Published:Updated:

“ ‘தனி ஒருவன் - பார்ட் 2 கம்மிங் சூன்... கம்மிங் சூன்!” - ‘ஜெயம்’ ரவி

சனா
“ ‘தனி ஒருவன் - பார்ட் 2 கம்மிங் சூன்... கம்மிங் சூன்!” - ‘ஜெயம்’ ரவி
“ ‘தனி ஒருவன் - பார்ட் 2 கம்மிங் சூன்... கம்மிங் சூன்!” - ‘ஜெயம்’ ரவி

“என் மகன் ஆரவ்வுடன் இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெரிய சந்தோஷம். முதலில் அவன் எப்படி நடிப்பான் என்று பயந்தேன். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரவ் நடிப்பை பார்த்து நானே ஆச்சர்யப்பட்டேன்...’’ என்று பெருமையுடன் பேச ஆரம்பிக்கிறார் 'டிக் டிக் டிக்' படத்தின் நாயகன் ஜெயம்ரவி. படத்தின் ரிலீஸ் வேலையில் பிஸியாக இருந்த ரவியிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

‘டிக் டிக் டிக்’ கதையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? 

“டைரக்டர் சக்தி மேல் இருந்த நம்பிக்கைதான் ‘டிக் டிக் டிக்' படத்தில் நான் நடிக்க காரணம். எந்த மாதிரியான நம்பிக்கை என்றால் நாங்க எப்போதும் ஒரே மாதிரியாகவே யோசிப்போம். அப்படி இருக்கின்ற நபர்களால் மட்டுமே சேர்ந்து படங்கள் பண்ண முடியும். இது ‘மிருதன்’ படத்தில் அவர் மேலே எனக்கு ஏற்பட்டது. சினிமாவில் வித்தியாசமான ஒன்றை செய்யணும்கிற எண்ணம் எனக்கும், அவருக்கும் இருந்தது. அவர் கூட சேர்ந்து படம் பண்ணினால் நன்றாக இருக்கும்னு தோணுச்சு. அவருடைய 'நாய்கள் ஜாக்கிரதை' படம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அது மாதிரி ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். அதனால் மிருதன் படம் பண்ணினேன். சக்தி முதலில் டிக் டிக் டிக் கதையை என்னிடம் சொன்னபோது, ‘ஒரு சின்ன கதை அதற்கு நேர் எதிராகப் பெரிய கதை என ரெண்டு கதைகள் என்னிடம் இருக்கு. எதை சொல்லட்டும்’னு கேட்டார். நான் அவரிடம், ''இப்போது எல்லாம் நூறு படங்கள் பண்றது ரொம்ப கஷ்டம். அதனால், ஒரு படம் பண்ணினாலும் பத்து படத்துக்கு சமமாக இருக்கணும்னு பெரிய கதையைக் கேட்டேன். அப்படித்தான் 'டிக் டிக் டிக்'கதையை தேர்ந்தேடுத்தேன். கண்டிப்பாக இது பத்துப் படத்துக்கு சமமாக இருக்கும். ஏன்னா, பத்து படத்துக்கு தேவையான உழைப்பும், எனர்ஜியும் இந்த ஒரு படத்துக்காக போட்டிருக்கேன். 

உங்கள் பையன் ஆரவ் உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

“அவருடன் நடித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஏன் இப்படி சொல்றேன்னா, சில பேருக்குதான் இந்த மாதிரியான வாய்ப்புகள் அமையும். அது எனக்கும் அமைந்து இருக்குனு நினைக்கும் போது முதலில் இதை ஏற்று கொண்ட ஆடியஸூக்கு நன்றி சொல்லணும். இந்த வாய்ப்பை அமைத்து கொடுத்த டீம்முக்கும், கடவுளுக்கும் பெரிய நன்றி. என் பையன் என்னுடன் நடிக்கும் போது ரொம்ப ஹாப்பியாக இருந்தேன். நான் நடிக்கும்போது என் நம்ம அம்மா, அப்பாவும் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பாங்கனு இப்போதான் எனக்குப் புரியுது.

ஆரவ் ரொம்ப ஸ்போட்டிவான ஆள். படத்தையும் ரொம்ப ஸ்போட்டிவாக எடுத்துக்கொண்டுதான் நடித்தார். எங்களுக்கு ரொம்ப பிரஷர் எல்லாம் கொடுக்கவில்லை. அசால்ட்டாக அப்படியே பண்ணிட்டு போய்ட்டான். டப்பிங் போகும் போது இன்னும் ஆச்சர்யம் இருந்தது. அதாவது, நம்ம பேசி இருக்கிற சிங்க்கு ஏத்த மாதிரி பேசணும். அது ரொம்ப கஷ்டமான விஷயம். நான் நடிக்க வந்த புதியதில் எப்படி பேசணும் அப்படிங்குறதை மற்றவர்கள் பேசும் போது ஒழிஞ்சிருந்து எல்லாம் பார்த்து இருக்கேன். அப்படிதான் நான் கத்துக்கிட்டேன். இவர் போனவுடனே அப்படியே அதை கரெக்டாக ஃபாலோ பண்ணி பேச ஆரம்பித்து விட்டார். அது நான் ஆச்சர்யப்பட்ட விஷயம். இந்த தலைமுறையே அப்படிதான் இருக்கு எதுவாக இருந்தாலும் சீக்கிரம் கற்றுக்கொள்கிறார்கள். 

ஆரவ் நடிக்க வந்ததற்கு ஆர்த்தி என்ன சொன்னாங்க?

“ஸ்கூல் லைப் கெட்டு போயிரும்னு முதலில் தயங்குனாங்க. ஏன்னா, அவனுடைய பெஸ்ட் மெமரிஸ் எல்லாம் ஸ்கூலில்தான் இருக்கும். ஆக்ட்டிங்னு வந்துவிட்டால் ரொம்ப கஷ்டம்னு யோசிச்சாங்க. அவங்ககிட்ட, “இந்த ஒரு படம் மட்டும்தான் மா. நானும் ஸ்கூல் படிக்கும் போது குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருக்கேன். என்னை எந்த விதத்திலும் அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனால், இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்க வைப்போம். நல்லா இருக்கும்''னு சொல்லி சமாதானப்படுத்தினேன். இப்போது, ஆரவ்வை திரையில் பார்க்கும் போது என்னை விட ஆர்த்திதான் அதிகமாக சந்தோஷப்படுறாங்க. 

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் ஆரவ் கேரக்டர் பெயர் ரவி. இது தானாகவே அமைந்துவிட்டது. இந்தப் பெயரை டைரக்‌டர் சக்திதான் செலக்ட் செய்தார். எதற்காக வைத்தார்னு தெரியவில்லை. என்னிடம் 'ரவினு பேர் இருந்தால் நன்றாக இருக்கும்''னு சொன்னார். சரினு சொல்லிட்டேன். ஏதோ ஒரு விஷயம் சப் கான்ஷியஸாக அதில் வந்து இருக்குனு நினைக்குறேன். ஆரவ்வுக்குத் தொடர்ந்து 10,15 படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இப்போதைக்கு வேண்டாம் னு சொல்லி இருக்கிறோம். பட், கூடிய சீக்கிரம் கடகடனு வளர்ந்து விடுவான். நிச்சயம் நல்ல படங்களில் ஆரவ் நடிப்பார்.’’

‘டிக் டிக் டிக்’ செட் பற்றிச் சொல்லுங்க..? 

“இந்தப் படத்தின் முக்கிய அம்சமே செட்தான். ஏன்னா, வேற எந்தப் படத்திலும் இருந்த செட்டை எடுத்து இந்தப் படத்தில் வைக்க முடியாது. விண்வெளியை இந்தப் படத்துக்காக க்ரியேட் பண்ணி இருக்கிறோம். விண்வெளியுடைய ஷேப், சைஸ் என சின்ன விஷயம் கூட மிஸ் ஆகாமல் அதன் அளவிலேயே பண்ணிருக்கோம். செட்டில் இருக்கும் சின்ன ஸ்கொயர் பிட்டில் கூட நிறைய விஷயங்கள் இருக்கும். அது எல்லாம் பண்றது சாதாரண விஷயம் இல்லை. 

ஆர்ட் டைரக்டர் மூர்த்திக்கு மன அழுத்தம் அதிகமாகிடுச்சு. ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகுற அளவுக்குப் போயிட்டார். உண்மையாகவே இந்தப் படத்தின் டீம் அவருக்கு கடமைப்பட்டு இருக்கு. அவருடைய இந்த சின்சியாரிட்டி அவருடைய எல்லா படங்களிலும் தொடர வேண்டும். 

முதல் நாள் செட்டுக்குள்ளே போகும் போது எதுவுமே எனக்குப் புரியவில்லை. எப்படி செட் குள்ளே போகணும். வெளியே வரணும்னு தேடினேன். மத்தவங்ககிட்ட கேட்ட அசிங்கமாயிருமேனு நினைத்தேன். செட்டில் கதவு கூட இல்லை. போல்ட் எல்லாத்தையும் பிரித்துதான் வெளியே போக முடியும். ஏன்னா, 360 டிகிரி செட் அது. கேமரா எல்லா இடத்திலயும் இருந்தது. செட்டுக்குள்ளே ஆர்டிஸ்ட் எல்லோரும் போனவுடன் அடைச்சிருவாங்க. அதுகுள்ள மூச்சு விடுறதே கஷ்டம். சாப்பிடுறது ரொம்ப கஷ்டம். 

அந்த செட்குள்ளே புவி ஈர்ப்பு சக்தி இல்லாமல் தொங்குற மாதிரி சீக்வென்ஸ் நிறைய இருக்கும். அதுக்கு அவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்கோம். அதை வார்த்தையால் சொல்ல முடியாது. மொத்தப் படமும் நாங்க 58 நாளில் முடிச்சோம். அதில் 38 நாள் செட்டுக்குள்ளே வொர்க் பண்ணி இருக்கோம். இந்தப் படத்துக்காக மொத்தம் மூணு செட் போட்டோம். நிலாவை அப்படியே செட்டில் போட்டோம். நடக்காத பல விஷயங்களை இந்தப் படத்தில் சாத்தியமாக்கியிருக்கோம்.’’

‘மாமியார் தயாரிப்பில் மருமகன்’ எப்படி இது அமைந்தது?

“நானும், என் மாமியாரும் நான்கு வருடங்களாகவே ஒரு படம் பண்ணணும்னு பேசிட்டே இருந்தோம். ‘நான் கேட்ட ஒரு கதை நல்லா இருக்கு, நீங்களும் கேட்டுட்டு சொல்லுங்க’னு சொன்னாங்க. கதை சொன்ன டைரக்டர் கார்த்தி எனக்கு ரொம்ப வருஷமாய் பழக்கம். இடையில் கொஞ்ச நாள் காணாமல் போயிருந்தார். அப்புறம் வந்து அவருடைய சோகக்கதை எல்லாம் சொல்லிட்டு அதற்கு அப்புறம் ‘அடங்கமறு' கதையைச் சொன்னார். பிடிச்சிருச்சு. அப்புறம் அப்படியே ஷூட் போயிட்டோம். 

இந்தப் படத்தை எமோஷனல் த்ரில்லராக பார்க்கலாம். மாமியார்தான் தயாரிக்குறாங்க. அண்ணாநகரில் இரவு நேரங்களில் படத்தின் ஷூட் போயிட்டு இருக்கு. எல்லோருக்கும் பிடித்தமான கதையாக இந்தப் படம் இருக்கும். சாம் சி.எஸ்.தான் படத்துக்கு மியூசிக் பண்ணுறாங்க. இந்தப் படத்தில் எமோஷனல் காப் ரோல் பண்ணுறேன். இதுக்கு மேலே இந்தப் படத்தை பற்றி எதுவும் சொல்ல முடியாது.’’

உங்கள் அண்ணன் மோகன் ராஜாவுடன் ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வருகிறதே?

“கண்டிப்பாக அந்த நியூஸ் உண்மைதான். என்னுடைய 25வது படத்தை அண்ணன்தான் டைரக்‌ஷன் பண்ணப் போறார். என் முதல் படத்தின் போதே அண்ணன் என்னிடம் சொல்லிவிட்டார், ‘கண்டிப்பாக 25 ஆவது படம் எனக்குதான்’னு. ரொம்ப சந்தோஷமான விஷயம் இது.''

அந்தப் படம் ‘தனி ஒருவன் பார்ட் 2'வாக இருக்குமா?

“அண்ணன் கூட சேர்ந்து பண்ண போற படம் ‘தனி ஒருவன் 2’வானு தெரியல. அப்படிதான் யோசிக்குறதாக அண்ணன் என்கிட்ட சொன்னார். பட், அது போலீஸ் ஸ்டோரியாக இருக்குமானு தெரியல. இரண்டு லைன் அண்ணன் வைத்திருக்கிறார். அதில் எதை செலக்ட் செய்ய போறார்னு தெரியல. கூடிய சீக்கிரம் என்கிட்ட ஃபுல் ஸ்டோரியாக சொல்லுவார்.’’

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன?

“நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமாக நடந்துவரும் விஷயம்தான். அவங்க அரசியலுக்கு வருவதில் எந்த தப்பும் கிடையாது. சினிமாவிலும், அரசியலிலும் என்ட்ரி ஈஷி. பட், நீடிக்குறது கஷ்டம். சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க திறமை அவசியம். அரசியலில் திறமையை மீறி நாம் செய்யப் போற விஷயத்தை க்ளீயராக சொல்லணும். அது பிடித்திருந்தால் மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம் தப்பே இல்லை. நம்ம ஓட்டு போடுற வேலையை கரெக்டாக செய்யணும்.’’

உங்களுடை அரசியல் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா?

“எனக்கு இருக்கிற வேலையை ஒழுங்காக செய்தாலே போதும். பட், நல்லது செய்யுறதை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். நான் சினிமாவில் இருந்துட்டே அதை செய்கிறேன்.”

நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வசூல் செய்வது சரியா?

“என்ன பொறுத்தவரைக்கும் ஃப்ரீயாக எதை பண்ணினாலும் தப்புதான். இது கலை நிகழ்ச்சிகள்தானே. ஒரு சர்வீஸூக்காக கிடைக்கிற சன்மானமாகத்தான் நான் பார்க்குறேன். பிடிச்சவங்க வரலாம், பிடிக்காதவங்க வராமல் இருக்கலாம். இது ஒரு தப்பான விஷயமாக நான் பார்க்கவில்லை.

‘சங்கமித்ரா’ ஷூட்டிங் எப்போது?

“ ‘சங்கமித்ரா’ படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வொர்க் நடந்துக்கிட்டு இருக்கு. தயாரிப்பாளர், டைரக்டர் இரண்டு பேருமே என்கிட்ட, “சீக்கிரம் ஷூட்டிங் தேதியை சொல்கிறோம்”னு சொல்லி இருக்காங்க. அதற்காக நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அந்த டீம்மில் முழுமூச்சோடு இணைய துடித்து கொண்டு இருக்கிறேன்” என்றார்.