Published:Updated:

'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு! #IFFC

மா.பாண்டியராஜன்
'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை...  இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு! #IFFC
'சிவபுராணம்' முதல் 'ரங்கபூமி' வரை... இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழா படங்களின் சிறப்பு! #IFFC

தமிழ் ஸ்டுடியோ இயக்கமும், சலனம் அறக்கட்டளையும் இணைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி (காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை) நடத்தும் இந்தியாவின் முதல் சுயாதீன திரைப்பட விழாவில் மொத்தம் 6 படங்கள் திரையிடப்படுகிறது. அந்தப் படங்களின் சிறப்பு என்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

1. சிவபுராணம்

கேரளாவில் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பற்றியும், உட்புகுந்த ஒரு அழகிய பெண்ணைப் பற்றியுமான கதை. படத்தில் ஒரு வசனம்கூட இல்லை, ஆனால் முதல் காட்சியில் இருந்தே படம் உங்களை இணைத்துக்கொள்ளும்."இந்த திரைப்படம் சார்லஸ் பாடல்லாரின், “the dancing serpent “ எனும் கவிதையின் ஈர்ப்பால் உண்டானது .அந்தக் கவிதை, ஒரு  பெண்ணின் உடல் அழகை விவரிக்கும். தமிழ்ப்படமான சிவபுராணத்தை அருண் கார்த்திக் என்பவர் இயக்கியிருக்கிறார்.

2. ஹரிகதா பிரசங்கா 

நிறைய பெண் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் ஹரியைப் பற்றிய கதைதான் 'ஹரிகதா பிரசங்கா'. மூன்று பகுதிகளில், வெவ்வேறு கண்ணோட்டங்களில் ஹரியின் வாழ்க்கை நம் கண்முன்னே விரிகிறது. இயக்குநர்கள் ஷர்மிளா மற்றும் சுந்தர் அவர்களின் நான்கு நேர்காணல்களின் தொகுப்புதான், இப்படம். 'ஹரிகதா பிரசங்கா' என்ற கன்னடப் படத்தை அனன்யா காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.

3. ஆறிதழ் அரளி பூ

சமத் மற்றும் சரசி இருவரும் சமவயதுடைய பால்ய கால சிநேகிதர்கள். இருபது வயதினை எட்டியதும், இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.இருவரது குடும்பத்தினரும் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க தீர்மானிக்கிறார்கள். மணப்பெண் அலங்கார வகுப்புக்குச் செல்லும் இருவரும், அங்கு கலை நிர்மான வேலைக்காக வரும் இளைஞன் நளினைச் சந்திக்க நேர்கிறது. மூவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். நளினுக்கு சமதின் மேல் ஈர்ப்பு வந்துவிட, ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே உடல் ரீதியான தொடர்பும் நிகழ்ந்து விடுகிறது. அதன் பிறகு சமத், சரசியிடமிருந்து மெதுவாக விலக ஆரம்பிக்கிறான். சரசி மற்றும் நளின் இருவரது துரோகங்களுக்கு ஆட்பட்டு தன்னையே தொலைக்கும் இளைஞன் சமத், பிற்காலத்தில் இருவரைவிடவும் சமூகத்தால்  புறந்தள்ளப்பட்ட திருநங்கைகள் உதவியால் எப்படி வாழ்வில் உயர்கிறான் என்பதை ஆராய்கிறது 'ஆறிதழ் அரளி பூ' என்ற சிங்களத்துப் படம். இந்தப் படத்தை விசகேச சந்திரகேசன் இயக்கியிருக்கிறார்.

4. Is it too much to ask 

ஸ்மைலி. க்ளாடி என்னும் இரு நண்பர்கள் சென்னை மாநகரில் வாடகைக்கு வீடுதேடும் பயணமும், அதனூடாக திருநங்கைகளாக அவர்கள் சந்திக்கும் தடைகளையும், முகச் சாய்ப்புகளையும் பதிவுசெய்கிறது இப்படம். அவர்கள் இருவரும் தங்களின் கோபத்தையும் விரக்தியையும், பாடல்களாகவும், நடனங்களாகவும், நாடகங்களாகவும் மாற்றுகிறார்கள். அவர்களின் கலைப்படைப்புகள் அவர்களுக்கு வாழ்கையை எதிர்கொள்ளும் நம்பிக்கை ஊற்றாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்து 30 நிமிட ஆவணப்படமாக  லீனா மணிமேகலை இயக்கியிருக்கிறார்.

5. ஒராள் பொக்கம்

மகேந்திரன் மற்றும் மாயா இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். ஜோடியாக இருந்தபோதிலும் அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். மெதுவாக அவர்களின் உறவு, வழக்கமான முறையில் முடிவுக்குவருகிறது. மேலும் கதாநாயகன் மகேந்திரன் பிரிந்துசெல்ல முடிவு எடுக்கிறான். மாயா அவரை விட்டு வெளியேறி, தான் எங்கே இருக்கிறோம் என்பதைத் வெளிப்படுத்தாமல் மறைந்துவிடுகிறாள். அந்தப் பிரிவு மகேந்திரனின் வாழ்வில் அதிகமாகவோ குறைவாகவோ பலவந்தபடுத்தி சமநிலையற்ற வாழ்வை உண்டாக்குகிறது. மாயா எங்கே இருப்பாள் என்று தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் மெதுவாகக் கூடி, அவளைத் தேடி ஒரு பயணத்தைத் தொடங்குகிறான். பயணத்தின் முடிவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட ஹிமாலய மலைப் பள்ளத்தாக்கான கேதார்நாத்தைச் சென்றடைகிறான். அவன் போகும் வழியில் சந்திக்கும் மக்கள் மற்றும் அவனது கனவுகள் மூலம் கதை நகர்கிறது. 'ஒராள் பொக்கம்' என்கிற இந்த மலையாளப் படத்தை சனல்குமார் சசிதரன் இயக்கியிருக்கிறார்.

6.ரங்கபூமி

'ரங்கபூமி', திரைப்பட மேதை திரு.தாதா சாஹிப் பால்கே அவர்களின் வாரணாசி நாட்களையும், பால்கே மனச்சோர்வுற்று திரைப்படத்திலிருந்து நாடகத்திற்குத் திரும்பிய நாட்களையும் நினைவுகூறுபவையாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பால்கே தன் சுயசரிதையில் ’ரங்கபூமி’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுவே 'ரங்கபூமி' திரைப்படம் உருவாக கருவாக அமைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இயக்குநர் கமல் ஸ்வரூப்பிற்கு பால்கேவின்மேல் உண்டான மதிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த ஹிந்திப் படத்தின் ஒளி, ஒலி நம்மைக் கடந்தகால வாரணாசிக்கு அழைத்துச்செல்லும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.