Published:Updated:

பாபிசிம்ஹாவுக்கு வில்லன் நான், கஷ்டப்படுறதைப் பார்த்து சிரிச்ச சித்தார்த்!'' - 'இசையமைப்பாளர்' அந்தோணிதாசன்

சனா
பாபிசிம்ஹாவுக்கு வில்லன் நான், கஷ்டப்படுறதைப் பார்த்து சிரிச்ச சித்தார்த்!''  - 'இசையமைப்பாளர்' அந்தோணிதாசன்
பாபிசிம்ஹாவுக்கு வில்லன் நான், கஷ்டப்படுறதைப் பார்த்து சிரிச்ச சித்தார்த்!'' - 'இசையமைப்பாளர்' அந்தோணிதாசன்

"சாகும்போது கூட சிரிச்சுக்கிட்டே சாகணும்ங்கிறதுதான் என் ஆசை. என்னால் முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களை சிரிக்க வெச்சுக்கிட்டே இருப்பேன்''னு பேச ஆரம்பிக்கிறார், 'சொடக்கு மேல', 'வண்டியிலே நெல்லு வரும்' எனப் ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் அந்தோணி தாசன். தற்போது 'வைரி' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுக்கும் அந்தோணிதாசனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

"சினிமாவில் பாடி வெளிநாட்டுப் பயணமெல்லாம் போவோம்னு நினைத்தது உண்டா?"

"சத்தியமா நான் நினைச்சுப் பார்க்கலை. ஏன்னா, நாட்டுபுறக் கலைஞர்களுக்கு கவர்மென்ட்ல நிறைய அடையாளங்கள் எல்லாம் கொடுத்தாங்க. கரகாட்டக் கலையில் குறவன், குறத்தி குழுவில் நான் இருந்தேன். எங்களுக்கு அதிகமாய் கவர்மென்ட் ஃபங்கஷன்லாம் தரமாட்டாங்க. கரகம், மயில், பொய்க்கால் குதிரை ஆடுறவங்களுக்கு மட்டும்தான் வெளிநாடு போகுற வாய்ப்பு கிடைக்கும். எனக்கு கிடைச்சது இல்லை. நம்மல என்னத்த கூட்டிட்டுப் போகப்போறாங்கனு நினைச்சேன். நான் கலையை தொழிலா மட்டும் பார்க்காம, மக்களுடைய மனசு நோகாத அளவுக்குச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பேன். அப்படி என் தொழிலை நேசிச்சுப் பண்ணினதுனாலேயே முதல் முறையாய் தஞ்சாவூரில் குறவன், குறத்தி ஆட்டக்காரங்க  அப்டீங்கிற சர்டிஃபிகேட் எனக்குக் கிடைச்சது. அப்போதான், ஒரு நம்பிக்கை எனக்கு வந்துச்சு. 

நம்ம கலையை இன்னும் விரிவடைய வைக்கணும், அடுத்த லெவலுக்குக் கொண்டு போகணும்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அப்போதான், நாட்டுபுறப் பாடல்களை எழுதி சொந்தமாய் கேசட் போடலாம்னு தோணுச்சு. அப்போகூட சினிமாவுக்கெல்லாம் போய் பாட்டு எழுதுவோம், சாதிப்போம்னு கனவுலகூட நினைச்சுப் பார்க்கலை." 

"சினிமா வாய்ப்புக்குப் பிறகும் நாட்டுப்புறப் பாடல்களை தொடர்ந்து பாடுறீங்களா?"

"இன்னும் பாடிக்கிட்டுதான் இருக்கேன். என்னைக்கு இருந்தாலும் என் அடையாளம் அதுதானே. 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது'னு ஒரு பழமொழி இருக்குல்ல. அப்படித்தான். சினிமாப் பாட்டு பாடும்போது கொஞ்சம் பயத்தோட இருப்பேன். ஏன்னா, அது மாமியார் வீட்டுக்குப் போனமாதிரி, நாட்டுப்புறப் பாட்டு நம்ம அம்மா வீட்டுல இருக்குறமாதிரி. சினிமா பாட்டு பாடும்போது, ஏதாவது ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டால் நம்மளை தப்பா நினைப்பாங்களே, நம்மளைத் தப்பா நினைச்சா, ஒட்டுமொத்த நாட்டுப்புறப் பாடகர்களையும் தப்பா நினைச்சமாதிரி ஆயிடுமேனு பயப்படுவேன்.  

நாட்டுப்புறப் பாட்டா இருந்தா, எந்த இடமா இருந்தாலும் இறங்கிப் பாட ஆரம்பிச்சுடுவேன். அதனால, இன்னும் நாட்டுப்புறப் பாட்டை விடமால் கையில் இருக்கிப் பிடிச்சிருக்கேன்." 

"உஷா உதூப்புடன் இணைந்து பாடிய அனுபவம்?" 

"உஷா உதூப் அம்மாவை டி.வி, பேப்பரில்தான் பார்த்து இருக்கேன். பெரிய பொட்டு வெச்சுக்கிட்டு இருப்பாங்க. அதுதான் அவங்க அடையாளம். எனக்கு மேடம் பெயர்கூட வாயில சரியா நுழையாது. அவங்ககூட சேர்ந்து, 'வண்டியில நெல்லு வரும்' பாட்டைப் பாடுனேன். மும்பையில்தான் இந்தப் பாட்டோட ரெக்கார்டிங் நடந்தது. என்னைக் கூட்டிக்கிட்டு போனவர், மியூசிக் டைரக்டர் தர்புகா சிவா. மேடம் கூட பாடுறதுக்கு முன்னாடி எந்த ரிகர்சலும் பார்க்கலை. நேரா, ரெக்கார்டிங் தியேட்டருக்குப் போயிட்டேன். அவங்களை நேர்ல பார்த்ததுக்குப் பிறகு எனக்கு ஒரே பயம். ஆனா, என் பயத்தையெல்லாம் அவங்க உடைச்சிட்டாங்க. அவ்வளவு உற்சாகமாய்ப் பாட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லா மொழியும் அந்த அம்மாவுக்குத் தெரியும். 'ஹே மாமா, மச்சான்'னு எல்லோரையும் கலாய்ச்சுட்டு, உற்சாகப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. என் கூட சேர்ந்து டான்ஸ்கூட ஆடுனாங்க. அவங்க கூட நான் பாடுனது, பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ங்கிற மாதிரிதான்." 

"கொஞ்ச நாளா உங்க வரிகளில் வர்ற பாட்டைக் கேட்க முடியலையே?" 

"அவ்வளவு சீக்கிரம் நான் பாட்டு எழுத ஒப்புக்கமாட்டேன். டைரக்டர் இல்ல, மியூசிக் டைரக்டரே என்னைப் பாட்டு எழுதச் சொன்னாலும், 'முயற்சி பண்ணிப் பார்க்குறேன்'னுதான் சொல்வேன். எழுதி முடிச்ச உடனே, 'சார், இந்தப் பாட்டு எழுதி இருக்கேன். உங்களுக்கு ஓகேனா வெச்சுக்கோங்க, இல்லைனா வேணாம்'னு சொல்லிடுவேன். 

அப்படி நான் எழுதுன பாடல்கள்தான், 'பாண்டி நாட்டுக் கொடியின்மேல', 'கட்டிக்குற முன்ன நாம', 'சொக்கவச்ச பச்சைக்கிளி' பாட்டு எல்லாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பாட்டு எழுதுவேன். 'உறியடி' படத்தில் 'சொக்கவச்ச பச்சைக்கிளி' பாட்டை சென்னை சங்கமத்தில் இருந்தபோது 2008 ம் வருடம் எழுதினேன். அப்போ நான் ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். 'எப்படியாவது ஒரு பாட்டு எழுதி அதை ஹிட் ஆக்கணும்'னு யோசிச்சேன். அப்போதான் 'மானே மானே' வரிகள் தோணுச்சு. இந்தப் பாட்டு எழுதுனப்பவே தெரியும், இதுக்கு ரீச் அதிகமா கிடைக்கும். பாட்டை எழுதுனது மட்டுமில்ல, மியூசிக் பண்ணதும் நான்தான். 

ஒரு பாட்டை நான் எழுதிட்டா, அதை சுத்தி இருக்கிற எல்லார்கிட்டேயும் பாடிக் காட்டுவேன். கேட்டவங்க  'நல்லா இருக்கு'னு சொன்னாதான், அடுத்த வரிக்குப் போவேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணி உருவாக்கி, நிறைய மேடைகளில் பாடுன பாட்டுதான், 'மானே மானே...' பாட்டு. 'உறியடி' படத்துக்காக இந்தப் படத்தை ரெஃபர் பண்ணதே கார்த்திக் சுப்பராஜ் சார்தான். சித்தார்த் சார், எஸ்.ஜே.சூர்யா சார் ரெண்டுபேரும் ஆசைப்பட்டு என்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்த பாட்டு இது. ஆனா, 'உறியடி'க்குதான் அந்த அதிர்ஷ்டம் இருந்திருக்கு."  

"பாபி சிம்ஹாவுக்கு வில்லனா நடிக்கிறீங்களாமே?" 

" 'வல்லவனுக்கு வல்லவன்' படத்துலதான், பாபி சிம்ஹாவுக்கு வில்லனா நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல, எனக்கு பாட்டு எழுதி, பாடுற வாய்ப்புதான் கிடைச்சது. நானேதான், டைரக்டர் விஜய் தேசிங் சார்கிட்ட, 'நடிக்க சான்ஸ் கொடுங்களேன்'னு கேட்டேன். பக்கத்தில் இருந்த பாபி சிம்ஹாவும், 'சார், கொடுங்க'னு ரெகமென்ட் பண்ணார். என் பேச்சு, என் ஆக்டிவிட்டி எல்லாம் பார்த்துட்டு, 'சரி, ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரும்போது வேட்டி, சட்டையோட வாங்க'னு சொன்னார், போனேன். பிறகு, படத்துல என்னைக் கம்யூனிஸவாதியா நடிக்க வெச்சுட்டார். படத்தில் மொத்தம் ஐந்து வில்லன்கள். அதில், நானும் ஒரு வில்லன். இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்குப் 12 கெட்டப். சிறந்த வில்லனுக்காக விருதுகள் வாங்குன அவருக்கே நான் வில்லனா நடிச்சது, செம ஹாப்பி!." 

"உங்ககிட்ட இருந்து வெஸ்டர்ன் ஸ்டைல்ல இருந்து பாட்டை எப்போ எதிர்பார்க்கலாம்?"

'' 'வைரி' படத்துல வெஸ்டர்ன் ஸ்டைல்ல ஒரு பாட்டு இருக்கு. வெஸ்டர்ன், ஃபோக் ரெண்டையும் கலந்து ஒரு பாட்டை இந்தப் படத்தில் வெச்சிருக்கேன். தவிர, மலையாளம், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழிகளிலும் பாடிக்கிட்டு இருக்கேன். எல்லா மொழி, எல்லா வகையான பாடல்களையும் பாடணும்னுதான் எனக்கு ஆசை."  

"நீங்க பாடுனதிலேயே, ரொம்பக் கஷ்டப்பட்ட பாட்டு எது?" 

" 'ஜில் ஜங் ஜக்' படத்துல வர்ற 'டோமரு' பாட்டுதான். ஏன்னா, இந்தப் பாட்டோட வரிகள் என் வாய்க்குள்ள நுழையவே இல்லை. நான் படுற கஷ்டத்தைப் பார்த்து, சித்தார்த் சிரிச்சுக்கிட்டே இருந்தார்."

"உங்களுக்கும் இயக்குநர் பாலாவுக்குமான நட்பு?" 

"பாலா சாருடன் வேலை பார்த்தப்போ, அப்பா பக்கத்துல இருந்து வேலை பார்க்குறமாதிரி ஒரு ஃபீல் கிடைச்சது. ஒட்டுமொத்த சினிமாவில் உள்ள இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம் எல்லாமே பாலா சார்கூட இருந்த காலத்தில் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு இயக்குநர், ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்ளோ துல்லியமா இருக்கணும்னு பாலா சாரைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்."  

"இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் நடத்துன 'கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' குறித்து உங்க கருத்து என்ன?" 

"அதைப் பத்தி எனக்கு முழுசா தெரியாது. ஆனா, அவங்க பாடக் கூப்பிட்டா, நிச்சயம் பாடுவேன். ஏன்னா, அவங்களோட பாடுறதுக்கு நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன்."