Published:Updated:

''டி.ஆரின் மவுத் மியூஸிக், அஜித்தின் இன்வைட், விஜய் கதை!’’ 'ரீ-என்ட்ரி' பேரரசு

சனா
''டி.ஆரின் மவுத் மியூஸிக், அஜித்தின் இன்வைட், விஜய் கதை!’’  'ரீ-என்ட்ரி' பேரரசு
''டி.ஆரின் மவுத் மியூஸிக், அஜித்தின் இன்வைட், விஜய் கதை!’’ 'ரீ-என்ட்ரி' பேரரசு

"வரிசையாகப் படம் கொடுத்துட்டு வந்த எனக்கு, ஏன் இந்த சின்ன இடைவெளி விழுந்துச்சுனு தெரியலை. நானும் சில படங்கள் பண்ணாமல் விட்டுவிட்டேன். ஏன்னா, இப்போ இருக்குற சினிமாவின் சூழ்நிலை வேறமாதிரி இருக்கு. நான் படம் பண்ணபோது இருந்த சூழ்நிலை வேற, இப்போ இருக்கிற சூழல் வேற. வளர்ந்திட்டு இருந்த பரத்தை ஹீரோவாகப் போட்டு 'பழனி'னு ஒரு படம் எடுத்தேன். படம் நூறு நாள்களுக்கு மேல ஓடிச்சு. அந்தமாதிரி இப்போ இருக்கிற சூழ்நிலையில வளர்ந்திட்டு வர்ற ஹீரோவை வைத்துப் படம் பண்ணமுடியுமானு எனக்கு டவுட்டா இருக்கு'' எனப் பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் பேரரசு. விஜய், அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர்.  

''இயக்குநர்களுக்காக தியேட்டரில் படம் பார்க்க வர்ற ஆடியன்ஸ் இப்போ இல்லை. என்னதான் பெரிய டைரக்டராக இருந்தாலும், புதுமுகத்தை வைத்துப் படம் எடுத்தால் ஓப்பனிங் இருக்குமா, ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவாங்களா என்பது சந்தேகம்தான். 'பழனி' படம் பண்ணும்போது, 'பேரரசு படம்'ங்கிற நம்பிக்கையிலதான் ஆடியன்ஸ் வந்தாங்க. இப்போ அப்படியில்லை. சரியான ஹீரோ, தயாரிப்பாளர் இருந்ததால் மட்டுமே வருவாங்க'' என்றவரிடம், சில கேள்விகள். 

"பாரதிராஜாவுக்கும் பேரரசுக்கும் இடையேயான உறவு பற்றி?"

"என் மானசீக குரு பாரதிராஜா. அவர் மாதிரியான ஒரு இயக்குநர் இல்லைனா, நானெல்லாம் சென்னைக்கு வந்திருக்கமாட்டேன். என்னைமாதிரி பல இயக்குநர்கள் கிராமத்துல இருந்து வந்து, சினிமாவுல ஜெயிச்சதுக்குக் காரணம், பாரதிராஜா சாரோட வெற்றிதான். அவர் காட்டிய கிராம வாழ்வியலை இப்போ எந்தப் படத்திலேயும் பார்க்கமுடியாது. என் அம்மா பிறந்த ஊர் கருகாலங்குடி. பாரதிராஜா படத்துல காட்டுற கிராமம், என் கிராமம் மாதிரியேதான் இருந்தது. ஆனா, இப்போ பெரிய பில்டிங் எல்லாம் வந்து கிராமத்தையே மாத்திருச்சு. நமக்குப் பின்னாடி வர்ற சந்ததிகளுக்குக் கிராமம் எப்படி இருக்கும்னு காட்ட நினைச்சா, பாரதிராஜா படங்களைப் போட்டுக் காட்டலாம். மண்வாசனை உள்ள இயக்குநர் அவர். அதனாலேயே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுவரை நான் அவர் படங்கள்ல வேலை பார்த்ததில்லை. ஆனா, அவரை அடிக்கடி சந்திச்சுப் பேசுவேன். அவர் நடித்த படங்களோட ப்ரீவியூ ஷோவுக்கு என்னை மறக்காமக் கூப்பிடுவார். அவர் மனசுக்கு நெருக்கமான சிலர்ல, நானும் ஒருத்தன்னு நினைக்கிறேன். அதுவே என் பாக்கியம்தான்!" 

"டி.ராஜேந்திரரும் உங்களுக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்னு சொல்லியிருக்கீங்கள்ல...?"

"தன்னம்பிக்கையின் மறுபெயர் டி.ஆர்.  அவர் மியூசிக் பண்ண 'சூப்பர் சுந்தரபாண்டி' படத்துல நான் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். ஒரு பக்கம் ஷூட்டிங் போயிட்டு இருக்கு, மறுப்பக்கம் டி.ஆர் ரெக்கார்டிங். எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிட்டாங்க. நான்மட்டும் இயக்குநரிடம் கேட்டு டி.ஆர் சாருடன் ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்தேன். ஏன்னா, டி.ஆர். சார் டியூன் போடுறதைப் பார்க்கணும்னு எனக்கு ஆசை. ஒவ்வொரு டியூனையும் வாயாலேயே வாசிச்சுக் காட்டியதைப் பார்த்து, நான் அசந்துபோயிட்டேன். முறையா இசை கத்துக்காத அவர்கிட்ட இருக்கிற இசை ஞானத்தைப் பார்த்து, பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கேன்."  

இவரைப் பார்த்துதான் என் படத்துக்கு நானே பாட்டு எழுதுறது, மியூசிக் போடுறதுனு எல்லாம் பண்ண ஆரம்பிச்சேன். எப்பவாவது எனக்குள்ளே ஒரு பயமும், தயக்கமும் வந்தா டி.ஆர் சாரை நினைச்சுக்குவேன். அவரை நினைச்சாலே, எனக்குள்ள இருக்கிற தயக்கமும் பயமும் போய், தன்னம்பிக்கை வந்துடும். ரஜினி, கமல் சார் படங்களுக்கு இருக்கிற ஓப்பனிங், டி.ஆர் சாரோட படங்களுக்கும் இருந்தது. டி.ஆர்., பாக்யராஜ், பாரதிராஜா சார் இவங்க மூன்று பேரையும் அடிக்கடி சந்திப்பேன். நான் எழுதிய 'என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்' புத்தகத்தை இவங்க மூணு பேரையும் வெச்சுத்தான் வெளியிட்டேன்." 

"ஒரு விழாவில், 'இயக்குநராய் இருப்பதைவிட, நடிகராய் இருப்பது பாதுகாப்பானது'னு பேசுனீங்களே... என்ன அர்த்தம்?"

"அது காமெடிக்காக சொன்னதுதான், ஆனால் உண்மையும் இருக்கு. இப்பெல்லாம் இயக்குநர்களே நடிக்கவும் வந்துட்டாங்க. சமுத்திரக்கனி, சசிக்குமார் எல்லாம் நடிக்குறது மூலமா நல்ல கருத்துகளைச் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. மக்களிடமும் இயக்குநராய் ரீச் ஆவதைவிட நடிகனாய் ரீச் ஆகுறது ரொம்ப ஈஸியாவும் இருக்கு. என் படங்களில் சின்ன ரோலில் மட்டுமே நான் நடிச்சேன். நடிகன் ஆகமுடியுமானு எனக்குள்ள ஒரு சந்தேகம். அதனாலேயே எனக்கு வந்த நிறைய  வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன். இயக்குநர் ராசு மதுரவன் இருக்கும்போது, அவரோட எல்லாப் படங்களிலும் என்னை நடிக்கக் கூப்பிடுவார். ஆனா, நான் போகமாட்டேன். எனக்கு நடிப்பு மேல அவ்வளவா ஆர்வம் இல்லை. 'திருப்பதி', 'பழனி' படங்கள் ரிலீஸான சமயத்தில், 'நேட்டிவிட்டியைப் பேசி நடிக்க ஆள் இல்லை; நீங்க வாங்க'னு பலபேர் கூப்பிட்டாங்க. நான்தான் தவிர்த்துட்டேன்." 

"விஜய், அஜித்தை வைத்துப் படம் பண்ண அனுபவங்கள்...?"

"இவங்க இரண்டு பேரையும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியேதான் நான் பெரிய நடிகராக பார்த்து இருக்கேன். ஸ்பாட்டுக்கு வந்துட்டா, ரெண்டு பேரும் ரொம்ப கேஷூவலான மனிதர்கள். விஜய் சாரைப் பொறுத்தவரை, கதை கேட்டுவிட்டு ஓகே சொல்லிட்டார்னா, வேற எந்த விஷயத்திலேயும் தலையிடமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல அறிமுக நடிகர் மாதிரி, ரொம்ப ஆர்வமா இருப்பார். நமக்கும் பெரிய ஹீரோவுடன் வேலை பார்க்குறோம்ங்கிற எண்ணமும், தயக்கமும் இருக்காது. அதேமாதிரி, அஜித் சார் ஸ்பாட்டுக்கு வந்துட்டா ரொம்ப ஜாலியா இருப்பார். லைட்மேன் தொடங்கி, தயாரிப்பாளர், இயக்குநர் வரை... எல்லோருக்கும் 'ஹாய்' சொல்லிட்டுதான், நடிக்கத் தொடங்குவார். அஜித்கூட இன்னும் தொடர்புலதான் இருக்கேன். சமீபத்துல அவரோட பையன் பிறந்தநாளுக்குக்கூட வீட்டுக்குக் கூப்பிட்டார். போயிட்டு, வாழ்த்தைத் தெரிவிச்சுட்டு வந்தேன். 'திருப்பதி' படத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு, 'நல்லா நடிக்கிறீங்க பேரரசு'னு சொன்னார்."

"விஜய்க்கு ரெண்டு ஹிட் கொடுத்த இயக்குநர் நீங்க. மறுபடியும் விஜய் - பேரரசு கூட்டணியை எதிர்பார்க்கலாமா?"

"விஜய் சார்கூட பேசிக்கிட்டுதான் இருக்கேன். அவருக்காக ஒரு கதையும் ரெடி பண்ணியிருக்கேன். கூடிய சீக்கிரம் கதையைப் பத்தி பேசலாம்னு விஜய் சொல்லியிருக்கார். அதிரடி, மாஸ் இது ரெண்டும் விஜய்க்கான கதையில் கட்டாயம் இருக்கும். 'திருப்பாச்சி', 'சிவகாசி' படங்கள் வந்த காலகட்டம் வேற; இப்போ இருக்கிற காலகட்டம் வேற. இதை நான் நல்லாவே உணர்ந்து, அவருக்கான கதையை எழுதியிருக்கேன். அதனால, படத்துல சென்டிமென்ட், காமெடி மட்டும் இல்லாம, கட்டாயம் ஒரு சமூகப் பிரச்னையைப் பேசுற படமா அது இருக்கும். அதேசமயம், என் ஸ்டைலும் படத்துல மிஸ் ஆகாது... பார்ப்போம். சீக்கிரமே நல்லது நடக்கும்."

"அடுத்த படத்தின் பெயரையும், ஊர் பெயரிலேயே எதிர்பார்க்கலாமா?" 

"கண்டிப்பா எதிர்ப்பாக்கலாம். ஒரு மனுஷனுக்கு தனித்துவ அடையாளம் அமையுறது கஷ்டம். எனக்கு அமைஞ்சிருச்சு. அதனால என் படத்தின் பெயர் கண்டிப்பா ஊரைக் குறிப்பிட்டே இருக்கும். எனக்குக் கிடைச்ச இடைவெளியில ஐந்து கதைகளை ரெடி பண்ணிட்டேன். தயாரிப்பாளர், ஹீரோ ஓகே சொன்னதும், ஷூட்டிங் போயிடுவேன். அனேகமா, என் என்ட்ரியை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்க்கலாம்!" 

"நயன்தாராவை இயக்கும் ஆசை இருக்கா?"

" 'சிவகாசி' படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்ணியிருந்தாங்க, நயன்தாரா. பிறகு அவங்களை வெச்சுப் படம் பண்ற சான்ஸ் கிடைக்கலை. இடையில, 'திருநாள்' படத்தோட தயாரிப்பாளர்,  'நயன்தாராவை  மெயின் கேரக்டரா வெச்சு ஒரு கதை பண்றீங்களானு கேட்டார். விஜயசாந்தி மேடம் ஆக்‌ஷன் படங்கள் பண்ணமாதிரி, நயன்தாராவுக்கும் ஒரு ஆக்‌ஷன் கதையை ரெடி பண்ணலாம்னு தோணுச்சு. கண்டிப்பா, எதிர்காலத்தில் பண்ணுவேன்." 

"நடிகர்கள் அரசியலுக்கு வர்ற சீஸன் இது. உங்க சாய்ஸ் யார்?" 


"ஆட்சி செய்றதுக்கு 'நடிகர்'ங்கிற தகுதி மட்டும் போதாது. ஏன்னா, நாட்டுல அவ்ளோ பிரச்னை இருக்கு. உண்மையா மக்களை நேசித்து, சேவை மனதுடன் இருக்குறவங்களா இருக்கணும். நடிப்பின் அடுத்தகட்டம் அரசியல்னு நினைச்சு வரக்கூடாது. நம்ம மக்களுக்கு உண்மையாவே நல்லது பண்ணனும்ங்கிற எண்ணம் இருக்கணும். மக்கள் எல்லோரும் விழிப்பு உணர்வோட இருக்காங்க. நடிகரின் பேச்சு, மூவ்மென்ட் எல்லாத்தையும் கணித்து வெச்சிருக்காங்க. பொய்ப் பிரசாரம் பண்றவங்களை மக்கள் ஏத்துக்கமாட்டாங்கனு நினைக்கிறேன். நடிகன் அப்படிங்குற புகழை வெச்சுக்கிட்டு அரசியலுக்கு வருவது மட்டுமல்லாமல், அவங்களோட செயல்பாடுகள் மக்களுக்காக இருக்கணும்.  

எனக்குள்ள நிறைய ஆதங்கம் இருக்கு. பெரியார் புத்தங்கள் எல்லாம் படிப்பேன். அதைப் படிக்கும்போதுதான் தெரியுது, திரும்பவும் நாம பழைய காலத்துக்கே போய்க்கிட்டு இருக்கோம்னு. ஏன்னா, மதப்பிரச்னைகள், சாதியப் பிரச்னைகள்னு நாடு போயிட்டு இருக்கு. இப்படியே இருந்தா, நம்ம நாடு முன்னேற வாய்ப்பே இல்ல. சில சாதியப் பிரச்னைகளைக் கடந்து வந்தோம். ஆனா, திரும்பவும் பழைய பிரச்னைகளுக்கு இந்தச் சமூகம் போறமாதிரி இருக்கு. இதெல்லாம் கடந்து வரணும். நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும், இந்தப் பிரச்னைகளையெல்லாம் ஒழிக்கணும். அதை எந்த நடிகர் செய்தாலும் சரிதான்."