Published:Updated:

’’7 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு என் பதில் இதுதான்!'' – கொதிக்கும் விஷால்

அலாவுதின் ஹுசைன்
’’7 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு என் பதில் இதுதான்!'' – கொதிக்கும் விஷால்
’’7 கோடி ரூபாய் முறைகேடு புகாருக்கு என் பதில் இதுதான்!'' – கொதிக்கும் விஷால்

சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் நிறுத்தப்பட்டது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை  கலைவாணர் அரங்கத்தில் இன்று நண்பகல் தொடங்கியது. அசோக் குமார் மரணம், கந்துவட்டி ஃபைனான்ஸ் முறை, தயாரிப்பாளர்கள் சங்க வைப்பு நிதி கணக்குத் தாக்கல், கேபிள் டி.வி உரிமம், சேட்டிலைட் உரிமம், டிஜிட்டல் சினிமா ப்ரொஜக்‌ஷன் கட்டண குறைப்பு, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு எனப் பல விஷயங்கள்குறித்து பேசப்படும் என்று கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு அலுவல்களும்  நடக்காமல் பொதுக்குழு நிறுத்தப்பட்டது.

முன்னதாக, கடந்த 7-ம் தேதி அதிருப்தி தயாரிப்பாளர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் இந்தப் பொதுக் குழு கூட்டத்துக்குத் தடை கோரினர். அந்த வழக்கில், 'இந்தப் பொதுக் குழுக்கூட்டம் ஓய்வுபெற்ற முன்னாள்  நீதியரசர் ராமநாதன் முன்னிலையில் நடைபெறவும், கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்களுக்கு முறையே வாக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. 

முக்தா. வி.ஸ்ரீநிவாசன், சி.வி ராஜேந்திரன் போன்ற மூத்தத்  தயாரிப்பாளர்களை கௌரவித்தப்பின் பொதுக் குழு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பெருங்கூட்டமாக அதிருப்தி தயாரிப்பாளர்கள், தலைவர் விஷால் பாதியில் கூட்டத்தை நிறுத்தியதாக விஷாலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பியவாறு வெளியே வந்தனர்.   

கூட்டத்தை பாதியில் நிறுத்தியதைக் கண்டித்து வெளியேறிய இயக்குநர்  சேரன் கூறியதாவது, "எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கக்  கூட்டத்தில் நடந்ததை வெளியில் சொல்வது அநாகரிகமான காரியம். விஷாலுக்குதான் பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. 450 உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்காமல் கூட்டத்தை முடித்துவிட்டார். விஷால் எங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க பயப்படுகிறார். நாங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

"விஷால் பொறுப்பேற்ற பின்பு கணக்கு வழக்குகளைக் கேட்டபோது சரியாக பதிலளிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்துகொண்டிருக்கும்போது மேடையில் யாருமில்லை. இது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதிப்பு தரவில்லை என்று மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பினார். முன்னாள் சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் பேச மைக் கொடுக்கவில்லை, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதவர்கள் மேடை ஏறி பேச வைப்பது முறையன்று. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டதும் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் பொதுக்குழுவை தேசிய கீதம் இசைத்து பாதியிலேயே நிறுத்திவிட்டார்" என டி.ராஜேந்தர் கூறினார் 

அதிருப்தி தயாரிப்பாளர்கள் சார்பில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "விஷால் பொறுப்பேற்ற பின் ரூபாய் 7.5 கோடி சங்கத்தின் வைப்புத் தொகை கணக்கில் இருந்தது. தற்போது 4.5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதற்கான கணக்கை உறுப்பினர்கள் விஷாலிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக கேட்டதற்கும் பதிலளிக்க முடியாமல் விஷால் திணறினார். விஷால் தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சிறு தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்படைகிறார்கள்.

பின் மேடையில் இருந்த நிர்வாகிகள் யாரிடமும் சிக்காமல் தேசிய கீதம் பாடி கூட்டத்தை முடித்துச் சென்றுவிட்டனர். புது அலுவலகம், சங்கப் பணிகளுக்கு வேலையாட்கள் பணியமர்த்தியதை, சங்க பைலா மாற்றம் என பொதுக்குழு கூட்டப்படாமலேயே நடந்த அனைத்திலும் ஊழல் நடந்திருப்பதாக கண்காணிப்பாளர் நீதியரசரிடம் கூறப்பட்டுள்ளது. இன்று என்ன நடந்ததென எடுத்துரைக்கப்பட்டு கண்காணிப்பாளரிடம் நீதிமன்றத்தின் வாயிலாக ஒரு ரிசிவர் கேட்டுள்ளோம். மேலும், விஷால்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவும் நீதியரசரிடம் பெரும்பான்மையாக இருக்கும் அதிருப்தி தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளாக முன் வைத்துள்ளோம். நீதிமன்றத்துக்கு இந்த அறிக்கையை கண்காணிப்பாளர் நீதியரசர் ராமநாதன் தாக்கல் செய்தபின் நாங்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் ’’ எனக் கூறினார்.    

பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்து விஷால் பேசுகையில், "இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் இன்று நிறைவடைந்தது. மூத்த தயாரிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதையும் தாண்டி பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. உறுப்பினர்கள் எல்லாருக்கும் தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் உரிமை இருக்கிறது. அதை செய்யும் முறை தவறாக இருக்கிறது. என்மீது தவறு இல்லாதபோது நான் ஏன் பதவி விலக வேண்டும். காழ்ப்புணர்ச்சி காரணமாகதான் இன்று பிரச்னை நடந்துள்ளது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் பை-லா மீறப்பட்டதாக கூறப்படுகிறதே?

’’சங்கத்தின் பை-லா படி நான் நிற்கவேக் கூடாது என எங்கேயும் கூறப்படவில்லை. இங்கு அனைத்தும் பை-லா பிரகாரம்தான் நடந்துவருகிறது. பை-லா குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.’’     

தொடர்ந்து  அரசுக்கு எதிரான போக்கில் ஈடுபடுவதால் திரைத்துறைக்கு கிடைக்கும்  அரசு சலுகைகள், மானியங்கள்  பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறதே ? 

’’அறிவிக்கப்பட்ட 149 படங்களுக்கான அரசு மானியம் எப்படி ரத்தாகும், மேலும் பல படங்களுக்கு மானியம் கேட்டுள்ளோம் இதனால் சிறு தயாரிப்பாளர்கள் பலனடைவார்கள்.’’

சங்கத்தின் கணக்கில் 7 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படுவதுகுறித்து உங்கள் பதில்? 

’’செய்ய வேண்டிய கடமைகளை நன்றாக செய்துவருகிறோம், முறைகேடு நடந்திருந்தால் ஆதாரத்துடன் நிறுப்பிக்க வேண்டும், 7 கோடி ரூபாய் முறைகேடு செய்திருந்தால் இவ்வளவு தைரியமாக பொதுகுழுவைக் கூட்டமுடியாது, ஆதாரத்தோடு வந்தால் அதற்குப் பதிலளிக்கத் தயார். கண்காணிப்பு செய்த நீதியரசர் முன்பு இதெல்லாம் நடந்ததில் மகிழ்ச்சி, உள்ளே என்ன நடந்தது என்பதற்கு நீதியரசரே ஆதாரம். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்" என்று விஷால் கூறினார்.