Published:Updated:

“ஆன்லைன்ல ஹாலிவுட் படத்துக்கு ஒலிப்பதிவு செய்கிறோம்..!” - கெத்துக்காட்டும் சென்னைப் பசங்க

கதிரவன் கண்ணன்
“ஆன்லைன்ல ஹாலிவுட் படத்துக்கு ஒலிப்பதிவு செய்கிறோம்..!” - கெத்துக்காட்டும் சென்னைப் பசங்க
“ஆன்லைன்ல ஹாலிவுட் படத்துக்கு ஒலிப்பதிவு செய்கிறோம்..!” - கெத்துக்காட்டும் சென்னைப் பசங்க

சினிமாவில் அதிகம் கவனம் பெறாத ஒலியமைப்புத் துறையில் பணிபுரியும் சென்னையைச் சேர்ந்த விஜய் ரத்தினம், A.M.ரஹ்மத்துல்லா இருவரும் தமிழின் மிக முக்கிய படங்களில் சவுண்ட் ரெக்கார்டிங், சவுண்ட் டிசைன் துறையில் பணிபுரிந்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் முதற்கொண்டு தமிழின் முக்கிய இசைத்துணுக்குகளைச் செய்து தருவதுடன் அவர்களுடன் இணைந்து படங்களில் ஒலி அமைப்பிலும் பணியாற்றுகிறார்கள். மரியான், கவண், விடியும்முன், அவள், திருட்டுப்பயலே2, அண்ணாத்துரை படங்களில் இவர்கள் ஒலியமைப்பை தனியே செய்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது இணையம் மூலம் உலகப்படங்களுக்கும், ஹாலிவுட்டுக்கும் ஒலி அமைப்பை செய்கிறார்கள். ரஷ்யா, டச்சு, இத்தாலி, சிரியா நாட்டுப்படங்களுக்குச் சென்னையில் இருந்துகொண்டே ஒலி அமைப்பை செய்கிறார்கள். தற்போது வெளியான அவள் படத்தில் இவர்களின் ஒலி அமைப்பு மிகவும் கவனத்துக்குள்ளானது. பெரிய பாராட்டையும் பெற்றுத்தந்தது. AH studiosவில் வேலையில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

பின்னணி இசை பாடல்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.  இந்த ஒலிப்பதிவு பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்? 

“உண்மைதான். மக்களுக்கு இதைப்பற்றிய அறிமுகம் அதிகம் இல்லை. படத்தில் இசையமைப்பாளர் பற்றித்தான் அதிகம் தெரியும். ஒரு படத்தில் இசையமைப்பாளர் பின்னணி இசைதான் அமைப்பார். ஒரு காட்சியின் உணர்வை அது கூட்டும். ஆனால் படத்தில் வரும் மற்ற அத்தனை சத்தங்களையும் சவுண்ட் இன்ஜினீயர்தான் உருவாக்க வேண்டும். ஒரு வீட்டுக்குள் காட்சி நடந்தால் பாத்திரங்கள் சத்தம், பேன் சத்தம், டேபிள், அவர்கள் பேசும் ஒலி அனைத்திலும் இந்தத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு காட்சி ரோட்டில் நடந்தால் வாகனங்களின் இரைச்சல், மக்களின் சத்தம், காற்றின் சத்தம் இவையனைத்தையும் நாங்கள்தான் உருவாக்குவோம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த இடத்தை சுற்றி உள்ள சூழ்நிலைச்சத்தங்களை முழுக்க உருவாக்கும் துறைதான் இது.  ஒவ்வொரு காட்சியிலும் சத்தங்கள்தான் ஒரு காட்சியை உண்மையாக்கும் நெருக்கமாக மாற்றும். சத்தங்கள் இல்லையெனில் அது ஊமைப்படமாக மாறிவிடும். அந்த வகையில் சினிமாவில் இது மிக முக்கியமான துறை ஒலிப்பதிவு.’’

ஒரு படத்திற்கு ஒலிப்பதிவு எந்த அளவு அவசியம்?

“ஒலி இல்லையெனில் எதுவும் இல்லை. உங்களால் வெறும் பேசும் சத்தங்களை வைத்துக்கொண்டு உணர்வுகளை உணர முடியாது. இந்தச் சத்தங்கள் உருவாக்கும் சூழ்நிலைதான் உங்கள் மனதில் அந்தக் காட்சியைப் படியச் செய்யும். இந்தச் சத்தங்களை உருவாக்குவதும் அதன் அளவுகளை டிசைன் செய்வதுதான் எங்களின் வேலை. ஒலியின் அளவை டிசைன் செய்து அதை எப்படி ஒலிக்க விடுவது என்பதுதான் முக்கிய வேலை. இது தான் 5.1 , 7.1 ஒலி அமைப்பு என்கிறார்கள். ஒரு அறைக்குள் நடக்கும் ஒரு காட்சியில் எந்த டயலாக், பின்னணி இசை இல்லையென்றாலும் அந்தக் காட்சியிலும் ஒலியமைப்பாளருக்கு நிறைய வேலை இருக்கும். அந்த அறையினுள் உலாவும் காற்றின் சத்தம் மெல்லிய ஒலிகள் அனைத்தையும் உருவாக்க வேண்டும். இந்தத் துறையில் உலகம் பலமடங்கு வளர்ந்து வருகிறது.  நம்மைவிட ஹாலிவுட் படங்கள் இதில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஒரு ஆக்ஷன் காட்சியின் பின்னணி சத்தத்தைக் கேளுங்கள் இதன் முக்கியத்துவம் புரியும்.’’

நீங்கள் எப்படி இந்தத் துறைக்குள் வந்தீர்கள்? 

விஜய்ரத்தினம் உடனே  பேசத்தொடங்கினார்... “நான் லயோலால படிச்சேன். படிக்கும் போது வாஹினி ஸ்டுடியோவில சவுண்ட் வேலைகள் பண்ணினேன். இத முழுசாப் படிக்கணும்னு தோணுச்சு. அமெரிக்கா போய் சவுண்ட்ல எம்.எஸ்.சி படிச்சேன். அங்கேயே நிறைய ஆல்பம், அனிமேஷன், விளம்பரங்களுக்கு சவுண்ட் பண்ணினேன். அப்புறம் சென்னை வந்து இந்த ஸ்டுடியோ ஆரம்பித்தபோது ரஹ்மத்துலா அறிமுகமானார். நான் சவுண்ட் டிசைனர், அவர் சவுண்ட் மிக்ஸர். எங்களுக்குள் ரசனை ஒத்துப்போனது. 6 வருடங்களாக நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.’’

லைவ் ரெக்கார்டிங்கும் ஸ்டுடியோவில் உருவாக்கப்படும் ஒலிக்கோர்வைக்கும் என்ன வித்தியாசம்? 

“இது ஒரு மித் ஆகிவிட்டது. லைவ் ரெக்கார்டிங்க்தான் சிறந்தது என நம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஒலி அமைப்புக்கு லைவ் ரெக்கார்டிங் செய்வது கடினம். ஷூட்டிங் ஸ்பாட்டில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். இயந்திரங்கள் இயங்கும் அந்தச் சத்தத்தில் அங்கு உள்ள சூழ்நிலையை, ஒலியைப் பதிவு செய்யவே முடியாது. ஷூட்டிங் முடிந்த பிறகு அந்த இடத்தின் ஒலியைத் தனியே பதிவு செய்துதான் பயன்படுத்த முடியும்.  இப்போ ஒரு ரயில் நிலையக் காட்சிக்கு அதே இடத்தில் ஒலியை எடுக்க வெண்டுமென்று அவசியமில்லை. வேறொரு ரயில் நிலையத்தில் அந்த ஆம்பியன்ஸை எடுத்து உபயோகப்படுத்த முடியும். சில பல குறிப்பிட்ட சத்தங்களை லைவ்வாக எடுத்து உபயோகப்படுத்தலாம். அதை ஸ்டுடியோவிலும் உருவாக்க முடியும். மேலும் இந்தச் சத்தங்கள் அனைத்தும் இணையத்தில் லைவ் ரெக்கார்டிங் செய்து விற்பனையில் இருக்கிறது. அதையே உபயோகிக்கலாம். ஆனால் சில சத்தங்களை ஸ்டுடியோவில் மட்டுமேதான் உருவாக்க முடியும். பேய்ப்படங்களில் பலவிதமான சத்தங்கள் அனைத்தும் ஸ்டுடியோவில் உருவாவதுதான். எதுவாய் இருந்தாலும் நாம் எந்த அளவில் எப்படி டிசைன் செய்கிறோம், ஆடியன்ஸை எப்படிக் கேட்க வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்.’’

ஒலிப்பதிவு படத்தை எந்த அளவு மாற்றும்? 

“ஒலியில்லாமல் இப்போது படமே கிடையாது. அது உயிரற்ற பொருளாகிவிடும். முன்பே சொன்னதுதான், ஒலி இல்லாமல் ஒரு படத்தைப் பாருங்கள் ஒலியின் அருமை புரியும். சினிமாவின் ஆரம்ப காலம் தொட்டே ஒலி இணைந்தே வந்திருக்கிறது. ஊமைப்படங்களின் காலத்தில் கூட திரையரங்கில் ஒலி அமைப்பை ஏற்படுத்தி கதை சொல்லியிருக்கிறார்கள். இப்போதைய சினிமாவில் இது வெகு முக்கியம்.’’

நீங்கள் பணிபுரிந்த வெளிநாட்டுப்படங்கள், ஹாலிவுட்படங்களின் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? 

“நாங்கள் முதலில் தமிழ்ப்படங்கள் மட்டும்தாம் செய்துகொண்டிருந்தோம்.  வேலையில்லாத நேரங்களில் நாங்களே சேர்ந்து நிறைய ஒலித்துணுக்குகளை உருவாக்கினோம். அப்புறம் அதை இணையத்தில் வைத்தபோது அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தில் பல வெளிநாட்டு மொழிப்படங்கள் சிறு சிறு வேலைகள் தந்தார்கள். பின்னால் முழுப்படத்திற்கும் செய்தோம். இப்போது உலகம் முழுதும் வெளியான கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி படத்திற்கு நாங்கள்தான் சவுண்ட் டிசைன் செய்தோம். இத்தாலி, ரஷ்யா, சிரியா, டச்சு, அமெரிக்க படங்கள் எனப் பல நாட்டுப்படங்களுக்குச் செய்திருக்கிறோம். இப்போதும் செய்துகொண்டிருக்கிறோம். இணையம் உலகைச் சுருக்கிவிட்டது. இணையம் தந்த வாய்ப்பில் முழு வேலையையும் இங்கிருந்து கொண்டே செய்துகொண்டிருக்கிறோம்.’’

நீங்கள் பணிபுரிந்த தமிழ்ப்படங்கள் பற்றி? 

“நிறைய படங்களுக்கு சின்ன சின்ன வேலைகளை இசையமைப்பாளர்களுக்குச் செய்து தந்திருக்கிறோம். ஏ.ஆர்.ரஹமான் முதற்கொண்டு அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பணிபுரிந்திருக்கிறோம். மரியான் , கவண், விடியும்முன், போகன் இப்போது அவள், அண்ணாத்துரை படங்களில் பணிபுரிந்திருக்கிறோம். அவள் படத்தில் வேலை செய்தது மிகப்பெரிய கவனத்தை பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது நிறையப்படங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.’’

ஒரு படத்துக்கு ஒலிப்பதிவு செய்ய எவ்வளவு பட்ஜெட் தேவைப்படும்? 

“அதை மிகச்சரியாகச் சொல்லி விட முடியாது. உலகப்படங்களில் பணிபுரிகிறபோது மிகச்சின்ன படங்களுக்கே மிகப்பெரிய பட்ஜெட் வாங்கியிருக்கிறோம். இங்கே பெரிய படங்களுக்கு சின்ன பட்ஜெட்டில் செய்திருக்கிறோம். படத்தின் தேவையைப் பொறுத்து, அதன் கதையைப்  பொறுத்து இது மாறும். பொதுவாக வெளிநாடுகளில் எடுக்கப்படும் படங்களுக்குப் படத்தின் மொத்த பட்ஜெட்டில் 8 சதவீதம் இந்தத் துறைக்கு ஒதுக்கப்பட்டு விடும். தமிழில் இன்னும் அந்த அளவு வரவில்லை.’’ 

வெளிநாட்டுப் படங்களுக்கும் தமிழ்ப்படங்களுக்கும் ஒலிப்பதிவு செய்வதில் என்ன வித்தியாசம்?

“நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுப்படத்திற்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். அவர்கள் நாட்டின் சுற்றுப்புற இயக்கம் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். உதாரணமாய் வெளி நாட்டுப்படங்களில் ஒலியின் அளவு அதிகமாய் இருந்தால் குறைக்கச் சொல்வார்கள். இங்கே தமிழில் சத்தம் அதிகமாய் எதிர்பார்ப்பார்கள். நம் நாட்டில் சூழ்நிலை அப்படி.’’

உங்களுக்குச் சவாலாக இருந்த படங்கள்? 

“சவால்னா எல்லாப்படங்களும்தாம். எல்லாப்படங்களுக்கும் வேலை ஒன்றுதான். ஆனால் பேய்ப்படங்களில் சவுண்ட் அதிகம் கவனிக்கப்படும். ஏனென்றால் பேய்ப்படங்களில் சவுண்ட்தான் ரொம்ப முக்கியம். அதுதான் பயமுறுத்தும். ரசிகனை நேரடியாத் தாக்கும். அதனால் அது அதிகம் கவனிக்கப்படுகிறது. நாங்கள் ‘அவள்’ செய்தது நிறைய சவாலாக இருந்தது. வழக்கமான பாணியிலிருந்து மாறி பேய்ப்பட சவுண்டை அதிகச் சத்தமில்லாமல் உருவாக்கினோம். பேய் வரும் இடங்களில் அதற்கென ஒரு சவுண்டை உருவாக்கினோம். பெரிய பாராட்டை பெற்றுத்தந்த படம்.’’

இப்போது செய்துகொண்டிருக்கும் படங்கள்? 

’’HBOக்காக ஒரு சீரீஸ் செய்கிறோம். வெளிநாட்டுப்படங்கள் சில இருக்கின்றன. இன்னும் நிறைய அழகான படங்கள் தேர்ந்தெடுத்து நிறைவாய் செய்ய விருப்பம்.’’