணே என்றுதான் அவரை அழைப்பார். எம்.ஆர். ராதாவுக்கும் எம்.ஜி.ஆரை வெகுவாக பிடித்திருந்தது, மற்ற முன்னணி நடிகர்கள் அவர் நடிப்பதை மக்கள் பார்க்க விடாமல் அவர் முகம் மறையும்படி வந்து நின்றுகொள்கின்றனர் என்று எம்.ஆர். ராதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். எம்.ஜி. ஆர். படங்களில் அவருக்கு இந்தத் தொல்லை கிடையாது. சுதந்திரமாக பெரியாரிய சிந்தனைகளையும் பரப்பினார்.

சிந்தனை சிரிப்பு வழங்கிய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

மதுரை வீரன், ராஜா தேசிங்கு, சக்கரவர்த்தி திருமகள் போன்ற படங்களில் கலைவாணரும் அவர் மனைவி டி.ஏ. மதுரமும் நகைச்சுவை நடிப்பில் ஜொலித்தனர். கலைவாணரிடம் இருந்து எம்.ஜி.ஆர் எளிமையும் கொடைப்பண்பையும் கற்றுக்கொண்டார். அறுந்த செருப்பை உதறிவிட்டு வந்த எம்.ஜி.ஆர் கலைவாணரிடம் தனக்கு புதுச்செருப்பு வாங்கவேண்டும் என்றார். அப்போது கலைவாணர் அவரது அறுந்த செருப்புகளைக் கொண்டுவந்து கொடுத்தார். அறுந்துபோன செருப்பின் வார் தைக்கப்பட்டிருந்தது. கலைவாணர் எம்.ஜி.ஆருக்கு எளிமையான வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்தார். தன் கணவரைத் தவிர வேறு யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத டி ஏ மதுரம், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு காரணமாக தன் கணவர் சிறையில் இருந்தபோது வழக்கு செலவுக்காக தயாரிக்கப்பட்ட பைத்தியக்காரன் படத்தில் எம். ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தார்.

நாயகன் நாயகியரின் தோழர்களாக காமெடியன்கள்

குலதெய்வம் ராஜகோபால் மன்னாதி மன்னன் படத்தில் நகைச்சுவை வேடத்தில் ஜி. சகுந்தலாவுடன் ஜோடியாக நடித்தார். இப்படத்தில் அச்சம் என்பது மடமையடா பாட்டில் எம்.ஜி.ஆர் கூட வரும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் எம்.ஜி.ஆரும் பத்மினியும் நாட்டிய கலா மேதைகள். எம்.ஜி.ஆரின் நண்பனாக வரும் ராஜகோபாலுக்கு நடனம் ஆடத் தெரியாது. இவர் நடனம் கற்றுக்கொண்டால்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று சகுந்தலா நிபந்தனை விதிப்பார். இவர் கை கால்களில் கயிறு கட்டிக்கொண்டு தை தை என்று ஆட்டுவது சிரிப்பாக இருக்கும். இதுவே காமெடியனை கதாநாயகனிடம் இருந்து குறைத்துக் காட்டுவதற்கான பாத்திரப்படைப்பு முறை ஆகும்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் இளைஞரான டனால் தங்கவேலு செருப்பு தைக்கும் கிழவனாக வருவார். அந்தப் படத்தில் சாரங்கபாணி எம்.என். ராஜத்துடன் சேர்ந்து மெயின் காமெடியனாக நடித்திருப்பார். தங்கவேலு, ராஜா தேசிங்கில் ராகினியுடன் ஜோடியாக நடித்திருப்பார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நண்பனாக நாகேஷும் ஜெயலலிதாவுக்கு தோழியாக மாதவியும் நடித்தனர். 

சந்திரபாபு

எம்.ஜி.ஆருடன் பிற்காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கிய சந்திரபாபு ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராக இருந்தார். அவரது நாடோடி மன்னன், குலேபகாவலி போன்ற வெற்றிப் படங்களில் இடம்பெற்றிருந்தார். சிவாஜியைவிட ஒரு படத்தில் அதிக சம்பளம் கேட்டு வாங்கினார். நாகேஷ் கால்ஷீட்டை சொதப்பியபோது அவருக்குப் பதிலாக சோ பின்பு தேங்காய் சீனிவாசன், ஐசரி வேலன் போன்ற சிரிப்பு நடிகர்களை ஒப்பந்தம் செய்தார். எம்.ஜி.ஆர் தன் படங்கள் வெற்றிபெற  மற்ற எவரையும் நம்பி இருக்கவில்லை அடுத்த தகுதியான கலைஞர்களைத் தெரிவு செய்தார். பின்பு தன் தவற்றை உணர்ந்து திரும்பி வந்தபோது அவர்களை மன்னித்து வாய்ப்பு தரும் மனோபாவமும் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. யாரையும் அவர் தன் ஜென்ம விரோதியாக கருதவில்லை. தன் வெற்றிப் பாதையில் வரும் தடைக்கற்களை மீண்டும் வராமல் அப்புறப்படுத்துவதில் மட்டும் அவர் முனைப்பாக இருந்தார்.

சந்திரபாபுவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும் விரக்தியும் அவமானமும் பொது வாழ்க்கையில் அகராதியாகப் பேசத் தூண்டியது. எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை ஒதுக்கியதும் திரையுலகமே இவரை ஒதுக்கிவிட்டது.  சந்திரபாபு சிவாஜியிடம் போய் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை.  சந்திரபாபு மிகவும் கஷ்டப்படுவதை அறிந்து பின்பு எம்.ஜி.ஆரே அடிமைப்பெண் படத்தில் வாய்ப்பளித்தார். 

நாகேஷ்

நாகேஷ் முதன்முதலில் நாடகத்தில் நடித்தபோது ஐயோ வயிற்று வலி என்ற ஒரே வசனம் மட்டும் பேசி நடித்தார். அந்த நாடகத்துக்கு தலைமை வகித்த எம்.ஜி.ஆர் ஒரே வசனத்தை விதவிதமாக பேசி நடித்த நாகேஷை தன் பாராட்டுரையில் குறிப்பிட்டார். நேரில் அழைத்து பாராட்டினார். நாகேஷ் பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தார். குறிப்பாக தேவர் படங்களில் நாகேஷுக்கு ஒரு பாட்டும் வைக்கப்பட்டது.  நாகேஷ், மனோரமா ஜோடி மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அதற்கு முன்பு என்.எஸ்.கே – டி ஏ மதுரம், தங்கவேலு - சரோஜா , சி டி ராஜகாந்தம் என்று கணவன் மனைவியர் காமெடி நடிப்பில் கலக்கி வந்தனர்.  

நாகேஷின் ஒல்லி உடல்வாகு காமெடி நடிப்புக்கு ஏற்றதாக அமைந்தது. சில வருடங்கள் இவரை தன் படங்களில் இருந்து விலக்கி வைத்த எம் ஜி ஆர், மீண்டும் தன் படங்களில் வாய்ப்பளித்தார்.  உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்புக்குச் சென்ற 25 பேர் அடங்கிய குழுவில் நாகேஷும் இடம்பெற்றிருந்தார். அக்குழு ஹாங்காங் வந்தபோது நாகேஷின் பிறந்தநாள் வந்தது. அன்று எம்.ஜி.ஆர் பெரிய விருந்து ஏற்பாடு செய்து ஒன்பது வைரக்கல் பதித்த மோதிரம் ஒன்றை நாகேஷுக்கு பரிசளித்தார். மீனவ நண்பன், உரிமைக்குரல் போன்ற எம்.ஜி.ஆரின் பிற்கால படங்களிலும்  நாகேஷ் இடம்பெற்றார்.

தேங்காய் சீனிவாசன் 

கும்பகோணம் தேர்தல் கூட்டத்தில் அறிமுகமான தேங்காய் சீனிவாசன், எம் ஜி ஆரிடம் மிகுந்த அன்பு உடையவர். ரிக்‌ஷாக்காரன் படத்தில் இயக்குநரிடம் தனக்கு இரு பாடல்காட்சி வைக்கும்படி சீனிவாசன்  கூறினார். அதை அவர் அப்படியே எம்.ஜி.ஆரிடம் கூற, எம் ஜி ஆர் சிரித்த படியே சாங் வேணுமா வச்சுடலாம் என்றார். எம்.ஜி.ஆர் ஏதோ கேலியாக கூறுவதாக சீனிவாசன்  நினைத்தார். ஆனால் அந்தப் படத்தில் ‘’பம்பை உடுக்கை கட்டி பரிவட்டம் மேலே கட்டி’’ என்ற பாடலில் தன்னோடு பாட்டு முழுவதும் சேர்ந்து ஆடும் வாய்ப்பைத் தந்தார்.  எம்.ஜி. ஆர் முதலமைச்சரான பிறகு சீனிவாசன் சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக எம்.ஜி.ஆரிடம் கூறினார். எம்.ஜி.ஆர் இப்போது தயாரிப்பு லாபமாக இல்லை வேண்டாம் என்று அறிவுறுத்தினார். சீனிவாசன் அதைக் காதில் வாங்காமல் சிவாஜியை வைத்து ’கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை எடுத்து கையை சுட்டுக் கொண்டார். இதை சீனிவாசன் எம்.ஜி.ஆரிடம் சொன்னதும் ‘’உனக்கு பட்டால் தான் புத்தி வரும், போ’’ என்று சொல்லிவிட்டார். தேங்காய் சீனிவாசன் போனதும் அவரை நினைத்து எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார். உடனே தன் பணியாள் ஒருவரிடம் 25 லட்ச ரூபாயைக் கொடுத்து தேங்காய் சீனிவாசனிடம் கொடுக்கும்படி அனுப்பினார். 

ஐசரி வேலன் 

எம்.ஜி.ஆர் படங்களில் ஆரம்பம் முதல் அவர் வரும் காட்சிகளில் மட்டும் நடித்துவந்த பழம்பெரும் நடிகரும் அவரது மெய்க்காவலரில் ஒருவருமான திருப்பதிசாமியின் மருமகன் ஐசரி வேலன் ஆவார். இவர் மகன் ஐசரி கணேஷ் தன் தந்தை வேலனின் பெயரால் வேல்ஸ் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளார். எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு ரிவால்வரை மஞ்சள் பையில் வைத்து கையில் சுற்றி தொங்கவிட்டபடி திருப்பதிசாமி அவருடன் அத்தளத்தில் இருப்பார். எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க வருபவர்களின் பெயர்ப்பட்டியல் திருப்பதிசாமியிடமே இருந்தது. ரகசிய போலீசு 115 படத்தில் அம்முக்குட்டி புஷ்பமாலாவின் சிங்கப்பூர் மச்சானாகவும் படகோட்டியில் முதல் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு அப்பாவாகவும் திருப்பதிசாமி நடித்திருப்பார். ஐசரி வேலன் நேற்று இன்று நாளை, இதயக்கனி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சோ

சோ சட்டத்துறையிலும் நாடகத் துறையிலும் வல்லவர். அரசியல் விமர்சகர். அவர் பார்மகளே பார் படத்தில் காமெடியனாக அறிமுகம் ஆனார். எம்.ஜி.ஆருடன் எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, ஒளிவிளக்கு, அடிமைப்பெண், என் அண்ணன் போன்ற வெற்றிப் படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆரை நேரிலும் தன் துக்ளக் பத்திரிகையிலும் அதிகமாக விமர்சித்துள்ளார். அதே சமயம் எம்.ஜி.ஆரின் கொடைப்பண்பை அதிகமாகப் பாராட்டி போற்றியவரும் இவரே. இவரது முட்டை விழியும் ஒல்லி உடம்பும்  பார்ப்பவருக்கு சிரிப்பை வரவழைத்தன. 

நகைச்சுவையும் எம் ஜி ஆரும்

சபாஷ் மாப்பிள்ளை என்ற படம் நடிகை மாலினியின் சொந்தத் தயாரிப்பு. இப்படத்தில் எம்.ஜி.ஆர் காமெடி கதாநாயகனாகவே நடித்தார். இதன் படப்பிடிப்பு பம்பாயில் நடந்தது. அதுபோல அறிஞர் அண்ணா எழுதிய நல்லவன் வாழ்வான் கதையில்  கதாநாயகன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பான். அந்தப் படத்தில் நடித்த எம்.ஜி.ஆரும் படம் முழுக்க சிரித்துக்கொண்டே இருப்பார். அதன் க்ளைமேக்சில் எம்.ஆர். ராதாவை ஒரு சண்டைக் காட்சியில் தன்னுடன் நடிக்கவைத்தார். தண்ணீரில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் நடித்ததனால் எம்.ஆர். ராதாவுக்கு சளி, இருமல் தொந்தரவு வந்தது. எம்.ஜி.ஆர் இதைக் கேட்டதும் மிகவும் கவலைப்பட்டார். எம்.ஆர். ராதா சுகமாகும் வரை தினமும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்குப் போய் அவருடன் உட்கார்ந்திருப்பார். அவர்களின் நட்புகுறித்து விளக்கும்போது ராதாரவி இதனை குறிப்பிட்டார்.

நாடோடியில் எம் ஜி ஆரின் மைமிங்

ஒரு நடிகனுக்கு சவாலாக இருப்பது காமெடி என்பதை அறிந்த எம்.ஜி.ஆர். தான் நடித்த நாடோடி படத்தில் சார்லி சாப்ளின் போல மைமிங் செய்தார். சரோஜாதேவியும் எம்.ஜி.ஆரும் ஒரு மேசை முன் உட்கார்ந்து மேலை நாட்டு உணவு வகைகளை உண்பது போல உடல்மொழியால் மட்டுமே நடித்தனர்.

எம்.ஜி.ஆர் சங்கே முழங்கு படத்தில் தன் தங்கைக்கு பெண் வீட்டாராகவும் மாப்பிள்ளை வீட்டாராகவும் இருந்து திருமணப்பேச்சு நடத்தும் காட்சியில் அவர் ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறிப் பேசி நடித்து நகைச்சுவையை வழங்குவார். வாய்க்குள் வெற்றிலையை அதக்கி வைத்திருப்பதுபோல அவருடைய பேச்சும் அங்கவஸ்திரத்தை சேலை போல போர்த்திக்கொண்டு நடிக்கும் அவரது உடல்மொழியும் ஆண் பெண் என மாறி வரும் முக பாவனைகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி வெகு பொருத்தமாக அமைந்திருக்கும். அவருடைய நகைச்சுவை நடிப்புத் திறனுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.  

மாறு வேடங்களில் நகைச்சுவை

எம்.ஜி.ஆர் மாறு வேடங்களில் வரும் காட்சிகளைத் தன் இயல்பான கதாநாயகன் நடிப்புக்கு அப்பாற்பட்ட நடிப்புத் திறனைக் காட்ட பயன்படுத்துவார். மலைக்கள்ளன் மற்றும் நீரும் நெருப்பும் படங்களில் அவர் ஒரு சீனாக்காரனாக வரும் காட்சிகளில் அவர் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்தபடி நடந்து வருவதும் அவரது சீனமொழி பேச்சும் தலையாட்டுவதும் உடல் அசைப்பதும் என அனைத்து பாவனைகளும் சிரிப்பை வரவழைக்கும். குமரிக்கோட்டம் படத்தில் நூறு ரூபாய்க்காக அவர் அசோகனை சிரிக்க வைக்க முயலும் காட்சியில் பஃபூனை போல நடித்திருப்பார். இவ்வாறு மாறு வேடங்களில் பல காட்சிகளில் எம்.ஜி.ஆர். தன் காமெடி நடிப்புத் திறனை ஓரளவு வெளிப்படுத்தி மனநிறைவு பெற்றார். 

யாருக்கு மகிழ்ச்சி?

எம்.ஜி.ஆர் தன் முழு திறமையையும் காட்டும் வகையில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தால் அதிகபட்சம் அவர் ஒரு சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், மக்கள் திலகமாகியிருக்க முடியாது. தான் ஆசைப்பட்டபடி நடித்து மகிழ்ச்சியடைவதை விட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை தம் குறிக்கோளாக கொண்டிருந்ததால் மக்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கக்கூடிய கதாபாத்திரத்தை மட்டும் தேர்வுசெய்து நடித்தார்.  திரையுலகில் மக்கள் திலகமாக இருந்து  மக்கள் தலைவராக உயர்ந்தார். எனவே, இன்றைக்கும் மக்கள் அவரை மறக்காமல் தம் நினைவு செல்களில் பாதுகாத்து வைத்துள்ளனர்.