Published:Updated:

“என் படத்தை ஆன்லைனில் போட, தமிழ் ராக்கர்ஸுக்கு நான் அனுமதி தர்றேன்!” மிஷ்கின் அதிரடி

அலாவுதின் ஹுசைன்
“என் படத்தை ஆன்லைனில் போட, தமிழ் ராக்கர்ஸுக்கு நான் அனுமதி தர்றேன்!” மிஷ்கின் அதிரடி
“என் படத்தை ஆன்லைனில் போட, தமிழ் ராக்கர்ஸுக்கு நான் அனுமதி தர்றேன்!” மிஷ்கின் அதிரடி

இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் 'சவரக்கத்தி'. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அந்த சந்திப்பில் இருந்து...

இயக்குநர் ராம் பேசுகையில், ``கைவிடப்பட்ட, எளிமையான, தன் வாழ்வை தக்கவைத்துக்கொள்கிற ஒருவன், தன்னை, தன் இருப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்காக கோபம் கொள்ளும் வேறொருவன், காது கேட்காதிருந்தும் மக்களை கேட்கக்கூடிய ஒரு பெண்... இவர்களைப் பற்றிய படம்தான் 'சவரக்கத்தி'. இதுவரை என் படங்களிலும் மிஷ்கின் படங்களிலும் நகைச்சுவை இருந்ததே கிடையாது. ஆனால் இந்தப் படம், முழுக்க முழுக்க நகைச்சுவைத் திரைப்படம். அதற்குக் காரணம் இதன் இயக்குநர் ஆதித்யா. அவருக்கு எல்லோரையும் சிரிக்க வைக்கத் தெரியும். மிஷ்கின் எழுதிய 11 கதைகளில் இந்தப்படம் மிக எளிமையான யதார்த்தமான திரைப்படம். ஒருவேளை மிஷ்கின் டைரக்ட் செய்திருந்தால் அவரது பாணியில் வழக்கமான படமாக மாற்றியிருப்பார். ஒவ்வொரு படம் முடியும்போதும் நாம் எதாவது கற்றுக்கொள்வோம். ‘சவரக்கத்தி’ என்னை மென்மையுடையவனாய், பொறுமையுடையவனாய்" என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் மிஷ்கின், "தமிழ் சினிமாவில் டைட்டில் போடுவது பெரும் சிக்கலான ஒன்றே. இங்கே வியாபாரத்துக்காக விளம்பரங்களில் என் பெயர் பெரிதாக அச்சடிக்கப்பட்டுள்ளன. அதற்காக எனது தம்பியும் எனது முன்னாள் உதவி இயக்குநரும் இந்தப் படத்தின் இயக்குநருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆறு வருடமாக என்னுடனே இருந்து, எனது படங்களில் அயராது உழைத்த, எனது உதவியாளன் ஆதித்யாவுக்காகத்தான் படம் கொடுத்துள்ளேன்.

‘அஞ்சாதே’ எழுதும்போதே அசிஸ்டென்ட் ஆகணும்னு கேட்டான். செருப்பைத் தூக்கி அடிச்சிட்டு, எனக்கு அசிஸ்டென்டா சேர எந்த தகுதியும் இல்லாதவன். அவனை ஆபீஸ் பக்கமே யாரும் சேக்கக்கூடாதுன்னு சொல்லிட்டேன். அப்போ போனவன் நான்கு படங்களில் வேலை பார்த்துவிட்டு, பார்த்திபனுக்கு உதவி இயக்குநராக இருந்துவிட்டு ஒரு வருடம் கழித்து வந்தான். 

இந்தப் படத்தால் எனக்கு ஒரு பைசா தேவையில்லை, ஒரு பைசா வரவுமில்லை. இது ஆரம்பித்து 16 மாதங்கள் ஆகிவிட்டன. இதற்காக நான் கட்டிய வட்டி மிக அதிகம். இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் லாபம் ஈட்டினால் போதுமானது. எனக்கு பெரிய லாபமே தேவையில்லை. எனக்கு அடுத்த வேளை சோறு இருந்தால் போதும். இது ரொம்ப நியாயமான திரைக்கதையுடைய திரைப்படம். எனது சொந்தத் தயாரிப்பு என்பதற்காக நான்கு குத்துப் பாடலை சேர்த்து எடுத்திருந்தால் படத்தை இன்னும் பெரிய விலைக்கு விற்றிருக்க முடியும்.

ராம், நான் கண்டெடுத்த மாணிக்கம். தன்னை பட்டைத்தீட்டிக் கொண்டே இருக்கிறான். சர்வதேச இயக்குநர்கள் எப்படி வாழ்கிறார்களோ அப்படியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். பல விருதுகளை வெல்லப்போகும் 'பேரன்பு' என்ற படத்தை எடுத்திருக்கிறான். அடுத்த வாரம் சர்வதேச படவிழாவில் அந்தப்படமும் திரையிடப்படவுள்ளது. நடிக்கும்போது பெரிய கஷ்டங்கள் பட்டான். க்ளைமாக்ஸ் காட்சியில் நடிக்கும்போது காலில் அடிப்பட்டுவிட்டது. இன்னும் அந்தக் காயம் ஆறவில்லை. ஆனாலும் படத்தை முடித்துக் கொடுத்தான்.

பூர்ணா மாதிரியான அர்ப்பணிப்புள்ள ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை. ஒருவேளை பூர்ணா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் போயிருந்தால் படம் வீணாகியிருக்கும். இந்தக் கதைக்காகவும், எனது படக் குழுவுக்காகவும் தன்னை வருத்திக்கொண்டு நடித்துக்கொடுத்தார். இந்தப் படத்துக்காக கெட்ட வார்த்தைகள் கூடிய கஷ்டமான வசனங்களைப் பேசி நடித்தார். டப்பிங்கிலும் மெனக்கெட்டு சுத்த தமிழில் பேசி இருக்கிறார். இவருக்கு முன் அந்தக் கேரக்டரில் நடிக்க நான்கு பெரிய நடிகைகளிடம் பேசினோம். நல்லவேளை அவர்கள் யாரும் நடிக்க சம்மதிக்கவில்லை. அதற்கு அவர்களுக்கு நன்றி. அவர்கள் நடித்திருந்தால் படம் கெட்டு குட்டிச்சுவராப் போயிருக்கும்.

இந்தப் படத்தை தியேட்டர்லதான் பார்க்கணும்னு நான் கெஞ்சமாட்டேன். பத்து விழுக்காடு திருட்டுத்தனமா பிடுங்கிப் பார்ப்பீங்க. என்னமோ ராக்கர்ஸ்னு சொல்லுவார்களே அவங்களும் போடுங்க. அவரவர் தங்கள் வேலைய நியாயமாப் பார்ப்போம். ஒரு படத்தை ஆயிரம்பேருடன் பார்ப்பது ஒரு கம்யூனல் ஈவென்ட். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி படங்களைப் பார்த்ததால்தான் நான் இன்று பிழைக்கிறேன். ஆயிரம்பேர் கஷ்டப்பட்டு ஒரு வருடகாலமா உழைத்த உழைப்பை திருடுற கூட்டம் இங்கே இருக்கும். அதைப் பார்க்கும் கூட்டமும் இங்கே இருக்கு. அதைத் தவிர 90 விழுக்காடு மக்கள் திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள். ஆண்டவனுக்குப் பிறகு அண்ணார்ந்து அந்த திரைச்சிலையைதான் நாம் பார்த்து மகிழ்கிறோம்” என்றார்.