Published:Updated:

“தமிழ் சினிமா, நான்கு பேர் மாஃபியாவிடம் சிக்கியிருக்கிறது!” - ஞானவேல் ராஜா

அலாவுதின் ஹுசைன்
“தமிழ் சினிமா, நான்கு பேர் மாஃபியாவிடம் சிக்கியிருக்கிறது!” - ஞானவேல் ராஜா
“தமிழ் சினிமா, நான்கு பேர் மாஃபியாவிடம் சிக்கியிருக்கிறது!” - ஞானவேல் ராஜா

சேரனின் உள்ளிருப்புப் போராட்டம், விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு என்ற செய்திகள் வந்த நிலையில், தமிழ்த் திரைப்படத்  தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியிலிருந்து ஞானவேல் ராஜா ராஜினாமா செய்தார். தயாரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக ராஜினாமா செய்தாரா, விஷாலுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக ராஜினாமா செய்தாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.   

அந்தச் சந்திப்பில் அவர் பேசியதாவது :

"இங்கு நிறைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. சேரன் சார் உள்ளிருப்புப் போராட்டத்தை ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு என் வாழ்த்துகள். 'நம்ம அணி' வெற்றிபெற்று 8 மாதங்களே ஆன நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்பட்டுள்ளது. 9 வருடமாக நிலுவையிலிருந்த அரசு மானியத்தை சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் நலனைக் கருதி, ஐந்தரை மாத காலத்தில் போராடிப் பெற்றுத்தந்துள்ளோம். உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்வதை மற்ற சங்கங்கள் பெருமையாகப் பேசிக்கொள்ளும் நிலையில், 60 வயதுக்கும் மேலான தயாரிப்பாளர்களுக்கு 'அன்புதொகை'யாக மாதம் 12,500 ரூபாயும், கருணைத் தொகை விண்ணப்பித்தவர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், கல்வி, மருத்துவத் திட்டம் என மாதம் 25 முதல் 30 லட்சம் ரூபாய் தொடர்ந்து செலவு செய்து வருகிறோம்.      

கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு நபர்கள் இருக்கும் இந்தச் சங்கத்தில் எதையோ மனதில் வைத்துக்கொண்டு சேரன் அணியினர் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். நான் விநியோகஸ்தர் சங்க வேலையில் சற்று முடங்கிப்போனேன், விஷால் இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலில் கொஞ்சம் பிஸியாக இருந்தார். ஆதலால், எங்கள் பொருளாளர் மற்றும் செயலாளர் அவர்களின் கோரிக்கை என்னவென கேட்டறிந்தனர். அவையாவும் நிராகரிக்கப் படவேண்டியவை. கேபிள் டிவி முறை செய்யப்பட்டிருக்கிறது. இப்படி வருமானம் ஈட்டத் தயாராகிவருகிறது சங்கம். அனைவரும் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனப் போராடினார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் பொதுக்குழுவும் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் இப்படிச் செய்வது அவசியமற்றது.

நண்பர் அசோக்குமார் மரணம் மிகவும் வருத்தம் தருகிற நிகழ்வு. தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறோம் மிகவும் மென்மையான மனிதர். அவரை இந்த முடிவை எடுப்பதற்கு ஏதோ நிர்பந்தங்கள் அவருக்கு வந்திருக்கு. அதை அவரோட கடிதம் வாயிலாக நமக்குத் தெரிந்தது. சினிமா ஒரு மூன்று நான்கு பேர் கொண்ட ஒரு மாஃபியாவிடம் மாட்டிக்கொண்டுள்ளது. யார் படம் எடுக்க வேண்டும், யார் அதை வாங்கவேண்டும், எவ்வளவு விலை என நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும்கூட அந்தச் சிலர் முடிவு செய்கிறார்கள். சிறு படங்களாக இருந்தாலும் சரி, பெரிய படங்களாக இருந்தாலும் சரி... இவர்களுக்கு வேண்டும் என்றால் அதற்கான பஞ்சாயத்தை உருவாக்கி அவர்களே அப்படத்தைப் பிடுங்கிக்கொள்வார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்தி புதிதாய் வரும் விநியோகஸ்தர்களை மிரட்டி இதைச் செய்து வந்திருக்கிறார்கள். இங்கு சிறு விநியோகஸ்தர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள். 

கிட்டத்தட்ட 19 படங்களை நான் தயாரித்திருக்கிறேன். 28 படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு விநியோகஸ்தரின் வலி என்னவென்று அறிந்தவன் நான். ஒரு தயாரிப்பாளனாய் அவர்களின் வலியை உணர்ந்தவன் நான். அதை மனதில் வைத்துக்கொண்டு எப்படித் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல திட்டங்களைச் செய்தோமோ, அதேபோல் திரைத்துறையின் நலன் காக்க விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து வேட்பாளராக எங்கள் அணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நான் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். விநியோகஸ்தர்கள் சங்கத்தின் விதிமுறைப்படி, வேறொரு சங்கத்தின் பதவியில் இருப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதற்காக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இது மட்டுமே காரணம். வேறு எதுவும் இல்லை  என்னைத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஆதரவு அளித்த அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்தார், ஞானவேல்ராஜா.  மேலும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அவர். 

"பெரிய படங்கள் திரைக்கு வந்தால் முதல் வாரத்திற்கு டிக்கெட் விலை உயர்த்தி விற்கப்படுகிறதே? நீங்கள் சென்னை விநியோகஸ்தர் சங்கத் தலைவரானால் இதை முறைப்படுத்துவீர்களா?" 

"அரசாங்கம், தயாரிப்பாளர்கள் சங்கக் கோரிக்கையை ஏற்று டிக்கெட் விலையை முறைபடுத்திக் கொடுத்தார்கள். அதாவது, ஒரு பெரிய படம் வந்தால் அதற்கான டிக்கெட் விலையை 500, 1000 ரூபாய்க்கு விற்கக் கூடாது. மல்டிபிளெக்ஸ் என்றால், குறைந்தபட்சம் 50 முதல் 150 வரை, ஏ/சி திரையரங்குகளில் குறைந்தபட்சம் 40 முதல் 100 வரை, ஏ/சி அல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்சம் 30 முதல் 80 வரை டிக்கெட் விலை. இவை அனைத்திற்கும் ஜி.எஸ்.டி  வரி மற்றும் கேளிக்கை வரி கூடுதலாக உண்டு. இதைத் தாண்டி விற்கப்படக் கூடாது. இது அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தீபாவளிக்கு வெளியான படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு மக்கள் தைரியமாகப் புகார் அளிக்கலாம்." 

"ரசிகர் மன்றங்களுக்கு மொத்தமாக டிக்கெட்டுகள் கொடுப்பதால்தான், பொதுமக்கள் படம் பார்க்க முடியாமல் பிளாக்கில் அதிக விலை கொடுத்துப் படம் பார்க்கவேண்டி உள்ளதாகச் சொல்லப்படுகிறதே?" 

"அதுவும் ஒரு காரணம்தான். இம்முறையே தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மன்ற டிக்கெட்டுகள் கொடுக்கக் கூடாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வாயிலாக தயாரிப்பு நிறுவனத்திற்குக் கூறினோம். முன்னரே கொடுத்தாயிற்று எனக் கூறியதால், அதைத் தடுக்கமுடியவில்லை."

"தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என சேரன் தரப்பு கூறுகிறதே?"

"முன்னர் கூறியதுபோல், மாதந்தோறும் அன்புதொகை, கல்வி மருத்துவத் திட்டங்கள் போன்றவற்றால் ஏற்படும் செலவுகளுக்கு அவர்கள் எங்கள்மீது திருட்டுப் பட்டம் கட்டிவருகிறார்கள். அரசு மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு மேலாக, எனது சொந்தச் செலவில் ஆன்லைன் பைரஸி கும்பலை விரட்ட முற்பட்டிருக்கிறோம். இதில் நாங்கள் சிலமுறை பொது மக்களையும் சந்தேகப்படும் நிலைமை ஏற்பட்டது. மிக விரைவில் அவர்களும் பிடிபடுவார்கள்."

"விஷால் அரசியலுக்குச் செல்வதும், நீங்கள் இப்படிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு சங்கத் தலைவராய் செல்வதும், உங்களைத் தேர்ந்தெடுத்த சக தயாரிப்பாளர்களை ஏமாற்றுவது போல் இல்லையா?"

"இங்கே யாரும் யாரையும் ஏமாற்றவில்லை. கடந்த 8 மாதங்களில் நாங்கள் எடுத்த எல்லா முயற்சிகளுக்குமான பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சினிமாவின் ஒரு அங்கமாக உள்ள விநியோகஸ்தர்கள் சங்கமும் பெரு முதலாளிகளால் சுரண்டப்படுகிறது. அதை மாற்றும் எண்ணத்திலேயே எனது இந்த முடிவு. இதுவும் தமிழ் சினிமாவின் நலனைச் சார்ந்ததே என நினைக்கிறேன். விஷாலை பொறுத்தவரை, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பதே அவரது நோக்கம். அனைத்திற்கும் மேலாக தயாரிப்பாளர்கள் நலனில் அக்கறை கொண்டு இங்கு எல்லா வேலைகளையும் ஏற்று, சரியாகச் செய்யும் ஒரு சிறந்த அணியை உருவாக்கிவிட்டு, அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்வோம்."

"அரசே சினிமா திரையரங்குகளை நடத்துவது குறித்த உங்கள் கருத்து என்ன?" 

"இங்கு திரையரங்கு நடத்தும் நண்பர்கள் எல்லாம் 40, 50 வருடமாக இதே தொழிலில் இருக்கிறார்கள். இதைக் கௌரவமெனக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் அரசாங்கம் ஏற்று நடத்தவேண்டிய அவசியம் இல்லை. அரசுக் கட்டுப்பாட்டுக்கிணங்க மக்கள் செலவிடக் கூடிய வகையில் திரையரங்குகளும், அதிலிருக்கும் வசதிகளும் இருந்தால் போதும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என மூவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், சினிமா வளரும். குறைந்த டிக்கெட் விலையில் அரசு திரையரங்குகளுக்கான பரிந்துரைகள் இருக்கின்றன. அதைச் செய்தால் சினிமா மேலும் புத்துணர்ச்சி பெரும். பொங்கலுக்கு நான் தயாரித்து வெளியிடும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டிக்கெட்டை அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்றால் அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ, ஆட்சியர் அலுவலகத்திலோ டிக்கெட்டுடன் சென்று புகார் செய்யலாம்." என்கிறார் ஞானவேல் ராஜா.