Published:Updated:

’’அவர்களைப் பரிசோதனை எலிகளாக்குங்கள்!’’ பாலியல் குற்றவாளிகள் மீது பாயும் த்ரிஷா, நமீதா

ஜெ.பிரகாஷ்
’’அவர்களைப் பரிசோதனை எலிகளாக்குங்கள்!’’ பாலியல் குற்றவாளிகள் மீது பாயும் த்ரிஷா, நமீதா
’’அவர்களைப் பரிசோதனை எலிகளாக்குங்கள்!’’ பாலியல் குற்றவாளிகள் மீது பாயும் த்ரிஷா, நமீதா

‘தொட்டிலை ஆட்டும் கை... தொல்லுலகை ஆளும் கை’ என்று மகாகவி பாரதி, அன்றே பெண்களை மதித்துப் போற்றினார். அது, இன்று வானளவில் உயர்ந்து உலகம்வரை விரிந்துகிடக்கிறது. ‘பெண்கள் நுழையாத துறையே இல்லை’ என்று சொல்லும் அளவுக்கு, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அதேவேளையில், அவர்களுக்கு அந்தந்தத் துறைகளில் பிரச்னைகள் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. குறிப்பாக, பெரும்பாலான பெண்கள் பாலியல் சீண்டல்களை அனுபவித்துவருகின்றனர் என்பதை நாம் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் அன்றாடம் காணமுடிகிறது. இதில், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுமிகளே என்றாலும், “இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கு நாங்களும் ஆளாகியிருக்கிறோம்” என்று நடிகைகள் சிலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாய் இரண்டு நடிகைகள்... தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல் வெளியில் சொல்லி, அவர்களைப் போலீஸிலும் பிடித்துக் கொடுத்துள்ளனர். 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை பாவனா ஒருசில மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டுப் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்பட்டது. இதேபோல், விமானத்தில் பயணம் செய்தபோது தனக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஜைரா வாசிமும் புகார் தெரிவித்திருந்தார்.  இந்த இரண்டு விஷயங்களும் பரபரப்பாகப் பேசப்பட, சில நடிகைகள் அவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கியதுடன், தங்களுக்கு நேர்ந்த துன்பங்களையும் வெளியில் சொல்ல ஆரம்பித்தனர்.

'பாவனா போன்று தன்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றனர்' என்று நடிகை சந்தியாவும், 'சினிமாத் துறையில் நடிகைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவது உண்மையே' என்று நடிகை தமன்னாவும், 'குழந்தைப் பருவத்தில் நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்' என்று பாலிவுட் நடிகை சோனம் கபூரும், 'மேனேஜர் இல்லாத நடிகைகள்தான் சபலபுத்தி கொண்ட தயாரிப்பாளர்களிடம் சிக்குகிறார்கள். நானும் அந்த மாதிரி பாலியல் தொந்தரவைச் சந்தித்துள்ளேன்' என நடிகை ராய் லட்சுமியும், 'திரைப்பட இயக்குநர்கள் என்னிடம் தவறான முறையில் அணுகினார்கள். நான் அவர்களைப் புறக்கணித்துவிட்டேன்' என்று நடிகை ராதிகா ஆப்தேவும், 'ஒரு நடிகையாக இருந்துவிட்டால், இந்தச் சமூகத்தில் இரண்டுவிதமான சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. பாலியல் சீண்டல், அட்ஜஸ்ட்மென்ட் என இரண்டுவிதமான பிரச்னைகளுக்குச் சில நடிகைகள் தள்ளப்படுவது வேதனையின் உச்சம்' என நடிகை கஸ்தூரியும், 'பதினைந்து வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை' குறித்து நடிகை அதிதி ராவும் செய்தி வெளியிட்டிருந்தனர். 

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் நேரடியாகவே பாலியல் துன்புறுத்தல்களை சில நடிகைகள் அனுபவித்து, அதுதொடர்பாகச் சமீபத்தில் போலீஸிலும் புகார் அளித்துள்ளனர். நடிகை சனுஷா ரயிலில் பயணம் செய்தபோது பாலியல் சீண்டலுக்கு ஆளானார். அப்போது, 'தனக்கு யாரும் உதவ முன்வராதபோதும், நானே துணிச்சலாக அந்த நபரை போலீஸில் பிடித்துக்கொடுத்தேன்' என்று மீடியாவிடம் சொல்லி போலீஸிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். அதேபோல், நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்த நடிகை அமலாபாலை, தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ய, அவரும் துணிச்சலுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   இந்தச் செயலுக்காக நடிகை அமலாபாலுக்கும் பாராட்டுகள் குவிந்தன. அதேவேளையில், தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஒரு நபரை, ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தி தக்க தண்டனை அளித்துள்ளார், நடிகை துர்கா கிருஷ்ணா.

இப்படி சாதாரணப் பெண்கள் மட்டுமல்ல, பிரபலங்களும், நடிகைகளும் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது அதிகரித்துவருகிறது. இதற்கு என்னதான் தீர்வு எனச் சில நடிகைகளே கருத்தும் தெரிவித்துள்ளனர். நடிகை த்ரிஷா, 'ஜெயிலில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்குப் பதிலாக இந்தக் குற்றவாளிகளைப் பரிசோதனைக்குப் பயன்படுத்தி தண்டிக்கலாம்” என்று தெரிவித்திருந்தார் அவர்.

இதோ இப்போதுகூட விழுப்புரத்தைச் சேர்ந்த ஆராயி என்பவரின் மகள் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தால் மரணம் அடைந்திருக்கிறார். பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. 'பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை மட்டும் கொடுத்தால் போதாது. எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள், நிறைய பேசுங்கள். இதை அம்மா, அப்பா இரண்டுபேருமே செய்யுங்கள்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார், நடிகை நமீதா. 

இந்தி சின்னத்திரையில் நடிகையாக இருக்கும் திவ்யங்கா திரிபாதி, 'பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதால்தான், நான் பெண் குழந்தை பெற்றுக்கொள்ள அஞ்சுகிறேன்' என்று சொல்லும் அவர், 'சாலைகளில் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்வதுடன், இவ்வாறு பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் ஆண்களைப் பிரதமர் நரேந்திர மோடி சுத்தம் செய்ய வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து பெண்கள் நல அமைப்பினர், 'பாலியல் துன்புறுத்தல்களை நடிகைகள் தைரியமாகச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இது, பெண் சமூகத்துக்கு நிச்சயம் முன்மாதிரியாக இருக்கும். இதேபோல, பாலியல் தொல்லைக்கு ஆளானால், அனைத்துப் பெண்களும் அச்சமின்றி புகார் அளிக்க முனைப்பு காட்டினால், நல்லதுதான். அவர்களுக்கு இச்சமூகம் ஆதரவுக் கரம் நீட்டவேண்டும். அப்போதுதான் வக்கிரபுத்தி கொண்டோருக்கு வேட்டுவைக்க முடியும். மேலும், அடுத்த தலைமுறை குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்கே பண்பாடு, கலாசாரத்தைக் கற்றுக்கொடுப்பது, அறிவுரைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, ஆண் பிள்ளைகளுக்கும் அவற்றையெல்லாம் புகட்ட வேண்டும். அதுவே, பெண்கள்மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டத்தை மாற்றும்." என்கிறார்கள்.