Published:Updated:

“பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க!” உற்சாகத்தில் தொகுப்பாளர் அஸார் #VikatanExclusive

“பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க!” உற்சாகத்தில் தொகுப்பாளர் அஸார் #VikatanExclusive
“பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க!” உற்சாகத்தில் தொகுப்பாளர் அஸார் #VikatanExclusive

"மிமிக்ரி ஆர்டிஸ்டா தொடங்கி, ஹீரோவா உயர்ந்திருக்கேன். நிறைய வலிகளையும் வேதனைகளையும் கடந்திருந்தாலும் மக்கள் காட்டும் அன்பால் அளவில்லா மகிழ்ச்சிதான்" - உற்சாகமாகப் பேசுகிறார் அஸார். 'ஆதித்யா' சேனல் தொகுப்பாளராகப் புகழ்பெற்றவர். தற்போது, விஜய் டி.வி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் போட்டியாளராகக் கலக்கிவருகிறார். 

"பிரபலமான ஆங்கர் நீங்க. திடீர்னு ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராகிட்டீங்களே. ஏன் இந்த முடிவு?" 

"மீடியாவை விட்டுட்டு வேறு ஃபீல்டுக்குப் போனால்தானே அது பெரிய மாற்றமாகவும் முடிவாகவும் இருக்கும். நான் தொடர்ந்து மீடியாவில்தானே இருக்கேன். இதில் எங்கே இருந்தாலும் நான் ஒரு பர்ஃபாமர். மக்களை மகிழ்விக்கிறது என் வேலை. மக்கள் விரும்பும் வகையில் கால மாற்றத்துக்கு ஏற்ப, என்னை அப்டேட் பண்ணிக்கிறேன். என் திறமையை அதிகமா வெளிக்காட்ட 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் போட்டியாளரா இறங்கியிருக்கேன். இதில் சேர்ந்ததுமே பல நண்பர்கள், 'ஏன் இந்த முடிவு'னு கேட்டாங்க. 'இதே கேள்வியை நாலு வாரம் கழிச்சு கேளுங்க'னு சொன்னேன். இப்போ, ‘முன்னைவிட உனக்கு மக்கள்கிட்ட ரீச் அதிகமாகியிருக்கு'னு சொல்றாங்க.'' 

“உங்க முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்க...” 

“ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ நான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட். அதாவது, அடிக்கடி திட்டு வாங்கி வகுப்புக்கு வெளியே நிற்கும் அவுட் ஸ்டாண்டிங். 'நீயெல்லாம் என்னவாகப் போறியோ!'னு பலரும் கிண்டல் பண்ணியிருக்காங்க. காலேஜ் முடிச்சதும் படிப்புக்குச் சம்பந்தமே இல்லாம நிறைய வேலைகளைச் செஞ்சேன். ஒரு மியூசியம்ல கேமரா ரூம் கண்காணிப்பாளர், ஃபர்னிச்சர் ஷோரூம் சேல்ஸ்மேன், பல மொபைல் கம்பெனி ஷோரூம் சேல்ஸ்மேன் என வொர்க் லிஸ்ட் பெருசு.'' 

“மீடியா ஆர்வம் எப்போது ஏற்பட்டுச்சு?” 

“என் சித்தப்பா பல நடிகர்களின் குரல்ல பேசுறதைப் பார்த்து எனக்கும் அஞ்சாவது படிக்கிறப்போ மிமிக்ரி ஆர்வம் வந்துச்சு. அதன்படி ‘டொனால்டு டக்’ கார்ட்டூன் நிகழ்ச்சியின் டக் மாதிரி பேசிப் பழகினேன். அதைக் கேட்டு என் அம்மா ரொம்பவே பாராட்டினாங்க. ஒருமுறை ஸ்கூல் நிகழ்ச்சியில் சிங்கம் வாய்ஸ்ல மிமிக்ரி பண்ணி கைத்தட்டல் வாங்கினேன். ‘படிப்புல கிடைக்காத கைதட்டல் மிமிக்ரி மூலமா கிடைக்குதே'னு தொடர்ந்து புதுப் புது வாய்ஸில் பேச ஆரம்பிச்சேன். சேனல்ல மிமிக்ரி அல்லது காமெடிப் பண்ணி மக்களை ரசிக்கவைக்க முடிவெடுத்தேன்." 

“முதல் மீடியா வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?” 

“காலேஜ் படிக்கிறப்போ சன் டி.வி 'இளமை புதுமை' உள்ளிட்ட ஓபனிங் கிடைக்கும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துப்பேன். கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் சேனல்கள் மற்றும் பண்பலைகளின் ஆடிஸன்ல கலந்துக்கிட்டேன். பெருசா எந்த வாய்ப்பும் அமையலை. அப்போ, கலைஞர் டி.வி-யில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் சேது அண்ணா, ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டிருந்தார். அதில், தற்போதைய பிரபல தொகுப்பாளர்களான ஆதவன், விக்னேஷ் கார்த்திக் மற்றும் நான் தினமும் நேயர்களா கால் பண்ணி மிமிக்ரிப் பண்ணுவோம். சேது அண்ணா எங்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவார். ஒருகட்டத்துல வீஜே ஆதவன் நண்பரானார். அவர்மூலம் விஜய் டிவி 'அது இது எது' நிகழ்ச்சியின் சில எபிசோட்ல பர்ஃபார்ம் பண்ணும் வாய்ப்பு கிடைச்சுது. அடுத்தடுத்து பல சேனல்கள் மற்றும் பண்பலைகளில் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன்.'' 

"இப்போ விஜய் டிவியில் போட்டியாளரானதால், ஆதித்யா சேனலை எவ்ளோ மிஸ் பண்றீங்க?" 

"பல சேனல்களில் வொர்க் பண்ணிட்டு, ஆதித்யா சேனல்ல தொகுப்பாளரானேன். 'ஆதித்யா அஸார்'னு சொல்ற அளவுக்குப் பெயர் கிடைச்சது. 'தல தளபதி', 'வர்லாம் வா', 'டபுள் கலாட்டா' உள்ளிட்ட நிறைய நிகழ்ச்சிகள். சில சினிமாப் பாடல்களுக்கு உல்டாவா பர்ஃபார்ம் பண்ணினது, ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், பேட்டிகள் என அஞ்சரை வருஷமா, என் வீட்டுக்கு அடுத்து அதிகமா நான் சென்டிமென்ட்டா இருந்தது ஆதித்யா சேனல்லதான். 'கலக்கப்போவது யாரு' போட்டியாளரா சேரும் முடிவெடுத்து, சன் நெட்வொர்க் வேலையை ரிசைன் பண்ணினேன். அவங்க 'ஆல் தி பெஸ்ட்' சொல்லி வழியனுப்பி வெச்சாங்க. இப்போவும் சன் நெட்வொர்க்ல இருக்கும் நண்பர்கள் அன்போடு பேசி ஊக்கப்படுத்திட்டிருக்காங்க. தாயைப் பிரிஞ்ச குழந்தையின் உணர்வு இருக்கு.'' 

“நிறைய வாய்ஸ்ல மிமிக்ரி பண்றீங்க. அதுக்காகத் தினமும் பயிற்சி எடுக்கிறீங்களா?” 

“அடிக்கடி நிகழ்ச்சிக்காக வெளியூர்களுக்குப் போறேன். என் வேலையே ஊர் சுத்துறது என்பதால், ஃப்ரீ டைம்ல ஊர் சுத்துறதில் விருப்பமோ, நேரமோ இல்லை. அதனால ஃப்ரீ டைமை சரியாப் பயன்படுத்திக்கிறேன். புதுப் புது வாய்ஸைப் பிராக்டீஸ் பண்ணுவேன். இப்போ, நிறையப் பேர் மிமிக்ரி ஆர்டிஸ்டா வந்துட்டேயிருக்காங்க. என்னை நான் அப்டேட் பண்ணிக்கலைன்னா, பழைய வெர்ஷன் ஆகிடுவேன். அதனால், யாரும் டிரைப் பண்ணாத பிரபலங்களின் வாய்ஸை செலக்ட் பண்ணிப் பேசுறேன்.'' 

"ஹீரோவா நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?” 

“ஆங்கர் ஆசை நிறைவேறினதும், அடுத்து சினிமாவில் நடிக்க ஆசைபட்டேன். அதுக்கு நிறையவே முயற்சி செஞ்சேன். விக்ரமன் சார் இயக்கத்தில், ‘நினைத்தது யாரோ’ மற்றும் ‘திரி’ படங்களில் நடிச்சு அவை ரிலீஸ் ஆகிடுச்சு. அடுத்து, ‘ஏன்டா தலையில எண்ணெய் வைக்கலை’, ‘சாரல்’ என ரெண்டு படங்களில் ஹீரோவா நடிச்சு அவை ரிலீஸாகப்போகுது. இதனால், மக்கள் மனசுல இன்னும் நெருக்கமாக இடம்பிடிக்க முடிஞ்சிருக்கு." 

"நிறையத் தோல்விகள், கஷ்டங்களைக் கடந்து தற்போதைய பாப்புலர் ஆங்கர் ரீச்சை எப்படி உணர்றீங்க?" 

“சந்தோஷமா உணர்றேன் பிரதர். இதுக்காகப் பல வருஷங்கள் தோல்விகளையும் அவமானங்களையும் பார்த்திருக்கேன். மீடியா வாசலில் பல மணி நேரம் காத்திருந்திருக்கேன். பல நாள் விரக்தியடைஞ்சு 'என்னடா வாழ்க்கை' என்கிற நிலைக்குப் போயிருக்கேன். சார்லி சாப்ளின் சொல்ற மாதிரி, ‘அழலாம்... ஆனா, மத்தவங்களுக்குத் தெரியாத மாதிரி மழையில் நின்னு அழணும்’னு எல்லாத்தையும் கடந்துபோனேன். அந்தத் தோல்விகள் எல்லாமே என் பெஸ்ட் என்னனு உணரவெச்சது. 'நல்லா பர்ஃபார்ம் பண்றே’னு மக்களிடம் வாங்கும் பாராட்டுக்காக, எவ்வளவு கஷ்டங்களையும் சந்தோஷமா ஏத்துக்கத் தயார். எனக்கு நடந்த கஷ்டங்கள் என் ஜூனியர்ஸூக்கு வரக் கூடாதுனு என்னாலான சப்போர்ட் பண்றேன்.” 

“பெற்றோர் எந்த அளவுக்கு சப்போட்டிவா இருக்காங்க?” 

" ‘கஷ்டப்பட்டு பி.இ., படிக்கவெச்சிருக்கோம். ஆனா, நிரந்தர வருமானம் இல்லாத மீடியாவுக்குப் போகணும்னு சொல்றியே'னு ஆரம்பத்தில் எதிர்த்தாங்க. அப்புறம் என் மீடியா காதலை உணர்ந்து, 'ஒருநாள் நீ பெரிய ஆளா வருவேன்'னு வாழ்த்தி, சப்போர்ட் பண்ணினாங்க. ஷூட்டிங் முடிஞ்சு விடியற்காலையில் வீட்டுக்கு வருவேன். எனக்காகச் சூடா டிஃபன் பறிமாறும் அம்மா, ‘சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்டு எடுத்துட்டு நாளைக்கான வேலையைக் கவனி’னு சொல்வாங்க. நான் தூங்கப்போறப்போ, என் காலைப் பிடிச்சுவிடுவார் அப்பா. வாய்ப்பு கிடைக்கலையேனு நான் ஃபீல் பண்ணின காலங்களைவிட, இப்படியான பெற்றோர் கிடைச்சாங்களேனு சந்தோஷத்துல ஃபீல் பண்ணினதுதான் மறக்கமுடியாத மெமரீஸ்." 

“எப்போ ப்ரோ கல்யாணம்?” 

(பலமாகச் சிரிப்பவர்) "எங்கே இந்தக் கேள்வியை மிஸ் பண்ணிடுவீங்களோனு நினைச்சேன். கேட்டுட்டீங்களே பிரதர். எனக்கு ஒரு அண்ணன், தங்கை. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகிடுச்சு. அடுத்து எனக்குக் கல்யாணம் பண்ணிடனும்னு பெற்றோர் ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தாங்க. இப்போதான் சம்மதம் சொல்லியிருக்கேன். பொண்ணுப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல ஃப்ரெண்டு என் லைஃப் பார்ட்னரா கிடைப்பாங்கனு நம்புறேன்" எனப் புன்னகைக்கிறார் அஸார்.