Published:Updated:

“இந்தக் கதை ரீமேக்னு சொன்னதும் டென்ஷன் ஆயிட்டார் அனிருத்!”

சுஜிதா சென்
“இந்தக் கதை ரீமேக்னு சொன்னதும் டென்ஷன் ஆயிட்டார் அனிருத்!”
“இந்தக் கதை ரீமேக்னு சொன்னதும் டென்ஷன் ஆயிட்டார் அனிருத்!”

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி, இந்தப் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'.

இந்தப் படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது. சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், கலையரசன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் எனப் படக்குழுவைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு அலங்கரித்த அரங்கை, சூர்யாவின் ரசிகர் கூட்டமும் தானாக சேர்ந்து மாஸ் கூட்டியது.

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா கூறியதாவது, “ஆந்திராவுல தொடர்ந்து நான்கு நாள்கள் புரமோஷனுக்காகப் போயிருந்தோம். விக்னேஷ்சிவன் மற்றும் சூர்யா சாரும் கூட வந்திருந்தாங்க. ஆடியன்ஸ்கிட்ட இருந்து செம்ம ரெஸ்பான்ஸ். குறிப்பா அனிருத் பாடல்களுக்குத் திரண்ட ரசிகர்களைப் பார்க்க முடிஞ்சது. அதுமட்டுமல்லாம, கர்நாடகா மற்றும் கேரளாவுலகூட படம் பயங்கர ஹிட் ஆயிருக்கு. படத்தோட ஆர்ட் டைரக்டர் ரவிவர்மனுக்கு நன்றி. வெற்றிக்கு வழிவகுத்த அனைவருக்கும் நன்றி" என்றார். 

நடிகர் கலையரசன், “இந்தப் படத்துல என்னுடைய கதாபாத்திரத்தைப் பத்தி சொன்ன உடனேயே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஞானவேல் சார் 'மெட்ராஸ்' படத்துல இருந்து எனக்கு பெரிய சப்போர்ட்டா இருக்கார். எல்லாருக்கும் நன்றி." என்று கூறினார். மேலும் நடிகர் நந்தா இப்படத்தைப் பற்றி கூறுகையில், " 'மௌனம் பேசியதே' படத்துக்கு அப்பறம் 15 வருடம் கழிச்சு சூர்யா சாரோட நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நான் 'நானும் ரௌடிதான்' படத்தோட மிகப்பெரிய ஃபேன். ஸோ, 'தானா சேர்ந்த கூட்டம்' பத்தி சொல்லவா வேணும்? என் மனசுக்கு நெருக்கமான படங்கள்ல இதுவும் ஒண்ணு." என்றார். 

அனிருத் இப்படத்தைப் பற்றி பேசுகையில், " 'நானும் ரௌடிதான்' படத்துல பாடல்கள் வெற்றியடைந்ததை அடுத்து, இந்தப் படத்துல விக்னேஷ்சிவனோட சேர்ந்திருக்கேன். எங்களுக்குள்ள அப்படி என்ன கெமிஸ்ட்ரினு தெரியலை. பாடல்கள் எப்போதுமே நெனச்ச மாதிரி வெளிவருது. இந்தப் படத்தைப் பத்தி திரும்புற பக்கமெல்லாம் பாசிட்டிவ் கமென்ட்ஸ் சொல்றாங்க. அதுதான் இந்தக் கூட்டத்தோட வெற்றி." என்றார். 

அடுத்ததாக மைக்கைப் பிடித்த விக்னேஷ்சிவன், "எங்களால எந்த அளவுக்கு கடினமா உழைக்க முடியுமோ, அந்த அளவுக்கு உழைப்பை இந்தப் படத்துக்குக் கொடுத்துருக்கோம். தியேட்டர்கள்ல ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறதைப் பார்க்கும்போது, நாங்க எல்லோரும் எப்படி உணர்ந்தோம் என்பதை வார்த்தைகளால் சொல்லமுடியல. அவ்வளவு சந்தோசம். சூர்யா சார்தான் எங்களுக்குப் பக்கபலம். அவர் எந்த படத்துல நடிச்சாலும் சரி, அவரோட 100 சதவிகித உழைப்பையும் வெளிப்படுத்துவார். நிறைய ஆக்ஷன் காட்சிகள்தான் படம் முழுக்க இருந்துச்சு. அதனால சூர்யா சாரோட எளிமையான பக்கத்தை இதுல காட்டமுடியாம போச்சு.

முதல்ல அனிருத்கிட்ட 'ஸ்பெஷல் 26' கதையை மையமா  வெச்சுத்தான் படம் பண்றோம்னு சொன்னதும் கொஞ்சம் டென்ஷனாகிட்டார். 'என்ன ப்ரோ... அந்தப் படத்துல பாட்டே இல்லையே'னு கேட்டார். நாங்க போறபோக்குல சில பாடல்களைப் படத்துக்குள்ளே சேர்த்துக்கிட்டோம். இதுல நடிச்ச கலையரசன், இந்தப் படத்தோட கதை என்னனுகூட கேட்கலை. அவர் இப்போ ரெண்டு படங்கள்ல ஹீரோவா நடிச்சுட்டு இருக்கார். அவரை ஒரு சின்ன ரோலுக்காகக் கூப்பிட்டோம். எதையும் பொருட்படுத்தாம ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ப்ரோ. இந்தப் படத்தோட டிரெண்ட் இன்னும் ரெண்டு நாள்ல முடிஞ்சுபோயிடும்... அதை நெனச்சா ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஸோ, எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி." என்றார். 

அடுத்ததாக, கைத்தட்டலும் விசிலும் பறக்க மேடை ஏறினார் சூர்யா. "இந்தப் படத்துல என் நடிப்பு ரொம்பவே மாறியிருக்கு. என்னை திரையில வித்தியாசமா காட்டியதுக்கு முழுக்காரணமும் இயக்குநர் விக்னேஷ்சிவன்தான். சில காட்சிகள்ல நடிக்கும்போது எந்த விஷயங்களை மிஸ் பண்ணேன்னு எனக்குத் தெரியாது. ஆனா, அதையெல்லாம் விக்னேஷ்சிவன் நோட் பண்ணி சரியா சொல்வார். அனிருத்தோட இசை நம்ம மாநிலத்தைத் தாண்டி அனைத்து மக்களையும் ரசிக்க வெச்சிருக்கு. செந்தில் சாருக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்குறதுனா ரொம்பப் பிடிக்கும். அந்த அளவுக்கு நடிப்பை விரும்புபவர். பொங்கலுக்கு என்னோட படம் ரிலீஸாகி எட்டு வருடம் இருக்கும். விழாக்காலத்துல தியேட்டர்ல ரசிகர்களோடு ரசிகனா இந்தப் படத்தை பார்க்கும்போது ரொம்பவே சந்தோஷப்பட்டேன். எப்போதுமே மீடியாவுக்கும், ஆடியன்ஸுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல அது இல்லைனு சொல்லலாம். நாளுக்கு நாள் இந்தப் படத்தோட கலெக்ஷன் அதிகமாகிட்டே போகுது. அதுக்காக எல்லாருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்." என்றார்.