Published:Updated:

``நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீங்க எனக்காகக் குரல் கொடுப்பீங்களா..?" - பூர்ணா

உ. சுதர்சன் காந்தி.
``நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீங்க எனக்காகக் குரல் கொடுப்பீங்களா..?" - பூர்ணா
``நாளைக்கு எனக்கு ஒண்ணுன்னா நீங்க எனக்காகக் குரல் கொடுப்பீங்களா..?" - பூர்ணா

தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கந்தகோட்டை', 'துரோகி', 'தகராறு', 'ஜன்னல் ஓரம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூர்ணா. கடந்த சில ஆண்டுகளாக டோலிவுட்டில் நடித்து வந்த இவர், மீண்டும் தமிழில் 'கொடிவீரன்', 'சவரக்கத்தி' போன்ற படங்களின் மூலம் ரி என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். அந்த அனுபவம் பற்றியும் அன்புச்செழியனுக்கு எதிராக ட்வீட் செய்தது பற்றியும் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம். 

டோலிவுட் டு கோலிவுட் ரி என்ட்ரி பத்தி சொல்லுங்க..

"தமிழ்ல நடிச்சிட்டு இருந்தபோதே தெலுங்குலயும் நடிச்சிட்டு இருந்தேன். தெலுங்குல நான் நடிச்ச படங்கள் ஹிட் கொடுத்துச்சு. அதனால, அந்த வேவ் லென்த்லேயே தெலுங்கு படங்களா பண்ணிட்டு இருந்தேன். தமிழ் படங்களுக்கான கதைகளையும் கேட்டுட்டு இருந்தேன். அதான் தமிழ் சினிமால கொஞ்ச காலம் நடிக்காம இருந்ததுக்குக் காரணம். மத்தபடி ரி என்ட்ரி எல்லாம் இல்லைங்க."

சவரக்கத்தி படத்துல நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?

" 'சவரக்கத்தி' படத்துலதான் நான் முதல் முறையா சொந்தக் குரல்ல டப்பிங் பேசிருக்கேன். ஒரு ஹீரோயினுக்கு எந்த மாதிரி படங்கள் பண்ணா சூப்பரா ஃபீல் பண்ணுவாங்களோ அது எனக்கு இந்த படத்துல கிடைச்சது. என்னோட முழு எப்ஃபோர்ட்டை இந்தப் படத்துல போட்டிருக்கேன். நான் பண்ண படங்களிலேயே இதுதான் எனக்குத் திருப்தியைக் கொடுத்திருக்கு. வழக்கமான ஹீரோயினா இல்லாம இந்தப் படத்துல வித்தியாசத்துலயும் வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்தோட ரிலீஸுக்கு நான் ரொம்ப தீவிரமா காத்திட்டு இருக்கேன்."

'கொடிவீரன்' படத்துல மொட்டை அடிச்சு நடிச்சிருக்கீங்களாமே?

"ஆமாங்க. பூர்ணாவை டோட்டலாவே மாத்திட்டாங்க. இதுல முழு மதுரைக்காரியாவே வாழ்ந்தேன். இந்தப் படத்துல எனக்குத் தைரியமான பொண்ணு கேரக்டர். மொட்டை அடிச்சு நடிக்கிற ரோலுக்கு யாரைப் போடலாம்னு டிஸ்கஷன் நடந்துட்டு இருக்கும்போது, சசி சார்தான் 'அந்தப் பொண்ணுகிட்ட கேட்டுப்பாக்கலாம். எனக்கு என்னவோ அவங்க நடிப்பாங்கன்னு தோணுது'னு சொல்லிருக்கார். அப்புறம்தான் என்னை அப்ரோச் பண்ணிருக்காங்க. முதல்ல அவங்க முடியை வெட்டணும்னு சொன்னமாதிரி என் காதில விழுந்துச்சு. அப்புறம் டைரக்டர் பேசும்போதுதான், மொட்டை போடணும்னு சொன்னார். அதை கேட்டவுடனே, நான் போனை கட் பண்ணிட்டேன். என் தலைமுடி பத்தி எல்லாமே என் அம்மாகிட்டதான் கேட்பேன். இப்படிச் சொன்னவுடனே, அவங்களுக்கும் ஷாக். சசி சார் பேசினார், ’இந்த மாதிரி கேரக்டர், இப்படி பண்ணாதான் சரியா இருக்கும்னு சொல்றாங்க’னு சொன்ன பிறகு, ஒத்துக்கிட்டேன். தமிழ்ல என்னோட முதல் படமும் 'சுப்ரமணியபுரம்' படமும் ஒரே நாள் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்தை எத்தனை முறை வேணாலும் பார்க்கலாம். அந்தப் படம் பார்த்ததிலிருந்து சசி சாரோட ஒரு படத்துலயாவது நடிச்சிடணும்னு நினைச்சேன். ஆனா, இப்போ அவர் நடிக்கிற படத்துல நடிச்சு என் கனவு நிறைவேறிடுச்சு. முத்தையா சார் படத்துல ஏதோ ஒரு பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுப்பாரு. அந்த வகையில, என்னை நல்லா வேலை வாங்கினார். "
 

டூயல் ஹீரோயின் சப்ஜெக்ட் கதை வரும்போது, ஸ்கிரீன் ஸ்பேஸ் கிடைக்குமானு யோசிச்சு இருக்கீங்களா? 

"சிங்கிள் ஹீரோயின், டூயல் ஹீரோயின் எல்லாம் பார்க்கமாட்டேன். கதை சொல்லும்போது கதாபாத்திரத்துக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்கனுதான் என் யோசனை இருக்கும். 'துரோகி' படத்துல பூனம் பஜ்வாதான் மெயின் ஹீரோயின். ஆனா, 'மலர்'ங்கிற என்னோட கேரக்டருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்துச்சு. என்னைப் பொறுத்தவரை, படம் ஹிட்டா ஃப்ளாப்பானு முக்கியமில்லை. தியேட்டர்ல இருந்து வெளியவரும் போது, பூர்ணா நல்லா நடிச்சிருந்தாங்கனு சொல்லணும் அவ்ளோதான். தமிழ்ல நான் நடிச்ச படங்கள் நல்ல ஹிட்னு சொல்லமுடியாது. ஆனாலும், இன்னும் எனக்கு நடிக்க கதைகள் வந்திட்டு இருக்குனு நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு."
 

அசோக் குமார் இறந்தபோது, ரொம்ப உருக்கமா ட்வீட் பண்ணிருந்தீங்க. உங்களுக்கும் அவருக்குமான பழக்கம் பத்தி சொல்லுங்க...

" 'சவரக்கத்தி' படத்தோட ட்ரெய்லர் பாத்துட்டுதான் என்னை இந்தப் படத்துக்குக் கூப்பிட்டாங்க. இந்தப் படத்துக்காக என்கிட்ட முதல்முறையா பேசுனது அசோக் குமார் சார்தான். படம் பத்தி அடிக்கடி பேசிட்டு இருந்த ஒரு நபர் இப்போ இல்லைனா எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. எனக்கு ஒரு அண்ணன் மாதிரி இருந்தார். எனக்கு இதுவரை அமைஞ்ச இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருமே தங்கமான மனிதர்கள். அந்த வகையில நான் லக்கினே சொல்லுவேன். அவங்க கொடுத்த கேரவன், அவங்க கொடுத்த சாப்பாடுனு இருந்த எனக்கு வருத்தம் இருக்காதா? "

நிறைய திரைப்பிரபலங்கள் அன்புச்செழியனுக்கு ஆதரவா பேசிட்டு இருக்கும்போது, நீங்க அவரை எதிர்த்து ட்வீட் பண்ணிருக்கீங்களே ! என்ன காரணம்?

"எனக்கு உண்மையிலேயே அன்புச்செழியன்னா யாருனே தெரியாது. அவருக்கும் எனக்கும் முன் பகை எல்லாம் கிடையாது. அசோக் சார் இறந்தபிறகுதான், அவர் ஒரு ஃபைனான்ஸியர்னே தெரியும். அசோக் சார் இறந்த பிறகு, அவர் வீட்டுக்குப் போனேன். அவர் மனைவியைப் பார்த்தா என் அக்கா மாதிரி இருந்துச்சு. என் வீட்ல ஒரு துயரச் சம்பவம் நடந்த மாதிரி இருந்துச்சு. அந்தக் கோபத்துலயும் விரக்தியிலயும் தான் வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே ட்வீட் பண்ணேன். ஆனா, அதுல கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா, தவறு செஞ்சா தண்டனை கிடைச்சே ஆகணும். அப்போதான் திருப்பி அது மாதிரி தவறுகள் நடக்காது. அசோக் சார் இறப்புக்கு ஒரு நியாயம் கிடைக்கணும். எல்லாரும் 'நீ ஏன் இது பத்தி இன்டர்வியூ கொடுக்குற?'னு கேட்குறாங்க. ஆனா, எனக்கு மீடியா மேல ஒரு பெரிய நம்பிக்கை இருக்கு. ஒரு வேளை, நாளைக்கு எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா எனக்காக நடிகர் சங்கமும், மீடியாவும், மக்களும் குரல் கொடுப்பாங்கனு பெரும் நம்பிக்கை இருக்கு. கொடுப்பிங்களா?" என்ற கேள்வியுடன் விடைப்பெற்றார் பூர்ணா.