Published:Updated:

“தாலாட்டு பாடுற இடத்துல இன்னைக்கு ‘டாக்கிங் டாம்’ இருக்கு..!” - இயக்குநர் தாமிரா

கே.ஜி.மணிகண்டன்
“தாலாட்டு பாடுற இடத்துல இன்னைக்கு ‘டாக்கிங் டாம்’ இருக்கு..!” - இயக்குநர் தாமிரா
“தாலாட்டு பாடுற இடத்துல இன்னைக்கு ‘டாக்கிங் டாம்’ இருக்கு..!” - இயக்குநர் தாமிரா

“சினிமா எனக்கு பேஷன். அடிச்சுப் புடிச்சு படம் பண்ண எனக்கு ஆசை இல்லை. சமுத்திரக்கனி தேசியவிருது வாங்குன சமயத்துல எங்க அப்பா, 'வாடா, கனியைப் பார்த்துட்டு வருவோம்'னு சொன்னார், போனோம். கனிக்கும் எனக்கும் இடையில பெரிய பகையும் இல்லை, நெருக்கமான நட்பும் இல்லை. ஆனா, கிட்டத்தட்ட பதினேழு வருடமா ஒண்ணா இயங்கிக்கிட்டு இருக்கோம். கனியைப் பார்க்கப்போனப்போ, ரெண்டுபேரும் இறுக்கமான மனநிலையோட இருந்தோம். 'என்ன பண்ணிக்கிட்டு இருக்க'னு கனி ஆரம்பிச்சார். 'படம் பண்ண முயற்சி பண்றேன்'னு சொன்னேன். 'நான் என்ன செய்யணும்?'னு கேட்டார். 'கதை கேட்குறியா, இப்பவே சொல்றேன்'னு சொன்னேன். திரும்ப, 'தயாரிப்பாளர் ஓகே சொல்லிட்டாரா?'னு கனி கேட்க, 'நீ கால்ஷீட் கொடுத்தா, நானும் என் நண்பர்கள் ஃபக்ருதீன், முஸ்தபா, குட்டியோட சேர்ந்து நானே தயாரிச்சிடுவேன்'னு சொன்னேன். அப்படி ஆரம்பிச்சதுதான் 'ஆண்தேவதை'!.” - உற்சாகமாகப் பேசுகிறார், இயக்குநர் தாமிரா. 

“இந்தப் படம் மூலமா என்ன சொல்லணும்னு ஆசைப்படுறீங்க?”

“வேலை, வேலைனு ஓடிக்கிட்டே இருக்கிற ஓட்டத்துல நாம குழந்தைகளைக் கவனிக்க மறந்துடுறோம். தாலாட்டுப் பாடுற இடத்துல இன்னைக்கு டாக்கிங் டாம் இருக்கு. பிளாஷ்டிக் பாக்ஸ்ல ஜங்க் ஃபுட்ஸை நிரப்பிக் கொடுக்குறோம்... இப்படிப் பல கெட்ட விஷயங்களை, நம்மளோட சவுகரியத்துக்காக குழந்தைகள் மேல திணிக்கிறோம். கதை சொல்ற அப்பா, அம்மா, பாட்டிகள் இன்னைக்கு இல்லை. டி.வி, லேப்டாப், மொபைல்தான் குழந்தைகளின் உலகமா இருக்கு. பல குழந்தைகளுக்குச் சின்ன வயசுலேயே பார்வை குறைபாடு அதனாலதான் வருது. நாகரிகம்ங்கிற பெயர்ல எல்லா விஷங்களையும் நாம தெரிஞ்சே கொடுத்துக்கிட்டு இருக்கோம். அதைப் படத்துல பதிவு பண்ணியிருக்கோம். தவிர, முக்கியமான இன்னொரு பிரச்னை படத்துல பேசப்பட்டிருக்கு. அது, கடன். ‘பெரிதினும் பெரிது கேள்’னு பாரதி சொன்னார். அதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு, நம்மளோட இயல்புக்கு மீறிய வாழ்க்கையை வாழ்ந்துடணும்னு ஆசைப்படுறாங்க. ஒரு வேலை கிடைச்சா, அடுத்த சில மாதங்களிலேயே வாழ்க்கையோட ஒட்டுமொத்தத்துக்கும் தேவையான கடனை வாங்கிக் குவிக்கிறாங்க. பிறகு, கடனுக்குப் பின்னாடியே நம்ம வாழ்க்கை ஓட ஆரம்பிக்குது. நிறைய தற்கொலைகளுக்குப் பின்னாடி கடன் பிரச்னைதான் காரணமா இருக்கு. ஒரு பெண்ணோட பேராசை எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்... இதையும் கதையில சேர்த்திருக்கோம். நண்பர் கவிதாபாரதியோட ‘ஆண்களில் தேவதை உண்டா ஆமெனில் நீ என் தேவதை’னு ஒரு கவிதை இருக்கு. அதுல இருந்துதான், படத்தோட டைட்டில் பிடிச்சேன்.”

“ ‘ஆண்தேவதை’க்கு சமுத்திரக்கனி எப்படிப் பொருந்திப் போயிருக்கார்?”

சமுத்திரக்கனி சொல்ற விஷயங்களுக்கு வேல்யூ அதிகமா இருக்கு. இது எல்லா நடிகர்களுக்கும் அமைஞ்சிடாது. ஏன்னா, சமுத்திரக்கனியை ஆடியன்ஸ் தங்களில் ஒருவரா பார்க்குறாங்க. எல்லாப் படங்களிலும் சமுத்திரக்கனி அதிகமா பேசுவார். இந்தப் படத்துல கம்மியா பேசியிருக்கார். படம் பார்த்துட்டு வரும்போது, சமுத்திரக்கனி எல்லா ஆண்களுக்கும் ஒரு பாதிப்பைக் கொடுப்பார்னு நம்புறேன். கணவனும், மனைவியும் ‘ராத்திரி தூங்கும்போது சண்டையோடு தூங்கக் கூடாது; காலையில எழும்போது சண்டையோட தொடங்கக் கூடாது. அப்போதான், அந்தக் குடும்பம் நல்லா இருக்கும்’னு கனி மூலமா சொல்லியிருக்கோம்.”

“சமுத்திரக்கனி தவிர, வேற யாரெல்லாம் ஸ்பெஷல்?”

“கவின்பூபதினு ஒரு பையன் நடிச்சிருக்கான். மோனிஷா, ரம்யா பாண்டியன் நடிச்சிருக்காங்க. இளவரசு, சுஜா வரூணி இருக்காங்க. ‘புல்லட் ராவுத்தர்’ங்கிற கேரக்டர்ல ராதாரவி நடிச்சிருக்கார். எல்லோரும் படத்துல இயல்பான மனிதர்களா கடந்து போவாங்களே தவிர, யாரையும் நீங்க நடிகரா பார்க்கமுடியாது. இந்தப் படத்துல கவின்பூபதி நடிப்பைப் பார்த்துட்டு, அவங்க அம்மா கையில ‘ஆண்தேவதை’னு பச்சை குத்தியிருக்காங்க. இந்தப் படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகுதான் அடுத்த படங்களைத் தேர்ந்தெடுக்கணும்னு ரம்யா பாண்டியன் சொன்னாங்க. எல்லோருக்கும் இந்தப் படம் பெரிய நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்திருக்கு.”

“முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்குமான இடைவெளியில சினிமாவோட சூழல் மாற்றத்தை உள்வாங்கிக்கிறீங்களா?”

“நிலா நகருது, நானும் நகர்ந்துக்கிட்டு இருக்கேன். சக படைப்பாளிகளோட வெற்றியை என் வெற்றியா பார்க்குறேன். இங்கே எது நல்ல படம், எது மோசமான படம்ங்கிற புரிதல் இல்லாம இருக்காங்க. தமிழ்ல நல்ல காமெடிப் படம் வந்து பல வருடங்கள் ஆச்சு. ஆனா, ஸ்டாண்ட் அப் காமெடிகளோட தொகுப்பைப் படமா கொடுத்து, அதைக் காமெடி படம்னு சொல்றாங்க. சமூகத்தோட வேகமும், மனிதர்களோட அவசரமும் நம்மளோட இயல்பான ரசனையைக் கொன்னுக்கிட்டு இருக்கு. முன் பின் அரசியல் தெரியாம ஒரு விஷயத்தைக் கொண்டாடுறாங்க, உதாசீனப்படுத்துறாங்க. அடுத்தநாளே ஈஸியா வேற ஒரு விஷயத்துக்குத் தாவிப் போயிடுறாங்க. இதெல்லாம் எங்கேயாவது ஒரு புள்ளியில உடையும்ல... அதை இனி வர்ற இயக்குநர்கள் பண்ணுவாங்கனு நம்பிக்கை இருக்கு. தவிர, தமிழ்சினிமாவுல இன்னும் நல்ல கதைகளைப் படமாக்குற சூழல் வரணும். நல்ல சினிமாவைக் கொண்டாடுற கூட்டம் ஆன்லைன், தமிழ்ராக்கர்ஸ்ல அடஞ்சு கெடக்குறாங்க. ஒரு படத்தைத் தியேட்டர்ல பார்த்து கொண்டாடுற மனநிலை ரொம்பக் குறைஞ்சு போயிடுச்சு. கலாசார சினிமாக்கள் நிறையவே குறைஞ்சிருக்கு. எனக்கு, நான் சார்ந்த வாழ்வியலைத்தான் படமா எடுக்கணும்னு ஆசை. ஏன்னா, தமிழ்நாட்டுல பேசவேண்டிய, பாராட்டவேண்டிய கலாசாரம், பண்பாடு நிறைய இருக்கு; ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒரு வாழ்வியல் இருக்கு. நாம அவங்களோட தனித்தன்மையையும், பாரம்பர்யத்தையும் பேசாம, சாதிப்பெருமைகளா பேசிக்கிட்டு இருக்கோம். அதை சீக்கிரமே மாத்தணும்."

“மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரைப் பற்றிய உங்க நினைவுகள்...?”

“பாலசந்தர் மேல தீராக் காதல் அவரோட பணிபுரிந்த எல்லோருக்கும் இருக்கும். நான் இயக்குநரா அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடியும் சரி, இயக்குநர் ஆனபிறகும் சரி... என்மேல அவருக்கு இருந்த அக்கறை அதிகம். ‘இனி சீரியல் பண்ணமாட்டேன்; சினிமாதான் எடுப்பேன். என்னை நீங்க தொந்தரவு பண்ணக்கூடாது... ஏன்னா, நீங்க கூப்பிடும்போது, என்னால மறுக்கமுடியாது’னு அவர்கிட்ட சொன்னேன். 'சரி, கூப்பிடமாட்டேன் போ... ஆனா, நாளைக்குக் காலையில என் வீட்டுக்குப் போ'னு சொன்னார், போனேன். ‘படம் முடியிறவரை, உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் கொடுக்கணும்னு அவர் சொல்லியிருக்கார். எந்தத் தேதியில கொடுத்தா உங்களுக்கு வசதியா இருக்கும்’னு பாலசந்தர் சாரோட மகள் புஷ்பா சொன்னாங்க. மறுபடியும் பாலசந்தர் சாரை மீட் பண்ணேன். ‘மளிகை, வீட்டு வாடகை எல்லாம் சேர்த்து மாசத்துக்கு இவ்வளவு ஆயிடும்ல... அதான், கொடுக்கச் சொன்னேன். நான் உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன்; உங்க வீட்டுலேயும் உன்னைத் தொந்தரவு பண்ணக்கூடாதுல்ல’னு சொன்னார். பிறகு, ‘ரெட்டச்சுழி’ படத்துக்காக ஷங்கர் சார்கிட்ட சம்பள செக்கை வாங்கிட்டுப் போய், அவர்கிட்ட கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு, ‘போதும்... இனிமே நீங்க பணம் கொடுக்கவேணாம்’னு சொன்னேன். முதல் படத்தை மட்டுமில்ல, என்னோட ஒவ்வொரு படமும் அவருக்கான சமர்ப்பணம். என் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டவனாதான் இருப்பேன்."