Published:Updated:

"பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் ஶ்ரீதேவியிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!" - இயக்குநர் சிம்புதேவன்

அலாவுதின் ஹுசைன்
"பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் ஶ்ரீதேவியிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!" - இயக்குநர் சிம்புதேவன்
"பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் ஶ்ரீதேவியிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது!" - இயக்குநர் சிம்புதேவன்

2012-ஆம் ஆண்டு இந்தியில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் மூலம் ஶ்ரீதேவி பாலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்த நேரம் அது. இந்தியத் திரையுலகில் முக்கியமாக கருதப்பட்ட கம்பேக் அது. அப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. 1986-ல் ஶ்ரீதேவி ரஜினிகாந்துடன் நடித்த 'நான் அடிமை இல்லை' படம்தான், ஶ்ரீதேவி தமிழில் நடித்த கடைசி நேரடிப் படமாக நெடுங்காலமாக இருந்து வந்தது. 2015-ல் விஜய் நடித்த 'புலி' படத்தின் கதை பிடித்துப்போக கிட்டத்தட்ட 30 வருட இடைவெளிக்குப் பிறகு ஶ்ரீதேவி தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க ஒப்புக்கொண்டார்.  

'புலி' படத்திற்காக நடிகை ஶ்ரீதேவியை இயக்கிய தருணங்களை நினைவு கூர்கிறார், இயக்குநர் சிம்புதேவன்.

" 'புலி' படத்தின் கதையை எழுதியவுடன் அதில் வரும் யவண ராணி கதாபாத்திரத்திற்கு ஶ்ரீதேவி சரியாக இருபாங்கன்னு விஜய் சாரிடம் சொன்னேன். அவருக்கும் நல்ல முயற்சியாக பட்டது. மும்பை சென்று  ஶ்ரீதேவியிடம் கதையைச் சொன்னேன். மேடமுக்கு கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. கதையைக் கேட்டுட்டு இருக்கும்போதே ஒரு ராணி மாதிரி ஃபீல் பண்ணி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் அப்படியே கதையைச் சொல்லி முடித்தேன். 'நான் ரொம்பநாளா பண்ணனும்னு நினைக்கிற ராணி கதாப்பாத்திரம். கண்டிப்பா இதில் நடிக்கிறேன்"னு சொன்னாங்க.  

ஶ்ரீதேவி ஒரு மாபெரும் நடிகை. ஒவ்வொரு நாளும் 'யவண ராணி' மேக்அப்பிற்கு ஆறு மணிநேரம் செலவாகும். காலையில் ஆறு மணிக்கு வந்தால், மதியம் 12.30 மணிக்குதான் முதல் ஷாட் வைக்கமுடியும். அதுவரை அதே உற்சாகத்தோடு இருப்பார். வேலையில் எந்தவித விருப்பு வெறுப்புக்கும் இடம் கொடுக்கமாட்டார். அனைவரையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கக்கூடியவர். ஒரு இயக்குநர் என்ன சொல்லி கொடுத்தாலும், அந்தக் கதாபாத்திரத்திற்கு ஒரு ஃபைனல் டச் நடிகரால்தான் தரமுடியும். அந்தவகையில் ஶ்ரீதேவி ஒரு இயக்குநரின் நடிகை. அவரது உடல்மொழியும், மெனக்கெடலும் நம்மை அசரவைக்கும். 'புலி' படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடாமல் நடிச்சாங்க. ரொம்ப இயல்பாகப் பழகக்கூடியவர், பெர்ஃபெக்‌ஷனிஸ்ட். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரத்துக்கு வந்துருவாங்க. நாமதான் லேட்டா போயிடக்கூடாதுனு பயந்துகிட்டே போகணும். படத்தின் டப்பிங் பேசி முடித்த பின்னர் படத்தை முழுமையாகப் பார்த்து, மிகவும் சந்தோஷப்பட்டார்." 

ஶ்ரீதேவி மேடம் குடும்பத்தின் மீது மிகவும் அக்கறை  கொண்டவர். புத்தாண்டு என்றால் டிசம்பர் 30, 31 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் குடும்பத்துடன் தான் இருப்பார். அவரது இழப்பு திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும்." என்றார்.   

'புலி' படத்தில் நடிக்கும் உற்சாகத்தை விகடனுடன் பகிர்ந்தபோது, ஶ்ரீதேவி கூறியது :

'' 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்துக்குப்  பிறகு  ஒரு நல்ல கதை வேணுமே. அதனாலேயே எதுலேயும் நான் நடிக்கலை. ஆனா, 'புலி’க்காக சிம்புதேவன் சொன்ன கதை மொத்தமா எதிர் துருவம். காட்டன் சேலை, மேக்கப் இல்லாம 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்துல நடிச்சுட்டு ஃபேன்டஸி கதையான 'புலி’க்காக மகாராணி காஸ்ட்யூம், தலைமுடியில் இருந்து கால் நகம் வரை மேக்கப்னு நடிக்கிறதை நினைச்சாலே உற்சாகமா இருந்தது. தவிர, இது ஆக்‌ஷன் படம். இந்தப் படம் வீட்ல இருக்கிற தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குட்டிப் பாப்பானு எல்லாருக்கும் பிடிக்கும்!. அதனாலதான் ஓகே சொன்னேன்.!"