Published:Updated:

“அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட... ஹீரோயின்களை இப்படித்தான் வரவேற்கும் சினிமா!” ரீமா கல்லிங்கல்

ரமணி வெ.மோ
“அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட... ஹீரோயின்களை இப்படித்தான் வரவேற்கும் சினிமா!” ரீமா கல்லிங்கல்
“அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட... ஹீரோயின்களை இப்படித்தான் வரவேற்கும் சினிமா!” ரீமா கல்லிங்கல்

ண்மையில் கேரளாவில் நடைபெற்ற டெட்எக்ஸ் (TedX) நிகழ்ச்சியில், நடிகை ரீமா கல்லிங்கல் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் திரைப்படத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வது குறித்து ரீமா வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவர் பேசிய உரையின் முக்கியத் தொகுப்பு... 

சிறுவயதில் ஒருநாள் என் குடும்பத்துடன் அமர்ந்து இரவு உணவினை உண்டுகொண்டிருந்தேன். தட்டில் மூன்றே மூன்று மீன் துண்டுகள்தான் இருந்தன. என் அம்மா, மூத்தவருக்கும் இரண்டு ஆண்களுக்கும் அந்த மீன் துண்டுகள் கிடைக்கும்படி செய்தார். 12 வயதுப் பெண்ணாக எனக்கு ஏன் அந்த மீன் துண்டுகள் கிடைக்கவில்லை என்பது தெரியாமல் மிகவும் வருந்தினேன். ஒருவேளை அம்மா வாழ்க்கை முழுக்க ஒரு மீன் துண்டைகூட சுவைக்காமல் இருந்திருக்கலாம். அங்கிருந்துதான் என்னுடைய கேள்விகள் தொடங்கின. 

என் பள்ளியில் தலைவருக்கான தேர்தல் நடந்தது. எங்கள் பள்ளியில் நான்கு ஹவுஸ்கள் இருந்தன. அதிக ஓட்டுகள் வாங்கும் ஆண் கேப்டனாகவும், அதிக ஓட்டுகள் வாங்கும் பெண் வைஸ் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார். இது அங்கே இயல்பான நடைமுறையாக இருந்தது. நாங்கள் அந்த சிஸ்டத்தை மாற்றினோம். அதன்பின், ஒவ்வொரு ஹவுஸும் ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் கேப்டனைப் பெற்றார்கள். நான் இப்படியே வாழ்க்கையும் இருக்கும் என்று நினைத்தேன். நாம் ஒன்றைக் கேட்கும்போது அது நமக்குக் கிடைத்துவிடும் என்று நம்பினேன். 

நான் வேலை பார்க்கத் தொடங்கிய இன்டஸ்ட்ரி, நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்களைத் தடை செய்யும். நான் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். டிவியிலும் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தேன். தியேட்டர் யூனியன் ஓனர், நான் அப்படிச் செய்ய முடியாது என்றார். 'ஏன் முடியாது?' என்று கேள்வி எழுப்பினேன். அவ்வளவுதான்... அதுகுறித்த எந்த விவாதமும் இல்லாமலே என்னைத் தடை செய்துவிட்டார்கள். அந்தத் தகவல்கூட செய்தியின் வாயிலாகத்தான் எனக்குத் தெரியவந்தது. நான் அதை எதிர்த்து நின்றேன். அந்தத் தடையை எதிர்த்து கேள்வி எழுப்பினேன். அதனைத் தாண்டியும் வந்தேன். நான் இன்னும் இங்கேதான் நிற்கிறேன். 

நான் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமே கேள்வி எழுப்பி வந்தேன். ஆனால், என் அம்மாபோல, என் ஆசிரியர்கள்போல, இந்த இன்டஸ்ட்ரியில் இருப்பவர்கள்போல நிறைய பெண்கள் கேள்விகளே எழுப்பாமல் வந்திருக்கிறார்கள். இந்தச் சமமின்மையே அவர்களுடைய வாழ்க்கையாகி இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரையும் நான் குற்றம் சொல்ல மாட்டேன். நான் இந்த இண்டஸ்ட்ரிக்கு வரும்போது குறுகிய வாழ்நாள், அட்ஜஸ்ட், சமரசம், சிரி, அடங்கி நட ஆகிய வார்த்தைகளால்தான் வரவேற்கப்பட்டேன்.

பெண்கள் எப்போதுமே நடிப்பதில் வல்லமை பெற்றவர்களாக இருக்கிறோம். நாம் எப்போதுமே இந்தச் சமூகம் விரும்பும் வேறொருவராக இருக்கும்படி சொல்லப்படுகிறோம். அதனால்தான், ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 150 பெண் நடிகர்கள் நடிக்க வருகிறார்கள். அதுவும், இந்த இன்டஸ்ட்ரியை ஆட்டிப்படைக்கும் 10 ஆண் நடிகர்களுக்காக. 150 பெண்களுக்கு இணையாக பத்தே பத்து ஆண் நடிகர்களைத்தான் கண்டுபிடிக்க முடிகிறது.

இன்னும் எத்தனை நாள்களுக்குதான் அடங்கி நடப்பது? இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் நாம் அமைதியாகவே இருப்போம்? அந்த அமைதியை உடைக்க இன்னும் எத்தனை நாள்கள் ஆகும்? பிப்ரவரி மாதம் என் தோழி மற்றும் சக ஊழியர் ஒரு காரில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இதனை வெளியே பேசினால் எத்தகைய பிரச்னைகள் வரலாம் என்பது தெரிந்தும், அவர் நீதி வேண்டி நின்றார். இதற்கு முன்பு அவர் வயதுடைய பெண்ணின்மீது கட்டமைத்து வைக்கப்பட்டிருந்த எல்லா ஸ்டீரியோடைப்புகளையும் உடைத்தார். அதுதான் என் அமைதியை உடைக்க செய்தது.

சோஷியல் மீடியா அப்யூஸ் என்பது அபாயகரமான நிலையை எட்டிவருகிறது. இங்கிருக்கும் யாராவது ஒருவர் ஆறுதல் அடைய வேண்டும் என்றால், ஒரு பெண் நடிகரின் ஃபோட்டோக்களுக்கு கீழே இடப்படும் பின்னூட்டங்களைப் படியுங்கள். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி ஒரு மகளாக, மருமகளாக, மனைவியாக நகர்த்த வேண்டும் எனச் சொல்லிக்கொடுக்கிறார்கள். எப்படி எல்லாம் எங்களை பாலியல் வன்புணர்வு செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

2017-ம் ஆண்டிலும் பெண் நடிகர்கள் சக ஆண் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் பெறுகிறார்கள். சேட்டிலைட் ரைட்ஸ், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் என்று எதிலுமே எங்களுக்குப் பங்கு கிடையாது என்று சொல்லப்படுகிறது. ஒரு வேலை எங்களுக்கு செட் டிசைனுக்காக எக்ஸ்ட்ரா ஃபர்னிச்சர்களை வாங்கிக்கொடுத்திருக்கலாம். அல்லது அவர்கள் எங்களையே ஒரு ஃபர்னிச்சர்களாக நினைத்திருக்கலாம்.

இந்தியாவிலேயே கேரளாவில்தான் ஆண் பெண் சம விகிதத்தில் ஆரோக்கியமான நிலை இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், கேரளாவின் எல்லா சினிமா செட்டிலும் ஆண் பெண் ரேஷியோ 1:30 என்கிற விகிதத்தில்தான் இருக்கிறது.

புரொடக்‌ஷனில் வேலைப் பார்ப்பவர்களால் நாங்கள் எவ்வளவோ பாலியல் துன்பங்களை, வன்முறைகளை அனுபவிக்கிறோம். 40% கேளிக்கை வரியினை அளிக்கும் இவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரியில் விசாக கமிட்டியின் பரிந்துரைகள் நிறுவப்படவில்லை.