Published:Updated:

``ஹீரோயின்ஸ்கிட்ட மட்டும் ஏன் `அந்தக்’ கேள்வியைக் கேட்கிறீங்க..?’’ - ப்ரியா ஆனந்த்

சனா
``ஹீரோயின்ஸ்கிட்ட மட்டும் ஏன் `அந்தக்’ கேள்வியைக் கேட்கிறீங்க..?’’ - ப்ரியா ஆனந்த்
``ஹீரோயின்ஸ்கிட்ட மட்டும் ஏன் `அந்தக்’ கேள்வியைக் கேட்கிறீங்க..?’’ - ப்ரியா ஆனந்த்

'' ஒரு படத்துக்காக முதலில் கமிட் ஆகும் போது என்னால் அந்தப் படத்திலிருந்து என்ன கத்துக்க முடியும் என்று யோசித்துதான் கமிட் ஆவேன். ஏதோ சினிமா துறைக்கு வந்தோம், தினம் ஷூட் போவோம்கிற எண்ணம் எனக்கு கிடையாது. அதற்காக நான் படத்தில் நடிக்க வரவில்லை. நம்ம ஃபேமஸாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சில படங்களில் கமிட் ஆக மாட்டேன். க்ரியேட்டிவ்வாக ஏதாவது இருக்க வேண்டுமென்று நினைப்பேன். என்னுடைய படங்கள் மீது மட்டும்தான் என்னுடைய முழுகவனத்தையும் செலுத்துவேன். சில படங்கள் பார்த்துவிட்டு இந்த கேரக்டர் நம்ம செய்து இருந்தால் நன்றாக இருக்குமென்று கூட பொறாமை படமாட்டேன். நல்ல குவாலிட்டியான படங்களில் நான் நடித்திருப்பது எண்ணி மகிழ்ச்சியடைவேன்..’’ என்று பக்குவமாய் பேச ஆரம்பிக்கிறார் நடிகை ப்ரியா ஆனந்த். 

தமிழ் சினிமாவில் பெண்களுக்கான அங்கீகாரம் கிடைத்து விட்டதாக நினைக்கிறீர்களா?

’’பல மொழி படங்களில் நான் நடித்திருக்கிறேன். அதிலும், தமிழில் பெண் இயக்குநர்கள் எடுத்த மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். எப்போதும் பெண் இயக்குநர்கள் வழக்கத்துக்கு மாறாக க்ரியேட்டிவாக இருப்பார்கள். நிறைய விஷயங்களை அவங்க நிர்பந்தித்து இருக்கிறார்கள். பெண் இயக்குநர்கள் என்றால் ரொமான்டிக் காதல் கதைகள்தான் எடுப்பார்கள் என்று இல்லாமல் சீரியஸான படங்களையும் எடுத்து இருக்கிறார்கள். உதாரணத்துக்கு 'விக்ரம் வேதா' ஸ்க்ரிப்ட் சொல்லலாம். நிறைய பெரிய டைரக்‌டர்ஸ் பண்ண முடியாத விஷயத்தை அவங்க இந்தப் படத்தில் அழகாக செய்து இருக்கிறார்கள். ‘இறுதிச்சுற்று’ படத்தின் இயக்குநர் சுதா க்ரியேட்டிவான ஒரு விஷயத்தை சொல்லி இருந்தாங்க. கிருத்திகா உதயநிதி ரொம்ப திறைமையான இயக்குநர். ஷோ, இந்த அளவுக்குத் திறமையான பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இருப்பது ஆரோக்கியமான ஒன்று.’’ 

இந்திப் படங்களில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்க?

’’என்னுடைய முதல் இந்திப் படம் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'. இந்தப் படத்துக்குப் பிறகுதான் எனக்கு இந்திப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இந்தப் படத்துக்காக எனக்கு நல்ல பெயரும் கிடைத்தது. அதற்கு பிறகு இந்தியில் 'புக்ரே' பண்ணினேன். இந்தப் படம் வெற்றி அடைந்து நல்ல வசூலை தந்தது. எனக்கு மொழி ஒரு பிரச்னையில்லை. தற்போது ’புக்ரே ரிட்டன்ஸ்’ திரைப்படத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. தமிழ் ஹீரோயின்ஸ் இந்திக்கு போகும் போது அங்கு இருப்பவர்கள் நம்மை நன்றாகவே வரவேற்கிறார்கள். தமிழில் நிறைய படங்கள் செய்து இருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் படம் பண்ணி இருக்கிறேன்.’’

நிவின் பாலியுடன் நடிக்கும் 'காயங்குளம் கொச்சுண்ணி' படம் பற்றி?

’’இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும். என் கெரியர் ஆரம்பிக்கும் போது எல்லோரும் எந்த மாதிரியான படங்கள் பண்ணணும்னு கேட்டபோது பீரியட் ஃபிலிம் பண்ணணும்னு சொல்லி இருக்கேன். 'காயங்குளம் கொச்சுண்ணி' ஒரு பீரியட் படம். உண்மை சம்பவம் ஒன்றை தழுவி எடுக்கப்படுகிறது. 

மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில், பெரிய படமாக, சிறந்த டெக்னீஷியன் கொண்டு உருவாக்கப்படுகிறது. நிவின் பாலியை எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அவருடைய படங்கள் எல்லாம் நான் பார்த்து ரசித்து இருக்கிறேன். மலையாள ஆக்டர்ஸ்கூட நடிப்பது நல்ல விஷயம். ஏன்னா, ரியலாகவே அவர்களிடமிருந்து நடிப்பு கொட்டும். ஒரு சினிமாவில் நடிப்பது போலவே இருக்காது. நிவின்பாலியுடன் நடித்ததும் நல்ல அனுபவமாக இருந்தது. நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து கத்துக் கொண்டேன். 

இப்போது மோகன்லாலும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். என் கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருக்கிறது. மலையாள படத்தில் ஸ்டோரிக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும். அதே முக்கியத்துவம் படத்தின் ஹீரோயினுக்கும் கொடுப்பாங்க. ஜான்கி என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறேன். சின்ன வயதில் என் பாட்டி கதை சொல்லும் போதே இந்தப் படத்தின் கதையை எனக்குச் சொல்லி இருக்காங்க. அதனால் என மனசுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது இந்தக் 'காயங்குளம் கொச்சுண்ணி'.’’

’எதிர்நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிச்சிருந்தீங்க, இப்போது சிவா வளர்ச்சியை பார்க்கும் போது என்ன தோணும்?

’’சிவகார்த்திகேயனுடன் நடிச்சதை நினைத்து ரொம்பப் பெருமைப்படுறேன். ஏன்னா, எந்த பேக் கிரவுண்டும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து டாப் ஹீரோவாக நிற்பது சாதாரணமான விசயம் இல்லை. சிவகார்த்திகேயன் வெற்றி அவருக்கே ரொம்ப மகிழ்ச்சியைத் தரும். ஏன்னா, இது முழுக்க முழுக்க அவருடைய சக்ஸஸ். ஆடியன்ஸூம் அவரை அவங்க வீட்டு பிள்ளையாக நினைத்து சப்போர்ட் பண்ணுறாங்க. அவரும் அவரை மெருங்கேற்றிக் கொண்டே வருகிறார். 

யாராக இருந்தாலும் ரொமான்டிக் சீன் பண்ணும் போது கொஞ்சம் சங்கடம் இருக்கும். அது முதல் பாடலாக இருந்தாலும் சரி நூறாவது பாடலாக இருந்தாலும் சரி. 'எதிர் நீச்சல்' பாடல் ஷூட்டிங் போது நானும் சிவாவும் கொஞ்சம் ஷையாக ஃபீல் பண்ணினோம். ஆனால், அந்தப் பாட்டு நல்ல ஹிட் அடித்தது. அதற்கு முழுகாரணம் பிருந்தா மாஸ்டர்தான். ஏன்னா, சிவாவை ஒவ்வொரு மூவ்மென்ட்டிலும் வேறு மாதிரி காட்டணும்னு அவங்க ரொம்ப மெனக்கெட்டாங்க. காமெடி மாதிரி எதுவும் இருக்கக் கூடாதுனு முழு ஹீரோவாக அந்த பாட்டில் பிருந்தா மாஸ்டர் காட்டுனாங்க. அனுபார்த்தசாரதியும் அவங்க பங்குக்கு ஏற்ற மாதிரி சிவாவின் காஸ்ட்டியூமில் நிறைய அக்கறை எடுத்துக்கிட்டாங்க. பாலிவுட் ஸ்டைலில் அந்தப் பாட்டுக்கு காஸ்ட்டியூம் பண்ணுனாங்க. அனிருத் மியூசிக், வேல்ராஜ் சார் ஒளிப்பதிவு என எல்லாமே 'வெளிச்சப் பூவே' பாட்டுக்குக் கிடைத்த வெற்றி.’’

சினிமாவுக்கு நடிக்க வந்து பலவருடங்கள் ஆகிவிட்டன இன்னும் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் வரமுடியவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

’’கண்டிப்பாக இல்லை, டாப் ஹீரோயின்ஸ் எல்லோரும் கமர்ஷியல் படங்கள்தானே பண்ணுறாங்க. நான் பண்ணுற படங்கள் எனக்கு திருப்தியாக இருக்கிறது. ஏன்னா, நான் தேடுறது வேற, அவங்க பண்ணுறது வேற. அதனால், எந்த நிலையிலும் ஃபீல் பண்ணியதே இல்லை.’’

'கூட்டத்தில் ஒருத்தன்' படத்துக்குப் பிறகு தமிழில் உங்கள் என்ட்ரி எப்போது இருக்கும்?

’’தெரியலையே. 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்தில் அதிகாரபூர்வமாக கையெழுத்து பண்ணும் போதே, ஆறு மாசத்துக்கு வேற எந்த படத்திலும் கமிட் ஆக கூடாதுனு சொல்லிட்டாங்க. மார்ச் வரைக்கும் ஷூட்டிங் போகும். அதற்கு பிறகு மற்ற படங்களுக்காக ஸ்டோரி கேட்கணும்னு இருக்கேன். நிறைய படங்கள் பண்ணிக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா ஆடியன்ஸ் நம்மை மறந்துருவாங்கனு எனக்குள்ளே எந்த பிரஷரும் இல்லை. அதனால், பிடித்த கதையைத் தேர்ந்தேடுத்து பண்ணுவேன்.’’

திருமணம் எப்போது?

’’ஒரு யங் ஹீரோவிடம் திருமணம் எப்போதுனு யாரும் கேட்க மாட்டாங்க. ஹீரோயின்ஸ்கிட்ட மட்டும் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்குறாங்கனு தெரியலை. நிறைய வீடுகளில் பெண்கள் வேலைக்குப் போய் குடும்பத்தை காப்பாத்துறாங்க. அவங்களை ஏன் ஒரு இடத்தில் கட்டிப் போடணும். ஸோ, என் திருமணம்  இப்போதைக்கு இல்லை.’’ 

'காயங்குளம் கொச்சுண்ணி'  படத்தில் உங்களோட கெட்டப் வித்தியாசமாக இருக்கே... அதைப் பற்றிச் சொல்லுங்க..?

’’இந்தப் படத்தில் 'முதல் மரியாதை' படத்தில் ராதா மேம் எந்த மாதிரி ட்ரெஸ் பண்ணி இருந்தாங்களோ அதே மாதிரி ஒரு ட்ரெஸ்தான் யூஸ் பண்ணியிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னைத் தவிர வேற யாரும் லேடிஸ் இல்லாததால், அந்த ட்ரெஸோடு நடிக்கிறது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஏன்னா, என்னைச் சுற்றி எல்லோரும் பசங்க. அந்த கெட்டப்பில் என்னைப் பார்க்கும் போது எனக்கே ரொம்ப சிரிப்பு வந்தது. 

அதற்கு அப்புறம் ஒரு ஃபுல் வில்லேஜ் செட்டில் ஷூட்டிங் போச்சு. அப்போது என் கெட்டப்பில் அங்கே நிறைய பெண்கள் இருந்தாங்க. அப்போ, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஷப்பா, நமக்கு செட் கிடைச்சுருச்சுனு ஃபீல் வந்துருச்சு. ஒரு வித்தியாசமான ஷூட்டிங் அனுபவத்தை இந்தப் படம் எனக்கு கொடுத்திருக்கு’’ என்று உற்சாகமாக விடைபெற்றார் நடிகை ப்ரியா ஆனந்த்.